முகமது அலியிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?
மகிழ்ச்சி, துயரம், கருணை, கோபம், பிரமிப்பு, வேதனை என உணர்வுகளின் கலவையாக உலகைப் புரட்டிப் போடும் பல சம்பவங்கள் தினம் தினம் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. சாம்ராஜ்ஜியங்கள் வீழ்கின்றன;
சாதனைகள் முறிகின்றன; நட்சத்திரங்கள் காணாமல் போகிறார்கள். எல்லாவற்றையும் சில மணி நேரங்களில் மறந்துவிட்டு, அடுத்த செய்தியை எதிர்நோக்கி புதிய தினத்தில் காத்திருக்கும் உலகம் இது. ‘‘எதிர்காலத்தில் யாரும் 15 நிமிடங்களுக்கு மேல் புகழோடு இருக்க முடியாது’’ என எப்போதோ கணித்துச் சொன்னார் ஆண்டி வார்ஹோல்.
 இத்தனைக்கு மத்தியிலும் ‘உலகப்புகழ்’ அரிதாக சிலருக்கு வாய்க்கிறது. உலகின் அடிமட்ட தேசத்திலிருக்கும் கடைக்கோடி மனிதனுக்கும் அறிமுகமான அப்படிப்பட்ட உலக நாயகன் முகமது அலி. குத்துச்சண்டை வீரராக மட்டுமின்றி, மகத்தான மனித நேயப் பண்பாளராக, தனது இன விடுதலைக்காக குத்துச்சண்டை மேடைக்கு வெளியேயும் பல களங்களில் மோதிய போராளியாக, தன்னம்பிக்கை விதைக்கும் பேச்சாளராக விளங்கிய அவரை ரோல் மாடலாக வழிபடுகிறவர்கள் ஏராளம். தன் வாழ்க்கையாலும் வார்த்தைகளாலும் அவர் விட்டுச் சென்றிருக்கிற பாடங்கள் ஏராளம்!
* அப்பா பெயின்டர், அம்மா வீட்டு வேலை செய்பவர். எளிய குடும்பத்தில் ஏராள கனவுகளோடு பிறந்து, திசை தெரியாமல் தவித்துக்கொண்டிருந்த கேசியஸ் க்ளே (இதுதான் முகமது அலியின் இயற்பெயர்!), 12 வயதில் தற்செயலாகத் தெரிந்துகொண்டது குத்துச்சண்டையை. க்ளேயின் சைக்கிள் திருடு போய்விட்டது. போலீஸீல் புகார் கொடுக்கப் போனபோது, ‘‘அந்த திருடன் மட்டும் கிடைச்சா, நானே அடிப்பேன்’’ என கொந்தளித்தான் சிறுவன். ‘எதையும் சொல்வதற்கு முன்னால் அதைத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்’ என ஒரு போலீஸ் அதிகாரி அவனுக்கு அடிக்கக் கற்றுக்கொடுத்தார். ஆம், அவர்தான் க்ளேக்கு முதல் குத்துச்சண்டை குரு!
* முகமது அலியின் குத்துச்சண்டை ஸ்டைல் தனித்துவமானது. மேடையில் அவர் நகர்வது ஒரு நடனம் போலவே இருக்கும். எதிராளி குத்துகளை விட்டு களைப்பாகும் வரை போக்குக் காட்டுவார். அதன்பின் சில அடிகளில் வீழ்த்துவார். அவரது பெரும்பாலான வெற்றிகள் ‘நாக் அவுட்’தான். ‘பட்டாம்பூச்சி போல பற; தேனீ போல கொட்டு’ என்பது அவரின் புகழ்மிக்க வாசகம். அவரது வெற்றி மந்திரம், ‘கண்களால் பார்க்க முடியாததை கைகளால் செய்ய முடியாது!’
* சிலருக்கு தாங்கள் செய்யும் பணி மீது மிகுந்த குற்ற உணர்வு இருக்கும். ‘அடிப்பதுதான் தொழில்’ என்றாலும், அதில் எந்தத் தயக்கமும் அவருக்கு இருந்ததில்லை. ‘‘இதுவும் ஒரு வேலை. புல் வளர்கிறது; பறவைகள் பறக்கின்றன; அலை ஓயாமல் கரையைத் தழுவுகிறது. அதுபோல நான் மனிதர்களை அடிக்கிறேன். நீங்கள் செய்வது சரியா, தவறா என்பதை உங்கள் செயலை வைத்துத் தீர்மானிக்காதீர்கள்; அதன் நோக்கத்தை வைத்து முடிவு செய்யுங்கள்’’ என்றார் அலி.
