உடனடி வேலைவாய்ப்பு தரும் வித்தியாசமான படிப்புகள்!Fisheries Engineering

எஞ்சினியரிங், மருத்துவப் படிப்புகளின் மீதிருக்கும் மதிப்பும், பிரமிப்பும் இன்றளவும் குறைந்தபாடில்லை. இரண்டிலுமே நிறைய ரிஸ்க் இருக்கிறது. ‘கணக்கே எனக்கு வராது’ என்று பார்டர் மார்க்கில் பாஸ் செய்த மாணவர்களை எஞ்சினியரிங் வகுப்பறைக்குள் தள்ளுவது வன்கொடுமை.அதேபோல வெளிநாட்டுக்கு லட்சங்களைக் கொட்டி மருத்துவம் படிக்க அனுப்பிய பலர், இன்று தங்கள் பிள்ளையின் எதிர்காலம் புரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். வெளி நாடுகளில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள், இந்திய மருத்துவக் கவுன்சில் நடத்தும் ‘Foreign Medical Graduate Screening Exam’ என்ற தகுதித் தேர்வை எழுத வேண்டும்.

2015 ஜூனில் 5967 பேர் பங்கேற்ற இந்தத் தேர்வில் வெறும் 603 பேர்தான் தேர்ச்சி பெற்றார்கள். டிசம்பரில் 6407 பேர் எழுதி 731 பேர்தான் தேர்ச்சி பெற்றார்கள். வெளிப்படைத் தன்மையற்ற, கடினமான இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் இங்கு மருத்துவர்களாக முடியாது. மருத்துவம், எஞ்சினியரிங், கலை அறிவியல் படிப்புகள் தாண்டி பல்வேறு வித்தியாசமான படிப்புகள் இருக்கின்றன. மிகச்சிறந்த எதிர்காலம் தரும் அதுமாதிரியான சில படிப்புகள் பற்றிச் சொல்கிறார் கல்வியாளர் ராஜராஜன்...

‘‘மீன் உற்பத்தியில் உலக அளவில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. ஆண்டுதோறும் நாம் ரூ.33 ஆயிரம் கோடிக்கு மேல் கடல் உணவு ஏற்றுமதி செய்கிறோம். அடுத்த பத்தாண்டுகளில் இத்துறையில் மிகப் பிரமாண்டமான வளர்ச்சியை இந்தியா எட்டும் என்று நிபுணர்கள் கணிக்கிறார்கள். இச்சூழலில் இந்தத்துறை சார்ந்த நிபுணர்களின் தேவை அதிகரிக்கிறது. ஆனால், மீன்வளப் படிப்புக்கு என்று நாகப்பட்டினத்தில் ஒரு பல்கலைக்கழகம் இயங்குவதே பலருக்குத் தெரியாது.

இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியிலும், தூத்துக்குடியிலும் இரு மீன்வளக் கல்லூரிகள் செயல்படுகின்றன. நாகப்பட்டினத்தில் ஒரு பொறியியல் கல்லூரியும் இயங்குகிறது. இங்கு, B.F.Sc., B.E (Fisheries Engineering) ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன. B.F.Sc.,படிப்பில் 130 இடங்களும், B.E (Fisheries Engineering) படிப்பில் 20 இடங்களும் உள்ளன. +2வில் உயிரியல், இயற்பியல், வேதியியல் பாடங்களை எடுத்து, 60% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் B.F.Sc. படிப்பில் சேரலாம். B.E (Fisheries Engineering) படிப்புக்கு கணிதம், அறிவியல் பிரிவுகள் உள்ளடங்கிய பாடங்களைப் படித்து, 60% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.இதேபோல கடல் சார்ந்த படிப்புகளில் மாணவர்கள் ஆர்வம் காட்டுவதேயில்லை. B.Sc Oceanography என்ற படிப்பு மிகுந்த வேலைவாய்ப்புகளை உள்ளடக்கியது. +2ல் உயிரியல் உள்ளிட்ட அறிவியல் பாடங்களை எடுத்து தேர்ச்சி பெற்றவர்கள் இப்படிப்பில் சேரலாம். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் இப்படிப்பு வழங்கப்படுகிறது.

எஞ்சினியரிங் ஆர்வம் கொண்டவர்கள் B.E. Marine Engineering படிக்கலாம். அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் இந்தப் படிப்பு இருக்கிறது. நல்ல உள்கட்டமைப்பும், தகுதி வாய்ந்த ஆசிரியர்களும், ஆய்வகங்களும் கொண்ட கல்லூரியைத் தேர்வு செய்து படிக்க வேண்டும்.

B.Tech Naval Architecture and Ocean Engineering என்ற படிப்புக்கும் வளமான எதிர்காலம் உண்டு. அண்ணா பல்கலைக்கழகம், தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி, சென்னை பல்கலைக்கழகம், காரைக்குடி CECRI, சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள Central Institute of Brackish Water Aquaculture, வேளச்சேரியில் உள்ள National Institute of Ocean Technology, சென்னை சாந்தோமில் உள்ள Zoological Survey of India போன்ற நிறுவனங்களில் இப்படிப்பு வழங்கப்படுகிறது.

