குப்பைன்னு ஒதுக்கிப போடுற எதுவுமே குப்பை இல்லை!



‘பெண்களை பொருளாதார சக்தியாக உயர்த்த வேண்டும்; தொழில் முனைவோராக மாற்ற வேண்டும்; அதன்மூலம் சமூக மாற்றம் நிகழ வேண்டும்’ என்ற நோக்கில்தான் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தொடங்கப்பட்டன. ஆனால் பல சுய உதவிக்குழுக்கள் ‘லோனை வாங்கினோமா? ஏதேனும் ஒரு செலவைச் செய்தோமா?’ என்ற நிலையில்தான் இயங்கி வருகின்றன. ஆக்கபூர்வமாக செயல்படும் சுய உதவிக்குழுக்களை விரல்விட்டு எண்ணி விடலாம். திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்துள்ள தின்னக்கோணம் கிராமத்தில் செயல்படும் வசந்தம் சுய உதவிக்குழு அப்படி ஒரு முன்மாதிரிக் குழு!



நவீன முறையில் தரமான, செறிவூட்டப்பட்ட இயற்கை உரம் தயாரித்து வினியோகம் செய்கிறார்கள் இக்குழுவினர். இதன்மூலம் முசிறி வட்டாரத்தில் குப்பைக்கு பொருளாதார மதிப்பு உயர்ந்திருக்கிறது. தவிர, பலரை இயற்கை விவசாயிகளாகவும் மாற்றியிருக்கிறது இந்தக் குழு. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை வசந்தம் சுய உதவிக்குழுவும் பத்தோடு பதினொன்றாகத்தான் செயல்பட்டது. பெரம்பலூரில் நடந்த ஒரு பயிற்சி முகாம்தான் இவர்களை மாற்றியது. வசந்தம் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த லதா இதுபற்றி உற்சாகமாகப் பகிர்ந்துகொண்டார்.

‘‘குழுவுல மொத்தம் 12 பேரு. பணம் கட்டி பணம் எடுக்கிற ஒரு இடமாத்தான் எங்க குழு இருந்துச்சு. ஏதாவது உருப்படியா செய்யணும்னு யோசிப்போம். ஆனா, என்ன பண்றதுன்னு தெரியலே. அப்போதான் பெரம்பலூர்ல இயற்கை உரம் தயாரிக்கிறது பத்தி ஒரு மீட்டிங் நடக்குதுன்னு சொன்னாங்க. எல்லாருமே போனோம். அங்கே பேசின விஷயங்கள் மனசுக்கு ரொம்பவே கஷ்டமா இருந்துச்சு. இத்தனை காலமா நாம சாப்பாடுங்கிற பேர்ல சாப்பிட்டுக்கிட்டிருக்கிறது விஷம்னு புரிஞ்சுச்சு.



நாமளே மனசறிஞ்சு நம்ம புள்ளைகளுக்கு விஷத்தைக் கொடுத்துக்கிட்டு இருக்கோமேன்னு பதைபதைப்பா இருந்துச்சு. குறைந்தபட்சம் நம்ம குழந்தைகளுக்காவது ஏதாவது ஒரு மாற்றத்தை செய்யணும்னு முடிவெடுத்தோம். ஆர்வத்தோட அந்தத் தொழிலைக் கத்துக்கிட்டோம். குப்பைன்னு ஒதுக்கிப் போடுற எதுவுமே குப்பை இல்லை. எல்லாப் பொருளுக்கும் ஏதோ ஒரு பயன்பாடு இருக்கு. அதைப் பயன்படுத்தாம விட்டா, பெருகி அதுவே பெரிய பிரச்னையா மாறிடும். பயன்படுத்தினா எல்லாமே பணமா மாறும்னு சொல்லித் தந்தாங்க.

எங்க பகுதியில வீட்டுக்கு ரெண்டு மாடுங்க இருக்கு. ஆனா, அதுங்களோட சாணத்துக்கும் சிறுநீருக்கும் இவ்வளவு மதிப்பு இருக்குன்னு அதுநாள் வரைக்கும் எங்களுக்குத் தெரியாது. சாணத்தை ஒரு குழியில போட்டு வச்சிருப்பாங்க. சாகுபடி காலத்துல அள்ளிக்கொண்டு போய் வயக்காட்டுல கொட்டுவாங்க. ஆனா, அதுக்கு மேல வண்டி வண்டியாக் கொட்டுற ரசாயன உரத்தால, மாட்டுச்சாணத்துல இருக்கிற சக்தியெல்லாம் வீணாப் போயிடும்.

இன்னைக்கு இயற்கை உரம்னு விற்கப்படுற நிறைய தயாரிப்புகள் உண்மையில இயற்கை உரமா இருக்கிறதில்லை. பல பேர் கரும்பு ஆலைக் கழிவுகள், தென்னைமட்டைக் கழிவுகள்லதான் உரம் தயாரிக்கிறாங்க. கறுப்பு நிறத்துல ரெண்டு மூணு மண்புழுவைப் போட்டு எதைக் குடுத்தாலும் மக்கள் இயற்கை உரம்னு நம்பி வாங்கிடுறாங்க.

