முகங்களின் தேசம் 23



கம்போடியாவின் அங்கோர்வாட் போன்றது, திரிபுராவின் உனக்கோட்டி. ‘இந்தியாவின் 7 அதிசயங்களில் ஒன்று’ எனப் புகழப்படும் அங்கு சென்ற அனுபவத்தை
பரவசத்துடன் எழுதுகிறார் ஜெயமோகன்

புதையல் மேல் காகங்கள்

வடகிழக்கே தீவிரவாதம் இல்லாத மாநிலங்களில் ஒன்று திரிபுரா. அதற்குக் காரணம், அங்கே ஆட்சி செய்யும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.  திரிபுராவின் முன்னாள் முதல்வர் நிருபன் சக்கரவர்த்தி அவரது அபாரமான நேர்மை காரணமாகவே பரவலாக இங்கே அறியப்பட்டவர். சொல்லப் போனால், அவர் வழியாகவே திரிபுரா இந்தியாவின் சாமானியர்களிடம் புகழ் பெற்றிருக்கிறது. (ஆனால் 1995ல் அவர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்!)

முதல் பக்க பாக்ஸ்:
கம்போடியாவின் அங்கோர்வாட் போன்றது, திரிபுராவின் உனக்கோட்டி. ‘இந்தியாவின் 7 அதிசயங்களில் ஒன்று’ எனப் புகழப்படும் அங்கு சென்ற அனுபவத்தை பரவசத்துடன் எழுதுகிறார் ஜெயமோகன்

புதையல் மேல் காகங்கள்

வடகிழக்கே தீவிரவாதம் இல்லாத மாநிலங்களில் ஒன்று திரிபுரா. அதற்குக் காரணம், அங்கே ஆட்சி செய்யும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.  திரிபுராவின் முன்னாள் முதல்வர் நிருபன் சக்கரவர்த்தி அவரது அபாரமான நேர்மை காரணமாகவே பரவலாக இங்கே அறியப்பட்டவர். சொல்லப் போனால், அவர் வழியாகவே திரிபுரா இந்தியாவின் சாமானியர்களிடம் புகழ் பெற்றிருக்கிறது. (ஆனால் 1995ல் அவர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்!)

திரிபுராவுக்கு நாங்கள் ஏழு நண்பர்கள் 2015 பிப்ரவரி 27ம் தேதி சென்றோம். மணிப்பூரில் உள்ள லோக்தக் ஏரியைப் பார்த்துவிட்டு அருகே உள்ள ஜிர்பாம் என்ற ஊரில் இரவு தங்கினோம். அதிகாலையிலேயே கிளம்பி திரிபுராவுக்குள் நுழைந்தோம். திரிபுராவின் முக்கியமான கலைச்செல்வமான ‘உனக்கோட்டி’ என்ற பழமையான ஊருக்குச் செல்வது என்பது திட்டம்!

இந்தியாவின் வடகிழக்கில் மிக முன்னதாகவே விடிந்துவிடுகிறது. ஆனால் குளிர் இருந்துகொண்டிருக்கும்.  நாங்கள் ஆறு மணிக்கே எழுந்து தயாராகிவிட்டாலும், ஓட்டுநர் தயாராக ஏழு மணி ஆகிவிடும். அங்கே காலையில் எழும் வழக்கம் மிகக்குறைவு. இரவில் மிகமுன்னரே தூங்கவும் சென்றுவிடுகிறார்கள். செல்வது மிகக் கடுமையான பாதை ஆதலால், ஓட்டுநரை கட்டாயப்படுத்தவும் முடியாது.

வடகிழக்கு முழுக்க குண்டானவர்களைப் பார்ப்பது அரிது. அவர்களுக்கு இரு வேளை உணவுதான். காலையில் ரொட்டி அல்லது சோறு. அதன்பின் பகல் முழுக்க டீ - சமோசா. மாலையில் மீண்டும் ரொட்டி அல்லது சோறு. மீன்குழம்பு வங்க பாணியில் செய்யப்படுவது. மீனைப் பொரித்து குழம்பிலே போட்டு கடுகெண்ணெய் விட்டுச் செய்வார்கள். குமரி மாவட்டத்தைச் சேர்ந்த எனக்கு மீனை எப்படிச் செய்தாலும் பிடிக்கும். சோறு சுவையானது. கொஞ்சம் வேகாத சுவை.

