இறைவி - விமர்சனம்



ஆத்திரம், அவசரம், திமிரெனத் தன் வலிமையைக் காட்டும் ஈகோ... இவற்றால் ஆண்கள் செய்யும் தவறுகள் எப்படி அவர்களைச் சார்ந்திருக்கும் பெண்களை பாதிக்கிறது எனும் குறுக்குவெட்டுத் தோற்றமே ‘இறைவி’!பாரம்பரிய சிற்பியான ராதாரவியின் மகன்கள் எஸ்.ஜே.சூர்யாவும் பாபி சிம்ஹாவும். இவர்கள் குடும்பத்துக்கு வழிவழியாக கணக்கு வழக்குகளைப் பார்க்கும் குடும்ப வாரிசு விஜய்சேதுபதி. சினிமா இயக்குநரான எஸ்.ஜே.சூர்யா, தனது படம் வெளியாகாத சோகத்தில் குடிகாரராகித் திரிகிறார்.

பிரச்னைக்குக் காரணமான தயாரிப்பாளரைப் போட்டுத் தள்ளிவிட்டு, முதலாளிக்காக ஜெயிலுக்குப் போகிறார் விஜய்சேதுபதி. இதற்கிடையே பாபி சிம்ஹாவுக்கு விஜய்சேதுபதியின் மனைவி அஞ்சலி மீது விருப்பம். இது தெரியவரும் கட்டத்தில் கொந்தளித்து எழும் சேதுபதியின் கோபமும் எஸ்.ஜே.சூர்யாவின் அவசரமும் பாபி சிம்ஹாவின் குரூரமும்தான் க்ளைமேக்ஸ்!

கணவனை இழந்து உடல் தேவைக்காக விஜய்சேதுபதியுடன் பழகும் பூஜா தேவரியா... ‘‘நானும் அவனை லவ் பண்ணினேன். ஆனா, சொல்லலை. சொல்லிடக் கூடாதுன்னுதான் ஊரை விட்டுப் போனேன்’’ என்று கணவனிடமே வெளிப்படையாகச் சொல்லும் அஞ்சலி என கலாசார அதிர்ச்சிகள் பல. அந்தத் துணிச்சலுக்காகவே இயக்குநர் கார்த்திக் சுப்புராஜை தோள் தட்டலாம்.

நடிப்பு... அதில் ஆளாளுக்குப் போட்டி போடுகிறார்கள். வேண்டா வெறுப்பாக திருமணம் செய்து, விருப்பமில்லை என முதலிரவிலேயே அதைப் போட்டுடைக்கிறார் விஜய்சேதுபதி. அவரே சிறைக்கம்பிகளுக்கு அந்தப் பக்கம் நின்று, ‘‘பொன்னியையும் புள்ளையையும் பாக்கணும் போலிருக்குண்ணே’’ எனத் தவிக்கையில் இயல்பு பிரவாகமெடுக்கிறது!

  எஸ்.ஜே.சூர்யா அதற்கும் மேலே... பர்ஃபார்மென்ஸில் அசுரத்தனம் காட்டி பரவசப்படுத்துகிறார். படைப்பாளியின் கர்வம், தோற்றவனின் இயலாமை, அண்ணனுக்கான பொறுப்பு, மனைவியிடம் குற்றவுணர்ச்சி... தாடிக்குள் கொஞ்சமாய்த் தெரியும் அந்த ஒல்லி முகத்தில் இவ்வளவு எக்ஸ்பிரஷனா! மனைவிக்கு இரண்டாம் திருமண ஏற்பாடு என்றதும் நொறுங்கிப் போகும் அந்தக் கண்களில் மின்னி மறைகிறது நேஷனல் அவார்டு!

சிலை கடத்தல் பகுதிதான் பாபி சிம்ஹா ஏரியா. பெண்ணை இறைவியாக, மதிப்பு மிகுந்தவளாகப் பார்க்கும் அவருக்கு, கணவனால் துன்பப்படும் ஒரு பெண் மீது காதல் வருவது பொருந்தச் சொல்லப்பட்டிருக்கிறது. அதில் அப்படியே பாபி கச்சிதம். சித்தப்பாவாக சீனு மோகன் சிறப்பு.
அப்பா ராதாரவியால் அல்லல்பட்டு கோமாவில் கிடக்கும் வடிவுக்கரசி, எஸ்.ஜே.சூர்யாவை மணந்து தவிக்கும் கமாலினி முகர்ஜி, விஜய் சேதுபதியால் அவதிப்படும் அஞ்சலி... இவர்கள்தான் இறைவிகள்.

‘நான் வெறும் கவர்ச்சிப் பொருள் அல்ல’ என அஞ்சலி உரக்கச் சொல்லும் அழுத்தமான பதிவு. இரு வினாடி மௌனத்தில் கூட அப்படி ஒரு அர்த்தப்பொதிவு! இந்தப் போட்டிக்கிடையே அத்தியாவசியமாய்த் தேவைப்பட்டதைத் தந்திருக்கிறார் கமாலினி!

நல்ல மெசேஜ்தான்... நறுவிசான மேக்கிங்தான்... ஆனால் அதை நறுக்கென்று தந்திருக்க வேண்டாமா? இடைவேளை வருவதற்குள் படமே முடிந்துவிட்டது போலொரு உணர்வு வரும்படியா பொறுமையை சோதிக்க வேண்டும்? எழுத்தாளர் சுஜாதாவின் ‘ஜன்னல் மலர்கள்’ கதையின் லேசான இன்ஸ்பிரேஷன் என்பது டைட்டில் கிரெடிட். ஆனால், ஆண்களையே பெண்கள் நம்பியிருப்பதும் அவர்களால் பாதிக்கப்படுவதும் சற்றே சீரியல் எஃபெக்ட்!

சிவகுமார் விஜயனின் கேமரா பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறது. சந்தோஷ் நாராயணனுக்கு என்னாச்சு? ‘மனிதி’ தவிர்த்து, மற்ற பாடல்கள் அவரிடமே ஏற்கனவே கேட்ட ரகம். மனைவிகளின் மனசாட்சியே இந்த ‘இறைவி’!

  - குங்குமம் விமர்சனக் குழு