ரஜினிக்கு செம தில்



முடிஞ்சா இவன புடி சுதீப்

‘‘பெங்களூருவில் ‘கபாலி’ முதல் நாள் முதல் ஷோவை ஒரு பெரிய மால்ல பார்த்தேன். அப்படிப்பட்ட பெரிய தியேட்டர்கள்ல ஆரவாரமான சீன்களைக் கூட ஆடியன்ஸ் அமைதியாதான் ரசிப்பாங்க. ஆனா, ‘கபாலி’ ஓபனிங் சீன்ல ரஜினி சார் வரும்போது, விடாம விசில் அடிச்சு செம மாஸா என்ஜாய் பண்ணி பார்த்து ரசிச்சாங்க. எல்லாருமே ஒயிட் காலர் சாஃப்ட்வேர் பசங்க. எப்பவும் பிரமிக்க வச்சுக்கிட்டே இருக்கற மனிதர் ரஜினி சார்!’’ - புன்சிரிப்பும் ஆச்சரியமும் பொங்கப் பேசுகிறார் ‘நான் ஈ’ சுதீப். விஜய்யின் ‘புலி’யில் தளபதியாக வந்தவர், கே.எஸ்.ரவிகுமாரின் ‘முடிஞ்சா இவன புடி’யில் ஹீரோ!

‘‘ ‘நான் ஈ’ல வில்லனா நடிச்சதுக்கு தமிழ்ல என்னை ரொம்பவே கொண்டாடினாங்க. அது நானே எதிர்பார்க்காத சந்தோஷம். இப்ப ஹீரோவா நடிக்கற ‘முடிஞ்சா இவன புடி’ படம் சுதந்திர தின ஸ்பெஷலா வந்திருக்கு. ஒரு விஷயம் முன்னாடியே சொல்லிக்கறேன். கோலிவுட்ல இருக்கற எந்தவொரு ஹீரோவுக்கும் போட்டியா நான் நடிக்க வரல. தமிழ்ல ஹீரோவா தொடர்ந்து நடிக்கணும்... சென்னையில வந்து செட்டில் ஆகணும்னு எந்த ஒரு திட்டமும் இல்ல. கே.எஸ்.ரவிகுமார் சாரோட ஒரு படம் பண்ணணும்னு விரும்பினேன். அமைஞ்சது. வந்துட்டேன்!’’

‘‘கே.எஸ்.ரவிகுமார் படத்துல நீங்க எப்படி?’’
‘‘காதல், காமெடி, ஆக்‌ஷன், சென்டிமென்ட் என எல்லா ஏரியாக்களிலும் புகுந்து, கலந்துகட்டி ஹிட் கொடுக்கறவர் கே.எஸ்.ரவிகுமார் சார். ‘கன்னடத்தில் ஒரு படம் பண்ணுங்க’னு அவர்கிட்ட கேட்டுக்கிட்டே இருந்தேன். நேரடி தமிழ்ப் படம் பண்ணணும்னு எனக்கும் ஒரு ஆசை. எல்லாத்துக்கும் பொருத்தமா அமைஞ்சது ‘முடிஞ்சா இவன புடி’. டைட்டில் மாதிரியே ஒரு சேஸிங்கான ஸ்கிரிப்ட் இது. எனக்கு அருமையான டபுள் ஆக்‌ஷன் படமா வந்திருக்கு.

‘நான் ஈ’, ‘புலி’ படங்களில் நானே தமிழ்ல டப்பிங்கும் பேசியிருந்தேன். என்னோட வாய்ஸ், ஆக்டிங் எல்லாம் ரொம்பப் பிடிக்கும்னு கே.எஸ்.ஆர் சாரே சொன்னார். என்னை ஹீரோவாக்கினதுல அவருக்கும் சந்தோஷம். இந்தப் படத்துல நான் ரியல் எஸ்டேட் அதிபர். ஆக்‌சுவலா இது ‘லிங்கா’வுக்கு முன்னாடியே பண்ணியிருக்க வேண்டிய படம். ‘ரஜினி சாரே எப்பவாவதுதான் படம் பண்றார். அதை முடிச்சிட்டு நம்ம படம் பண்ணிக்கலாம்’னு நான்தான் சொன்னேன். ‘லிங்கா’ முடிச்சதும், உடனே இந்தப் படத்துக்கு ரவிகுமார் சார் வந்துட்டார்.

