நான் உங்கள் ரசிகன் 38



சரோஜாதேவி

பாதுகாக்கும் பொக்கிஷம்!


‘பிள்ளைநிலா’வில் இருந்து என்னோட நிறைய படங்கள்ல நளினி ஹீரோயின். என் படத்துல நடிக்கும்போதுதான் நளினி - ராமராஜன் காதல் ஆரம்பிச்சது. ‘நான் உங்கள் ரசிகன்’ முடியும்போது அவங்க இரு வீட்டு எதிர்ப்புகளையும் மீறி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. ரொம்ப அழகான ரெண்டு பிள்ளைங்க.

அப்புறம் ஒரு கட்டத்துக்குப் பிறகு கணவரோடு கருத்து வேறுபாடு வந்து பிரிஞ்சபோது, ‘அடுத்து என்ன செய்யப்போறோம்’னு கலங்கி நின்னாங்க நளினி. அப்போ அவங்களை அரவணைச்சது, குட்டி பத்மினியோட ‘கிருஷ்ணதாசி’ டி.வி தொடர்தான்.

சன் டி.வியில வர்ற ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ தொடர்ல நளினியோட நகைச்சுவை பிரமாதமா பேசப்படுது. இன்னிக்கு ஒரிய மொழி சீரியல்கள்ல கூட நளினி நடிக்கறார். நளினிக்கு வாய்ஸ் கொடுக்குற நித்யா ரவீந்தர், ஒரு காலத்துல தூர்தர்ஷன் நாடகங்கள்ல நடிச்சு கலக்கினவங்க. அப்போ வந்த தெலுங்கு படங்கள்ல எல்லா ஹீரோக்களுக்கும் தங்கையா நடிச்ச பெருமை நித்யாவுக்கு உண்டு.

சரண்யா பொன்வண்ணனும் அருமையான குணச்சித்திர ஆர்ட்டிஸ்ட். தனுஷுக்கு அம்மாவா இருக்கட்டும்... இல்ல, உதயநிதிக்கு அம்மாவா இருக்கட்டும்... பொருத்தமான அம்மாவா மாறிடுறாங்க. கணவனுக்குத் தெரியாமல் மகனுக்கு சப்போர்ட் பண்ற கேரக்டர்னா இன்னும் பிரமாதமா பண்றாங்க. மத்த நடிகைகள் மாதிரி இல்ல சரண்யா.

சாயங்காலம் ஆறு மணிக்கு ஷூட்டிங் முடிஞ்சா, 6.05க்கு இல்லத்தரசியா மாறிடுவாங்க. மகள்களுக்கு ட்யூஷன் சொல்லிக் குடுக்கறது, சமையல்னு இறங்கிடுவாங்க. இது தவிர, வீட்டுலயே பிளவுஸ் டிசைனிங் கிளாஸ் நடத்துறாங்க. சீனு ராமசாமியோட ‘நீர்ப்பறவை’யில சரண்யாவின் நடிப்புக்கு தேசிய விருதே கிடைச்சது எங்களுக்கெல்லாம் பயங்கர சந்தோஷம்.

ஊர்வசி... அவங்க அக்காக்கள் கலாரஞ்சனி, கல்பனானு மூணு பேருமே பிரமாதமான நடிகைகள். கலாரஞ்சனிக்கு என்னோட ‘சிறைப்பறவை’யில் முக்கியமான ரோல். ஊர்வசியும் என் இயக்கத்தில் நிறைய நடிச்சிருக்காங்க. கல்பனா என் இயக்கத்தில் நடிச்சதில்லை. ஆனா, நிறைய படங்கள்ல அவங்களோடு நடிச்சிருக்கேன்.‘மைக்கேல் மதனகாமராஜன்’ல ஊர்வசியும், பாலுமகேந்திராவோட ‘சதிலீலாவதி’, பாக்யராஜோட ‘சின்ன வீடு’ படங்கள்ல கல்பனாவும் அவ்ளோ பெஸ்ட்டா நடிச்சிருந்தாங்க. கல்பனா திடீர்னு இறந்து போனது, எனக்குப் பெரிய மனவேதனை. நாங்க சேர்ந்து நடிச்ச ஒரு படம் பாதியிலேயே நிக்குது. இனி அதை எப்படிக் கொண்டுபோகப் போறாங்கனு தெரியல!

