சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சூரியனும் கேதுவும் தரும் யோகங்கள்



கிரகங்கள் தரும் யோகங்கள்

ஜோதிடரத்னா : கே.பி.வித்யாதரன்

ஓவியம்: மணியம் செல்வன்


ஆத்மகாரகனான சூரியனோடு ஞானகாரகனான கேது சேரும்போது முகத்தில் சாந்தம் குடிகொள்ளும். இவர்கள் வயது ஏற ஏற, எதிலுமே பிடிப்பில்லாமல் இருப்பார்கள். மூத்தோர்கள், மூதாதையர்கள், ஞானிகள் போன்றோரிடத்தில் மிகமிகப் பணிவோடு நடந்து கொள்வார்கள். தன் பையில் பத்து பைசா இல்லாவிட்டாலும், பசித்து வந்தோருக்கு அமுது கொடுத்து அனுப்பி வைப்பார்கள்.

‘ஒரு அளவிற்கு மேல் நம் கையில் எதுவுமில்லை’ என்று உணர வைக்கும் கிரகமே கேதுவாகும். இதோடு சூரியன் சேர்ந்தால் வேகமும் விவேகமும் தாண்டி ஞானமும் கலக்கும். ‘இந்த வேலையை மனசாட்சிக்கு விரோதமில்லாம செய்தால் போதும். ஆண்டவனா பார்த்து என்ன செய்யறாரோ செய்யட்டும்’ என்று கேது இவர்களைப் பக்குவப்படுத்துவார். இவர்கள் காலத்தில் கவனம் வைக்க வேண்டும்.

இல்லையெனில் எதையுமே தள்ளிப் போட்டு தள்ளிப் போட்டு தோல்வியை அடையும் அபாயமும் உண்டு. பிரச்னை என்று வந்துவிட்டால் சமரசமாக பேசித் தீர்த்துக் கொள்வதையே இவர்கள் பெரும்பாலும் விரும்புவார்கள். ‘பொறுமையாக இருந்தால் பெருங்கடலும் வசமாகும்’ என்று அனுபவத்தில் இவ்விரு கிரகச் சேர்க்கையும் உணரச் செய்யும். வைராக்கியமும் தவமும்தான் வெற்றியை வசமாக்கும் என்பதை திடசித்தமாக இவர்கள் உணர்வார்கள்.

ஜீன்ஸ் போட்ட சாமியாரும் இவர்கள்தான். மாளிகையில் வாழ்ந்தாலும் மடத்தில் இருந்தாலும் ஒரேமனதோடு இருப்பார்கள். ஆமை மாதிரி அடங்குவதும், பாம்பாய் சீறுவதும் இவர்களிடத்தில் உண்டு. எரிமலை போன்று உள்ளுக்குள் இருப்பார்கள். ஆனால், வெளிப்பார்வையில் சாதாரணமாகத் தெரிவார்கள். தன் முறை வரும் வரை காத்திருந்து காய் நகர்த்துவார்கள். 

இதெல்லாம் இந்த கிரக சேர்க்கையின் பொதுவான வெளிப்பாடுகள். சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இந்த சேர்க்கை எந்தெந்த இடங்களில் இருந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என இனி பார்க்கலாம்...  லக்னத்திலேயே - அதாவது சிம்மத்திலேயே லக்னாதிபதியான சூரியனோடு ஞானகாரகனான கேது சேரும்போது தீவிரமாக ஆன்மிகத்தில் ஈடுபாடு உடையவர்களாக இருப்பார்கள். இவர்கள் பிறக்கும்போது உடல்நிலையில் ஏதேனும் பாதிப்பு இருக்கும்.

குறை மாதத்தில் பிறந்தவர்களாகக் கூட இருப்பார்கள். ‘பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்பதை இவர்கள் வாழ்வின் மூலம் உணரலாம். ‘என்னவோ வாழ்க்கை போகுது. ஒண்ணும் புரியலை’ என்கிற மனோபாவத்திலேயே இருப்பார்கள். வாழ்க்கையைக் குறித்து வியப்பார்கள். அதேசமயம், தன் கையில் எதுவும் இல்லை என்கிற நிலையாமையையும் உணர்ந்திருப்பார்கள். இவர்கள் கையில் பணம் தங்காது. எனவே, சேமிப்பு பற்றிய கவனமும் வேண்டும்.

