வீட்டையும் காரையும் பிரிண்ட் எடுக்கலாம்!
பேப்பரில் எழுத்துக்களைத்தான் பிரின்ட் செய்ய முடியும்... ஒரு நிஜ பைக்கையே காட்டி ‘‘இது பிரின்ட் செய்யப்பட்ட பொருள்’’ என்றால் எப்படி? ஆனால் அதுதான் இப்போது ட்ரெண்ட். டி.வி., கம்ப்யூட்டர், ஸ்மார்ட் போன் என வளர்ந்து வரும் டெக்னாலஜி அப்டேட்டில் அடுத்து ஆல்மோஸ்ட் 3டி பிரின்டர்தான்.
 அதாவது, கணினியில் தெரியும் வடிவத்தை அப்படியே பொருளாக வார்த்து உருவாக்கித் தரும் கருவி. ஹேர்பின் முதல் பிரமாண்ட பில்டிங் வரை... புவிப்பரப்பில் உள்ள எந்த ஒரு பொருளையும் உருவாக்க 3டி பிரின்டர்களால் முடியும் என நிரூபித்து வருகிறார்கள் விஞ்ஞானிகள்.
 நவீன வரவு போலத் தெரிந்தாலும் 3டி பிரின்டர்கள் 1970களிலேயே அரசல் புரசலாக உருவாக்கப்பட்டுவிட்டன. ஆரம்பத்தில் இதனை Additive Manufacturing என்றார்கள். அப்போதெல்லாம் மிக மிக காஸ்ட்லியாகவும் பிரச்னைக்குரியதாகவும் பார்க்கப்பட்ட 3டி பிரின்டிங், 2010க்குப் பிறகு எக்கச்சக்க வேகமெடுத்திருக்கிறது. எளிதாக்கப்பட்டதும் விலை குறைந்ததுமே இதற்குக் காரணம். இன்று இ-பே தளத்தில் 19,990 ரூபாய்க்கு 3டி பிரின்டர் கிடைக்கிறது. அவ்வளவு சீப்!
‘3டி பிரின்டர்களால் எதுவும் முடியும்’ என நிரூபிக்கவே சமீபமாக எக்கச்சக்க 3டி பொருட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நாசா சமீபத்தில் 3டி பிரின்டர் மூலம் பீட்சா ஒன்றை உருவாக்கிக் காட்டியது. விண்வெளிக்கு இங்கிருந்தே ஆன்லைன் மூலம் உணவை அனுப்பும் ஒத்திகை இது!
‘3டி சிஸ்டம்ஸ்’ எனும் நிறுவனம், சில பல கிடார்களை பிரின்ட் செய்து, அதன் மூலம் ஓர் இசைக் கச்சேரியே நிகழ்த்திக் காட்டியது. 3டி பிரின்ட் செய்யப்பட்ட பொருட்கள் உறுதியாக இருக்காது என்ற கருத்தைப் பொய்யாக்கும் விதமாக ஓர் அமெரிக்க நிறுவனம் நிஜத் துப்பாக்கியையே பிரின்ட் செய்து உருவாக்கியது. அதில் 50 ரவுண்டுகள் வரை குறி தவறாமல் சுட்டும் காட்டியது.
‘ஷேப்வேஸ்’ எனும் நிறுவனம் முதல்முறையாக பெண்களுக்கான பிகினி உடையை 3டி மூலம் பிரின்ட் செய்தது. ‘மென்மையானது, காற்றோட்டமானது, தண்ணீரில் நனையாதது’ என இதில் எக்கச்சக்க ஸ்பெஷல்ஸ்! இதே நிறுவனம்தான் இரண்டு வருடங்களுக்கு முன் உலகப் புகழ்பெற்ற விக்டோரியா’ஸ் சீக்ரெட் ஃபேஷன் ஷோவில் ஏஞ்சல் உடை போட்டு வந்த ஒரு மாடலுக்கு இறக்கைகளை 3டி பிரின்டிங் மூலம் உருவாக்கி அசத்தியது.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக டோக்கியோவில் உள்ள ஃபாசோடெக் எனும் நிறுவனம், அந்த ஊர் பிரசவ மருத்துவமனையோடு இணைந்து ஒரு விநோத சர்வீஸைக் கொண்டு வந்தது. அதாவது கர்ப்பிணியின் வயிற்றுக்குள் இருக்கும் கருவை ஸ்கேனர் மூகம் படமெடுத்து 3டி உருவமாக்கி அதனை பிரின்ட் எடுத்து கையில் தருவது. வெறும் 66,000 ரூபாய்க்கு இந்த சேவை இன்றும் அங்கே உண்டு.
இப்போதெல்லாம் 3டி சாகசங்கள் இன்னும் பிரமாண்டமாகப் போய்விட்டன. ‘ஸ்ட்ராட்டி’ எனும் மின்சார கார்தான் உலகின் முதல் பிரின்ட் செய்யப்பட்ட கார். இரண்டு வருடங்களுக்கு முன்பே அமெரிக்க நிறுவனம் ஒன்று அதை உருவாக்கிக் காட்டியிருந்தது. இதற்குப் போட்டியாக ஏ.பி வொர்க்ஸ் எனும் ஜெர்மனி நிறுவனம் ஒரு எலெக்ட்ரிக் பைக்கை இந்த வருடம் உருவாக்கியிருக்கிறது.
