கடக லக்னத்துக்கு கூட்டுக் கிரகங்கள் தரும் யோகங்கள்
கிரகங்கள் தரும் யோகங்கள் 42
உங்கள் ஜாதகத்தைப் பாருங்கள்! நீங்கள் கடக லக்னத்தில் பிறந்தவரா? உங்களின் வாழ்வை மேம்படுத்தவே இந்தப் பகுதி!
 பெரும்பாலான ஆட்சியாளர்கள், ஆளுமைமிக்க பதவியில் அமர்பவர்கள் எல்லோருமே கடக லக்னத்தில் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். இதை ‘ரூலர்ஸ் லக்னம்’ என்றே சொல்லலாம். எல்லோரையும் வழிநடத்திச் செல்லும் திறன் இவர்களிடம் இருக்கும். கடக லக்னத்தைப் பொறுத்தவரை மூன்று கிரகங்கள் முக்கியமானவை.
 முதலாவதாக, சந்திரன். இரண்டாவதாக, செவ்வாய். மூன்றாவதாக, குரு. இதில் சந்திரன் ஏற்கனவே இந்த லக்னத்திற்கு அதிபதியாக வருகிறார். சூரியன், சந்திரன் இந்த இரண்டு கிரகங்களுக்கும் ராசி மண்டலத்தில் ஒரே வீடு மட்டும் சொந்தமாகும். அதுபோல சந்திரன் கடகத்திற்கு மட்டுமே அதிபதியாக வருகிறார். எனவே, தன்னுடைய சொந்த லக்னமான, சுய வீட்டிற்கு நல்லதைச் செய்தே தீருவார்.
சந்திரனை ‘சர்வகலாபிதன்’ என்பார்கள். அதேபோல தாய் ஸ்தானத்திற்கு உரியவராகவும் வருகிறார். எனவே இவர்கள் வெவ்வேறு வேலைகளைச் செய்தபடியும், தொழிலை மாற்றிக்கொண்டும் இருப்பார்கள். சந்திரனைப் போன்றே இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் வசீகரமாகவும், ஈர்ப்புச் சக்தியோடும் திகழ்வார்கள். மகத்தான ராஜதந்திரியும் இவர்களே!
இவர்கள் வளர்பிறையில் பிறந்து ராகு, கேது, சனி சம்மந்தப்படாமல் இருந்தால் நல்லது. எப்போதுமே சந்திர தசை, அல்லது வேறெந்த தசை நடந்தாலும், அதில் வரும் சந்திர புக்தி, திங்கட்கிழமை, ரோகிணி, ஹஸ்தம், திருவோணம் போன்ற நட்சத்திரங்கள், 2, 11, 20, 29 தேதிகள் என்று சந்திரனின் ஆதிக்கமுள்ள அனைத்தும் இவர்களுக்கு நன்மையே செய்யும்.
கூட்டுக் கிரகங்களினால் - முக்கியமாக சூரியனால் ஏற்படக்கூடிய அஸ்தங்க அவஸ்தையைப் பெற்றிருந்தால் மன உளைச்சல் அதிகமாக இருக்கும். தாயார் அடிக்கடி நோய்வாய்ப்படக் கூடும். கடக ராசியிலுள்ள புனர்பூச நட்சத்திரத்தில் இந்த லக்னம் அமையப் பெற்றிருந்தால், அவர்கள் பெரிய அதிர்ஷ்டசாலியாக இருப்பார்கள். பூசம் நட்சத்திரத்தில் லக்னம் அமையப் பெற்றிருந்தால் நல்ல நிர்வாகியாக விளங்குவார்கள். ஆயில்யத்தில் இருந்தால் சகிப்புத்தன்மையோடு விளங்குவார்கள்.