இரண்டாம் இடமான கன்னியில் கேதுவோடு சூரியன் அமர்ந்திருப்பதால் புராணப் பிரசங்கிகளாக வரும் வாய்ப்புகள் உண்டு. ஆரம்பக் கல்வியில் சறுக்கி உயர்கல்வியில் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். பல்வலி, கண் வலி, காது வலி என மாறி மாறி வந்து நீங்கியபடி இருக்கும். வேதம், மந்திரம் போன்றவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருப்பார்கள். நிறைய ஆன்மிகப் பாடல்களைத் தொகுத்து கொண்டு வருவார்கள். இவர்கள் யாரையுமே கடுஞ்சொல் கொண்டு திட்டக் கூடாது. கோபம் இருக்கும் இடத்தில்தான் குணமிருக்கும் என்பதற்கும் இவர்கள்தான் உதாரணம்.

மூன்றாம் இடமான துலாம் ராசியில் இவ்விரு கிரகங்களும் அமர்ந்தால் சிறிய வயதிலேயே சித்தர்கள், கோயில்கள், மகான்கள் என்று தேடலோடு இருப்பார்கள். இளைய சகோதர, சகோதரிகளிடம் இவர்கள் எதையும் அதிகம் எதிர்பார்க்கக் கூடாது. தன் முயற்சியைத் தவிர தெய்வத்தின் அருள் நிச்சயம் வேண்டுமென்று நினைப்பார்கள். ஒரு செயலை செய்வதற்கு முன் அதற்கான முயற்சிகளை மிகச் சிறிய அளவில் செய்து பார்ப்பார்கள்.

வீர பராக்கிரம காரியங்களில் இறங்குவார்கள். எந்த விஷயத்தைப்பற்றிப் பேசினாலும் அதைக் குறித்த விவரங்களை அறிந்து வைத்து எல்லோரையும் ஆச்சரியப்படுத்துவார்கள். தாய்மொழியைக் காட்டிலும் பிற மொழியில் பண்டிதர்களாக விளங்குவார்கள். நான்காம் இடமான விருச்சிகம் செவ்வாயின் வீடு. இங்கு சூரியனும் கேதுவும் அமைவதால் தாயாருக்கு அவ்வப்போது உடல்நிலையில் ஏதேனும் பாதிப்பு ஏற்படும். வாகனங்களைக் கையாளும்போது வேகத்தை குறைத்துச் செல்ல வேண்டும். எந்த வேலையில் இருந்தாலும் கலைத் துறையில் ஈடுபட்டு மன நிறைவு பெறுவர்.

ஏதேனும் வாத்தியங்களை வாசிப்பார்கள். தன்னை விட வயதில் முதிர்ந்தவர்களையே நண்பர்களாகப் பெற்றிருப்பார்கள். நிறைய வாசனைத் திரவியங்களை உபயோகப்படுத்துவார்கள். விவாதம் செய்வது என்பது இவர்களுக்கு சர்க்கரைப் பொங்கல் போல இனிக்கும். சுகமான ஆடம்பரமான வாழ்க்கையைக் காட்டிலும் நிம்மதியாக இருப்பதையே குறிக்கோளாகக் கொண்டிருப்பர். ஐந்தாம் இடமான தனுசு ராசியில் சூரியனும், கேதுவும் சேர்க்கை பெற்றிருந்தால் காலதாமதமாகவே குழந்தை பாக்கியம் கிட்டும். சிலருக்கு குறைப் பிரசவத்தில் குழந்தை பிறக்கும் வாய்ப்புகள் உண்டு.

பூர்வீக சொத்து இவர்களுக்குக் கிட்டாது. அப்படி கிடைப்பதும் நல்லதல்ல. இவர்களில் சிலர் அதிகாரமுள்ள பதவியில் அமருவார்கள். படித்து பட்டம் பெற்று வேலையில் அமர்ந்த பின்னரும் கூட தனக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களை மறக்க மாட்டார்கள். முற்பிறவி பற்றிய எண்ணங்கள், அது குறித்த நம்பிக்கைகள் இவர்களுக்கு அதிகமாக இருக்கும். மூதாதையர்கள் செய்ய நினைத்த காரியங்களை இவர்கள் செய்து சாதிப்பார்கள்.

