வியாபாரம்
ரியல் எஸ்டேட் புரோக்கர் பொன்னுசாமிக்கு ஒரே குழப்பம். அந்த ஃபைனான்ஸியர் மருதவேலின் நடவடிக்கை புரியவேயில்லை.‘‘நல்ல வீடு ஏதாவது விலைக்கு வந்தா சொல்லுங்க பொன்னுசாமி!’’‘‘என்ன பட்ஜெட்டில் பார்க்கட்டும்?’’ ‘‘விலையைப் பற்றி பிரச்னை இல்லை.
 வீடு பிடிச்சிருந்தா வாங்கிடலாம்!’’இதை நம்பி பொன்னுசாமியும் அலைந்து திரிந்து இதுவரை பத்து, பன்னிரெண்டு வீடுகளைக் காட்டிவிட்டார். விலை படியும் நேரத்தில் வெறும் ரெண்டு லட்சம், மூன்று லட்சம் ரூபாய் வித்தியாசத்தில் விட்டுவிட்டு வந்துவிடுவார் மருதவேல். அவருக்கு லட்சங்கள் எல்லாம் பெரிய விஷயமே இல்லை.
அப்புறமும் ஏன் இப்படி? ‘‘ஐயா, நீங்க விட்டுட்டு வந்த வீடுங்க எல்லாம் அடுத்த வாரமே நீங்க கேட்ட ரேட்டுக்கும் மேல் முடிஞ்சு போயிடுது. நிறைய மிஸ் பண்ணிட்டீங்க!’’ - ஒருநாள் வருத்தமாகச் சொன்னார் பொன்னுசாமி.‘‘அதுதான் வியாபாரமே!’’ - மருதவேல் மர்மமாகச் சிரித்தார். ‘‘புரியலையே!’’
‘‘விற்காத வீட்டுக்கு நான் ஒரு ரேட்டு கேட்டு விட்டுட்டா, ‘இந்த விலைக்குக் கேட்டும் முடியாத வீடு’னு ஊரெல்லாம் பரவும். அடுத்து வரும் பார்ட்டி அதுக்கு மேல் கண்ணை மூடிட்டு விலை வச்சு வாங்கிடுவாங்க!’’
‘‘இதில் உங்களுக்கு என்ன லாபம்?’’‘‘வீட்டை விற்கிற பார்ட்டிகிட்ட எனக்கு ஒரு பங்கு முன்னமே ரகசியமா பேசிடுவேன் இல்ல!’’ ‘நமக்கு வடை போச்சே’ என மயங்கிச் சரிந்தார் பொன்னுசாமி.
அமுதகுமார்
|