கடக லக்னத்தைப் பொறுத்தவரை அதிமுக்கியமான கிரகம் செவ்வாயே ஆகும். ஜாதகத்தில் முக்கிய இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு அதிபதியாக செவ்வாயே வருகிறார். இவர்கள் எல்லா சொந்தங்களையும் அனுசரித்து இருப்பதையே பெரும்பாலும் விரும்புவார்கள். இதே செவ்வாய் பத்தாம் இடத்திற்கும் அதிபதியாக வருவதால் அதிகாரமுள்ள பதவிகளைத் தருவார். யோகாதிபதியாக வரும் செவ்வாயே பூமிகாரகனாக இருப்பதால், ஏதேனும் ஒரு சொத்து இருக்கும். செவ்வாயோடு அதன் சத்ருவான புதன் அல்லது சனி சேர்ந்திருந்தாலோ, பார்வை பெற்றிருந்தாலோ அல்லது செவ்வாயின் நட்சத்திரங்களில் அமர்ந்திருந்தாலோ, போராட்டமே வாழ்க்கையாகும்.
மூன்றாவதாக குரு இவர்களுக்கு முக்கியமான யோகங்களை அளிப்பவராக விளங்குகிறார். செவ்வாய் அளவுக்கு இல்லாவிட்டாலும் செவ்வாய்க்கு அடுத்தபடியாக குரு இவர்களுக்கு நன்மைகளைச் செய்வார். ஆறாம் இடம் என்றழைக்கப்படும் ருண ரோக சத்ரு ஸ்தானத்திற்கும், பாக்கிய ஸ்தானத்திற்கும் அதிபதியாக குருவே வருகிறார்.
இவர் செலவுகளையும், அலைச்சல்களையும் கொடுத்துதான் நன்மைகளை அடையும்படி செய்வார். அதேசமயம் குரு பாக்கியாதிபதியாக வருவதால், தந்தையாரைத் தாண்டி தன் வம்சமே பாராட்டும்படியாக நடந்து கொள்வார். உங்களின் சொந்த ஜாதகத்தில் குரு கடகம், சிம்மம், தனுசு, மீனம் ஆகிய வீடுகளில் ஒன்றில் அமர்ந்திருந்தாலோ, குரு சூரியனுடன் சேர்ந்திருந்தாலோ யோககாரகனாக விளங்குவார். குரு தசை, குரு புக்தி, வியாழக்கிழமை, புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, 3, 12, 21, 30 போன்ற தேதிகள் என்று குறிப்பிட்ட இந்த காலங்கள் இவருக்கு சாதகமாகவே இருக்கும். அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான ஜார்ஜ் புஷ் கடக லக்னத்தில் பிறந்தவர் ஆவார். இவரின் ஜாதகத்தில் லக்னாதிபதியான சந்திரனோடு குரு சேர்ந்ததால்தான் பெரிய அதிகாரப் பதவியில் அமர முடிந்தது. இரண்டாவது லக்னத்திற்கு முன்னும் பின்னுமாக நெருப்பு கிரகங்களான சூரியனும் செவ்வாயும் அமர்ந்திருப்பதால் இவருடைய தலைமையில் மாபெரும் போர் ஏற்படும் சூழல் உருவானது.
ஏனெனில், செவ்வாய் ஆயுதங்கள் மற்றும் போருக்கான கிரகமாகும். சுக்கிரன் இவருக்கு பாதகாதிபதியாவார். சனி அஷ்டமாதிபதி ஆவார். லக்னத்தில் இவர்கள் சேர்ந்து அமர்ந்திருப்பதால் உலகளவில் உயிர்ச் சேதங்கள், பொருளாதார சிக்கல்களை சுற்றியுள்ளோரும் சந்திக்க வேண்டி வந்தது. கூடவே லக்னத்தில் புதன் இருப்பதால் போராட்ட குணம் அதிகமாக இருந்தது.
கடக லக்னத்திற்கு பாதகாதிபதியான சுக்கிரன் கேந்திராபத்ய தோஷம் பெற்றதால் உலகமே இவரின் செயல்களை உற்றுக் கவனித்தது. தவிர்க்க முடியாத பல பெரும் போர்களையும் பிரச்னைகளையும் சந்தித்தார். இதிலிருந்து கடக லக்னத்திலுள்ள கூட்டுக் கிரகங்களினால் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
கடந்த ஐம்பது வருட உலகத்தையே புரட்டிப் போட்டவர் என்று கம்ப்யூட்டரின் பிதாமகனான பில் கேட்ஸை சொல்லலாம். இவர் பிறந்ததும் கடக லக்னத்தில்தான். லக்னாதிபதியான சந்திரன் திரிகோண பலம் பெற்று - அதாவது ஒன்பதில் அமர்ந்ததால்தான், எத்தனை சம்பாதித்தாலும் தர்மத்திற்காக கொடுக்க முடிந்தது. இவரால் உலகம் முழுவதிலும் லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பைப் பெற்றனர். விருச்சிக ராசியில் கம்ப்யூட்டர் உள்ளிட்ட எலெக்ட்ரானிக்ஸ் துறைக்குரிய ராகு அமர்ந்ததால்தான் இந்தத் துறையின் உச்சிக்கு உலகத்தை கொண்டு சென்றார்.
