பந்தா
ஜெ. கண்ணன்
‘‘ஏங்க, நான் ரெடி!’’ - விலையுயர்ந்த பட்டுப் புடவையையும், கிலோ கணக்கில் நகைகளையும் அணிந்து கொண்டு, கையில் ஒரு பெரிய பையுடன் வந்து நின்றாள் ராகவனின் மனைவி விமலா. ‘‘இந்தப் பை எதுக்கு?’’ - விமலாவைக் கேட்டான் ராகவன். ‘‘உங்க சேர்மன் வீட்டு வரவேற்பிற்கு போயிட்டு, அப்படியே ராமு மாமா வீட்டு விசேஷத்திற்குப் போகப் போறோம். அதே புடவையோட போக முடியுமா? இந்தப் பையில மாற்றுப் புடவை வச்சிருக்கேன்!’’ என்றாள் விமலா.

‘‘இதெல்லாம் ரொம்ப ஓவர் பந்தா!’’ என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டான் ராகவன். சேர்மன் வீட்டு வரவேற்பில், ‘‘விமலா, நேரமாச்சு, அந்த விசேஷத்திற்கும் போகணும்!’’ ஞாபகப்படுத்தினான் ராகவன். ‘‘அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணுங்க!’’ என்று உள்ளே போன விமலா, சாதாரண புடவையுடன் வெளியே வந்தாள். அவள் கழுத்தில் ஒரே ஒரு செயின் மட்டும் இருந்தது.
ராகவன் அவளைப் பார்த்து விழிக்க, விமலா உடைந்த குரலில் பேசினாள், ‘‘ராமு மாமாவோட குடும்பம், வியாபாரத்தில் நஷ்டம் வந்து இப்ப ரொம்ப சிரமமான சூழ்நிலையில் இருக்கு. அவங்க முன்னாடி ஆடம்பரமா போய் நின்னா அவங்க மனசு கஷ்டப்படாதா? அதான் இப்படி!’’ விமலாவிடம் மானசீகமாய் மன்னிப்பு கேட்டான் ராகவன்.
|