* வ 18 வயதில் ரோம் ஒலிம்பிக்ஸில் பங்கேற்றபோது அலிக்கு பால் மணம் மாறாத குழந்தை முகம் இருந்தது. ‘அடி தாங்கு வானா’ என பயந்தவர்களை ஆச்சரியப்படுத்தி தங்கப் பதக்கம் வென்றார் அலி. ‘‘இந்த உலகில் சாத்தியமில்லாத விஷயம் என எதுவுமே இல்லை. ‘முடியாது’ என்பது சிறிய மனிதர்கள் மற்றவர்கள் மீது எறியும் பெரிய வார்த்தை’’ என்று அந்த வெற்றிக்குப் பிறகு சொன்னார்.
* அமெரிக்காவுக்காக தங்கப் பதக்கம் வென்றதும் தன்னை ரோமப் பேரரசர் போலவே கற்பனை செய்துகொண்டார் அலி. ஊர் திரும்பியபோது பெரும் வரவேற்பு கொடுத்தார்கள். ஆனால், நிஜம் அவர் முகத்தில் அறைந்தது. கறுப்பினத்தவரான அவரால், தன் சொந்த ஊரான லூயிஸ்வில்லியில் வெள்ளையர்களோடு சமமாக ஒரு ஹோட்டலில் உட்கார்ந்து சாப்பிட முடியவில்லை. அமெரிக்காவுக்கே பெருமை தேடித் தந்த அவருக்கு உணவு பரிமாற மறுத்தனர் சாதாரண சர்வர்கள். கொந்தளிப்போடு எழுந்தவர், தனது ஒலிம்பிக் பதக்கத்தை ஆற்றில் தூக்கிப் போட்டார். ‘எவ்வளவு மதிப்பானதாக இருந்தாலும், எனக்கு கௌரவம் சேர்க்காத பொருள் தேவையில்லை’ என்றார்.
* ஒலிம்பிக் பதக்கம் வென்ற இரண்டே மாதங்களில் அவர் தொழில்முறை குத்துச்சண்டை வீரராக மாறினார். அதன்பின் 61 போட்டிகளில் மோதிய அவர், 56 போட்டிகளில் வென்றார். 22 வயதில் உலக சாம்பியன் பட்டம் வென்றார். ‘‘நான் மாபெரும் சாம்பியன் என்று எனக்குத் தெரியும். என்னைப் போல மகத்தான வீரன் இல்லை என இந்த உலகத்துக்குப் புரிய வைப்பேன்’’ என்றார். உலகம் சீக்கிரமே புரிந்துகொண்டது.
* கறுப்பினத்தவர் இரண்டாம்தரமாக நடத்தப்படுவதை எதிர்த்து அவர் திடீரென இஸ்லாமியர் ஆனார். ‘‘கேசியஸ் க்ளே என்பது அடிமைப் பெயர். அது வேண்டாம். இனி நான் முகமது அலி’’ என்றார். மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், மால்கம் எக்ஸ் போன்ற கறுப்பின மக்கள் தலைவர்களோடு நெருக்கமான தொடர்பில் இருந்தார். மற்ற தலைவர்களைவிட இளைஞர்களை அதிகம் ஈர்த்தவர் அலிதான். ‘‘எனது பெயர் உங்களுடையதல்ல; எனது மதம் உங்களுடையதல்ல; எனது இலக்குகள் என்னுடையவை. நானும் அமெரிக்காதான். நீங்கள் அங்கீகரிக்கவில்லை என்றாலும் பழகிக் கொள்ளுங்கள்’’ என வெள்ளை இனத்தவருக்கு அறைகூவல் விடுத்தார்.
* வியட்நாம் மீது அமெரிக்கா போர் தொடுத்திருந்த சமயம். கட்டாய ராணுவ சேவை எல்லோருக்கும் இருந்தது. முகமது அலி அதை மறுத்தார். ‘‘ஒரு ஏழை தேசத்தை எரிக்கவும் மக்களைக் கொல்லவும் 10 ஆயிரம் மைல் பயணம் செய்து செல்ல வேண்டுமா? இந்த தீமையான போர் முடிவுக்கு வர வேண்டும்.