ஜிர்பாமிலிருந்து கிளம்பி ஒரே நாளில் மணிப்பூரைக் கடந்து திரிபுராவுக்குள் நுழைந்தோம். வரைபடத்தைப் பார்க்கையில்தான் நாங்கள் வந்த தொலைவே தெரிந்தது. வங்கதேசம் என்ற நாட்டையே சுற்றி வந்திருக்கிறோம். பகல் முழுக்க சென்றுகொண்டே இருந்தோம். மதிய உணவு இல்லை. ஒரு சிறிய சாலையோரக் கடையில் கொண்டைக்கடலைச் சுண்டல் சாப்பிட்டோம். எனக்கு மிகப் பிடித்தமான உணவு அது.

மிக மிக மோசமான சாலை. நான்குவழிப் பாதைக்கான பணி நடந்ததால், எங்கும் புழுதி, சேறு, குண்டு குழி. இப்பகுதியில் இரவில் பயணம் செய்யமுடியாதென்பதால் லாரிகள் பகலில்தான் செல்கின்றன. எதற்கும் சோர்வடையாத எங்கள் ஓட்டுநர் ஒரு இடத்தில் மனம் உடைந்து ‘‘இனிமேல் செல்லமுடியாது’’ என்று சொன்னார். எதிரே வந்த காரில் விசாரித்தோம். ‘‘பத்து கிலோ மீட்டர் கடந்தால் திரிபுரா எல்லை வரும், அதற்குப்பின் சாலை நன்றாகவே இருக்கும்’’ என்றார். ஓட்டுநரைத் தேற்றி மேலே செல்ல வைத்தோம்.

உனக்கோட்டி, இந்தியாவின் முக்கியமான சைவ மையங்களில் ஒன்று. தென்னாடுடைய சைவர்கள் பார்த்தால் ‘இது என்ன வகை சைவம்’ என அதிர்ச்சியடையலாம். ‘எந்நாட்டவர்க்கும் இறைவன் அல்லவா!’ என மகிழ்ச்சியும் கொள்ளலாம். உனக்கோட்டி என்றால் வங்க மொழியில்  ‘ஒரு கோடிக்கு ஒன்று குறைவு’ என்று பொருள்.

உனக்கோட்டி ஒரு தாழ்வான மலை. இந்த மலைக்குமேல் கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு முந்தைய ஒரு பெரிய சைவ நகரம் இருந்திருக்கிறது. உனக்கோட்டியை  ‘கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் ஆலயத்தின் ஒரு குட்டி வடிவம்’ என்று சொல்லலாம். சிற்பக்கலையிலும்கூட கொஞ்சம் அங்கோர்வாட் சாயல் உண்டு. அதாவது இந்து புராணங்களும் பழங்குடிக்கலையும் கலந்த ஒரு வடிவம்.

திரிபுராவின் தனிமை காரணமாக இங்கே அனேகமாகச் சுற்றுலாப் பயணிகளே வருவதில்லை. உனக்கோட்டியில் ஒரே ஒரு கடைதான் இருந்தது. அதில் கொஞ்ச பொருட்கள். நாங்கள் சென்றபோது வேறு எந்தப் பயணியும் இல்லை. சிறப்பாக படிகள் கட்டி அறிவிப்புகள் வைத்திருக்கிறார்கள். ஆனால் செல்லும் வழியில் ஊரில் எவரிடமும் ‘‘உனக்கோட்டி?’’ என்று கேட்டால் ‘‘தெரியாது’’ என்றார்கள். ‘உனக்கோட்டி’ என்பது வங்காள மொழிச் சொல். திரிபுரா பழங்குடிகள் ஆளுக்கொரு வார்த்தை சொல்கிறார்கள்.

கல்லு கும்ஹார் என்ற பழங்குடிச் சிற்பி இதைச் செதுக்கினார் என்பது உள்ளூர் புராணம். அவர் தன்னை கைலாசத்திற்கு சிவன் அழைக்க வேண்டுமென விரும்பினார். ஆனால் பழங்குடியை அனுமதிக்க சிவன் மறுத்துவிட்டார். பார்வதி சிபாரிசு செய்தமையால், ‘விடிவதற்குள் ஒரு கோடி சிற்பங்களைச் செய்தால் கூட்டிக்கொண்டு செல்கிறோம்’ என்று சிவன் சொன்னார். கல்லு கும்ஹார் சிற்பங்களைச் செய்யத் தொடங்கினார். ஒரு கோடிக்கு ஒன்று குறையும்போது விடிந்துவிட்டது. சிவன் அவரைக் கூப்பிடாமலேயே கைலாயம் சென்றுவிட்டார்.

