கடக லக்னத்துக்கு சந்திரனும் கேதுவும் தரும் யோகங்கள்



41 கிரகங்கள் தரும் யோகங்கள்

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

ஓவியம்: மணியம் செல்வன்


மாதுர்காரகனும் மனோகாரகனுமான சந்திரனோடு, சர்ப்ப கிரகமான கேது சேர்ந்தால் அமைதியற்ற ஒரு நிலையைத் தரும். இந்த அமைப்புள்ளவர்கள் பதற்றமும், அவசரத்தனமும், மன அழுத்தமும் கொண்டிருப்பார்கள். இந்த இரு கிரகங்களும் ஐந்து டிகிரிக்குள் ஒன்றாக இருந்தாலோ, அல்லது செவ்வாயோ சனியோ இதைப் பார்த்துக் கொண்டிருந்தாலோ, நிம்மதியற்ற வாழ்வு வாழ்வார்கள். எப்போதும் ஏதேனும் புலம்பியபடி இருப்பார்கள். ஐந்து டிகிரிக்கு அப்பால் இருந்தால் பிரச்னைகளின் தீவிரம் குறையும்.
 


இவர்கள் நிச்சயமாக யோகா, தியானம், பூஜைகளைச் செய்து மனதை அமைதியாக்கிக்கொள்ள வேண்டும். தினசரி வாழ்வில் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வது மற்றும் உணவுக் கட்டுப்பாடு கடைப்பிடிப்பது நல்லது. இல்லையெனில் அடிக்கடி மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியிருக்கும். தாய்வழி முன்னோர்களின் கர்மாவினால் இவர்கள் கொஞ்சம் பாதிக்கப்படுவார்கள். பல சமயங்களில் அலுப்பூட்டும் மனோநிலையோடு பேசுவார்கள்.

கைக்குக் கிடைத்த சுகத்தை அனுபவிக்காமல், எங்கேயோ இருப்பதை நினைத்து ஏங்குவார்கள். தேவையற்ற சினம்தான் இவர்களை அழிக்கும். தேவையற்ற அதீத கௌரவம் பார்த்து வீணாகிப் போவார்கள். ‘‘அன்னிக்கே இறங்கி வந்து ஒரு வார்த்தை கேட்டிருந்தா... இவ்ளோ தூரம் வந்திருக்குமா’’ என்று பிரச்னையை பெரிதாக்கி விட்ட பிறகு யோசிப்பார்கள். எதிலுமே சுயதிருப்தியின்மையோடு இருப்பார்கள்.

கடக லக்னத்தில் பிறந்தவர்களின் ஜாதகத்தில் சந்திரனும் கேதுவும் எந்தெந்த இடங்களில் இணைந்திருந்தால் என்னென்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என இனி வரிசையாகப் பார்க்கலாம். கடகத்தில் லக்னாதிபதியான சந்திரன், கேதுவோடு இணையும்போது சின்னச் சின்னதாக ஏதேனும் உடல்நலக் கோளாறு வந்துபோகும். கண்ணில் அடிக்கடி நீர் வடியும். பார்த்துக்கொள்ள வேண்டும். உள்ளங்கை வியர்த்தபடி இருக்கும். இவர்கள் ‘தாயாரே தெய்வம்’ என்றிருப்பார்கள்.

நன்கு புகழ்பெறும் நேரத்தில் தங்களைத் தாங்களே கெடுத்துக் கொள்வார்கள். அவசரப்பட்டு ஏதேனும் பேசி விடுவார்கள். இவர்கள் சொந்த ஊரை விட்டு வெளியேறி வேறு எங்காவது சென்று வாழவே விரும்புவார்கள். இவர்களுக்கு அனுபவப் பாடமே சிறந்த ஆசிரியராகும். வெளித்தோற்றத்தைப் பார்த்து இவர்களை எடை போடவே முடியாது. பூர்வ ஜென்மம், அடுத்த ஜென்மம் என்றெல்லாம் நிறைய ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பார்கள்.

கடக ராசிக்கு இரண்டாம் இடமான சிம்மம் எனும் வாக்கு ஸ்தானத்தில் கேதுவோடு சந்திரன் சேர்ந்தால், மருத்துவக் கல்விக்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளன. குறிப்பாக இதயநோய் சிகிச்சை நிபுணராக இருப்பார். ஆரம்பக் கல்வியைக் கொண்டு இவர்களை எடைபோட முடியாது. இவர்கள் யாரையுமே கடுஞ்சொல்லால் திட்டாமல் இருக்க வேண்டும். பள்ளி நாட்களில் பார்வைக் குறைபாடு வந்து பின்னர் நீங்கும். கேட்காமலேயே பிறருக்கு உதவிகள் செய்வார்கள். எவ்வளவு கோபமானாலும் நல்லோரைத் தேடி ஓடும் மனோபாவம் உண்டு.