B.Sc. Geology படிப்பையும் தேர்வு செய்யலாம். இதில் முதுகலை முடித்தவர்கள் ஜியாலஜிஸ்ட், ஜியோ கெமிஸ்ட், ஜியோ பிசிஸ்ட், சீஸ்மாலஜிஸ்ட், ஜியோ சயின்டிஸ்ட், ைஹட்ரோ ஜியாலஜிஸ்ட், சூழலியல் ஆலோசகர், ஜியோபிசிகல் டேட்டா புராஸசர், மினரல் சர்வே போன்ற பணிகளைப் பெறலாம். அரசுப்பணிகள் பெறவும் நிறைய வாய்ப்புகள் உண்டு. +2வில் அறிவியல் பிரிவைப் படித்து தேர்ச்சி பெற்றவர்கள் இப்படிப்பில் சேரலாம். அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், மற்றும் சில தேர்ந்தெடுத்த கல்லூரிகளில் இப்படிப்பு உள்ளது.

வரலாறு, ஆவணச் சேகரிப்பில் ஆர்வம் கொண்டவர்கள் Archaeology படிப்பைத் தேர்வு செய்யலாம். B.A. மற்றும் B.Sc பிரிவுகளில் இப்படிப்பு வழங்கப்படுகிறது. +2ல் எப்பிரிவை படித்தவர்களும் இப்படிப்பில் சேரலாம். மத்திய அரசின் ஆர்க்கியாலஜிக்கல் சர்வே ஆஃப் இண்டியா, மாநில அரசின் ஆர்க்கியாலஜி துறைகளில் வேலை கிடைக்கும். ஆர்க்கியாலஜிஸ்ட், மியூசியாலஜிஸ்ட், கியூரேட்டர் போன்ற பணிகளும் உண்டு.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் இப்படிப்பு வழங்கப்படுகிறது. அதிகம் கவனம் பெறாத, போட்டிகள் இல்லாத இதுமாதிரி படிப்புகளைத் தேர்வு செய்து படிப்பவர்களுக்கு வெளிச்சம் மிக்க எதிர்காலம் உறுதி..!’’

இது புதுசு!

இந்த ஆண்டு முதல் மத்திய அரசின் நிதியுதவியோடு, அழகப்பா பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சென்னை கிறிஸ்தவக் கல்லூரி, கோவை பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி, பி.எஸ்.ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, அவினாசிலிங்கம் மனையியல் பல்கலைக்கழகம், திருச்சி புனித ஜோசப் மகளிர் கல்லூரி ஆகிய நிறுவனங்களில் படிப்பை முடித்ததும் வேலை கிடைக்கும் வகையிலான B.Voc (Bachelor of Vocation) பட்டப்படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

Fashion Technology, Software Development, Hospital Instrumentation and Management, Catering Technology and Hotel Management, Business Process and Data Analytics, Multimedia and Animation, Retail Management and IT, Hospitality and Tourism, Hospitality Management, Food Processing Technology, Garment Designing, Beauty Therapy and Aesthetics, Software Development and System Administration, Visual Communication Technology, Medical Equipment Technology, Food Processing and Engineering ஆகிய பிரிவுகளில் B.Voc பட்டப் படிப்புகள் வழங்கப்பட உள்ளன.

40% பொதுக் கல்வியையும், 60% தொழில்கல்வியையும் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் பட்டப்படிப்பில் சேர +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மூன்று வருட காலத்தில், முதல் ஆண்டு அல்லது இரண்டாவது ஆண்டை நிறைவு செய்த நிலையில் மூன்றாவது ஆண்டுப் படிப்பைத் தொடர முடியாத மாணவர்கள் படிப்பிலிருந்து விலகிக்கொள்ளலாம்.

அப்படி விலகும் பட்சத்தில், முதல் வருடப் படிப்பில் தேர்ச்சியடைந்தவர்களுக்கு Diploma, இரண்டாம் வருடத்தில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு Advanced Diploma வழங்கப்படும். இதுகுறித்த கூடுதல் விபரங்களை அறிய www.ugc.ac.in/skill/index.html எனும் இணையதளத்தைப் பார்க்கலாம்.

பணி வாய்ப்பு மிகுந்த பாராமெடிக்கல்!

மருத்துவப் படிப்பு கைவிட்டுப் போன மாணவர்கள் மனம் தளர வேண்டியதில்லை. மருத்துவத் துறை சார்ந்த ஏராளமான பட்டப்படிப்புகள் வந்துவிட்டன. +2வில் உயிரியல் பிரிவை எடுத்துப் படித்த மாணவர்கள் இப்படிப்புகளை தாராளமாகத் தேர்வு செய்யலாம். சங்கர நேத்ராலயா போன்ற மருத்துவ நிறுவனங்களே பிட்ஸ் பிலானி போன்ற பிரபல கல்வி நிறுவனங்களோடு இணைந்து பல படிப்புகளை வழங்குகின்றன.

படிப்பு முடிந்ததும் அங்கேயே வேலையும் உறுதி செய்யப்படுகிறது. அப்படியான சில துணை மருத்துவப் பட்டப் படிப்புகள்...
Speech Therapy, Radiology, Anaesthesiology, Rehabilitation Specialist, Haematology, Physiology, Medical-surgical Nursing, Nutrition, Pharmacology, Medical X-Ray Technology, Medical Records Technology, Operation Theatre Technology, Dialysis Technology, Ophthalmic Technology, Dental Mechanic, Dental Hygiene, Perfusion Technology, Cardiac Care Technology, Medical Imaging Technology, Renal Dialysis, Optometry, Occupational Therapy.

- வெ.நீலகண்டன்