குட்டிச்சுவர் சிந்தனைகள்



கஷ்டப்பட்டு கைக் காசை செலவு பண்ணாம ஒரு போன் வாங்கினா, ‘‘என்னண்ணே இது... செங்கல் மாதிரி செல்போன் வாங்கியிருக்கீங்க?’’ன்னு கேட்டானுங்க. சரின்னு ஜட்டி, பனியன் வாங்குற காசையெல்லாம் சேமிச்சு சின்னதா ஒரு செல்போன் வாங்கினா,

‘‘என்னண்ணே... இதுல டிஸ்ப்ளே சின்னதா இருக்கு?’’ன்னு சிரிச்சானுங்க. சரி, கொஞ்சம் பெரிய டிஸ்ப்ளே வச்ச போனை வாங்கலாம்னு கடைக்குப் போனா, ‘‘என்னங்க... கலர் டிஸ்ப்ளே இல்லாம ஒரு போனா?’’ன்னாரு கடைக்காரர். கழுதை, கலராவே இருக்கட்டும்னு அதை வாங்கியாந்தா, ‘‘வெறும் போனை வச்சு வெளக்கெண்ணெயா வழிக்கிறது’’ன்னு அடுத்து சொன்னானுங்க.

சரி, கண்ட பயலுக எல்லாம் கையும் கேமராவுமா அலையுறானுங்க... நமக்கென்ன குறைச்சல்னு ஒரு கேமரா போன் வாங்குனா, அடுத்த ஆறு மாசத்துல ‘ரெண்டா உடைச்சுப் போட்ட டயனோரா டிவி சைஸ்ல டிஸ்ப்ளே இருந்தாத்தான் மதிப்பு’ன்னு ஒரு குரூப்பு கிளம்பினாங்க. சரின்னு ஆறு இஞ்ச்சுக்கு ஒரு போன் வாங்கினா, ‘‘வாங்குனது வாங்கினீங்க! ஒரு 3G போன் வாங்கியிருக்கக்கூடாதான்?’’னு வேக வேக வடை சுட்டானுங்க.
சரி, காந்திஜி, நேருஜி, நேதாஜியா கேட்கிறாங்க...

இன்னொரு சாதா ‘ஜி’தானே கேட்கிறாங்கன்னு அந்த போனை வாங்குனா, அடுத்து 4G, RAM 4 ஜிபி, மெமரி 150ஜிபின்னு விதவித சைஸ்ல ஜிலேபி தராங்க. இப்படியே போனாக்கா, அடுத்தது போன்ல எக்ஸ்ரே எடுக்கிறது, எண்டோஸ்கோப்பி பார்க்கிறது, ஓட்டையான பனியனுக்கும் கிழிஞ்சுபோன உள்பாவாடைக்கும் ஒட்டுபோடுறது,  பழைய ஈயம் பித்தளை பாத்திரத்துக்கு ஈயம் பூசறதுன்னு கிளம்புவானுங்களோன்னு பயமா வருது. போன்ல பேச மட்டும் செய்யுங்கய்யா, பேசறத தவிர எல்லாத்தையும் செய்யறீங்க!

பெண்களை  நினைத்து பயமாயில்லை, பொண்டாட்டியை  நினைத்துத்தான் பயமாய் இருக்கிறது. மரணத்தை நினைத்து பயமாயில்லை, முதுமையை நினைத்துத்தான் பயமாய் இருக்கிறது. காயத்தை நினைத்து பயமாயில்லை, வலியை நினைத்துத்தான் பயமாய் இருக்கிறது. தண்டனைகளை நினைத்து பயமாயில்லை, சிறைகளை நினைத்துத்தான் பயமாய் இருக்கிறது. அரசாங்கத்தை நினைத்து பயமாயில்லை, அரசியல்வாதிகளை  நினைத்துத்தான் பயமாய் இருக்கிறது. வறுமையை நினைத்து பயமாயில்லை, பசியை நினைத்துத்தான் பயமாய் இருக்கிறது.

வருமானத்தை நினைத்து பயமாயில்லை, செலவை நினைத்துத்தான் பயமாய் இருக்கிறது. ஏமாற்றத்தை நினைத்து பயமாயில்லை, துரோகத்தை நினைத்துத்தான் பயமாய் இருக்கிறது. வயதாவதை நினைத்து பயமாயில்லை, பொறுப்புகளை நினைத்துத்தான் பயமாய் இருக்கிறது. பேச்சுக்களை நினைத்து பயமாயில்லை, வார்த்தைகளை நினைத்துத்தான் பயமாய் இருக்கிறது.  எதிரிகளை நினைத்து பயமாயில்லை, உறவுகளை நினைத்துத்தான் பயமாய் இருக்கிறது. மனிதர்களை நினைத்து பயமாயில்லை, உலகத்தை நினைத்துத்தான் பயமாய் இருக்கிறது. வாழ்கையை நினைத்து பயமாயில்லை, வாழ்வதை நினைத்துத்தான் பயமாய் இருக்கிறது.

