அப்பாவின் மகள்கள்!



அன்னையர் தினத்துக்கு சற்றும் குறைவில்லாதது தந்தையர் தினம். ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிறு தந்தையர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. பெண் படைப்பாளிகள் சிலர், அப்பாவைப் பற்றிச் சிந்திய மனச்சித்திரங்கள்...

சுகிர்தராணி

இது தந்தைவழிச் சமூகம்தான். என் தந்தை ஆணாதிக்கவாதிதான். என்றாலும் நான் அவனைப் பார்த்துத்தான் வளர்ந்தேன். பெண்ணடிமைத்தனத்திற்கு ஆட்பட்ட என் தாயைப் பார்த்து வளர முடியாது. நீச்சலடிக்க, மரமேற, மலையேற, எதிரியை எதிர்த்து நிற்க, போராடக் கற்றுக் கொடுத்தவன் அவன்தான். என்னை சமூகம் எதிர்பார்க்கும் பெண்ணாக வளர விடாமல் பார்த்துக் கொண்டவன் அவனே. அவன் என் தந்தை... அவன் என் கதாநாயகன்... நான் அப்பாவின் மகள்.

ச.விஜயலட்சுமி

மீசைக்குள் தாய்மை ஒளித்திருந்த அப்பாவின் நளபாகம் இப்போது என் கையில். வீடும் ஊரும் உறங்கிக் கிடக்கும்... அப்பா வந்தவுடன் சாப்பிடக் காத்திருக்கும் மென்பிஞ்சு பாசம், இருளும் நிலவும் அறிந்தவை. பிஞ்சு மனதின் நண்பன்... அவரணைப்பில் மனசு பூனைக்குட்டியாய் சுருண்டு கிடக்கும். அப்பாவுக்கு தெரியும் எனக்கான அம்மா வாசம்... எனக்கான வாசம்!

இளம்பிறை

அப்பா, மகளுக்கு நம்பிக்கையின் உச்சம். இணையற்ற அக்கறை. சொல்லிக்கொள்ளாத பேரன்பு. மற்றவர்களிடம் ஏற்படும் நட்பு, மேகங்களைப் போல கொஞ்ச நேரத்தில் கலைந்து போய்விடலாம். ஆனால், இறுதி மூச்சு உள்ளவரை நினைவில் தெரியும் வானமே தந்தை.

அ.வெண்ணிலா

அப்பா என்றதும் நினைவுக்கு வருவது... அவரின் உச்சபட்ச ேகாபமும், உச்சபட்ச ரசனையும்தான். கொதிக்கும் வெந்நீரும், ஆழ்கிணற்றின் குளிர்நீரும் போல இரு துருவங்களின் கலவை. சோர்ந்திருக்கும் கோழிக் குஞ்சுக்கு அலகு திறந்து தண்ணீர் ஊற்றுவார். அதே கணத்தில், குடிக்கும் தேநீரில் குறையும் ஒரு துளி சர்க்கரைக்காக கெட்ட வார்த்தைகளை வீசுவார். அப்பா எப்போதுமே சிறு விஷயங்களில் பெரு மகிழ்ச்சி காணும் குழந்தை மனசுக்காரர். என் வாழ்வின் உயரம் அவரே!

சுமதி

ஏன் இந்த அப்பாக்கள் மட்டும், எப்போதும் குழந்தைகளைத் தோளில் தூக்குகிறார்கள்? நான் பார்க்காத உலகத்தையும் சேர்த்து என் பிள்ளை பார்க்க வேண்டும், தான் தொடாத உயரத்தையும் சேர்த்து என் பிள்ளை தொட வேண்டும் என்பதற்காகத்தான். தனக்கு கிடைக்காதது, தன் பிள்ளைகளுக்கு கிடைத்தே ஆகவேண்டும் என்பதில் அப்பாக்களின் பிடிவாதம் அதீதமானது. மனைவிக்கு மறுக்கிற அங்கீகாரம், சுதந்திரத்தைக் கூட தன் மகளுக்குக் கொடுப்பதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதவர்கள் ஆண்கள்.

உமா மோகன்

சில பேருக்கு பொறுப்பு, சில பேருக்கு அலங்காரம், சில பேருக்கு கடமை, இன்னும் சிலருக்கோ பொறுமை, அப்பா என்றதும் ஆசை பொங்கி வரவோ, நெகிழவோ, பெருமை கொள்ளவோ முடிந்தவர்கள் பாக்கியவான்கள். இடுப்பில் கட்டிக்கொண்டு பழக்கியிருந்தாலும், நீரில் தள்ளிவிட்டுப் பழக்கியிருந்தாலும், காவலுக்கு நின்று நீந்த வைத்த அப்பாக்களின் பிள்ளைகள் மட்டுமே அந்த உறவின் மேன்மை போற்றுகிறார்கள்.