ஆறாம் இடமான மகர ராசியில் சூரியனும், கேதுவும் இணைந்து அமர்வது மிகமிக நல்லது. அரை மணி நேரப் பேச்சில் பகைவர்களை நண்பர்களாக்கிக் கொள்வார்கள். உடலை திடகாத்திரமாக வைத்துக் கொள்வார்கள். கடன் என்றாலே காத தூரம் ஓடுபவர்களாக இருப்பார்கள். மத்திம வயது வரையில் வெளிநாட்டில் இருந்து விட்டு வருவார்கள். தொழிலாளியாக இருந்து முதலாளியாக உயர்வார்கள்.

கும்பமான ஏழாமிடம் வாழ்க்கைத்துணையைக் குறிப்பதால் இவ்விரு கிரகங்கள் அமர்ந்தால் இவரைவிட வாழ்க்கைத் துணைவர் எல்லாவிதத்திலும் உயர்ந்தவராக இருப்பார். இதனால் கணவன் - மனைவிக்குள் ஈகோ பிரச்னை வந்துபோகும். திருமணத்திற்கும் நிச்சயதார்த்தத்திற்கும் இடைவெளி கொடுக்கக் கூடாது. ஆண்களாக இருந்தால் பெண்களிடம் வீண்விவாதம் வைத்துக்கொள்ளக் கூடாது. இந்த அமைப்பில் உள்ளோர் முடிந்த வரை விட்டுக்கொடுத்துப் போவது நல்லது.

இல்லையெனில் இல்லற வாழ்க்கை துறவறத்தில் கொண்டுபோய் விட்டுவிடும்.  வாழ்க்கைத்துணை மிகுந்த ஆளுமையுள்ள நபராக இருப்பார். இந்த அமைப்பில் ஆண்கள் பிறந்தால், மனைவிக்குத் தெரியாமல் எந்தவித பணப் பரிமாற்றமும் செய்யக் கூடாது. மீன ராசியான எட்டில் சூரியனும் கேதுவும் மறைந்தால் தத்துவஞானியாக வருவார்கள். இவர்கள் எந்தப் பொருளாக இருந்தாலும் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

ஆணாக இருப்பவர்கள், உடன்பிறந்தவர்களுக்கு திருமணம் முடிந்த பின்னர் தனிக் குடித்தனம் வைத்து விட வேண்டும். கனவைக் குறித்த ஆராய்ச்சிகளில் அதிகமாக ஈடுபடுவார்கள். அதுகுறித்து நிறைய புத்தகங்களை வாசித்தபடி இருப்பார்கள். யாருக்கேனும் பணம் கொடுத்தால் கவனமாக அதைத் திரும்ப வாங்க வேண்டும். ஒன்பதாம் இடமான மேஷத்தில் சூரியன் உச்சமாகிறார். கூடவே கேதுவும் அமர்வதால் எங்கேனும் ஆசிரமம், தர்ம ஸ்தாபனங்கள் என்று தேடித் தேடி வேலை பார்ப்பார்கள்.

தன் வாழ்க்கையில் ஏற்பட்ட சூழலால் சகல சொத்துக்களையும் இழந்தாலும், மீண்டும் பெற்றுவிடுவார்கள். இவர்களால் தந்தையாருக்கு ஏற்றம் உண்டாகும். மற்றவர்கள் செய்யும் தவறு மட்டுமே இவர்கள் கண்ணுக்குத் தெரிவதால் சுற்றிலும் எதிரிகளே மிகுந்திருப்பார்கள். முதுகுத் தண்டுவடத்தில் சிறிய வலி வந்தால்கூட உடனே பார்த்துவிடுவது நல்லது. இவர்களின் வாழ்வு துரியோதனனின் கைகளில் கர்ணனைப்போல இருக்கும். எனவே, நட்பில் கவனம் வேண்டும். 