டைட்டானியம் மூலம் உருவாக்கப்பட்ட இந்த உறுதியான பைக், மணிக்கு 80 கி.மீ வேகம் வரை செல்லக்கூடியது. தற்போது ஏர்பஸ் விமான நிறுவனம், குட்டி விமானம் ஒன்றையே 3டி மூலம் பிரின்ட் செய்திருக்கிறது. THOR எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த விமானம் அதிகபட்சம் 4 பேரோடு பறக்கக் கூடியது. ‘‘2030 வாக்கில் 51 சதவீத விமானங்கள் 3டி மூலம் பிரின்ட் செய்யப்பட்டுவிடும்’’ என்கிறது ஏர்பஸ் நிறுவனம்.
இதைவிடவும் ஒருபடி மேலே போய், துபாய்க்காரர்கள் விசேஷ சிமென்ட் மற்றும் பிரமாண்ட 3டி பிரின்டர்களை வைத்து பில்டிங்கே கட்டத் துவங்கிவிட்டார்கள். 20 அடி உயரமும் 40 அடி அகலமும் 140 அடி நீளமும் கொண்ட ஓர் அலுவலகத்தை பிரின்ட் செய்ய அந்த பிரின்டர் எடுத்துக்கொண்ட காலம் ஜஸ்ட் 17 நாட்கள்.
சீனாவில் ஒரு அபார்மென்ட்டையே பிரின்ட் செய்து உருவாக்கிக் காட்டியிருக்கிறது வின்சன் எனும் நிறுவனம். 6.6 மீட்டர் உயரம் கொண்ட இந்தக் கட்டிடத்தைக் கட்ட சுமார் 1 கோடியே 7 லட்சம் ரூபாய்தான் செலவானதாம். நேரத்தையும் செலவையும் வெகுவாகக் குறைப்பதால் வருங் காலக் கட்டுமானமே 3டி பிரின்டிங்தான் என்கிறார்கள் பில்டர்கள். யாரங்கே... ஒரு அழகான, அன்பான, அமைதியான மனைவியை பிரின்ட் செய்து உருவாக்குங்கள் பார்க்கலாம்!
எப்படி நடக்குது 3டி பிரின்டிங்?
ஒரு மெல்லிசான கோடு... இதுதான் 3டி பிரின்டரின் அடிப்படை. உதாரணத்துக்கு பிளாஸ்டிக்கை உருக்கி, அதையே இங்க் போல மாற்றி ஒரு இங்க் ஜெட் பிரின்டர் போல உமிழ்கிறது இந்தக் கருவி. உருக்கிய பிளாஸ்டிக்கை இது கோடு கோடாக வேண்டிய வடிவத்தில் வார்த்துக்கொண்டே செல்கிறது. அது காய்ந்ததும் அதன் மேலே இன்னொரு கோடு, சற்று நேரத்தில் அதன்மேல் இன்னொரு கோடு.
இப்படியே அடுக்குகளாக மெல்லிய கோடுகளை ஆயிரக்கணக்கில் வார்த்தே ஒரு வடிவத்தை வெற்றிகரமாக எழுப்பிவிடுகிறது. பிளாஸ்டிக் என்றில்லை, உலோகப் பொருட்களை உருவாக்கவும் தனியே 3டி பிரின்டர்கள் உள்ளன. பவுடர் வடிவில் உள்ள உலோகத்தை லேசர் மூலம் உருக்கி கோடுகளாக வார்த்து, வேண்டிய வடிவத்தை உருவாக்கலாம். இரும்பு, டைட்டானியம் உள்ளிட்ட அனைத்து வகை உலோகங்களையும் இதில் பயன்படுத்தலாம். இந்த வகை பிரின்டர்கள்தான் காரையும் பைக்கையும் உருவாக்குவது. சிமென்ட் கட்டுமானங்களை உருவாக்கும் பிரமாண்ட பிரின்டர்கள் தனி வகை!
19,990 ரூபாய் 3d பிரின்ட்டர்
வருங்காலம்!
கணினியில் போட்டோக்கள் பெரும்பாலும் .jpeg எனும் வடிவத்தில் வருவதை கவனித்திருப்பீர்கள். வீடியோ என்றால் .avi, .mpeg, .mkv என வரும். இவற்றை File Format என்பார்கள். 3டி பிரின்டர்களில் வடிவங்களை உள்ளீடு செய்யவும் தனி File Formats உண்டு.
அவை பெரும்பாலும் .step, .stl என வரும். வருங்காலத்தில் தூர தேசங்களில் வசிக்கும் பிள்ளைகளுக்கு பெற்றோர் நினைவுப் பரிசுகளை கொரியர் பண்ண வேண்டியதில்லை. கீ செயினோ, போட்டோ ஃப்ரேமோ, பொம்மைகளோ அவற்றை பிரத்யேகமாக வடிவமைத்து .stl கோப்புகளை மட்டும் மின்னஞ்சல் செய்துவிட்டால் போதும். அங்கே 3டி பிரின்டர் மூலம் அதை உருவாக்கி எடுத்துக்கொள்வார்கள்!
- நவநீதன்
|