இயக்குநர்களுக்கு ஒரு வேண்டுகோள்!



நான் உங்கள் ரசிகன் 37

மனோபாலா


ஆசிரியரா இருந்து நடிகரானவர் ராஜேஷ் அண்ணன். இயக்குநர் மகேந்திரன் சாரோட உறவினர் அவர். சிவாஜி மாதிரி பெயரும் புகழும் எடுக்கணும்னு சினிமாவுக்கு வந்தவர். அவர் ஒரு தகவல் களஞ்சியம். ஏதாவது ஒரு கான்செப்ட் சொல்லி, ‘இப்படிப்பட்ட கான்செப்ட்ல படங்கள் இதுவரை வந்திருக்குதா’னு கேட்டா, ஹாலிவுட்ல இருந்து இந்திய மொழிகள் வரை அந்த சப்ஜெக்ட்ல வந்த படங்கள், அதையெல்லாம் இயக்கியவர்கள்ல இருந்து லைட் மேன் வரை கூட அவரால சரியா சொல்ல முடியும். அப்படி ஒரு அறிவாளி. சினிமா தொடர்பான புத்தகங்கள் நிறைய எழுதியிருக்கார்!



பானுமதியம்மாவை ‘இலக்கணம் தெரிஞ்ச நடிகை’னு சொல்ற மாதிரி ராஜேஷை ‘இலக்கணம் தெரிஞ்ச நடிகர்’னு சொல்லலாம். ‘இந்தக் கேரக்டருக்கு இப்படித்தான் நடிக்கணும். கையை இவ்வளவு தூரம் தூக்கினா போதும்’ங்கிற அளவுக்கு இலக்கணங்கள் தெரிஞ்சு பண்றவர். அவரை சரியா பயன்படுத்தியவர் பாக்யராஜ்தான். ‘அந்த ஏழு நாட்கள்’ல ராஜேஷ் அவ்வளவு பேசப்பட்டார். கொஞ்சம் சறுக்கினால் கூட அந்தக் கேரக்டர் வில்லனாகிடக் கூடிய அபாயம் உண்டு.

ஆனா அந்தப் படத்தைப் பார்த்துட்டு, ‘‘ராஜேஷ் மாதிரி ஒரு புருஷன் கிடைக்கறதுக்கு கொடுத்து வச்சிருக்கணும்’’னு அந்தக் காலகட்டத்துல பெண்கள் சொல்லுவாங்கனு கேள்விப்பட்டிருக்கேன். ராஜேஷை அந்தக் கேரக்டருக்கு தேர்ந்தெடுத்தது பாக்யராஜோட வெற்றி. விஜயகுமார் அண்ணனுக்கு என் மேல பிரியம் அதிகம். ‘‘தம்பி... தம்பி...’’னு பாசமா கூப்பிடுவார். ‘‘நான் ஹீரோவா இருந்தபோது கூட இவ்ளோ நல்ல ரோல்கள் கிடைச்சதில்ல.

கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் ஆனதும்தான் வெரைட்டியான வாய்ப்புகள் கிடைச்சிக்கிட்டே இருக்குது’’னு சொல்வார் விஜயகுமார். ‘அக்னி நட்சத்திரம்’ படத்துக்கு அப்புறம் அவரோட ரெண்டாவது இன்னிங்ஸ் பிரமாதமா தொடங்கிச்சு. பெரிய இயக்குநர்கள் பலரும் அவருக்காகவே கேரக்டர்கள் உருவாக்க ஆரம்பிச்சாங்க. டயலாக் மாடுலேஷன் அவரோட மிகப்பெரிய ப்ளஸ். மணிரத்னம், கே.எஸ்.ரவிகுமார், சேரன், பி.வாசு படங்கள்ல விஜயகுமார் செய்த கேரக்டர்ஸ் அவ்வளவு பேசப்பட்டுச்சு.

‘நட்புக்காக’வில் நானும் நடிச்சிருக்கேன். அந்தப் படத்தோட க்ளைமேக்ஸ் சீன்ல விஜயகுமார் - சரத்குமார் கேரக்டர்கள் அவ்வளவு உயிரோட்டமா வந்ததுக்குக் காரணமே, அவங்க ரெண்டு பேருக்கிடையே இருக்கற நிஜமான நட்புதான். என்னோட இன்ஸ்பிரேஷனா சிவகுமார் அண்ணனைச் சொல்லுவேன். அவங்க குடும்பத்துல ஒருத்தராதான் என்னை அவர் பார்ப்பார். அவரோட மகன்கள் சூர்யா, கார்த்தி, மகள் பிருந்தா எல்லாருமே என்கிட்ட பாசமா இருப்பாங்க.

