சினிமாவில் வெற்றியை தக்கவச்சுக்கறது ரொம்ப சிரமம்!



முத்தின கத்திரிக்கா

சுந்தர்.சி

‘‘குழந்தைங்களுக்கு புதுசா ஒரு பொம்மை கிடைச்சுட்டா அதுமேல ஓவரா ஒரு ஆர்வம் வரும் பாருங்க... அப்படித்தான் எனக்கு அப்போ நடிப்பு மேல ஆசை! 2006ல இருந்து 2010 வரை வரிசையா பன்னிரண்டு படங்கள்ல ஹீரோ. ஒரு கட்டத்துல ‘நாம கரம் மசாலா டைப்ல ஒரே மாதிரி பண்றமோ’னு ஒரு சலிப்பு வந்துச்சு. அதனாலதான் நடிப்புக்கு முழுக்கு போட்டுட்டு டைரக்‌ஷன்ல கவனம் செலுத்த ஆரம்பிச்சேன். ‘கலகலப்பு’ உருவாச்சு!’’



எப்போதுமே நாம் கேட்கும் அளவுக்கும் மேலே மனம் திறப்பவர் சுந்தர்.சி. சார் இப்போது மறுபடி ஹீரோவான கதைக்குத்தான் இப்படி ஒரு ஓபனிங்!
‘‘பலரும் ‘இனி நடிக்கவே மாட்டேன்னு சொன்னீங்க... ஆனா, ‘அரண்மனை’யில இருந்து மறுபடி ஆரம்பிச்சிட்டீங்களே’னு கேக்குறாங்க. ஆக்சுவலா அது ஹீரோயின் சப்ஜெக்ட். அதுல வர்ற ஹீரோவுக்கு ஜோடி கிடையாது... டூயட் கிடையாது... க்ளைமேக்ஸ்ல அவருக்கு வேலையும் கிடையாதுன்னா யாராவது நடிப்பாங்களா? மத்தவங்ககிட்ட கேட்டு அவங்களை ஏன் தொந்தரவு பண்ணணும்னுதான் நானே பண்ண  ஆரம்பிச்சேன். அதே கணக்குதான், ‘அரண்மனை 2’விலும் கூட!

சமீபத்தில், ‘வெள்ளி  மூங்கா’னு ஒரு மலையாளப் படம் பார்த்தேன்... பிரமாதம். எத்தனையோ காமெடிப் படங்கள் எடுத்த என்னையே விழுந்து விழுந்து சிரிக்க  வச்சிடுச்சு. எக்கச்சக்க போட்டிக்கு நடுவுல அதோட தமிழ் ரைட்ஸை வாங்கிட்டேன். அதில் எனக்கே எனக்குனு பொருத்தமா ஒரு கேரக்டர் இருந்தது. எல்லாத்திலும் மொக்கை வாங்கிட்டு, ஆனாலும் கெத்தா நடமாடுற அந்தக் காலத்து பாக்யராஜ் மாதிரி ஒரு ஆளு. எதைப் பத்தியும்  கவலைப்படாம தெனாவட்டா திரியுற ஒரு கேரக்டர்!’’

‘‘விநாயக சுந்தர வடிவேல் டூ சுந்தர்.சி... உங்க லைஃப் ட்ராவல் பத்தி?’’
‘‘சில பேரை கடவுளோட குழந்தைகள்னு சொல்வாங்க. என்னை நான் அப்படித்தான் சொல்லிக்குவேன். நான் எந்தக் கஷ்டமும் படாமலே எனக்குக் கதவுகள் திறக்கப்பட்டுச்சு. ஆனா, கதவுகள் திறந்தாலும் அந்த இடத்தை தக்க வச்சுக்க நான் கஷ்டப்பட்டேன். சினிமா கனவே இல்லாமல் இருந்த இந்த விநாயக சுந்தர வடிவேலுக்கு முதல்ல கிடைச்ச வேலையே சினிமாதான். 



அசிஸ்டென்ட் டைரக்டராகக் கூடிய சந்தர்ப்பம் கிடைச்சது. அதன் பிறகு இயக்குநர் ஆகக்கூடிய சந்தர்ப்பமும் அதுவாகத்தான் அமைஞ்சது. யார் வாசல் கதவையும் தட்டாமல் கிடைச்சது. அப்புறம் பெயர் சுந்தர்.சி ஆச்சு. ஆனால், எனக்குக் கிடைச்ச ஒவ்வொரு இடத்திலும் நான் கடுமையா உழைச்சேன். சினிமாவில் நான் கத்துக்கிட்ட ஒரு விஷயம், எல்லாருக்கும் முதல் வெற்றி கிடைக்கறது ஈஸி. ஆனால் அதைத் தக்க வச்சுக்கறது ரொம்ப சிரமம். அங்கேதான் நாம கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கணும்!’’   