காமெடியில் மனோரமாவுக்கு அடுத்தது ரமாபிரபா, அவங்களுக்கு அடுத்து ‘அச்சச்சோ’ சித்ரா வந்தாங்க. ஆனா, அவங்க எல்லாரையும் தாண்டி கோவை சரளா வந்தது ஆச்சரியம். அசாத்தியமான நாடக அனுபவம் அவருக்கு. தனக்காக வாழக்கூடியவங்க மத்தியில் மத்தவங்களுக்காக வாழக்கூடிய கோவை சரளா, எனக்கொரு நல்ல தோழியாகவும், நல்ல ஆலோசனைகள் சொல்லும் நலம் விரும்பியாகவும் கிடைச்சது என் அதிர்ஷ்டம்.

அவங்க அறிமுகமான முதல் படம், ‘முந்தானை முடிச்சு’ல வயசான கேரக்டர்னாலும் கவுண்டமணி, செந்தில், எஸ்.எஸ்.சந்திரன்னு எல்லாருக்குமே ஜோடியா நடிச்சு பேர் வாங்கினவர். வடிவேலு - கோவை சரளா ஜோடியின் காமெடி எவர்கிரீன் ஹிட். அதே மாதிரி தெலுங்கில் பிரமானந்தம் ஜோடியா கோவை சரளா ஏராளமான ஹிட் கொடுத்திருக்கார்.

வெறும் காமெடி மட்டுமில்லாம, ‘கொம்பன்’ மாதிரி படங்கள்ல குணச்சித்திரமாகவும் எல்லோரது மனசிலும் இடம் பிடிச்சவர். கோவை சரளா, நான், மன்னு எங்க மூணு பேர் கூட்டணியை சரியா பயன்படுத்துறவர் லாரன்ஸ் மாஸ்டர்தான். அதுவும் மனை எல்லாருக்கும் பிடிக்கும். கமல், விஜய்னு எல்லா ஹீரோக்களும் தங்களோட படங்கள்ல மனும் இருக்கணும்னு விரும்புவாங்க.

கடவுள் பக்தி மிக்கவர். கள்ளம் கபடமில்லாத வெள்ளை உள்ளத்துக்காரர். மனோட அப்பா தெலுங்கில் படத் தயாரிப்பாளர். ஆனா, அந்த பந்தா எதுவும் அவர்கிட்ட இருக்காது. நடிகர் சங்கத் தேர்தல்ல அவரோட பங்களிப்பு பாராட்டக்கூடியது. நடிகர் சங்கத்துல ஏதாவது உதவி எனக்குத் தேவைப்பட்டா, நான் பேசுறதைக் காட்டிலும் மன் பேசினா அது சக்சஸ் ஆகும்ங்கறது என் சென்டிமென்ட்.

நான் பார்த்து பிரமிச்ச ஒரு நடிகைன்னா அவங்க ‘கன்னடத்து பைங்கிளி’ சரோஜாதேவிதான். அவங்க எப்போ பெங்களூருவில் இருந்து சென்னை வந்தாலும் அவங்க சந்திக்கிற சின்னதொரு நட்பு வட்டப் பட்டியல்ல நானும் இருக்கேன் என்பது அளவிட முடியாத பெருமை. அந்தச் சந்திப்பில் பி.சுசீலாம்மாவும் இருப்பாங்க. பழைய பாடல்களைப் பாடுவாங்க. அவங்களைப் பத்தி சொல்ல அவ்வளவு விஷயங்கள் இருக்கு. ‘நிக்கறதுக்கு நேரமில்லை... நெருப்பை அணைக்கறதுக்கு நேரமில்லை’ங்கற மாதிரி அந்தக் காலத்துல ரொம்ப பிஸியான ஹீரோயின். அவங்கள சந்திக்கும்போதெல்லாம் ஏதாவது கேள்விகள் கேட்டுக்கிட்டே இருப்பேன். பொறுமையா புன்னகையோடு கோபப்படாம பதில் சொல்வாங்க.

