+2க்குப் பிறகு... வளமான எதிர்காலம் தரும் வணிகப் படிப்புகள்



மருத்துவம், பொறியியலுக்கு நிகராக வளமான எதிர்காலத்தைத் தருபவை வணிகம், பொருளாதாரம், கணக்கியல் சார்ந்த படிப்புகள். இந்தியா போன்ற ஒரு வளரும் நாட்டுக்கு நிதித்துறையும், வணிகத்துறையும்தான் தாங்குதானங்கள்.

எல்லா துறைகளிலும் பெரு நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து விட்ட இக்காலத்தில் நிதி, வணிகம் படித்த நிபுணர்களின் பங்களிப்பும், தேவையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கணக்கில் ஆர்வமும், வணிகத்தில் ஈடுபாடும் கொண்ட மாணவர்கள் சிறிதும் தயங்காமல் இத்துறை சார்ந்த படிப்புகளைத் தேர்வு செய்யலாம்.

பொதுவாக, எந்தப் படிப்பாயினும் கல்லூரியின் தரத்தை வைத்தே மதிப்பிடப்படும். அது வணிகப் படிப்புகளுக்கும் பொருந்தும். தரமான கல்லூரிகளைத் தேர்வு செய்ய வேண்டும். தகுதிவாய்ந்த ஆசிரியர்கள், உள்கட்டமைப்புகள், துறைகளில் போதிய பின்புலம் இருக்க வேண்டும். நிதி, வணிகம் சார்ந்த படிப்புகள் என்னென்ன? விளக்குகிறார் கல்வியாளர் ஆர்.ராஜராஜன்.

‘‘நிதி, வணிகம் சார்ந்த அடிப்படைப் படிப்பு என்றால் அது ‘பி.காம்’தான். கலை, அறிவியல் கல்லூரிகளை நாடும் மாணவர்களின் முதல் தேர்வாக இந்தப் படிப்புதான் இருக்கிறது. +2வில் வணிகக்கணிதம், பொருளியல், வணிகவியல், கணக்கியல் எடுத்துப்  படித்தவர்களும், சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் பொதுக்கணிதம் எடுத்துப் படித்தவர்களும் பி.காம் படிக்கலாம்.

ஒரு காலத்தில் பொதுவான பி.காம் படிப்பு என ஒன்றே ஒன்றுதான் இருந்தது. இன்று தேவைகளையொட்டி இதில் ஏகப்பட்ட பிரிவுகள் வந்து விட்டன. General   Accounts, Advertising & Sales Management, Computer Applications, Foreign Trade, E-Commerce, Office Management, Tax Procedure, Corporate Secretaryship, Actuarial Science, Banking and Finance போன்ற பிரிவுகளில் பி.காம் படிப்பு உள்ளது. இவற்றில் E-Commerce, Corporate Secretaryship, Actuarial Science, Banking and Finance போன்ற படிப்புகள் எவர்கிரீன்.

வங்கி, நிதி நிறுவனங்களில் பி.காம் படித்தவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் உண்டு. கூடுதலாக இந்தி, ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்ச் உள்ளிட்ட பிற  மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவர்களுக்கு உலக வங்கியில் கூட வேலைவாய்ப்பு உண்டு. வணிகத்துறையில் மிகுந்த வேலைவாய்ப்புகளைக் கொண்டுள்ள மற்றுமொரு படிப்பு சி.ஏ. (CHARTERED ACCOUNTANCY). ஒருகாலத்தில் கிராமப்புற மாணவர்களுக்கு எட்டாத உயரத்தில் இருந்த இந்தப் படிப்பு, இப்போது அனைவருக்குமானதாக மாறிவிட்டது. சி.ஏ. படிப்பை வழங்கும் The Institute of Chartered Accountants of India நிறுவனம் புதுடெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிறது. இதன் பிராந்திய அலுவலகம், சென்னை நுங்கம்பாக்கம், ஜெமினி மேம்பாலத்துக்கு அருகில் செயல்படுகிறது. (தொலைபேசி எண்கள்: 044-30210356, 044-30210356).

+2வில் எந்தப் பிரிவைப் படித்தவர்களும் இப்படிப்பில் சேரலாம். ஆனாலும், வணிகக் கணிதம் அல்லது பொதுக்கணிதம், பொருளியல், வணிகவியல், கணக்கியல் பாடம் எடுத்தவர்களுக்கு எளிதாக இருக்கும். ‘Common Proficiency Test’ என்ற முதல்நிலைத் தேர்வை எழுதி சி.ஏ.வில் சேரவேண்டும். பி.காம் முடித்தவர்களும் சேரலாம். பி.காம் படித்துக்கொண்டே சி.ஏ. தேர்வுக்கும் தயாராகலாம்.

Common Proficiency Test ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடக்கும். Accounting, Mercantile Law, General Economics, Quantitative   Aptitude ஆகிய நான்கு பாடங்களில் இருந்து கேள்விகள் அமையும். இத்தேர்வுக்கான பயிற்சி The Institute of Chartered Accountants of India நிறுவனத்திலேயே வழங்கப்படும்.சி.ஏ. படிப்புக்கு இணையான தேவை மிகுந்த மற்றுமொரு படிப்பு ஏ.சி.எஸ் (ASSOCIATE INSTITUTE OF COMPANY SECRETARIES).

