குங்குமம் ஜங்ஷன்



புத்தகம் அறிமுகம்

கைம்மண் அளவுநாஞ்சில் நாடன்
(சூரியன் பதிப்பகம், 229, கச்சேரி ரோடு, மயிலாப்பூர், சென்னை-4.
விலை: ரூ.200/- தொடர்புக்கு: 72990 27361.)

‘குங்குமம்’ இதழில் நாஞ்சில் நாடன் எழுதிய தொடர் கட்டுரைகளின் தொகுப்பு இது. தமிழ் வாசகர்களைப் புதிய பிரதேசங்களுக்கு இட்டுச் செல்ல ஆசைப்படுபவர்களில் நாஞ்சிலும் ஒருவர். மனிதநேயம் தோய்ந்த நிலையில், சமூகத்தின் பல அடுக்குகளை அவர் கூர்ந்து அவதானித்து எழுதிய கட்டுரைகளைப் படித்துப் பார்ப்பது, நிச்சயம் அறிவுத் தேடல்தான்.

தமிழ்ச் சூழலின் பல தன்மைகளை, முரண்பாடுகளை, அக்கறையின்மையைப் பார்த்து நாஞ்சில் நாடன் உள்ளத்தில் கேள்விகள், வேதனைகள் இருக்கின்றன. அதற்கு அவர் கண்ட நிவாரணங்களும் இதில் இருக்கின்றன. இவை நம்மை மறுவிசாரணை செய்யத் தூண்டுகின்றன. நாஞ்சில் நாடனிடம் பொங்கி வழியும் அன்புக்கு அளவுகோல் கிடையாது!

ஹிட் பாட்டு

‘எட்டுத்திசை முட்டும் எனை பகலினில் கொட்டும்பனி மட்டும் துணை இரவினில்’ - சமீபத்தில் வெளியிடப்பட்ட ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் ‘ராசாளி’ பாடலில் சர்ச்சையைக் கிளப்பிய வரி இதுதான். ‘முத்தைத் தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண’ எனும் ‘திருப்புகழ்’ பாடலின் மெட்டு அப்படியே இதில் இருக்கிறது என்று கிளம்பிவிட்டார்கள் நெட்டிசன்கள். ‘ஏ.ஆர்.ரஹ்மான் அருணகிரிநாதரைக் காப்பியடித்துவிட்டார்’ என காமெடியான கோஷங்கள் வேறு.

நுணுக்கமாகப் பார்த்தால் இரண்டு மெட்டுக்கும் வித்தியாசம் உண்டு. ‘எனை - துணை’ என ரஹ்மான் பாடலில் எக்ஸ்ட்ரா மீட்டரும் உண்டு. ஆனாலும், ‘‘கதைக்காக திருப்புகழ் உள்ளிட்ட கிளாஸிக் மெட்டுகளை இதில் எடுத்தாண்டிருக்கிறேன். படம் பார்க்கும்போது அது புரியும்!’’ என சர்ச்சைகளுக்கு பதில் சொல்லியிருக்கிறார் இசைப்புயல். (ரஹ்மான் ஏற்கெனவே இப்படிச் செய்ததுண்டு. உதாரணம்: ‘மார்கழிப்பூவே’ பாடலில் வரும் சுப்ரபாதம் டியூன்!)

டெக் டிக்!
‘அந்தக் கடலே வத்திப் போனா...’ என்ற ரேஞ்சில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜுகர்பெர்க்கின் பாஸ்வேர்டையே திருடிவிட்டார்கள் ஹேக்கர்கள். நல்லவேளையாக அவரின் முகநூல் கணக்கு தப்பித்தது. ஆனால், வெகுநாளாகப் பயன்படுத்தாமல் வைத்திருந்த ட்விட்டர், இன்ஸ்டாகிராம், மற்றும் பின்ட்ரஸ்ட் கணக்குகள் மொத்தமும் அந்த ஒரே பாஸ்வேர்டின் மூலம் ஹேக் செய்யப்பட்டுவிட்டன.

‘‘பாஸ்வேர்டுகளை கஷ்டமானதாகத் தேர்ந்தெடுக்காததும் அடிக்கடி அதை மாற்றாததுமே இந்த ஹேக்கிங்குக்குக் காரணம்!’’ என மார்க்கின் அசட்(டு)டைத்தனத்தைக் கலாய்க்கின்றன டெக் வட்டாரங்கள். அப்படி இந்த மூன்று கணக்குக்கும் மார்க் என்னதான் எளிய பாஸ்வேர்டு கொடுத்திருந்தார் என்கிறீர்களா? அது, ‘dadada’!

நிகழ்ச்சி மகிழ்ச்சி!

பி.எஃப்.சி.ஐ என்ற விலங்குகள் நல அமைப்பின் சார்பாக, விஷாலுக்கு ‘Face of Animal Activism -2015’ எனும் விருது வழங்கப்பட்டிருக்கிறது. கூடவே ‘Best Celebrity Campaigner-2015’ என்ற விருது வரலட்சுமிக்கும் வழங்கப்பட்டது. விழாவின் ஹைலைட்டே விஷாலும், வரலட்சுமியும் ஜோடியாக வந்திருந்ததுதான். ‘‘நடிகர் சங்க கட்டிட வேலைகள்தான் ஆரம்பிச்சாச்சே, கல்யாண சாப்பாடு எப்போ?’’ என விஷாலிடம் கேட்டால், வழக்கம் போல் புன்சிரிப்பே பதில்!

அண்ணே, ஒரு விளம்பரம்...

பொதுவாக பர்ஃப்யூம் விளம்பரம் என்றால் பல குடும்பப் பெண்கள் கவர்ச்சிப் பெண்களாகி, ஓர் ஆணை விரட்டியபடி ஓடி வருவார்கள். ஆனால், ஹ்ரித்திக் ரோஷன் நடித்திருக்கும் ‘He Respect’ எனும் பர்ஃப்யூம் விளம்பரம் வேற மாதிரி. ‘யார் உண்மையான ஆண்மகன்? 8 பேக் பாடி பில்டரோ, அதிவேக ஸ்போர்ட்ஸ் கார் ஓனரோ, வெளிநாட்டு நாயோடு வாக்கிங் வருபவனோ அல்ல...

பெண்களுக்கு மரியாதை கொடுப்பவன்தான்’ என மெசேஜ் சொல்கிறது இது. ஒரு பெண்ணை அவளுக்குத் தெரியாமல் ஒருவன் செல் படம் எடுக்க, ஹ்ரித்திக் அந்த செல்லைத் தொட்டதும் அது பல நூறு துண்டுகளாக சிதறி ஓடுகிறது. முதன்முறையாக பெண்களை காமப் பிசாசாய் காட்டாத பர்ஃப்யூம் Ad!

நாஸ்டால்ஜியா