கவின்மலர்

இசைக் கருவிகள் வாசிக்கத் தெரிந்த, இன்றும் பெருங்குரலெடுத்து அழகாய்ப் பாடக்கூடிய கலைஞன் அப்பாவாக வந்தது எவ்வளவு பெரிய பேறு! நுண்ணுணர்வு கொண்டவர்கள் கலைஞர்கள். அது போல உணர்வு வயப்படுவோரும் கூட. அந்தக் குணம் அப்படியே எனக்கும். பால்யத்தில் எங்கள் வீட்டு வாசலில் அமர்ந்து ‘முதல் மரியாதை’ திரைக்கதை சொன்ன காலம் திரும்பக் கிடைக்காதது.

லீனா மணிமேகலை

அப்பா, நீங்கள் என்னிடம் சொல்லாமல் சென்று இன்றோடு பதினேழு வருடங்கள். காலையில் எழுந்ததும் உங்கள் மர நாற்காலியில், வெற்று மார்போடு அமர்ந்தபடி செய்தித்தாள்  வாசிப்பீர்கள். சரியாகத் துடைக்காமல் அணிந்திருக்கும் உங்கள் மூக்குக் கண்ணாடியைக் கழற்றித் துடைத்துத் தருவேன்! இதோ அதே மர நாற்காலியில் அமர்ந்து இதை எழுதுகிறேன்.

அது உங்களை எங்கே எனக் கேட்கிறது. பொன்னீலன் மாமா எழுதிய ‘ஜீவா என்றொரு மானுடன்’ என்ற புத்தகத்தில் உங்கள் கையெழுத்தைத் தொட்டுப் பார்க்கிறேன். அந்த புத்தகத்திற்கு நீங்கள் போட்ட அட்டை கூட அப்படியே இருக்கிறது! உயிரோடு இருந்திருந்தால் உங்களோடு பேசித் தீர்க்கலாம்.

மனுஷி

அப்பாக்களின் ராஜ்ஜியத்தில் மகள்கள்தான் இளவரசிகள் என்கிறார்கள். ஆனால், சிறுவயது முதல் அப்பாவின் ஸ்பரிசம் படாமல் வளர்ந்த மகள் நான். அப்பாவைப் பற்றிச் சிலாகித்துச் சொல்லிக்கொள்ள எந்த நினைவுகளும் இல்லை என்னிடம். அப்பாவின் மீது எந்த வெறுப்பும் இல்லை. அன்பும் இல்லை. அவ்வளவுதான். சிறுகதைகளில், நாவல்களில், கவிதைகளில், சில சினிமாக்களில், சில பாடல் வரிகளில் மகள் மீது அளவு கடந்த பாசத்தைப் பொழியும் அப்பாக்களைத் தரிசிக்கிறபோது  அந்த இடத்தில் அம்மாவை மட்டும்தான் வைத்துப் பார்த்து ஏக்கம் கொள்கிறது மனம்!

தி.பரமேஸ்வரி

அச்சமும் சினமும் அன்பும் நிரம்பிய மீசை வைத்த என் முதல் ஆண். அழ வைத்துப் பின் சிரிக்கச் செய்யும் பேரழகன். மதுப்போத்தலின் மீது விசையெனக் கிளம்பி விண்ணேகியவன். பேராற்றின் பாறையிடுக்கில் சிக்கிய சிறு இலையெனச் சிதைந்த வாழ்வு.

கே.வி.ஷைலஜா

அப்பா என்ற உறவின் குளிர்மையை வேண்டி நான் ஒரு இரவில் அழுதபோது எனக்கு வயது 22. என் அப்பா இறந்தும் 22 வருடமாகியிருந்தது. என் மகளுக்கும் அவள் அப்பாவுக்குமான நட்பில், உறவில், கொஞ்சலில், மிரட்டலில் நான் என்னை மீட்டெடுப்பதுண்டு. கலையும் இலக்கியமும் பேர் தரலாம்;  புகழ் தரலாம்; சில நேரங்களில் பணம்கூட தரலாம்.

ஆனால் எனக்கு அப்பாவைத் தந்தது. என் முதல் புத்தகமான சிதம்பர நினைவுகள் படித்துவிட்டு கே.எஸ்.சுப்ரமணியன், ‘‘அவளைப் பார்க்கும்போது என் மகள் மாதிரியான வாத்சல்யம் ஏற்படுகிறது’’ என்று சொன்னதும்... தன் மரணம் வரை ‘‘என் மகள் ஷைலு’’ என்று இயக்குனர் பாலு மகேந்திரா என்னைத் திணறடித்ததும்... நான் என் அப்பாக்களின் செட்டைக்குள் பத்திரமாக இருக்கிறேன்.

தொகுப்பு: நா.கதிர்வேலன்