ஆகவேதான் இந்தப் பெயர்.மிகப் பிற்காலத் தொன்மம் இது. இதில் இந்தியாவின் மைய மதத்தில் இணைய விரும்பும் பழங்குடிகளின் ஏக்கம்தான் உள்ளது. சுற்றுலா வசதிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, வருகையாளர் இன்மையால் கைவிடப்பட்டிருக்கின்றன. அனேகமாக காவலே இல்லை. இந்த பெரிய குன்றை காவல் காப்பதும் எளிதல்ல. யுனெஸ்கோ இதை ஏற்றெடுக்காவிட்டால், கொஞ்ச நாளில் உனக்கோட்டி மேலும் அழிந்து மறைந்துவிடும் ஆபத்து உள்ளது.

கல்படிகள் வழியாக நடந்து, பிரமிக்க வைக்கும் ஒரு சூழலைச் சென்றடைந்தோம். அது ஒரு நீரோடை பாறைகள் வழியாக செல்லும் ஒரு பாதை.  நீர் வழிந்து அரித்த பெரிய பாறையடுக்குகளை அப்படியே செதுக்கி சிற்பங்களாக ஆக்கியிருக்கிறார்கள். பேருருவம் கொண்ட புடைப்புச் சிற்பங்கள். பெரும்பாலும் சிற்பங்களின் தலைகள் மட்டுமே செதுக்கப்பட்டுள்ளன. மையமாக உள்ள சிவனின் தலை மட்டும் 30 அடி உயரமானது. இரு பக்கமும் சடைக்கற்றைகள் விரிந்திருக்கின்றன. அந்த சடைமுடிக்கற்றை மட்டுமே 10 அடி உயரம். அதில் கங்கை, நிலவு ஆகியவை உள்ளன. இரு பக்கமும் இரண்டு பெண் கணதேவதைகள் நிற்கின்றன.

சிவனின் முகம் முழுக்க முழுக்க ஒரு பழங்குடித் தெய்வம் போலிருக்கிறது. அத்தனை சிற்பங்களிலும் இந்திய மைய ஓட்ட சிற்பக்கலைக்கு முற்றிலும் அப்பாற்பட்ட வடகிழக்கின் பழங்குடித்தன்மை உள்ளது. முப்பது அடி உயரமான வீரபத்ரனின் முகம். இரு பக்கமும் நாய்கள். இருபதடி உயரமான துர்க்கை. அவளுடைய இரு காவல் தேவதைகள்.

இவை ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. அன்று இக்குன்று ஒரு முக்கியமான நகரமாக இருந்திருக்கிறது. சிவனுக்குரிய குன்று. காடு முழுக்க பல உடைந்த சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஏழாம் நூற்றாண்டில்தான் தமிழகத்தில் கற்செதுக்குக் கலை தோன்றியது; மகேந்திரவர்ம பல்லவனின் குடைவரைக் கோயில்கள் அமைக்கப்பட்டன என்பதை நாம் கணக்கில் கொள்ளவேண்டும்உனக்கோட்டியின் சிற்பங்கள் ஒரு விசித்திரமான கனவுக்குள் வழிதவறிச் சென்றுவிட்ட உணர்வை அளிப்பவை. ஒரு பெரும்பாறையடுக்கில் செதுக்கப்பட்ட சிற்பங்களின் வரிசை இது.

ஆற்றின் பெருக்கு  அந்த பெரும் பாறைச்சுவரை உடைத்துத் தள்ளிவிட்டது. எனவே அந்தப் பகுதியெங்கும் காட்டுக்குள் பிரமாண்டமான சிற்பங்கள் சிதறிக் கிடக்கின்றன.பெரிய பாறை ஒன்று பாதி அமிழ்ந்த நந்தியாக செதுக்கப்பட்டுள்ளது. பிரமாண்டமான சிலை ஒன்றின் தலையணி மட்டும் பாதி புதைந்து மண்ணில் கிடந்தது. அப்பால் அச்சிலையின் ஒற்றைக் கண்ணும் மூக்கின் ஒரு பகுதியும் ஆற்றின் கீழ் உள்ள பாறை அடுக்கில். யானை முகம் கொண்ட பூத கணங்கள் இருபக்கமும் நிற்க, அமர்ந்திருக்கும் நாற்பதடி உயரமான பிள்ளையார்.

