‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’.
அமைச்சர் பதுக்கி வைத்த 500 கோடி ரூபாயை ஆளாளுக்கு தேடிப் போக, கடைசியாக அது ஹீரோ அண்ட் கோவுக்கு கிடைத்ததா என்பதே ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’.
 திடீரென அமைச்சர் உடல்நிலை கவலைக்கிடமாகிவிட, இறுதிக் காலத்தில் அவர் மறைத்து வைத்த 500 கோடியை நல்ல விஷயங்களுக்காகப் பயன்படுத்தச் சொல்லி அது இருக்கும் இடத்தை ரோபோ சங்கரிடம் சொல்கிறார். இதை அறிந்துகொண்ட அமைச்சரின் மைத்துனர் ரோபோ சங்கரை துரத்திப் போகிறார்கள். ரோபோ விபத்தில் சிக்கி கோமாவிற்குள் போக, 500 கோடி வந்ததா, விஷ்ணுவின் காதல் கை கூடியதா, சூரியின் திருமணம் முடிவுக்கு வந்ததா என்பதே களேபர, கலகல, காமெடி மீதிக் கதை.
கொஞ்சமே கொஞ்சமாய் தொட்டுக்கொள்ள ஊறுகாய் மாதிரி கதையை வைத்துக்கொண்டு தயக்கமே இல்லாமல் இறங்கி அடித்திருக்கிறார் இயக்குநர் எழில். குபீர் சிரிப்பு, விடாமல் சிரிப்பு என பல வகைகளிலும் சிரிப்பை மட்டும் வஞ்சிக்காமல் அள்ளி வழங்கியிருக்கிறார்கள். அதிகமாக பில்டப் இன்றி சிரிப்பு நாயகன் மாதிரியே வருகிறார் விஷ்ணு விஷால். ஃப்ரேமுக்கு ஃப்ரேம் முகம் காட்ட நினைக்காமல், சிரிப்புக் கூட்டணியோடு விளையாடுகிறார். பழகின பிட்ச்சில் அவர் அடித்திருப்பது செம ஸ்கோர்.
சிரிக்க வைப்பது ஒன்றே போதும் எனும் முடிவுக்கு வந்துவிட்டதால், நாமே அதற்குத் தயாராகிவிடுகிறோம். நெடுநெடு உயரத்தில் போலீஸ் வேலைக்குத் தயாராகும் நிக்கி கல்ரானி, ஆகக் கடைசியில் இன்ஸ்பெக்டர் ரோலில்கூட அசத்தலாகப் பொருந்துகிறார். செம ஸ்லிம் பேபியாக அவரின் ஆட்டம், பாட்டம் பரவாயில்லைதான். அவரை ரொம்பவும் நடிக்க விடாமல் நம்மைக் காப்பாற்றுகிறார் டைரக்டர்.
விஷ்ணுவின் தோளோடு தோள் நின்று பக்கா நண்பனாக சூரி. அடிக்கும் பன்ச் டைமிங்கில் சந்தானத்தையே மறக்கடிக்கிறார். இன்னும் கொஞ்ச காலத்தில் காமெடி அசுரனாக வரவேண்டிய பக்குவத்தில் அவர் இருப்பது கண்கூடு!முதல் பாதியை முற்றாக சூரி கையில் வைத்திருக்க, மறு பாதியின் கடைசியில் ரோபோ சங்கர் - ரவிமரியா கூட்டணி பின்னி பெடலெடுக்கிறது.
ஒவ்வொரு தடவையும் ஞாபக மறதியில் விட்ட இடத்திலிருந்தே ஆரம்பிக்கும் ‘ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ்’ காமெடியில் இரண்டு பேரும் அடுத்தடுத்து அசரடிக்கிறார்கள். 20 நிமிடங்களுக்கு மேல் வருகிற ரோபோ - ரவிமரியா காட்சி... சிரிப்பும், சேட்டையும் கொண்ட ஆல் டைம் ஹிட்! இனி அடுத்த இரண்டு வருடங்களுக்கு காமெடி சேனல்களில் இந்த 20 நிமிஷம்தான் சுற்றுலா!
கொஞ்சம் ரசக் குறைவு என்றாலும் ‘புஷ்பா புருஷன்தானே நீ’ காமெடி மேளா. ஆனால், அந்தப் பெண்ணை படம் முழுக்க காமெடி போர்வையில் இவ்வளவு தூரம் இழிவுபடுத்தியிருக்க வேண்டுமா பிரதர்? ஆனால், ‘அதற்குத்தானே சிரிக்கிறார்கள் பிரதர்’ என எதிர்க்கேள்வி கேட்டால் பதிலில்லை சாமி!
பழகிய திரைக்கதையில் படம் ஆங்காங்கே தரை தட்டி நிற்கும்போதெல்லாம் காமெடி பன்ச்களை ஏராள தாராளமாய் தூவி கப்பலை கரை சேர்க்கிறது எழிச்சூர் அரவிந்தன் / ஜோதி அருணாசலத்தின் வசனம்! சக்தியின் ஒளிப்பதிவு, பாடல் காட்சிகளில் எக்ஸ்ட்ரா ரம்மியம்! சத்யா இசையில் ‘குத்தீட்டி கண்ணாலே’ பாடல், ரசிக்கும் ரகம்.வெடிச்சிரிப்புக்கு இந்த வெள்ளக்காரன்!
- குங்குமம் விமர்சனக் குழு
|