அவர் படிச்ச ஃபைன் ஆர்ட்ஸ் காலேஜ்லதான் நானும் படிச்சேன்ங்கிறதுல எனக்கொரு பெருமை. ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’னா சிவாஜி எப்படி ஞாபகத்துக்கு வருவாரோ, அந்த மாதிரி ‘அழகன் முருகன்’னா ஆருயிர் அண்ணன் சிவகுமார்தான். சமீபத்தில் நான் அவர்கிட்ட பிரமிச்ச விஷயம், அவரோட ஞாபக சக்தி. படத்துல வசனங்களை பக்கம் பக்கமா பேசுறது பெரிய விஷயமில்ல. ஆனா, கம்ப ராமாயணத்தை மனப்பாடமா சொல்றது எவ்வளவு பெரிய விஷயம்! அதை அவர் மூணு மணி நேர சொற்பொழிவா ஆற்றுவதைக் கேட்டேன். சரஸ்வதி கடாட்சம் அவருக்கு ரொம்பவே இருக்கு!

அந்தக் காலத்தில் எங்களை மாதிரி இயக்குநர்கள் பலரும் திரைக்கதையில் ஒரு டவுட் வந்தால், உடனே ஜி.எம்.குமார்கிட்டதான் போய் நிற்போம். அந்தளவு அபார திரைக்கதை ஞானம் உள்ளவர். கமல் நடிச்ச ‘காக்கிச் சட்டை’ போன்ற படங்களுக்கெல்லாம் அவர்தான் திரைக்கதை. சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் தயாரிச்ச ‘அறுவடை நாள்’ படத்தை இயக்கியவர். அவரை ஒரு நடிகரா அடையாளம் கண்ட இயக்குநர்கள் வெற்றிமாறனும், பாலாவும்தான்.



இப்ப அவரோட திரைக்கதை திறமை அதிகம் பேருக்கு தெரியறதில்ல. வருங்கால இயக்குநர்களுக்கு ஒரு ரிக்வெஸ்ட்... நீங்க கூட உங்க திரைக்கதையை அவர்கிட்ட சொல்லிப் பாருங்க. அதில் உள்ள குற்றம், குறைகளைக் கண்டுபிடிச்சு சொல்லுவார். தயாரிப்பாளர்களின் கஷ்ட நஷ்டம் எல்லாமே தெரிஞ்சவர். ஜி.எம்.குமார்... நீங்க மறுபடியும் படங்கள் இயக்கணும்னு விரும்புறேன். தொடர்ந்து அருமையான படங்கள் கொடுக்கணும்!

கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்கள்ல வடிவுக்கரசியை எப்படி மறந்திட முடியும்? நான் வொர்க் பண்ணின ‘சிகப்பு ரோஜாக்கள்’ல அவங்க புதுமுகம். கே.ஆர்.விஜயா மாதிரி ஒரு பெரிய கதாநாயகியாக நடிக்கணும்னு வந்தவரை ‘முதல் மரியாதை’யில் கறையேறிப்போன பல்லோடு கொடுமைக்கார மனைவியா நடிக்க வச்சிருந்தார் பாரதிராஜா. ஹீரோயினாக இருக்கும்போதே, அம்மா கேரக்டர் மாதிரி ரோல்கள் பண்ண ஆரம்பிச்ச அவரை ‘பொம்பளை மேஜர் சுந்தர்ராஜன்’னு சொல்லலாம்.

‘அருணாச்சலம்’ல ரஜினிக்கே வில்லியா நடிக்கும் வாய்ப்பு வந்தபோது. ‘‘ரஜினி ரசிகர்கள் உன்னை அடிக்க வருவாங்க. வேண்டாம்’’னு தடுத்தேன். ஆனா, அதையெல்லாம் கண்டுக்காம தைரியமா கூன் விழுந்த கேரக்டர்ல நடிச்சிருந்தாங்க. பெரிய திரையில் பண்ணாத கேரக்டர்களைக் கூட சின்னத்திரையில் எக்கச்சக்கமா பண்ணியிருக்காங்க. சின்னத்திரை நடிகர் சங்கத்துல உள்ள எல்லாருக்குமே வடிவுக்கரசி
மீது மதிப்பு அதிகம்.