கீழே காட்டுக்குள் வெவ்வேறு இடங்களில் சிற்பங்கள் கிடந்தன. சதுர்முக லிங்கத்தில் சிவனின் நான்கு முகங்கள் செதுக்கப்பட்டுள்ளன. தென்னகத்தில் உமாமகேஸ்வரர் என புகழ்பெற்ற, மடியில் உமையை அமர்த்தி முலை தழுவி அமர்ந்திருக்கும் சிவன். அவர் இங்கே கல்யாணசுந்தரர் என்று சொல்லப்படுகிறார்..

வளைந்து மேலேறிச் சென்று, அங்கிருந்து ஒட்டுமொத்தமாக ஒன்றன் மேல் ஒன்றாக மூன்று அடுக்குகளாக இச்சிற்பங்களைப் பார்ப்பது ஒரு திகைப்பூட்டும் அனுபவம். மேலே பலவகையான தாந்த்ரீகச் சிற்பங்கள் உள்ளன. யோனி விரித்த கோலத்தில் அமர்ந்த துர்க்கை. தன் தலையைத் தானே வெட்டும் யோகினி. தலைவெட்டுப்பட்ட யோகினி. துர்க்கையின் வெவ்வேறு கோலங்கள்.

நாங்கள் செல்லும்போது அங்கே பயணிகளே இல்லை. ‘‘எப்படி சார் வருவாங்க? இந்த மாநிலமே துண்டா தனியா கிடக்கே!’’ என்றார் நண்பர் கிருஷ்ணன். உனக்கோட்டியின் அந்தத் தொன்மத்திலேயே, அம்மக்கள் மையத்திலிருந்து பிரிந்து, இணையத் துடிக்கும்  தனிமை உணர்ச்சியும் தவிப்பும் கோபமும் உள்ளது. ‘‘இத்தனை பிரமாண்டமான இடம். தமிழிலே இன்னிக்கு வரை ஒரு வரிகூட எழுதப்பட்டதில்லை. ஒருத்தராவது வந்து பார்த்திருப்பாங்களான்னு சந்தேகம்தான்’’ என்றார் ராஜமாணிக்கம்ஆனால் ஒரு கும்பல் உள்ளே வந்தது. பார்த்ததுமே ‘தமிழர்
களோ’ என்று சந்தேகம் வந்தது.

மூன்று முதிய பெண்மணிகள். வழிகாட்டியாக இரு உள்ளூர் ஆட்கள். அவர்களில் ஒருவர் ‘‘ஆமா’’ என்றபோது தெரிந்தது, தமிழர்கள்தான். கிருஷ்ணன் பெருமிதத்துடன், ‘‘நம்மாளுக தேடி வந்திடறாங்க சார்’’ என்றார். எனக்கும் கொஞ்சம் மகிழ்ச்சியாகவே இருந்தது.
ஆனால் அவர்கள் உயர்குடியினரைப் போல ஆங்கிலம் பேசிக்கொண்டிருந்தனர். அதிகாரிகளாகவும் தோன்றினர். ஆகவே நாங்கள் பேச்சுக் கொடுக்கவில்லை. அவர்களுக்கும் நாங்கள் தமிழர்கள் எனத் தெரிந்துவிட்டது. வடகிழக்கு மூலையில் கைவிடப்பட்ட ஒரு புராதனக் கலைநகரில் தமிழர்கள் மட்டுமே இருப்பது விந்தையாக உணரச் செய்தது.

மேலேறிச் சென்றபோது ஒரு அருங்காட்சியகம் வந்தது. அருகே  பிற்காலத்தைய தனிச்சிற்பங்களை அப்படியே வெளியே தூக்கிப் போட்டுவைத்திருக்கிறார்கள். உனக்கோட்டி ஏழாம் நூற்றாண்டு முதல் பதினொரு நூற்றாண்டு காலம் காட்டுக்குள் கைவிடப்பட்ட நிலையில் கிடந்திருக்கிறது. ஆகவே, சிற்பங்கள் அரிக்கப்பட்டு கரைந்த மெழுகுச்சிலைகளாக இருந்தன.

நான் குனிந்து அச்சிற்பங்களைப் பார்த்தேன்.  பன்னிரு கைகளுடன் சுப்ரமணியன், உலகை வாலில் சுருட்டிச்செல்லும் அனுமன்,  கையில் கதாயுதத்துடன் குபேரன், வஜ்ராயுதம் ஏந்திய இந்திரன் போன்ற சிலைகளை அடையாளம் காண முடிந்தது. பத்தடி உயரமான சிலைகள் அவை. பிள்ளையார் சிலை முழுமையாகவே இருந்தது.

