ஒலிம்பிக் வீரர் தொழிற்சாலை!



சீனாவின் சித்திரவதைக் கூடங்கள்

ஒலிம்பிக்ஸ்... உலக நாடுகளின் விளையாட்டு கௌரவம். இதோ துவங்கிவிட்டது ரியோவில். ‘ஒலிம்பிக்ஸில் ஒரு தங்கப் பதக்கம் வாங்கிவிட முடியாதா’ என ஏங்கிக் கிடக்கும் நாடுகள் பல. ஆனால் வருடா வருடம் சீனா மட்டும் என்னவோ நகைக்கடைக்கு ஷாப்பிங் வந்த மாதிரி வரிசையாய் தங்கம் வாங்கிக் குவிக்கும். இந்த வருடமும் அது தப்பவில்லை. சீனாவின் மகத்தான இந்த சாதனைக்குப் பின்னே இருக்கும் மனம் வலிக்கும் நிஜம்தான் இங்கே படங்களாக நீங்கள் பார்ப்பது!

உடல்வாகை அடிப்படையாக வைத்து சிறு வயதிலேயே குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து கொத்தடிமைகள் போல நடத்தி, காட்டுமிராண்டித்தனமாக பயிற்சி கொடுத்து ஒலிம்பிக்ஸில் ஜிம்னாஸ்டிக்ஸ் உள்ளிட்ட போட்டிகளுக்காகத் தயார்படுத்தும் தொழிற்சாலை இது. இது போல் சீனாவில் 2000 பயிற்சிப் பள்ளிகள் உள்ளனவாம். இங்கு நடக்கும் கொடுமைகளை எல்லாம் உள்ளடக்கி வந்திருக்கும் ‘Little   Big Dreams’ என்ற ஆவணப்படம் உலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது.

விலங்குகளையே பரிவாக நடத்தும் மனநிலை பெருகியிருக்கும் இந்தக் காலத்தில், பச்சிளம் பிள்ளைகளை இவர்கள் இரண்டாக மடிப்பதும் கதறக் கதற முதுகெலும்பை வளைப்பதும்... அப்பப்பா... இந்த வீடியோவைப் பார்க்கவே மனம் பதறுகிறது. இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு பள்ளிப் படிப்பு கூட வழங்கப்படுவதில்லை. பெற்றோரையும் அருகில் இருக்க விடுவதில்லை. 3 முதல் 9 வயதுடைய குழந்தைகள் சுமார் 150 பேர் ஒவ்வொரு பள்ளியிலும் இருப்பார்கள். தினம் 8 மணி நேரம் கட்டாயப் பயிற்சி; இல்லை... இல்லை... சித்திரவதை. எல்லாம் எதற்காக? ‘தங்கம் வென்றது சீனா’ எனும் தலைப்புச் செய்தி கௌரவத்துக்காக! இதனை எதிர்த்து மனிதநேய அமைப்புகள் எல்லாம் கொடி பிடிக்க, ‘இங்கே தவறாக ஒன்றும் நடக்கவில்லையே’ எனக் கூலாக இருக்கிறது சீனா.

‘‘இதுவும் ஒருவகை குழந்தைத் தொழிலாளர் முறைதான். உலக நாடுகள் எல்லாம் ஒன்றிணைந்தாவது தடுக்க வேண்டிய மாபெரும் குற்றம் இது!’’ என வெகுண்டு பேசுகிறார் சென்னையைச் சேர்ந்த குழந்தை இலக்கிய எழுத்தாளரும் மனநல ஆலோசகருமான காந்தலட்சுமி. ‘‘படிப்போ, பெற்றோரின் அன்போ கிடைக்கப் பெறாமல் வளர்க்கப்படும் இப்படிப்பட்ட குழந்தைகள் சமூகத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற அடிப்படை அறிவைக்கூட பெறுவதில்லை.

அதைப் பற்றி அந்த நாட்டுக்கோ பயிற்சியாளர்களுக்கோ கவலையும் இல்லை. இந்தக் குழந்தைகளுக்கு ஓட, தாவ, நீந்த விருப்பம் உள்ளதா என்று கேட்பதில்லை. அந்தந்த பிரிவிற்கு ஏற்ற உடல்வாகு அமைந்திருந்தால் அந்தக் குழந்தைகளை வலுக்கட்டாயமாகத் தேர்ந்தெடுத்து  இப்படித் தயார்படுத்துகிறார்கள். ஒலிம்பிக்ஸில் தங்கப் பதக்கம் பெற்றால் மட்டுமே விளையாட்டு வீரர்கள் சீனாவில் கொண்டாடப்படுகிறார்கள். சலுகைகள், வேலைகள் தரப்படுகின்றன. போட்டியில் பங்கெடுக்கும் அனைவருக்கும் தங்கப் பதக்கம் கிடைக்க சாத்தியமில்லை. தோற்றவர்களையோ, வெள்ளி, வெண்கலப் பதக்கம் பெற்றவர்களையோ யாரும் ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்களாம்.

கல்வித் தகுதி இல்லாமல், வேலை கிடைக்காமல், எதையோ செய்து காலம் தள்ள வேண்டிய நிலை. சீனாவில் விளையாட்டு அரங்கிலிருந்து  ஓய்வு பெற்றவர்களில் எண்பது சதவீதத்தினர் வேலை கிடைக்காமல் ஏழ்மையாலும், அதீத பயிற்சியின் விளைவாக ஏற்பட்ட உடல்ரீதியான கோளாறுகளாலும் கஷ்டப்படுகின்றனர். இந்தக் கொடுமைகளை எதிர்த்து ஒலிம்பிக்ஸ் கமிட்டிதான் ஒழுங்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்!’’ என வேதனை பொங்குகிறார் காந்தலட்சுமி.

- பிஸ்மி பரிணாமன்