நியூஸ் வே
மகிழ்ச்சி
இந்தியாவிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட சுமார் 200 கலைப்பொருட்களை பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைத்திருக்கிறது அமெரிக்கா. இவற்றின் மதிப்பு சுமார் 666 கோடி ரூபாய். இவற்றில், தமிழகத்திலிருந்து திருடு போன மாணிக்கவாசகர் சிலையும் அடக்கம்.
 கடந்த 2014ல் ஆஸ்திரேலியாவும், கடந்த ஆண்டு கனடா மற்றும் ஜெர்மனியும் நல்லெண்ண அடிப்படையில் இப்படி இந்தியப் பொக்கிஷங்களைத் திரும்ப ஒப்படைத்தன. இதனால், ‘பிரிட்டன் வசம் இருக்கும் கோஹினூர் வைரத்தை மீட்க வேண்டும்’ என்ற கோரிக்கை வலுவடைந்திருக்கிறது.
மைல்ஸ்டோன்
உலகின் மிக நீளமான, மிக ஆழமான, மிக காஸ்ட்லியான சுரங்கப்பாதை சுவிட்சர்லாந்தில் கட்டி முடித்துத் திறக்கப்பட்டுள்ளது. ஆல்ப்ஸ் மலையில், தரை மட்டத்திலிருந்து 2.3 கி.மீ ஆழத்தில் 57 கி.மீ நீளத்தில் இந்த ரயில் பாதையை அமைக்க ஆன செலவு, 83 ஆயிரம் கோடி ரூபாய்!
 மத்திய அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லாவின் டெல்லி வீட்டுத் தோட்டத்தில் எப்போதும் மயில்கள் ஏராளம் இருக்கும். அவற்றுக்கு உணவும் தண்ணீரும் கொடுக்கிறார் அவர். ஒரு மயில் பல ஆண்டுகளாக அவரோடு பழகி, அதற்கு ‘பிக்கு’ என பெயரும் வைத்திருந்தார் நஜ்மா. அவர் தோட்டத்துக்கு வந்தாலே அருகில் வந்து பாசம் காட்டும் அது. சமீபத்தில் குரங்குகள் தோட்டத்தில் நுழைந்து சில மயில்களை காயப்படுத்தியதில் அவர் ரொம்பவே அப்செட்! மருத்துவர்கள் வந்து சிகிச்சை அளித்தபிறகே நிம்மதியானார்!
ரயில் டிக்கெட் புக் செய்து வெயிட்டிங் லிஸ்ட்டில் இருப்பவர்கள் எதிர்காலத்தில் தங்களது வெயிட்டிங் லிஸ்ட் ஸ்டேட்டஸை அப்கிரேட் செய்து விமானத்தில் பயணம் செய்யலாம். இதற்காக இந்திய ரயில்வேயுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள இருக்கிறது ஏர் இந்தியா.
சாதனை
இந்த ஆண்டு பிரெஞ்சு ஓப்பன் சாம்பியன் பட்டம் வென்றபிறகு ஒரு முக்கியமான சாதனை படைத்திருக்கிறார், உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிச். இப்போது, ஒரே ஆண்டில் நான்கு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் வென்ற ‘காலண்டர் கிராண்ட்ஸ்லாம்’ சாம்பியன் அவர். 1969ம் ஆண்டில் ராட் லீவர் நிகழ்த்திய இந்த சாதனையை நீண்ட இடைவெளிக்குப் பிறகு சமன் செய்கிறார் ஜோகோவிச். ‘‘மூன்று முறை பிரெஞ்சு ஓப்பன் ஃபைனலில் தோற்றேன். இப்போது சொன்னால் ஆணவமான வார்த்தைகளாகத் தெரியலாம். ஆனால், முயன்றால் முடியாதது எதுவுமில்லை’’ என சிரிக்கிறார் இந்த 29 வயது செர்பிய வீரர்.