போன வாரம் சமுத்திரக்கனி பத்தி சொல்ல ஆரம்பிச்சேன். சமுத்திரக்கனியோட ஆரம்ப காலகட்டங்கள்ல அவருக்கு வசந்தம் வீசல. நல்ல நல்ல கதைகளை வச்சிட்டு, கம்பெனி கம்பெனியா வாய்ப்புகளைத் தேடி ஓடிக்கிட்டிருப்பார். அப்போ அவரைப் புரிஞ்சிக்கிட்டவர், எஸ்.பி.பி.சரண்தான். பெரிய கம்பெனிகளுக்கெல்லாம் அவரைக் கூட்டிட்டு நானும் போயிருக்கேன். எல்லாருக்குமே வாய்ப்புகள் மறுதலிக்கப்பட்ட காலங்கள் உண்டு.

இயக்குநரா இருந்தவரை இப்ப நடிகராவும் மாத்திட்டாங்க. ‘விசாரணை’யில அவருக்கு தேசிய விருது. வெற்றிமாறனுக்கு நன்றி சொல்லிக்கறேன். இயக்குநர்களுக்கு தேசிய விருது கிடைக்கும்போது எங்களுக்கும் சந்தோஷம் ஆகிடும். நாங்களும் காலரைத் தூக்கி விட்டுக்குவோம். சமீபத்தில் சமுத்திரக்கனியை சந்திச்சேன். ‘‘தயதுசெய்து பரண்ல வச்சிருக்கற உன்னோட நல்ல கதைகளை எடுத்து பண்ணு. இப்போ நல்ல கதைகளுக்கு ஆதரவு இருக்கறதால, நீ தைரியமா இறங்கலாம்!’’னு சொன்னேன்.

‘‘கண்டிப்பா பண்ணுவேன். அதுவும் உங்களுக்கு விருப்பமான கதைகளை ரொம்ப சீக்கிரமாகவே பண்ணுவேன்!’’னு சொல்லியிருக்கார் கனி. கலைஞர்களைக் கண்டுபிடித்து தேர்ந்தெடுப்பது என்பது ஒரு கலை. அந்த வகையில் வெற்றிமாறன் நல்ல நல்ல கலைஞர்களைக் கண்டுபிடித்து, அவர்களுக்கு தேசிய விருது வாங்கிக் குவித்து வருகிறார். அவரோட கலைஞர்களான ‘ஆடுகளம்’ நரேன், கிஷோர் எல்லாம் இன்னிக்கு நல்ல நடிகர்களா பெயர் வாங்கிட்டு இருக்காங்க.

ஹீரோவா இருந்து குணச்சித்திர நடிகரா பெயர் வாங்கின நடிகர்களில் வாகை சந்திரசேகரும் ஒருவர். பாரதிராஜாகிட்ட அவரை அழைச்சிட்டுப் போய், ‘புதிய வார்ப்புகள்’ மூலம் அறிமுகப்படுத்தினதுல எனக்கொரு பெருமை. அந்தப் படத்துல அவர் கூத்துக் கலைஞராகவும், கால் ஊனமான மாப்பிள்ளையாவும் ரெண்டு ரோல் பண்ணியிருப்பார். ‘புதிய வார்ப்புகள்’ அப்போ அவரை நான் எடுத்த புகைப்படங்களை இன்னமும் பாதுகாத்து வச்சிருக்கார் சந்திரசேகர்.

அப்படி ஒரு ரசனையானவர். முதல் படத்துலயே அவர் அவ்ளோ சிறப்பா நடிச்சதுக்குக் காரணம், அவர் நாடகத்துறையில இருந்து வந்தவர் என்பதுதான். நடிகர் பெரிய கருப்ப தேவன் சிபாரிசுல, ‘வைரம்’ நாடகக்குழுவில் சேர்ந்தவர். ‘வைரம்’ நாடகக் குழுவில் இருந்து நிறைய நடிகர்கள் சினிமாவிற்கு வந்தாங்க. நான் ஹீரோவா இருந்தபோது கூட இவ்ளோ நல்ல ரோல்கள் கிடைச்சதில்ல’’னு சொல்வார் விஜயகுமார்.

(ரசிப்போம்...)
தொகுப்பு: மை.பாரதிராஜா
படங்கள் உதவி: ஞானம்