லேசாக லெக்கிங்ஸ் போடலாம்!



கோகுலவாச நவநீதன்
ஓவியங்கள்: ஹரன்


கணவன் தன் மனைவியை லேசாக அடிக்கலாம்’ என பாகிஸ்தானில் உள்ள சட்டசபை அனுமதி தரவிருக்கிறது. அது மாதிரி நம்மூர் ஆண்களை குஷிப்படுத்த எதை எதையெல்லாம் ‘லேசாக’ அனுமதிக்கலாம்? (முன்குறிப்பு: பெண்ணியம் பேசுகிறவர்கள் இந்தப் பக்கங்களை அப்படியே கடந்து போய் விடவும்!)



லேசாக குடிக்கலாம்!
குடிக்கவும் காசு வாங்குகிறார்கள்... அப்புறம் ‘ஏன்டா குடிச்சே?’ என்றும் காசு பிடுங்குகிறார்கள். இந்த டிரங்க் அண்ட் டிரைவ் தொல்லையைப் போக்க, ‘லேசாகக் குடிக்கலாம்’ என ஒரு ரூல் தேவை. அப்படியே அளவு தெரியாமல் அதிகம் குடித்துவிட்டாலும் போலீஸ்காரர்களை ‘லேசாக’ கவனிக்கலாம் என விதி இருந்தால், பிரச்னையை பத்து, இருபதுக்குள் முடிக்க வசதியாக இருக்கும்.

லேசாக டீஸிங்!‘
ஊதா கலரு ரிப்பன்’, ‘என்னம்மா... இப்படி பண்றீங்களேம்மா’ என சினிமா ஹீரோக்கள் மட்டும் ஜாலியாய் சைட் அடிக்கிறார்கள். நாமும் ஹீரோவாகலாம் என இளைய தலைமுறை எழுச்சி கொள்ளும்போது ஈவ் டீஸிங் கேஸில் பிடித்துப் போட்டுவிடுகிறார்கள். இந்த அநியாயத்தைத் தடுக்க, ‘லேசாக ஈவ் டீஸிங் செய்யலாம்’ என அனுமதி கொடுக்கலாம். ஒருவேளை ஸ்பாட்டில் சிக்கிக்கொண்டு தர்ம அடி வாங்கினாலும் அந்த அப்பாவியை ‘லேசாக அடிக்கலாம்’ என ஒரு துணை சட்டமும் இருந்தால் ரோட்சைட் ரோமியோக்களின் வாழ்வில் எல்.இ.டி எரியும்! 

லேசாக பிட் அடிக்கலாம்
மாணவிகள் கொஞ்சமும் பொறுப்பில்லாமல் பாடங்களைப் படிக்கிறார்கள். மாணவர்களோ ‘நாளைய குடும்ப வாழ்க்கை அமைதியான முறையில் செல்ல வேண்டுமே’ என்ற பொறுப்பு உணர்ச்சியில் மாணவிகளைப் படிக்கிறார்கள். இதன் விளைவாக ஒவ்வொரு தேர்விலும் மாணவிகளே அதிகம் பாஸாகிறார்கள். பையன்களின் இந்த நல்ல நோக்கத்தைப் புரிந்துகொண்டு தேர்வில் அவர்கள் ‘லேசாக பிட்டடிக்கலாம்’ என்ற விதி கொண்டு வர வேண்டும். பிட்ஸ் பிலானியில் படித்தாலும் வராத திறமை, பிட்டடித்து பாஸாகும் மாணவனுக்கு உண்டு!