காமெடி
குத்துச்சண்டை வீரர் முகமது அலியின் மறைவு குறித்து கருத்து கேட்க, கேரள விளையாட்டுத்துறை அமைச்சர் ஜெயராஜனுக்கு போன் செய்தார் ஒரு நிருபர். ‘‘முகமது அலி கேரளாவின் மிகச் சிறந்த விளையாட்டு வீரர். அமெரிக்காவுக்குப் போய் கேரளாவுக்கு பெருமை சேர்த்தார். தங்கப் பதக்கம் எல்லாம் வாங்கினார்’’ என அமைச்சர் சொல்ல, அதிர்ந்துவிட்டார் நிருபர். விஷயம் காமெடி சேனல் ரேஞ்சுக்கு போனதும், ‘‘பெயரை வைத்து தவறுதலாகப் புரிந்துகொண்டேன்’’ என சமாளிஃபிகேஷன் செய்திருக்கிறார் அமைச்சர்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாட இருக்கிறார் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் விராட் கோஹ்லி! ஃபுட்சல் எனப்படும் ஐந்து பேர் கால்பந்து விளையாட்டை இந்தியாவில் பிரபலப்படுத்தும் நோக்கில் ‘ஃபுட்சல் பிரிமியர் லீக்’ தொடர், ஜூலை 15ம் தேதி தொடங்குகிறது. இத்தொடரின் தூதராக கோஹ்லி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான ‘தீம்’ பாடலை ரஹ்மான் இசையமைக்கிறார். ‘‘எப்படி கிரிக்கெட்டுக்கு தயாராக வேண்டும் என்று மட்டுமே எனக்குத் தெரியும். ஆனால், ரெக்கார்டிங் பற்றி ஒரு ஐடியாவும் இல்லை. நான் மிகவும் மதிக்கிற ரஹ்மானுடன் இணைந்து பணியாற்றுவதைப் பெருமையாகக் கருதுகிறேன்!’’ என நெகிழ்கிறார் கோஹ்லி! ‘நாம்ஹை ஃபுட்சல்’ என்ற டைட்டிலுடன் இரண்டு வாரத்தில் வெளிவர இருக்கிறது இந்தப் பாடல்.
வேதனை
ஒரு இடத்தில் போராட்டம் நடத்த அனுமதி வாங்குபவர்கள், அங்கேயே 2 ஆண்டுகள் நிரந்தரமாகத் தங்க முடியுமா? உ.பி.யில் நிகழ்ந்த இந்தக் கொடுமை, கோர்ட் தலையிட்ட பிறகு வெளிச்சத்துக்கு வந்தது. அதன்பின் நிகழ்ந்தது, இந்தியா இதுவரை காணாத கலவரம். மாவட்ட எஸ்.பி முகுல் திவேதி உட்பட 29 பேரை பலி வாங்கி நாட்டையே இது அதிர வைத்திருக்கிறது.
மதுரா நகரின் ஜவகர் பாக் என்ற 260 ஏக்கர் பூங்காவில் ‘சுவதீன் பாரத் சுபாஷ் சேனா’ என்ற அமைப்பினர் போராட்டம் நடத்த அனுமதி வாங்கி, அதன்பின் அங்கேயே தங்கி, உள்ளே தனி அரசாங்கமே நடத்தியிருக்கிறார்கள். ‘தேர்தலை ரத்து செய்ய வேண்டும், லிட்டர் ஒரு ரூபாய் என்ற விலையில் 40-60 லிட்டர் பெட்ரோல், டீசலை மக்களுக்குத் தரவேண்டும்’ என எல்லாமே நடக்காத கோரிக்கைகள். பூங்காவின் உள்ளே இவர்கள் நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்ததும், தங்கள் அமைப்பில் தவறு செய்பவர்களை தண்டிக்க தனி இடம் அமைத்திருந்ததும் இப்போது தெரியவந்துள்ளது.
வாய்ஸ்
‘‘குடும்பத்தை நினைத்து நான் எனது போதைப் பழக்கத்தை விட்டொழிக்கவில்லை. நான் அதிலிருந்து மீள வேண்டும் என முயற்சித்து வெளியில் வந்தேன். எந்த போதையின் அடிமைத்தனத்திலிருந்து மீள்வதற்கும் இதுவே சிறந்த வழி!’’ - நடிகர் சஞ்சய் தத்
மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு 48 லட்ச ரூபாயில் புதிய ஜாகுவார் கார் வாங்கியிருக்கிறது நாடாளுமன்ற செயலகம். பல மத்திய அமைச்சர்களுக்கே இவ்வளவு காஸ்ட்லி கார் இல்லை! ‘‘பாதுகாப்பு காரணங்களுக்காக வாங்கினோம்’’ என விளக்கம் கொடுக்கிறது நாடாளுமன்ற செயலகம்.
|