மேலும் சுக்கிரனும் சனியும் சேர்ந்து இருப்பதால் ஒரு யுகத்தையே மாற்றி கம்ப்யூட்டர் யுகமாக மாற்றி அமைக்க முடிந்தது. பாக்யாதிபதியான குரு இரண்டாம் வீட்டில் - அதாவது ஸ்திர வீட்டில் அமர்ந்ததால் உலகத்தின் பார்வையைத் தன் பக்கம் திருப்ப முடிந்தது. யோகாதிபதியான செவ்வாய் மூன்றில் எதிரிடையான கிரகமான புதனோடு சேர்ந்ததால் இளமைக்கால வாழ்க்கை சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.
அதேசமயம் பாக்யாதிபதி குரு இரண்டில் இருப்பதாலும், குருவே தனத்திற்குரியவனாக இருப்பதாலும் உலகிலேயே பெரும் செல்வந்தராகத் திகழ முடிந்தது. அதேபோல சூரியன், சுக்கிரன், சனி சேர்ந்திருந்ததால் நீசபங்க ராஜயோகம் ஏற்பட்டு, வினாடிக்கு வினாடி பணமழை கொட்டிக் கொண்டிருக்கிறது.
யுவராஜ் சிங் கிரிக்கெட் உலகின் அசுர ஆட்டக்காரர். இவரும் கடக லக்னத்தில்தான் பிறந்தார். லக்னாதிபதியன சந்திரன் 12ல் மறைந்திருப்பதால் போராட்ட குணம் இவரிடம் இயற்கையாக இருக்கிறது. லக்னத்திலேயே ராகு இருப்பதால் ஏற்ற இறக்கங்களை தொடர்ந்து சந்தித்தபடி இருக்கிறார். இந்த ராகுவே இவரை திடீரென்று யோகக்காரனாகவும் மாற்றுகிறது.
மூன்றில் சனி இருந்ததால்தான் புற்றுநோய் வந்தாலும் அதிலிருந்து பெரும்பலத்தோடு வெளியே வந்து சாதித்தார். எப்போதும் புதுமுயற்சிகளில் ஆர்வம் காட்டியபடி இருப்பார். சூரியனும் புதனும் ஐந்தில் இருப்பதால் கிரிக்கெட்டின் அனைத்து நுணுக்கங்களையும் அநாயாசமாக கற்றுக் கொண்டார். மகரத்தில் கேதுவும் சுக்கிரனும் இருப்பதால் அவ்வப்போது ஏதேனும் கிசுகிசுக்களிலும் சிக்கிக் கொள்கிறார். குரு நான்கில் சுக ஸ்தானத்தில் அமர்ந்ததால்தான் நன்றாக சம்பாதிக்கவும் முடிந்தது.
இந்து ஞானமரபில் முக்கியமான மாற்றங்களைக் கொண்டு வந்தவர் ஆதிசங்கரர். இவருக்குப் பிறகான இந்து மதம் என்பது பல்வேறு முக்கிய மாற்றங்களைப் பெற்றது. இவர் கடக லக்னத்தில் அவதரித்தவராவார். யோகாதிபதியான குரு நீசமடைந்து மகரத்தில் இருப்பதால்தான் தனம், தானியம் என்று எதிலுமே ஆர்வமில்லாது இருந்தார்.
மாற்றுச் சிந்தனைகளை எல்லோருக்குள்ளும் விதைக்க முடிந்தது. இப்படிப்பட்ட குருவால்தான் புலனடக்கம், வாக்கு வன்மை எல்லாமும் இருந்தது. பத்தில் சூரியன் உச்சம் பெற்றிருப்பதால் எல்லோரையும் வாதங்களில் வெல்ல முடிந்தது. யோகாதிபதியான செவ்வாய் பன்னிரண்டில் மறைந்ததால் உலகத்தின் மீதான பற்றே இல்லாமல் இருக்க முடிந்தது.