எழுத்தறிவிக்கும் ஆசிரியரை மறக்க மாட்டார்கள். கன்னி ராசியான மூன்றாம் இடம் முயற்சி ஸ்தானத்திற்கு உரியது.  சந்திரனோடு இங்கு கேது அமரும்போது கேள்வி ஞானம் அதிகமுள்ளவர்களாக இருப்பார்கள். ஏதேனும் கற்றுக்கொண்டே இருப்பார்கள். சிறிய வயதிலேயே சித்தர்கள், கோயில்கள், மகான்கள் என்று தேடலோடு இருப்பார்கள். இவர்களுக்கு இளைய சகோதர, சகோதரிகள் மிகவும் அனுகூலமாக இருப்பார்கள். முயற்சியைத் தவிர தெய்வத்தின் அருளும் வேண்டும் என்று பல இடங்களில் உணர்ந்திருப்பதாகக் கூறுவார்கள்.

தன் முயற்சியை மீறி பல விஷயங்கள் நடைபெறுவதாக பேசுவார்கள். ஒரு செயலைச் செய்வதற்கு முன்பு என்னென்ன உபாயங்களை மேற்கொள்ளலாம் என்று திட்டமிடுவார்கள். ‘துணிவே துணை’ எனும் வாசகத்துக்கு முழு அர்த்தத்தோடு வாழ்ந்து காட்டுவார்கள். இவர்களின் தாய் ஸ்தானத்திற்குரிய நான்காம் இடம் துலாம். இதற்கு அதிபதியாக சுக்கிரன் வருகிறார். இந்த அமைப்பில் பிறந்தவர்களுக்கு பாதகாதிபதியே சுக்கிரன்தான்.

இங்கு சந்திரனும் கேதுவும் சென்று அமரும்போது தாயாருக்கு உடம்பு ஏதேனும் படுத்தியபடியே இருக்கும். வீணாகப் பழைய பகையையெல்லாம் நினைத்துக்கொண்டே இருக்கக் கூடாது. மிக முக்கியமாக நரம்புத் தளர்ச்சி, காதில் சீழ் வடிதல், தேவையற்ற நடுக்கம் என்றெல்லாம் இருக்கும். எடுத்தவுடனேயே புதிய வாகனத்தை வாங்காமல், வேறொருவர் பெயரில் வாகனத்தை கொஞ்ச நாட்கள் வைத்திருந்துவிட்டு பிறகு இவர்கள் பெயரில் மாற்றிக்கொண்டால் நல்லது.

அரைகுறையான தைரியத்தைக் கொண்டு நதி, ஆறு போன்ற நீர்நிலைகளில் விளையாடக் கூடாது. இவர்கள் தங்களுடைய சொந்த ஊர் தெய்வம், மரபு, இனம் குறித்து மிக விரிவாக ஆராய்ச்சி செய்வார்கள். பூர்வ புண்ய ஸ்தானமான விருச்சிகம் இவர்களுக்கு ஐந்தாம் இடமாக வருகிறது. இங்கு சந்திரனோடு கேது சேரும்போது காலதாமதப்பட்டு வாரிசுகள் கிட்டும். ஆனால், ஞானகாரகனான கேதுவின் அருளால் சிறந்து விளங்குவார்கள்.

சிலர் புதிதாக எங்கு சென்றாலும், ‘எங்கேயோ இதையெல்லாம் பார்த்த ஞாபகமாகவே உள்ளதே’ என்று சொல்லிக்கொண்டு இருப்பார்கள். மூதாதையர்கள் மீது மிகுந்த பிரியத்தோடு இருப்பார்கள். தாத்தாவின் கட்டில், பாட்டியின் கண்ணாடி என்று அவர்கள் உபயோகித்த பொருட்களையெல்லாம் சேமித்து வைத்திருப்பார்கள். எந்த ஒரு செயலையும் தவம் செய்வதுபோல செய்து முடிப்பார்கள். யோகா, தியானம், உடற்பயிற்சி எல்லாம் செய்து உடலை நன்றாக வைத்திருப்பார்கள். பாரம்பரிய மரபுக் கல்வியை குழந்தைகள் அறிந்துகொள்ள வேண்டுமென்று நினைப்பார்கள்.

தனுசு ராசியான ஆறாம் இடம் இவர்களுக்கு நோய், கடன், சத்ரு ஸ்தானமாகும். இங்கு சந்திரனும் கேதுவும் சேர்ந்திருந்தால் ஒரு பக்கம் கடன் வாங்கிக்கொண்டும், மறுபக்கம் கடனை அடைத்துக்கொண்டும் இருப்பார்கள். மிகச் சிறந்த ஆலோசகராக இருப்பார்கள். ‘‘நோயை எப்போதும் நினைத்துக்கொண்டே இருக்கக் கூடாது... உடலில் இருக்கும் நோயை மனதிற்குள் கொண்டுவரக் கூடாது’’ என்று எல்லோருக்கும் சொல்வார்கள். நிறைய வெளிநாடுகளுக்குச் சென்று வருவார்கள். அவர்களின் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் தெரிந்து கொள்வார்கள்.