நாங்க நியாயமா செய்யணும்ங்கிற முடிவோட தொழிலை ஆரம்பிச்சோம். 1 டன் குப்பைக்கு 1000 ரூபாய் விலை கொடுத்தோம். எல்லாரும் ஆச்சரியப்பட்டாங்க. சில பேரு, ‘குப்பைக்குப் போயி இவ்வளவு காசு கொடுக்கிறீங்களே... என்னாச்சு உங்களுக்கு’ன்னு கிண்டல் செஞ்சாங்க. நாங்க எதையும் கண்டுக்கலே.

குப்பையை சல்லடையில கொட்டி நல்லா சலிச்சு நைஸா எடுத்துக்குவோம். 1 அடி மட்டத்துக்குப் போட்டு காய வச்சிடுவோம். புதுசாப் போட்ட நாட்டு மாட்டுச்சாணியை கரைச்சு குப்பை மேல தெளிச்சு 3 நாள் அப்படியே விட்டுருவோம். நல்லா சூடாகி ததும்பி நிக்கும். 10 கிலோ பரங்கிப்பழம், 12 வாழைப்பழம், 4 நாட்டுக்கோழி முட்டை, 10 பப்பாளிப்பழம், 20 லிட்டர் தண்ணி சேத்து கிரைண்டர்ல அரைச்சு வடிகட்டி ஒரு டேங்க்ல ஊத்தி வச்சிருவோம். 1 வாரம் கழிச்சு எடுத்தா வாசனையா இருக்கும்.



இதுக்குப் பேரு பழக்காடி. இதுதான் இயற்கை உரத்துக்கு உயிர் கொடுக்கிறது. இதுல 10 லிட்டர் எடுத்து, 100 லிட்டர் தண்ணியில சேத்து, அதில 2 கிலோ பனை வெல்லத்தைக் கலக்கி குப்பையில தெளிச்சு விடுவோம். அதுக்கப்புறம் 150 கிலோ வேப்பம் புண்ணாக்கு, 150 கிலோ ஆமணக்கு புண்ணாக்கு சேத்து 2 நாள் அப்படியே விட்டுருவோம். பிறகு 10 கிலோ சூடோமோனாஸ், 10 கிலோ அசோஸ்பைரில்லம், 10 கிலோ பாஸ்போ பாக்டீரியா கலந்து பேக் பண்ணிடுவோம். ஒரு செட் போட்டு முடிய 15 நாளாகும்.

தொடக்கத்துல கண்காட்சிகள், சந்தைகள்ல கொண்டு போய் வித்துக்கிட்டிருந்தோம். இப்போ எங்க ஊரைத் தேடி வர ஆரம்பிச்சுட்டாங்க. மொத்தம் மொத்தமா ஆர்டர்கள் வருது. இப்போ எங்க 12 பேருக்கும் முழுநேரமா இந்த வேலைதான். சில நேரங்கள்ல ஆர்டர் நிறைய வரும். அப்போ வேலைக்கு ஆள் போட்டுக்குவோம். மாடித் தோட்டம், கிச்சன் கார்டன்னு நகர்ப்புறங்கள்லயும் இப்போ தோட்டம் போடுற ஆர்வம் வந்திடுச்சு. நிறைய பேர் வந்து வாங்கிட்டுப் போறாங்க.

மாசத்துக்கு 4 அல்லது 5 டன் உரம் தயாரிக்கிறோம். சில்லறையா வாங்குனா கிலோ 20 ரூவா. மொத்தமா வாங்கினா 18 ரூபாய்க்குத் தர்றோம். எங்களுக்கும் குடும்பம் நடத்தற அளவு வருமானம் கிடைக்குது. எங்க ஊர்கள்ல இப்ப குப்பைக்கு நல்ல மவுசு வந்திருக்கு. இதனால நிறைய பேர் ரசாயன உரத்தைக் குறைச்சு இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பிச்சிருக்காங்க. எங்க குழுவுல இருக்கிற எல்லாரும் இப்போ இயற்கை விவசாயத்துக்கு மாறிட்டோம். பிள்ளைகளுக்கு சத்தான, ஆரோக்கியமான, சுத்தமான உணவைக் கொடுக்கிறோம். நிறைய பேரை கொடுக்கவும் வச்சிருக்கோம்!’’ என்கிறார் லதா.

எங்களுக்கும் குடும்பம் நடத்தற அளவு வருமானம் கிடைக்குது. எங்க ஊர்கள்ல இப்ப குப்பைக்கு நல்ல மவுசு வந்திருக்கு.

- வெ.நீலகண்டன்
படங்கள்: அசோக்