பாலகங்காதர திலகரின் ஜாதகத்தில் லக்னத்திலேயே சூரியனும் சுக்கிரனும் அமர்ந்ததால் நாட்டுப்பற்று மிகுந்திருந்தது. சூரியனும் சுக்கிரனும் சேர்ந்தாலேயே போராட்ட குணம் மிகுந்திருக்கும்.
கேது மூன்றில் இருப்பதால் ‘சுதந்திரம் எமது பிறப்புரிமை’ என்று கூறினார். ஐந்துக்குரிய செவ்வாய் நான்காம் இடத்தில் இருப்பதால் சொத்து, சுகங்களைத் தூக்கி எறிந்தார். தன்னலமற்று செயல்பட்டார். சனியும் புதனும் பன்னிரண்டில் மறைந்திருப்பதால் பல காலம் சிறைவாசம் அனுபவிக்க நேர்ந்தது. முக்தி ஸ்தானத்தில் இவ்விரு கிரகங்களும் இருப்பதால் பகவத் கீதை போன்ற மகத்தான நூல்களுக்கு விளக்கவுரையும் எழுத முடிந்தது. ஏனெனில் பன்னிரண்டு என்பது மெய்ஞானத்தையும் குறிக்கும்.
கடக லக்னத்தைப் பொறுத்தவரை, சக்தியின் பெருக்கு அதிகமிருக்கும் கோயில்களே இவர்களுக்கு வரும் எந்தப் பிரச்னையையும் தீர்க்கும். அதிலும் கூட்டுக் கிரகங்களினால் ஏற்படும் எதிர்மறைப் பலன்களை தவிர்ப்பதற்கு மருத்துவக்குடி அபிராமியை நிச்சயம் இவர்கள் தரிசிக்க வேண்டும். மருத்துவாசுரனின் வதம் இத்தலத்தில் நிகழ்ந்ததால் மருத்துவக்குடி என்ற பெயர் பெற்றது. மாபெரும் புராணப் பெருமைமிக்க இக்கோயிலின் ராஜகோபுரம் நெடிதுயர்ந்து விளங்குகிறது.
கோயிலுக்கு இடப்புறம் அம்பாள் அபிராமி எனும் திருநாமத்தோடு நின்ற கோலத்தில் அருளை அமுதமாய்ப் பொழிகிறாள். ‘திருக்கடையூர் அபிராமியும், இவளும் ஒன்றே’ என இணையாக அரியாசனத்தில் அமர்த்தி வழிபடுகிறார் நாரதர். திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி காதில் தாடங்கம் எனும் ஆபரணம் அணிந்து ‘தாடங்க பீடேஸ்வரி’யாக சக்தியோடு விளங்குவதுபோல், இத்தல அபிராமி இடுப்பில் ஒட்டியாணம் எனும் ஆபரணம் ஏற்று ‘ஒட்டியாண பீடேஸ்வரி’ என்று மகாசக்தியோடு திகழ்கிறாள்.
இங்கு ஈசனின் திருப்பெயர் ஐராவதேஸ்வரர் என்பதாகும். சந்திரன் சுயஒளியை இழந்து மங்கித் தேய்ந்து, அதாவது நீசமாகி வந்தபோது, இத்தல ஈசனை வழிபட்டு தீர்த்தம் உண்டாக்கினான். மேலும், அவன் தன் சுய சோபையை இழந்ததால் மூலநாயகனான பிள்ளையாரை நிறுவி பூஜித்தான். ஒளிபெருக்கிப் பிரகாசித்தான். விநாயகரின் முகமும் தேளின் செதில் செதிலான உடலமைப்பும், தன் உடல் சுருக்கி நெடுநெடுவென்று நிற்பதைப் போன்றதொரு அமைப்பை சிற்பமாக்கி கலையின் சிகரம் தொட்டிருக்கிறார்கள். இத்தலம் கும்பகோணத்திற்கு அருகேயுள்ள ஆடுதுறையிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
(கிரகங்கள் சுழலும்...)
ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன் ஓவியம்: மணியம் செல்வன்
|