சமூகப் புரட்சிக்காக ஆரம்ப நாட்களில் சிறைக்கெல்லாம் சென்று வருவார்கள். அவ்வப்போது காடு, மலை என்றெல்லாம் சுற்றிவிட்டு வருவார்கள். ஏழாம் இடமான மகரத்தில் சந்திரனும் கேதுவும் சேர்ந்திருந்தால், சிற்றின்ப வேட்கை அதிகம் இருக்கும். ‘வாழ்க்கைத்துணை நமக்கு இன்னும் சிறப்பானவராக இருந்திருக்கலாமோ’ என்று நினைப்பார்கள். திருமணத்திற்கான நிச்சயதார்த்தத்திற்கும் திருமணத்திற்கும் இடையே அதிக இடைவெளி கொடுக்கக் கூடாது.

ஆண்களாக இருந்தால் பெண்களிடம் வீண் விவாதம் வைத்துக்கொள்ளக் கூடாது. மர்ம ஸ்தானத்தில் ஏதேனும் நோய்க்கான அறிகுறி தென்பட்டால் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும். இவர்களின் எட்டாம் இடமான கும்பம், ஆயுள் ஸ்தானமாக வருகிறது. ஆயுள்காரகனான சனியின் இடத்தில் கேதுவும் சந்திரனும் அமர்கிறார்கள். இது தடுக்கிவிடும் அமைப்பு! மிக நிச்சயமாக இவர்கள் வாகனங்களில் வேகமாகச் செல்லக் கூடாது. நள்ளிரவு நேரங்களில் சுயமாக வாகனத்தை செலுத்தக் கூடாது.

இவர்கள் தத்துவத்தில் ஞானமுள்ளவர்களாக இருப்பார்கள். இவர்களில் சிலர் கோயில் ஓவியங்களை வரைவதில் நாட்டமுள்ளவர்களாக இருப்பார்கள். கடுங்கோபம் கொள்வதை இவர்கள் குறைத்துக்கொள்ள வேண்டும். வாழ்க்கைத்துணை வழி சொந்தங்கள் ஆதரவாக இருப்பார்கள். திடீர் பயணங்கள் மூலம் நிறைய லாபங்களைப் பெறுவார்கள். இவர்களில் நிறைய பேர் பயணம் செய்தே சம்பாதிப்பவர்களாக இருப்பார்கள்.
 
ஒன்பதாம் இடம், மீன ராசியான பாக்கிய ஸ்தானம். இதில் சந்திரனோடு கேது இருந்தால், தந்தையோடு ஏதேனும் ஒருவிதத்தில் கருத்து வேறுபாடுகள் வந்தபடி இருக்கும். நிறைய தர்ம காரியங்களைச் செய்வார்கள். தந்தைவழிச் சொத்துகளைக்கூட வேண்டாமென்று சிலர் மறுப்பார்கள். தந்தையின் நல்ல விஷயங்களை அவரே அறியாதவாறு பாராட்டும் குணமும் இருக்கும். எந்த வேலை செய்தாலும் அதில் தனிச்சிறப்போடு திகழ்வார்கள். மந்திர தீட்சை பெற்றுக்கொண்டு ஜெபிப்பார்கள். இவர்கள் தங்கள் வாழ்க்கையில் யாரையேனும் ஞான குருவாக வரித்துக்கொண்டு வழிபடுவார்கள்.

மேஷம் இவர்களுக்கு பத்தாம் இடமான ஜீவன ஸ்தானமாக வருகிறது. இதன் அதிபதி மேஷ செவ்வாய். இங்கு சந்திரனோடு கேதுவும் அமர்கிறார். கடக லக்னத்திற்கு பிரபல யோகாதிபதியாகவும் செவ்வாய் இருக்கிறது. அதனால் மிக நிச்சயமாக  இவர்கள் நல்ல நிர்வாகத் திறனோடு விளங்குவார்கள். இவர்கள் பெரும்பாலோர் கெமிக்கல் எஞ்சினியராக வருவார்கள். தர்ம ஸ்தாபனங்கள், கோயில்கள் போன்றவற்றில் முக்கியப் பொறுப்பில் அமர்வார்கள்.