‘‘நான் கன்னடத்துப் பைங்கிளினு பெயர் வாங்கினாலும் எனக்கு நடக்க சொல்லிக் கொடுத்தவர் சின்னவர் (எம்.ஜி.ஆர்)தான்!’’னு சொல்வாங்க. ‘‘என்னோட வாய்ஸ் கீச்னு இருக்கும். அதையே எல்லாரும் ப்ளஸ்ஸா நினைக்க காரணமும் சின்னவர்தான்!’’னு சொன்னாங்க. ‘‘கிளாமர் கேரக்டர்களும் பண்ணுனீங்க. அதே டைம்ல ‘பாலும் பழமும்’ மாதிரி சென்டிமென்ட் படங்களும் பண்ணுனீங்களே... எப்படி?’’னு ஒரு நாள் கேட்டேன். ‘‘இயக்குநர்கள், கதாநாயகர்கள் எல்லாருமே கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து பண்ணினதால, நானும் பேசப்பட்டேன்’’னு தன்னடக்கமா சொன்னாங்க. மேக்கப், டிரெஸ்ஸிங் விஷயத்துலயும் எப்பவும் அசத்துறவர் சரோஜாதேவியம்மா.

‘ஆதவன்’ல வடிவேலு கூட இந்த விஷயத்தில் அவங்களை கலாய்ச்சிருப்பார். ஆனா, அவங்க அதிகம் விக் பயன்படுத்தினது கிடையாது. ‘‘கல்யாணம் ஆகாத பொண்ணு கேரக்டர்னா, ரெட்டை ஜடை போட்டு ரிப்பன் வச்சு கட்டிக்குவேன். கல்யாணம் ஆகி கொஞ்ச நாள்தான் ஆச்சுன்னா, ஒத்த ஜடை போட்டுக்குவேன்.

மிடில் ஏஜ் பொண்ணு கேரக்டரா இருந்தா ஒரு சின்ன கொண்டை போட்டுக்குவேன். கொஞ்சம் வயசான பொண்ணா இருந்தா, அதே கொண்டையில கொஞ்சம் க்ரே கலர் அடிச்சுப்பேன்!’’னு சிரிச்சுக்கிட்டே சொன்னாங்க. ‘‘வயசு வித்தியாசத்தைக் காட்ட விக் எல்லாம் தேவையில்லை. கண் எக்ஸ்பிரஷனே போதும். ‘லவ் பேர்ட்ஸ்... லவ் பேர்ட்ஸ்...’ பாடல்ல என் கண் எக்ஸ்பிரஷனை நிறைய பேர் முயற்சி பண்ணினாங்க. யாருக்கும் சரி வரல!’’னு சொல்லி சிரிச்சாங்க.

எம் ஜி.ஆரோட நடிச்ச அனுபவங்களை அவங்க சொல்லிக் கேட்கும் பாக்கியம் எனக்குக் கிடைச்சது.‘‘ஒருநாள் படப்பிடிப்பில் நான் ஒரு டம்ளர்ல ஜூஸ் குடிச்சேன். அது கொஞ்சம் காஸ்ட்யூம்ல சிந்திடுச்சு. இதைச் சின்னவர் (எம்.ஜி.ஆர்) கவனிச்சிட்டார்.

அப்போ அவர் எதுவும் சொல்லலை. ஆனா, மறுநாள் காலையில் நான் ஷூட்டிங் வரும்போது, எனக்கு வெள்ளியில ஸ்ட்ரா வச்ச, டம்ளர் ஒண்ணு பரிசளிச்சார். அதை இன்னும் பொக்கிஷமா பாதுகாத்து வச்சிருக்கேன்!’’னாங்க. எம்.ஜி.ஆரையும், சிவாஜியையும் உசிரை விட மேலாக நினைக்கிறார் சரோஜாதேவியம்மா. திருமணத்திற்குப் பிறகு தமிழ்ல அவங்க நடிச்ச படம் ‘தாமரை நெஞ்சங்கள்’.

‘‘எம்.ஜி.ஆர்தான் எனக்கு கல்யாணம் பண்ணி வச்சார். என் கணவர் என்மீது அபரிதமான அன்பு கொண்டவர். எனக்கு எந்த கார் பிடிக்கும்னு தெரியாமல், ஒன்பது கார் வாங்கி வச்சிருந்தார். அப்படி ஒரு அன்பானவர். ‘நீ எந்த கார்ல வேணாலும் போயிட்டு வா’னு சொல்லி அனுப்பி வைப்பார்!’’னு நெகிழ்வாங்க சரோஜாதேவியம்மா. ‘படகோட்டி’, ‘அன்பே வா’ படப்பிடிப்பில் நடந்த சம்பவங்கள் இன்னும் சுவாரஸ்யம்...

(ரசிப்போம்...)
தொகுப்பு: மை.பாரதிராஜா
படங்கள் உதவி: ஞானம்

மனோபாலா