‘‘அடுத்தது, ‘அரண்மனை 3’யா? ‘கலகலப்பு 2’ வா?’’
‘‘ரெண்டுமே  இல்ல! ‘அரண்மனை’ அடுத்த பார்ட் எடுக்கறது பத்தி எந்த ஐடியாவும் இப்போ  இல்ல. ‘கலகலப்பு 2’க்கான வேலைகளும் ஆரம்பிக்கல. ஆனா, இன்னும் சூப்பரா பேசப்படுற மாதிரி ஒரு கதையோட அடுத்து வரப்போறேன். ஹீரோவும் முடிவாகிடுச்சு!’’

‘‘சுந்தர்.சி என்றாலே காமெடி படங்கள்தான் இயக்குவார்னு ஆகிடுச்சு. அந்த ரூட்டை எப்படிப் பிடிச்சீங்க?’’
‘‘நம்ம பலம் எப்பவும் நமக்கே தெரியாமல்தான் இருக்கும். நான் காமெடி பண்ணுவேன்னு நானே நினைச்சு பார்த்ததில்ல. ‘முறைமாமன்’, ‘உள்ளத்தை அள்ளித்தா’ படங்களில் காமெடி நல்லா இருக்குனு மத்தவங்க சொல்லச் சொல்லத்தான் என் திறமை எனக்கே தெரிய ஆரம்பிச்சது. இன்னொரு விஷயம்... எனக்கு ரெண்டு படம் சரியா போகலைன்னாலும் கூட அடுத்து ஜெயிச்சே ஆகணும்னு இறங்கி வேலை செய்ய ஆரம்பிச்சிடுவேன். அந்தச் சமயங்கள்ல சமீபத்தில் வராத டைப் கதை எதுவோ, அதையும் காமெடியையும்தான் கையில் எடுப்பேன். அதுதான் வெற்றி ரகசியம். என் படங்கள்ல ஆர்ட்டிஸ்ட்கள் அதிகமா இருக்கக் காரணமே நாகேஷ் சார் நடிச்ச ‘பாமா விஜயம்’ படம்தான். அதான் இன்ஸ்பிரேஷன்!’’

‘‘ ‘மதகஜராஜா’..?’’
‘‘அந்தப் படத்தைப் பத்தி நிறையவே பேசியாச்சு. புதுசா பேச  ஒண்ணுமே இல்ல. ‘முத்தின கத்திரிக்கா’வில முக்கியமான பாயின்ட் இருக்கு. அதைப் பத்தி பேசுவோமே பாஸ்!’’

‘‘எப்படி வந்திருக்கு ‘முத்தின கத்திரிக்கா’ ?’’
‘‘செம காமெடி படம். 35 வயசுக்கு மேலேயும் கல்யாணம் பண்ணாமல் இருக்கும் ஒரு பேச்சிலர் பத்தின கதை. அவன்தான் ‘முத்தின கத்திரிக்கா’. மலையாளத்தில் பிஜு மேனன் நடிச்ச ‘வெள்ளி மூங்கா’ படத்தை தமிழ்ல நிறைய மாற்றங்களோடு ரீமேக் பண்ணியிருக்கோம். ஆறு வருஷம் என்கிட்ட அசோசியேட்டா, டயலாக் ரைட்டரா, செகண்ட் யூனிட் டைரக்டரா இருந்தவர் வேங்கட்ராகவன். அவர்தான் இந்தப் படத்தை இயக்கியிருக்கார். படத்துல எனக்கு ஜோடி பூனம் பஜ்வா.

குடும்பப் பாங்கான அழகும், கிளாமரும் மிக்ஸ்டா இருக்கற ஹீரோயின்! நான் தயாரிச்ச, ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ படத்துக்கு இசையமைச்ச சித்தார்த் விப்பினும், கேமராமேன் பானுமுருகனும் இதிலும் இணையுறாங்க. என்னோட ஃபேவரிட் எடிட்டர் ஸ்ரீகாந்த் இருக்கார். முன்னாடி எல்லாம் பீக்ல இருக்கற காமெடி நடிகர் நடிச்சிருந்தாதான் அந்தப் படத்தை மக்கள் ரசிப்பாங்க. இப்ப டிரெண்ட் மாறிப் போச்சு.

சீனும் காமெடியும் கதையோடு ஒத்து வந்தா, அதில் யார் நடிச்சாலும் வொர்க்அவுட் ஆகுது. சதீஷ், வி.டி.வி.கணேஷ், சிங்கம்புலி, ஸ்ரீமன், சிங்கப்பூர் தீபன், ரவிமரியானு காமெடி பேக்கேஜே இந்தப் படத்துல அமைஞ்சிருக்கு. ஸ்பாட்லேயே அவ்வளவு சிரிப்பு. எல்லா தரப்பையும் மகிழ்விக்கிற படமா வந்ததில் எல்லாருக்குமே திருப்தி. என்னோட படங்கள் பெரும்பாலும்  குடும்பத்துடன் பொழுதுபோக்கக் கூடிய ஃபீல் குட் மூவியாகத்தான் இதுவரை  இருந்திருக்கு. அந்தப் பெயரை ‘முத்தின கத்தரிக்கா’விலும் கண்டிப்பா காப்பாத்துவேன்!’’

- மை.பாரதிராஜா