இவர்கள் தீய நபர்களோடோ அல்லது நல்லவர்கள் போல் தெரியும் நண்பர்களோடு சேர்ந்தோ வியாபாரத்தைத் தொடங்கக் கூடாது. இவர்கள் எதையுமே தீர்மானமாகப் பேசக்கூடிய தைரியத்தோடு இருப்பார்கள். பல சமயங்களில் ஆணையாகவே வெளிப்படுத்துவார்கள். பதினோராம் இடமான மூத்த சகோதர ஸ்தானத்திற்கும், லாப ஸ்தானத்திற்கும் ரிஷபச் சுக்கிரன் வருகிறார். அங்கு சென்று சந்திரனும் கேதுவும் அமர்ந்தால், சகோதர வழிச் சொந்தங்களிடமிருந்து கொஞ்சம் தள்ளி இருப்பதே நல்லது.

அப்படியிருந்தால் சொந்தங்கள் தொடரும்.  கொஞ்சம் காது மந்தமானால் உடனே மருத்துவரைப் பார்க்கவும். கணுக்கால்களில் திடீரென்று வலி வந்தால் கவனம் தேவை. இவர்களின் உழைப்பில் வராத ஏதேனும் சொத்து நிச்சயம் புதையல் போல் கிடைக்கும். இவர்கள் பசு, குதிரை என்று ஏதேனும் வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவார்கள். இவர்களில் பலரும் கப்பல் வழிப் பயணத்தை பெரிதும் விரும்புவார்கள்.

பன்னிரெண்டாம் இடம் மிதுனம். இந்த சயன ஸ்தானத்திற்கும், மோட்ச ஸ்தானத்திற்கும் அதிபதியாக புதன் வருகிறார். மோட்சத்தைத் தரும் கேது இங்கு அமர்வது பெரும் புண்ணியம் தரும் அமைப்பாகும். இவர்களின் வாழ்வில் பெரும்பகுதி ஆன்மிகத்தால் நிறைந்திருக்கும். கோயில், தலங்கள், புண்ணிய நதிகள், மகான்கள் என்று எப்போதும் ஈடுபாட்டோடு இருப்பார்கள். அதிலும் வாழ்வின் இரண்டாம் அத்தியாயம் எனப்படும் மத்திம வயதில் சந்நியாசியைப் போல் இருப்பார்கள்.

தனக்கென்று எதையுமே வைத்துக்கொள்ள மாட்டார்கள். அம்பிகை வழிபாட்டில் மிக உன்னதமான உபாசகர்களாக விளங்குவார்கள். கேதுவும் சந்திரனும் சேரும் இந்த அமைப்பானது பெரும்பாலும் நன்மையை அளிக்கும் என்று சொல்ல முடியாது. எதையுமே எதிர்பார்க்காத வாழ்க்கையை வாழ்பவர்களுக்கு, மிகச்சிறந்த பலன்களை இது கொடுக்கும். அதாவது, ‘வருவதை ஏற்றுக்கொள்வோம். வராததைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்’ என்பது போன்ற மனோபாவம் இருந்தால் இந்த அமைப்பு அவர்களை ஒன்றுமே செய்ய முடியாது.

மற்றபடிக்கு, ‘நினைத்ததையெல்லாம் அடைய வேண்டும்’ என்கிற மனநிலையில் வாழ்பவர்கள் கொஞ்சம் சிரமப்படுவார்கள். அப்படிப்பட்டவர்கள் மிக நிச்சயமாக செல்ல வேண்டிய தலமே சென்னையை அடுத்த பூவிருந்தவல்லி மற்றும் குன்றத்தூருக்கு அருகேயுள்ள மாங்காடு ஆகும். கருவறையில் பேரழகுப்பெட்டகமாய் காமாட்சி தேவி கையில் கிளி ஏந்தி, தலையில் சந்திர கலையோடு தரிசனமளிக்கிறாள்.

அர்த்த மண்டபத்தில் பஞ்சாக்னியில் நின்று ஒற்றைக்காலில் தவம் புரியும் நிலையில் காமாட்சியை தரிசிக்கலாம். தவத்தின் முடிவில் ஈசனின் ஆணையால் காமாட்சி இங்கிருந்து காஞ்சிபுரம் சென்று விட, அன்னை வளர்த்த அக்னியால் இப்பகுதியே தகிக்க ஆரம்பித்தது. அதைத் தணிக்க ஆதிசங்கரர் இங்கே அர்த்தமேருவை பிரதிஷ்டை செய்தார். தவம் செய்யும் நிலையில் இங்கிருந்து காஞ்சி சென்ற தபஸ்காமாட்சியை இன்றும் காஞ்சி காமாட்சியம்மன் ஆலய கருவறையில் தரிசிக்கலாம். அஷ்டகந்தங்களால் ஆன அர்த்தமேருவிற்கு அர்ச்சனையும் காமாட்சிக்கு அபிஷேகங்களும்  நடைபெறுவது இக்கோயிலின் சிறப்பு.

(கிரகங்கள் சுழலும்...)