‘இசை’ங்கறது வாசிக்கிற கருவியில இருந்து வருது; குத்தாலத்துல கொட்டுற அருவில இருந்து வருது; அட,  கூட்டுல இருந்து பறக்கும் குருவியில இருந்து கூட வருது. ‘இசை’ குழந்தை அழுவுற சத்தத்துல இருந்து வருது; குயில் பாடுற சத்தத்துல இருந்து வருது.இசை கொத்துற அம்மிக்கல்ல இருந்து வருது; கணவனை குனிய வச்சு மனைவி முதுகுல மொத்துறல இருந்து வருது.

சீலிங்ல ஃபேன் ஓடுற சத்தத்துல இருந்து வருது; ஸ்கூல் வேன் ஓடுற சத்தத்துல இருந்து வருது; கோர்ட்ல ஜட்ஜய்யா சுத்தியல தட்டுறதுல வருது, குறும்பு பண்ற குழந்தைய அப்பா கொட்டுறதுல வருது. ‘இசை’, ஹரி படங்களில் வில்லன்கள் கத்துற சத்தத்துல இருக்கு; தேவி பிரசாத் ரீரெக்கார்டிங்ல சைலன்ஸ்ல கூட வருது.

ஆனா இந்த சப்பாத்தி சப்ஜி சாப்பிடுற ஏர்போர்ட் செக்யூரிட்டிக்களுக்கு மட்டும் அது இசைஞானி இளையராஜாவின் லக்கேஜ் பேக்ல இருந்து வந்திருக்கும் போல... அதனால அதை கொஞ்ச நேரம் ரசிச்சு இருக்காங்க, அதைப் போய் ஒரு பெரிய நியூசாட்டம் எல்லோரும் பேசிக்கிட்டு இருக்காங்க.

* சமைச்சுத் தர்ற புருஷனை விட, சமைச்சு வைச்சத குற்றம் சொல்லாம சத்தமில்லாம சாப்பிட்டுட்டு போறவன் கிடைக்கத்தான் பொண்ணுங்க கொடுத்து வச்சிருக்கணும்.
* சொன்ன நேரத்துக்கு ஷாப்பிங் கூட்டிப் போற புருஷனை விட, ஷாப்பிங் போயிட்டு சொன்ன நேரம் தாண்டி வந்தாலும் கேட்காத புருஷன் கிடைக்கத்தான் பொண்ணுங்க  கொடுத்து வச்சிருக்கணும்.
* வீடு கூட்டித் தர்ற புருஷனை விட, வீட்டுல குப்பை கூளம் போடாத புருஷன் கிடைக்கத்தான் பொண்ணுங்க கொடுத்து வச்சிருக்கணும்.
* துணி துவைச்சுத் தர்ற புருஷனை விட, கேட்கிறப்பவெல்லாம் துணி வாங்கித் தர்ற புருஷன் கிடைக்கத்தான் பொண்ணுங்க கொடுத்து வச்சிருக்கணும்.
* குழந்தைகளை ஹாஸ்டலில் சேர்த்து படிக்க வைக்கிற பணக்கார புருஷன் கிடைப்பதை விட, தினம் குழந்தைகளை ஸ்கூல்ல கொண்டு போயி விட்டுட்டு கூட்டி வர்ற புருஷன் கிடைக்கத்தான் கொடுத்து வச்சிருக்கணும்.
* மாமனார், மாமியார மதிக்கிற புருஷன் கிடைக்கிறதை விட, தன்னோட மாமனார் மாமியார தேவையில்லாம இழுக்காத புருஷன் கிடைக்கத்தான் பொண்ணுங்க கொடுத்து வச்சிருக்கணும்.
* பியூட்டி பார்லர் போக பணம் தர்ற புருஷன் கிடைக்கிறதை விட, தினம் ‘நீ அழகு’ன்னு சொல்ற புருஷன் கிடைக்கத்தான் பொண்ணுங்க கொடுத்து வச்சிருக்கணும்.
* மொத்தத்துல பொண்டாட்டிய அடிக்கிற பழக்கம் இல்லாத புருஷன் கிடைக்கிறதை விட, பொண்டாட்டி அடிச்சா வாங்கிக்கிற புருஷன் கிடைக்கத்தான் பொண்ணுங்க கொடுத்து வச்சிருக்கணும்.

ஆல்தோட்ட பூபதி

ஓவியங்கள்: அரஸ்