தங்கள் நீதிக்காகவும் விடுதலைக்காகவும் சம உரிமைக்காகவும் போராடும் வியட்நாம் மக்களை அடிமைப்படுத்தும் பணிக்கு நான் போக மாட்டேன். இதற்காக நான் பல லட்சங்களை இழந்தாலும், சிறை சென்றாலும் பரவாயில்லை. நான் நம்பும் ஒரு விஷயத்தில் உறுதியாக இருப்பேன்’’ என்றார் அவர். இதற்காக அவரது உலக சாம்பியன் பட்டம் பறிக்கப்பட்டு, மூன்று ஆண்டுகள் சிறையில் இருந்தார். பிறகு வெளியில் வந்து மீண்டும் சாம்பியன் ஆனார்.
* அலி தனது 32வது போட்டியில் முதல் தோல்வியைச்சந்தித்தார். அவரை வீழ்த்தியவர் ஜோ ஃபிரேஸர். ஆனால் ஃபிரேஸர் மீது அலி வெறுப்பை உமிழவில்லை. ‘‘என்னோடு இதுவரை மோதிய எல்லோரும் தங்களின் முழுத் திறமையையும் வெளிக்கொண்டு வந்து தாக்கினர். ஆனால் ஃபிரேஸர் என்னுடைய முழுத் திறமையையும் நான் வெளிப்படுத்தக் காரணமாக இருந்தார். கடவுள் அவரை ஆசீர்வதிக்கட்டும்’’ என்றார் அலி. பிறகு வேறொரு போட்டியில் ஃபிரேஸரை அவர் வெற்றி கொண்டார்.
அலி தனக்கு நான்கு தோல்விகளைத் தந்தவர்களுடனும் மீண்டும் மோதி வெற்றி கொண்டார். ‘‘நான் தோல்வி பற்றி எப்போதும் சிந்தித்ததில்லை. வாழ்வில் தோல்வியும் ஒரு அங்கம். இப்போது நிகழ்ந்துவிட்டது. என்னை நம்பும் மக்களுக்காக நான் இதிலிருந்து மீண்டு வந்து ஜெயிக்க வேண்டும். தோல்வியை மனதால் ஏற்க முடிகிற ஒருவன், மீண்டும் ஜெயிக்கத் தேவையான சக்தியையும் அங்கிருந்து பெறுவான்’’ என்றார் அலி.
*‘வாழ்க்கை ஒரு சூதாட்டம். எல்லாவற்றிலும் ரிஸ்க் இருக்கிறது. விமான விபத்தில் மக்கள் சாகிறார்கள். கார் விபத்தில் கை, கால்களை இழக்கிறார்கள். எங்களுக்கும் அப்படித்தான். சிலர் சாகலாம்; சிலருக்கு காயங்கள் நேரலாம்; நமக்கு இப்படி நேராது என நம்ப வேண்டும். சில சமயங்களில் வெறும் குருட்டு நம்பிக்கை உங்களை வெகுதூரம் வழிநடத்திச் செல்லும்...’’ - தனது குத்துச்சண்டை வாழ்க்கை பற்றி அலி சொன்னது இது!
* ‘‘நான் என்ன ஆக வேண்டும் என மற்றவர்களைத் தீர்மானிக்க விடவில்லை; எனது பாதையை நானே தீர்மானித்தேன். குத்துச்சண்டைக்கு வராமல், குப்பை பொறுக்குபவனாக ஆகியிருந்தால்கூட, உலகிலேயே மகத்தான குப்பை பொறுக்குபவனாக நான்தான் இருந்திருப்பேன்.
மற்றவர்களைவிட வேகமாகவும் அதிகமாகவும் குப்பைகளை அள்ளியிருப்பேன். நான் எதைச் செய்திருந்தாலும், அதில் மகத்தான சாதனையாளனாக இருந்திருப்பேன். நூறு சதவீத உழைப்பைக் கொட்டி எதிலும் முதலிடத்துக்கு வரப் பாருங்கள்; இரண்டாவதாக இருப்பதில் திருப்தி காணாதீர்கள்!’’
- அலியின் இந்த அட்வைஸ் எந்தக் காலத்துக்கும் எவருக்கும் பொருந்தும்!
குப்பை பொறுக்குபவனாக ஆகியிருந்தால்கூட, உலகிலேயே மகத்தான குப்பை பொறுக்குபவனாக நான்தான் இருந்திருப்பேன்.
- அகஸ்டஸ்
|