மாமன்
‘‘வாம்மா ரஞ்சிதம்... கூச்சப்படாத! செல்லதுரைக்கு குடிக்க காபி தண்ணி கொடுத்துட்டு, சாப்பாடு தயார் பண்ணும்மா!’’ என்றாள் அன்னம்மா.
 ‘‘அதெல்லாம் ஒண்ணும் வேணாம் அத்தை! கல்யாணப் பத்திரிகை கொடுத்துட்டுப் போலாம்னு வந்தேன். எங்க, கதிர் இல்லையா?’’ என்றவாறே பையிலிருந்து பத்திரிகையை எடுத்தான் செல்லதுரை.வாசலில் நிழலாடியது. கதிர் உள்ளே நுழைந்து, செல்லதுரையைப் பார்த்தும் பாராமல் சென்றுவிட்டான். செல்லதுரை முகம் வாடியதை அன்னம்மா கவனித்தாள்.
‘‘விடு துரை. அவன் எப்பவும் அப்படித்தான். திருந்தவே இல்லை. நீ பத்திரிகை குடுப்பா. அவனை சமாதானம் செஞ்சி நான் கூட்டி வர்றேன்!’’ துரை பத்திரிகையைக் கொடுத்துவிட்டுச் சென்றான்.‘‘முறைமாமனைப் பாத்ததும் முகத்துல சந்தோஷம் தாங்கலை. எதுக்கு வந்தான் அந்த பய!’’ என்றான் ரஞ்சிதத்திடம் கோபமாக. அவள் பயந்து அன்னம்மாவைப் பார்த்தாள்.
‘‘ஏலேய், அவன் பையனுக்கு கல்யாணம் வச்சிருக்காம். உன்னய மதிச்சி பத்திரிகை கொடுத்துட்டுப் போறான். அவனும் ரஞ்சிதத்துக்கு முறைமாமன்தானே... அவன் கட்டிக்க இருந்தவளை நீ முந்தி பரிசம் போட்டுட்ட. இப்ப உனக்கும் பேரன், பேத்தி ஆயிடுச்சி. இன்னும் வயசுப் பசங்க மாதிரி அவன முறைச்சிக்கிட்டு இருக்கே..? போடா! போயி பொழப்ப பாரு’’ என்றாள் அன்னம்மா கிண்டலாக!
வி.குணசுந்தரி
|