வீட்டுப் பராமரிப்பு வேலைகளுக்கு ஒரு ஆப்!ஸ்டார்ட் அப்பில் இது புதுசு

‘‘ஒரு துரும்பு இனிப்பைப் பார்த்துட்டா கூட்டத்துக்கே தகவல் சொல்லி கும்பலா வந்து கும்மி அடிக்கிறதுதானே எறும்புகளோட தனித்தன்மை. அதே மாதிரிதான் நாங்களும்! ஒரு இடத்தில் வேலை இருக்குனு தெரிஞ்சிட்டா, தீயா கிளம்பி வந்து முடிச்சுக் கொடுப்போம்!’’ என்கிறார் செந்தில்குமார். தன் நண்பருடன் இணைந்து இவர் உருவாக்கியிருக்கும் ஸ்மார்ட்போன் ஆப்பின் பெயர், ‘சூப்பர்ஆன்ட்ஸ்’ (Superantz). குழாய் ரிப்பேர் தொடங்கி டி.வி ரிப்பேர், கார்பென்டரி என வீட்டுப் பராமரிப்பு பிரச்னை எதுவென்றாலும் 30 நிமிடத்துக்குள் வந்து கை கொடுக்கும் புதுமை சர்வீஸ் இவர்களுடையது!‘‘2005ல நான் எஞ்சினியரிங் படிப்பை முடிச்சேன். அப்புறம் பல ஐ.டி கம்பெனிகள்ல மாறி மாறி வேலை பார்த்தேன். 2014 வாக்கில் சின்னச் சின்ன ஐ.டி ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் துவங்குற ட்ரெண்ட் பிரபலமாச்சு. நாமும் அப்படிச் செய்யலாமேனு என் க்ளாஸ்மேட் பிரசன்னாவுடன் சேர்ந்து யோசிச்சேன். நிச்சயம் மக்களுக்கு அத்தியாவசியமான ஒரு சேவையைத்தான் கையிலெடுக்கணும்னு விவாதிச்சப்பதான் வீட்டுப் பராமரிப்பு க்ளிக் ஆச்சு. முக்கியமான நேரத்துல ஒரு பிளம்பர் கிடைக்காம அல்லாடின அனுபவம் நிறைய பேருக்கு இருக்கும்.

ஒரு எலெக்ட்ரீஷியன் கிடைக்காம அரை நாள் இருட்டுல கிடந்திருப்போம். அப்படிப்பட்ட கஷ்டத்துல இருந்து எங்க ஆப் விடுதலை தருது. 2015 செப்டம்பர்லதான் இதை வெளியிட்டோம். இப்ப தினம் 30 பேருக்குக் குறையாம இந்த சேவையைப் பயன்படுத்துற அளவுக்கு வளர்ந்திருக்கு!’’ என்கிறார் செந்தில்குமார் பெருமிதமாக.

எலெக்ட்ரிகல், கார்பென்டரி, பெயின்டிங், பிளம்பிங், கால் டிரைவர், பிசியோதெரபி, செல்லப் பிராணிகள் பராமரிப்பு, பெஸ்ட் கன்ட்ரோல் என சுமார் 40 சேவைகளை இப்போதைக்கு இவர்கள் வழங்குகிறார்கள். இதற்காக 300 திறமையான வேலைக்காரர்களை ஒருங்கிணைத்திருக்கிறார்கள். செய்து தரும் சர்வீஸுக்கு 15 நாள் வரை வாரன்டியும் உண்டு. அதாவது, சரி செய்த பிரச்னை அடுத்த நாளே மீண்டும் தலைதூக்கினால் சர்வீஸ் ஃப்ரீ!