லேசாக சம்பளம்!
வெயிலும் விராட் கோஹ்லி மாதிரி சீஸனுக்கு சீஸன் செஞ்சுரி போடுகிறது. காய்கறி கழுவ குழாயைத் திறந்தால் வெந்நீர் பட்டு அது இன்ஸ்டன்ட் குழம்பாகிவிடுகிறது. சாலையில் இறங்கினால் அது கிட்டத்தட்ட ‘தார்’ பாலைவனமாக இருக்கிறது. இத்தனையையும் தாண்டி ரெகுலராக ஆபீஸ் வர முடியுமா? அதனால் ‘லேசாக ஆபீஸ் வந்தால் போதும்’ என ஒரு அனுமதியைத் தரலாம். இதன்படி, வெயில் தாழ்ந்த பிறகு, ஒரு ஏழு எட்டு மணி வாக்கில் கூலாக வந்து அட்டெண்டன்ஸ் போட்டுவிட்டுப் போக வழிவகை செய்ய வேண்டும். ஆனால், கம்பெனியும் தன் பங்குக்கு சம்பளத்தை ‘லேசாகக் கொடுக்கலாம்’ என முடிவெடுத்துவிடும் பக்க விளைவு இதில் உண்டு. எனவே கவனம் தேவை!



லேசான லைக்!
ஃபேஸ்புக்கில் குல்ஃபி மாதிரி சூப்பர் ஃபிகர்கள் செல்ஃபி போடுவார்கள்... இன்னொரு பக்கம் மொக்கை ஃபிகர்களும் செல்ஃபி போடுவார்கள்... இரண்டுக்கும் ஒரே மாதிரி லைக்தானே போட முடிகிறது எனும் ஆதங்கம் ஆண்கள் சங்கத்தில் அதிகம். எனவே, லேசாக லைக் போடும் ஆப்ஷன் ஒன்றை ஃபேஸ்புக்கே உருவாக்கித் தரவேண்டும். கூடவே, ‘லேசாக திட்டலாம்... லேசாக கெட்ட வார்த்தை பயன்படுத்தலாம்’ என கமென்ட்ஸ் ஏரியாவில் கொஞ்சம் சட்டபூர்வ சுதந்திரங்கள் கொடுத்தால், அடிக்கடி ஃபேஸ்புக் பஞ்சாயத்து போலீஸ் ஸ்டேஷன் வரை போவதைத் தவிர்க்க முடியும்!

லேசான மிதி!
பெண்ணுரிமை பற்றிப் பேனா மை தீரும் வரை எழுதுகிறார்கள். ஆனால், அவர்கள் கொஞ்சம் ஓபனாக உடையணிந்தாலும் கோயில் முதல் கோ-எட் காலேஜ் வரை அதைக் கோடு போட்டுத் தடுக்கின்றன. அதாங்க, ‘டிரஸ் கோடு’! ‘லங்கோடு போட்டலைந்த பரம்பரைக்கு டிரஸ் கோடு ஏதுக்கடி’ என்ற காலேஜ் ரோடு சித்தரின் வாக்குப்படி, இனிமேல் ‘லேசாக லெக்கிங்ஸ் போடலாம்’ என ரூல் வரவேண்டும். அது ஏற்கனவே லேசாகத்தான் இருக்கிறது என்பதால், ஜீன்ஸையும், டி ஷர்ட்டையும் இறுக்கமாக இல்லாமல் கொஞ்சம் லேசாக - லூசாக அணிய கூடுதல் அனுமதி தரலாம். அப்படியே ஹை ஹீல்ஸை லேசாக அணிய உத்தரவு வந்தால் பஸ்ஸில் மிதிபடும் பல்லாயிரக்கணக்கானோர்
பலன் பெறுவார்கள்.

எனக்கு லேசான லைக் போட்டுட்டு, நானே ஆரம்பிச்ச ஃபேக் ஐ.டிக்கு ஃபோர்ஸா லைக் போடறான்டி!

சி.சி.டி.வி கேமரால ஆபீஸை லேசா எட்டிப் பார்த்துட்டேன். ஆன்லைன்ல அட்டெண்டன்ஸ் போடலாமா சார்?

லேசான டிரஸ் கோட்னா, இப்படி கண்ணாடி மாதிரி இல்லம்மா!

காதுக்குள்ள ஹெட்போன் வச்சி பிட் அடிக்கறது சுயநலம் சார். அதான்..!

ஒரு ஃபுல், மூணு குவார்ட்டர்... என் கெப்பாஸிட்டிக்கு இது ரொம்ப லேசான மப்பு சார்!

அப்படியே லேசா பவுடர் பூசிட்டு வரக் கூடாது? ஒருத்தன் மூஞ்சும் சகிக்கல!