நெருக்கம்



மேடைப் பேச்சாளரான இடியோசை இன்பசாகரன், ஒரு லோக்கல் வி.ஐ.பி. சரியான விளம்பரப் பிரியர். அவரைப் பற்றி செய்திகள் பத்திரிகை, டி.வி., ஃபேஸ்புக் எல்லாவற்றிலும் வந்துகொண்டே இருக்க வேண்டும்.அதற்காக யார் கேட்டாலும் விதவிதமான போஸ் கொடுத்து ஒத்துழைப்பார். மேடையை விட்டு இறங்கினாலே ரசிகர்களோடு செல்ஃபி டைம்தான்.

அன்று காலை வெளியூர் கூட்டத்திற்கு இன்பசாகரன் கிளம்பிக்கொண்டிருக்க, தடதடவென்று போலீஸ் அவரை ரவுண்ட் அப் செய்தது. ‘‘சார்! உளுந்தூர்பேட்டை வங்கிக் கொள்ளை தொடர்பா உங்களை விசாரிக்க வேண்டியிருக்கு... ஸ்டேஷனுக்குப் போகலாமா!’’ என்றார் இன்ஸ்பெக்டர்.‘‘என்ன சார்... வங்கிக் கொள்ளைக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்..?’’ என்றார் இன்பசாகரன் சிரித்துக்கொண்டே!

‘‘அதில் முக்கிய குற்றவாளி சேலம் ரங்காவை அரெஸ்ட் பண்ணிட்டோம். ஆனா, அவன் தன்னுடைய குருவே நீங்கதான்னு சொல்றான். அவன் தங்கியிருந்த ரூம் முழுக்க நீங்க ரங்காவின் தோள்மேல் கை போட்டு, கட்டிப் பிடிச்சு, நெருக்கமா நிக்கிற மாதிரி விதவிதமா போட்டோக்கள் இருக்கு..!’’‘‘சேலம் ரங்கா யார்னே எனக்குத் தெரியாது சார்...’’

‘‘எதுவா இருந்தாலும் ஸ்டேஷனுக்கு வந்து சொல்லுங்க...!’’‘முன்பின் தெரியாதவர்களோடு செல்ஃபி எடுத்துக்கொண்டால் இப்படி எல்லாம் கூட வருமா?’ - அதிர்ந்தபடி ஜீப்பில் ஏறினார் இன்பசாகரன். l

துடுப்பதி ரகுநாதன்