நிறுவனச் செயலாளர் பணிக்கான நேரடிப் படிப்பாக விளங்கும் இதை Institute of Company Secretaries of India நிறுவனம் வழங்குகிறது. இதை முடித்தவர்கள் அரசு நிறுவனங்கள், தொழில், உற்பத்தி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் கம்பெனி செக்ரட்டரி பணியில் இணையலாம்.

இதிலும் +2வில் எப்பிரிவைப் படித்தவர்களும் சேரலாம். வணிகக்கணிதம் அல்லது பொதுக்கணிதம், பொருளியல், வணிகவியல் எடுத்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு எளிதாக இருக்கும்.

ஃபவுண்டேஷன் புரோகிராம், எக்ஸிக்யூட்டிவ் புரோகிராம், புரொஃபஷனல் புரோகிராம் என்ற 3 நிலைகளைக் கொண்ட படிப்பு இது. +2 முடித்தவர்கள் மூன்றையும் எழுத வேண்டும். இளநிலைப் பட்டதாரிகள் ஃபவுண்டேஷன் நிலை இன்றி நேரடியாக பிற தேர்வுகளை எழுதலாம். பி.காம். உள்ளிட்ட படிப்புகளை படித்துக் கொண்டோ அல்லது பணிபுரிந்து கொண்டோ இப்படிப்புகளை படிக்கலாம். இதன் சென்னை அலுவலகம் நுங்கம்பாக்கம், வீட் கிராஃப்ட்ஸ் சாலையில் செயல்படுகிறது. (தொலைபேசி:044-28279898)

கணக்கியல் படிப்புகளில் ICWAI (THE INSTITUTE OF COST AND WORKS ACCOUNTANTS OF INDIA) படிப்பு மிகவும் முக்கியமானது. நிறுவனத்திற்கான லாபநோக்கத் திட்டங்கள், திட்ட மேலாண்மை, முடிவெடுத்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய படிப்பு இது. +2 தேர்ச்சி பெற்ற அனைவரும் இப்படிப்பில் சேரலாம்.

வணிகக்கணிதம் அல்லது பொதுக்கணிதம், பொருளியல், வணிகவியல் படித்தவர்களுக்கு இது மிகவும் உகந்தது. இப்படிப்பிலும் ஃபவுண்டேஷன், இன்டர்மீடியட், ஃபைனல் என மூன்று நிலைகள் உண்டு. இளநிலை பட்டம் பெற்றவர்கள் ஃபவுண்டேஷன் கோர்ஸ் இல்லாமல் நேரடியாக இப்படிப்பில் சேரலாம். இளநிலை பட்டப்படிப்பு படித்துக்கொண்டே இப்படிப்பை படிக்கலாம். இந்நிறுவனம், சென்னை, எழும்பூரில் மாண்டியத் சாலையில் உள்ளது. (தொலைபேசி: 044-28554651)

இந்தியாவின் அடித்தளங்களில் ஒன்றாக பங்குச் சந்தை வளர்ந்திருக்கிறது. ஸ்டாக் புரோக்கிங் (STOCK BROKING) பற்றிய படிப்புகளைப் படித்தவர்களுக்கு இத்துறையில் ஏகப்பட்ட வாய்ப்புகள் உண்டு. Institute of Capital Market Development -Mumbai, Mumbai Stock Exchange Training Institute, All India Centre for Capital market Studies -Nashik, The Institute of Financial Planning-Mumbai, Institute of Chartered Financial Analysis of India-Hyderabad போன்ற நிறுவனங்கள் இத்துறையில் சான்றிதழ், டிப்ளமோ படிப்புகளை வழங்குகின்றன.

+2வில் வணிகக்கணிதம் அல்லது பொதுக்கணிதம், பொருளியல், வணிகவியல், கணக்கியல் எடுத்துப் படித்தவர்கள், வணிகவியல் பட்டதாரிகள், CA முடித்தவர்கள் இப்படிப்பைப் படித்தால் வாழ்வு வளமாகும். மும்பையில் இயங்கும் National Stock Exchange (NSE) நிறுவனம் Wealth Management, Financial Sector Management, Global Financial Markets, Financial Market போன்ற பிரிவுகளில் ஒருங்கிணைந்த 5 ஆண்டு எம்.பி.ஏ. படிப்பை வழங்கி வருகிறது. +2 முடித்தவர்கள் இப்படிப்பில் சேரலாம்.

ஐதராபாத்தில் உள்ள Institute Of Insurance and Risk Management (IIRM), மும்பையில் உள்ள National Institute of Securities Markets (NISM), சென்னை, மயிலாப்பூரில் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள Institute Of Finance Banking & Insurance (IFBI) போன்ற நிறுவனங்கள் +2 முடித்த மாணவர்களுக்கு நிதி, கணக்கியல், வணிகவியல் பிரிவுகளில் பல்வேறு டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகளை வழங்குகின்றன.

என்றைக்கும் குன்றாத் துறை ஒன்று இருக்குமெனில் அது வணிகத்துறைதான். அது தொடர்பான படிப்புகள் மிகவும் பாதுகாப்பானவை. அதிக சம்பளம், உயர் பணிகள் என பல சிறப்புகள் அதில் உண்டு. ஆர்வமுள்ள மாணவர்கள் தாராளமாக அவற்றைத் தேர்வு செய்யலாம். வாழ்வில் சிறக்கலாம்..! 

- வெ.நீலகண்டன்