பார்க்கப் பார்க்க உனக்கோட்டியில் சிலைகள் பெருகிக்கொண்டே போவதுதான் கனவுத்தன்மையை அளிக்கிறது என்று தோன்றியது. ‘வெறும் கற்புடைப்பா, சிற்பமா’ என்ற ஐயத்துடன் கண்கள் தொட்டுத் தொட்டுச் செல்ல, ஒரு சிற்பத்தை அடையாளம் காண்பது ஒரு பெரிய பரவசம். நாமே அச்சிற்பத்தை பாறையில் இருந்து நம் விழிகளால் உருவாக்கி எடுப்பது போலத் தோன்றியது.

அந்தத்  தமிழ்ப் பெண்கள்  அங்கே வந்தனர். எங்களுடன் சேர்ந்து சிற்பங்களைக் குனிந்து நோக்கினர். அவர்களில் ஒருவர், பிள்ளையாரை அடையாளம் கண்டார். பிற சிலைகள் எதையும் அவர்களால் அடையாளம் காணமுடியவில்லை. எங்களிடம் அவை என்ன என்று கேட்டனர். நான் ஒவ்வொரு அடையாளமாகச் சுட்டிக் காட்டி, அவை எவருடைய சிலைகள் என்று விளக்கினேன்.

அவர்களுக்கு வியப்பு. ‘‘அப்படியா? அப்படியா?’’ என்று கேட்டுக்கொண்டே இருந்தார்கள். கடைசியில் ‘‘நீங்கள் யார்?’’ என்றோம். அவர்கள் தமிழக அரசின் உயரதிகாரிகள். ஏதோ மாநாட்டுக்காக திரிபுரா வந்தவர்கள். என்ன மாநாடு என்று நண்பர் கேட்டார். ‘‘நாங்கள் அருங்காட்சியகத்தில் கலைப்பொறுப்பாளர்களாக (கியூரேட்டர்) வேலை பார்க்கிறோம். திரிபுராவின் கலைகளைப் பாதுகாப்பது பற்றிய ஒரு யுனெஸ்கோ மாநாட்டுக்காக வந்தோம்’’ என்றார்கள். அதில் ஒரு பெண்மணி, சென்னை அருங்காட்சியகத்தின் கியூரேட்டர்.

அவர்களின் வேலை விஷயமாகத்தான் அங்கே அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள். எந்தச் சிற்பத்தைப் பற்றியும் அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை. அதிர்ச்சியுடன், ‘‘உங்களுக்குச் சிற்பங்களைப் பற்றித் தெரியாதா?’’ என்றேன். ‘‘அதுக்கெல்லாம் எங்க நேரம்? குடும்பம், வேலைன்னு சரியாப் போகுது’’ என்றார்கள். ‘எதைப் பற்றியும்  எதையும் தெரிந்துகொள்ளக்கூடாது’ என்ற ஆழமான விரதத்துடன் அருங்காட்சியகங்களிலேயே முப்பதாண்டுகளைக் கடத்திய முன்னுதாரணத் தமிழ்ப் பெண்கள்.

திரும்பும்போது கிருஷ்ணன் மனமுடைந்து சொன்னார். ‘‘இவங்க ஏன் சார் இங்கெல்லாம் வர்றாங்க? தமிழ்நாட்டிலே பக்கத்து தெருக் கோயிலையே பாத்திருக்க மாட்டாங்க...’’நான் சொன்னேன், ‘‘தமிழ்நாட்டிலே பக்கத்து தெரு கோயிலைப் பாக்காதவங்கதான் பெரும்பான்மை. புதையல் மேல் உக்கார்ந்திருக்கும் காக்கா கூட்டம் நாம்!’’

உனக்கோட்டி, இந்தியாவின் முக்கியமான சைவ மையங்களில் ஒன்று. தென்னாடுடைய  சைவர்கள் பார்த்தால் ‘இது என்ன வகை சைவம்’ என அதிர்ச்சியடையலாம்.உனக்கோட்டியின் சிற்பங்கள் ஒரு விசித்திரமான கனவுக்குள் வழிதவறிச் சென்றுவிட்ட உணர்வை அளிப்பவை..
இத்தனை பிரமாண்டமான இடம். தமிழிலே இன்னிக்கு வரை ஒரு வரிகூட  எழுதப்பட்டதில்லை. ஒருத்தராவது வந்து பார்த்திருப்பாங்களான்னு சந்தேகம்தான்!

(தரிசிக்கலாம்...)

ஜெயமோகன்

ஓவியம்: ராஜா