பத்தாம் இடமான ரிஷபத்தில் இவ்விரு கிரகங்கள் அமர்ந்திருப்பதால் மருத்துவத்துறையில் - குறிப்பாக இதய நோய் நிபுணராக விளங்குவார்கள். மேலும், சித்தா, ஆயுர்வேதத் துறையிலும் ஈடுபாட்டோடு இருப்பார்கள். கெமிக்கல் துறையில் பெரியளவில் சாதிப்பார்கள். அரசு மருத்துவமனையில் பணியாற்றினால் புகழும், செல்வமும் பெருகும். தர்ம காரியங்களில் ஈடுபாடும், நிறைந்த சமயோசித புத்தியும் கொண்டிருப்பார்கள்.

அடிப்படை வசதிகளே இல்லாமலிருந்தால் கூட ஒரு பெருங்கூட்டத்திற்கு உணவு அளிக்கும் விதத்தில் முன்னேறுவார்கள். எல்லோரிடமும் அன்பாக நடந்து கொள்வார்கள். பணத்தை விட மனத்திற்குத்தான் முதல் மரியாதை என்கிற எண்ணம் உடையவர்களாக இருப்பார்கள். பெரும் லாபம் சம்பாதிப்பதை எப்போதும் விரும்ப மாட்டார்கள். பதினோராம் இடமான மிதுனத்தில் சூரியனும் கேதுவும் அமர்ந்தால் மூத்த சகோதரரோடு இணக்கமாக இருக்க முடியாது தவிப்பார்கள்.  ஆசை பேராசையாக மாறாமல் இருந்தால் நல்லது.

இல்லையெனில் குறுக்கு வழியில் சென்று பணம் சம்பாதிக்க முயற்சிப்பார்கள். சேமிப்புகளை அவ்வப்போது எடுத்து செலவழித்து விடுவார்கள். பன்னிரண்டாம் இடமான கடகத்தில் சூரியனும் கேதுவும் இணைந்தால், தீவிரமான பூஜை, மந்திரம், மாந்திரீகத்தில் ஈடுபாடு என்றிருப்பார்கள். இரவுத் தூக்கமே இருக்காது. இதனால் உடல்நிலை மத்திம வயதில் கெடும் வாய்ப்பு உள்ளது.

ஆனால், இந்த அமைப்பில் பிறந்த பெரும்பாலோர் ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டு கோயில்கள், ஜீவசமாதிகள் என்று திரிந்தபடி இருப்பார்கள். ஆத்மகாரகனான சூரியனும், மோட்சகாரகனான கேதுவும் பன்னிரண்டில் சேர்ந்தால் மறுபிறவியே இல்லை என்று சொல்லலாம். இந்த அமைப்பானது நற்பலன்களை ஓரளவுதான் அளிக்கும். இதுவொரு கிரகண அமைப்பாகும். எனவே, இல்லறத்திலும் தீவிரமாக இருக்க முடியாமல், துறவறத்திலும் முழுமையாக ஈடுபட முடியாமல் ரெண்டுங்கெட்டானாக தவிப்பார்கள்.

எனவே, லௌகீக வெற்றியைப் பெறமுடியாமலும், ஆன்மிகத்தில் சென்று நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியாமலும் தவிப்பார்கள். இந்த அமைப்பைப் பெற்றவர்கள் நிச்சயம் சென்று தரிசிக்க வேண்டிய தலமே பழநி மானூர் சுவாமிகளின் ஜீவசமாதி. பழநியம்பதியில் வாழ்ந்த மகான்களுள் ஒருவரே மானூர் சுவாமிகள். இவர் பிறந்த ஊர், பெற்றோர் என்பது குறித்து தெளிவான பதிவுகள் இல்லை.

பழநிக்கு வட திசையில் உள்ள மானூர் எனும் கிராமத்தில் சில காலம் தங்கி இருந்ததால் இவருக்கு மானூர் சுவாமிகள் என்ற பெயரே நிலைத்துப் போனது. இவர் 1945ம் ஆண்டு நவம்பர் மாதம் 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மகாசமாதி அடைந்தார். பழநிக்கு அருகில் உள்ள கோதைமங்கலத்தில் மெயின் ரோட்டின் ஓரமாகவே சமாதிக் கோயில் அமைந்துள்ளது. இவரிடமிருந்து பொங்கிய தெய்வீக சக்தி பக்தர்களைக் காத்தது. மானூர் சுவாமிகளை தரிசித்து வாருங்கள். பிரச்னைகள் தீரும் பாருங்கள்.

(கிரகங்கள் சுழலும்...)