‘‘கூகுள் ப்ளே ஸ்டோரில் இந்த ஆப்பை டவுன்லோடு செய்துக்கலாம். பெரியவர்கள், டெக்னாலஜி அலர்ஜி உள்ளவர்கள் நேரடியா எங்க நிறுவனத்துக்கு கால் செய்யலாம். அல்லது எங்க வெப்சைட்டிலும் ரிக்வெஸ்ட் கொடுக்கலாம். இதில் பெரும்பாலான வேலைகளுக்கு நிலையான சார்ஜ் கிடையாது. ஒரு ஃபேன் மாட்டுறதா இருந்தா கூட, சீலிங்கின் உயரம், ஃபேனுடைய எடை, அதில் தூசி படிஞ்சிருந்தா துடைச்சி பண்ற ஜெனரல் சர்வீஸ்னு எல்லாத்தையும் பார்த்துத்தான் கட்டணம் ஃபிக்ஸ் பண்ண முடியும்.

அதனால வாடிக்கையாளர்கள் ஆப் மூலமா அழைச்ச உடனே, எங்க ஆட்கள் நேர்ல போய் பார்ப்பாங்க. அதுக்கு அப்புறம்தான் கட்டணம் இவ்வளவுனு சொல்லப்படும். நம்ம மக்கள் இப்ப எக்ஸ்ட்ரா கொஞ்சம் பணம் ஆகுறதைப் பத்திகூட கவலைப்படுறதில்லை. ஆனா, அடிக்கடி பிரச்னைனு கஷ்டப்படவோ லீவ் போட்டுட்டு அதுக்கான ஆளைத் தேடி ஓடவோ அவங்க தயாரா இல்லை. அதனால, இதில் கட்டணத்தை விட வேலையோட தரம் ரொம்ப முக்கியம்.

அதனாலேயே எங்க மெக்கானிக்குகளையும் எலெக்ட்ரீஷியன்களையும் மற்ற நிபுணர்களையும் பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுத்திருக்கோம். அவங்க வேலைத் திறன் மட்டுமில்லாம பின்னணியையும் பார்த்துதான் இதில் இணைச்சிருக்கோம். சிலருக்கு 40 நாட்கள் வேலையில் ட்ரெயினிங் கொடுத்த பிறகு கான்ட்ராக்ட் போட்டு இணைச்சோம். ஒரு ஏரியாவிலிருந்து ‘பிளம்பர் தேவை’னு கஸ்டமர் கூப்பிட்டா, முதல்ல அந்த ஏரியாவைச் சேர்ந்த பிளம்பருக்குத்தான் தகவல் சொல்வோம்.

ஒருவேளை அவரால முடியாதுன்னாதான் பக்கத்து ஏரியாவில் இருந்து ஆள் வருவார். இப்ப எங்களோட 40 வகையான சேவைகளையும் தாண்டி புதுப்புது சேவைகளை வாடிக்கையாளர்கள் கேக்கறாங்க. வீட்டுக்கே வந்து பெண்களுக்கு மேக்கப் செய்வது, யோகா கிளாஸ், ட்யூஷன் போன்ற சர்வீஸ்களை சமீபத்துல இணைச்சதே கஸ்டமர்கள் கேட்டதாலதான்! சென்னையில மட்டும் இயங்கிட்டிருந்த இந்த ஆப், இப்ப திருச்சிக்கும் விரிவுபடுத்தப்பட்டிருக்கு.

சீக்கிரமே கோவையிலும் கொண்டு வரப் போறோம்!’’ என்கிற செந்தில்குமார், ‘‘ஒரு பக்கம், ‘சரியான ஆட்கள் கிடைக்கலை’னு பொதுமக்கள் தவிக்க... இன்னொரு பக்கம், ‘திறமைக்கு ஏற்றபடி வாய்ப்புகள் கிடைக்கலை’னு வேலையாட்கள் கஷ்டப்பட்டாங்க. இந்த ரெண்டுத்துக்கும் தீர்வு தந்திருக்குற இந்த ஆப், பல பேர் வாழ்க்கையில ஒளியேத்தியிருக்கு!’’ என்கிறார் பன்ச்சாக!

நம்ம மக்கள் எக்ஸ்ட்ரா கொஞ்சம் பணம் ஆகுறதைப் பத்திகூட கவலைப்படுறதில்லை. ஆனா, அடிக்கடி பிரச்னைனு கஷ்டப்படவோ, அதுக்கான ஆளைத் தேடி ஓடவோ தயாரா இல்லை!

- டி.ரஞ்சித்
படங்கள்: ஆர்.சி.எஸ்