ஷூட்டிங் தொடங்குற டைம்ல என்னோட பர்த் டேவும் வந்தது. அதே சந்தோஷத்தோடு முழுப்படத்தையும் முடிச்சிட்டோம்! நித்யா மேனன் ஹீரோயின். பிரகாஷ்ராஜ், நாசர், சரத், முகேஷ் திவாரினு நிறைய வில்லன்கள் படத்துல இருக்காங்க. ரவிகுமார் சாரோட படங்கள்ல என்னவெல்லாம் இருக்குமோ, அதெல்லாம் இதுலயும் இருக்கும். அதுக்கு நான் கேரன்டி. ஜீப் சேஸிங், பாம் ப்ளாஸ்ட்னு நிறைய ரிஸ்க் காட்சிகளை அமைச்சுக் கொடுத்திருக்கார் கனல் கண்ணன் மாஸ்டர். அதெல்லாம் நிச்சயம் பேசப்படும். என்னை பெண்டு நிமித்தி வேலை வாங்கியிருக்கார் கனல். அவர் சொன்ன மூவ்மென்ட்ஸ் அப்படியே வர்ற வரை, சளைக்காம நம்மளை வொர்க் பண்ண வச்சிடுவார். தமிழ், கன்னடம்னு ஒரே நேரத்தில் ரெண்டு மொழிகளையும் கே.எஸ்.ரவிகுமார் சார் இயக்கியிருக்கறது இதுதான் முதல்முறைனு நினைக்கறேன்!’’

‘‘நித்யா மேனன்..’’
‘‘ரொம்ப அழகான ஒரு ஆக்ட்ரஸ். ‘ஓகே கண்மணி’யில் இன்னும் அழகா தெரிஞ்சாங்க. அவங்க பர்ஃபார்மன்ஸ் படத்துக்கு படம் மெருகேறிட்டே இருக்கு. கேரக்டரை அவங்ககிட்ட சொன்னாலே போதும்... ரொம்ப இயல்பா, இன்ஸ்டன்ட்டா பிச்சு உதறுவாங்க. அப்படி ஒரு திறமைசாலி. இந்தப் படத்துல அவங்க நகைக்கடையில் வேலை செய்யிற பெண். ரொம்பவே ஸ்கோப் உள்ள கேரக்டர்!’’

‘‘ ‘பாகுபலி 2’வில் நீங்க இருக்கீங்களா?’’
‘‘ ‘நான் ஈ’யில் நடிச்சிருந்த அறிமுகத்தால் என்னை ‘பாகுபலி’யில் நடிக்கச் சொன்னார் ராஜமௌலி சார். பிரமாண்டமான படத்தை இயக்கியவர்னு அவரைப் பார்த்தா யாரும் சொல்ல முடியாது. செட்ல அவ்வளவு வேலைகளையும் இழுத்துப் போட்டு பண்ணுவார். எல்லா இடங்களிலும் அவரோட டச் இருக்கும். எல்லாத்திலுமே புதுசா சிந்திக்கணும்னு எதையாவது ப்ளான் பண்ணுவார். ஆடியன்ஸோட பல்ஸை நல்லா தெரிஞ்சு வச்சிருக்கார். ரொம்பவே குழந்தை மனசுக்காரர். ‘பாகுபலி 2’வுக்கு இதுவரை அவர் கூப்பிடலை. கூப்பிட்டா சந்தோஷமா போய் பண்ணுவேன்!’’

‘‘ ‘கபாலி’ பார்த்துட்டு ரஜினிகிட்ட பேசுனீங்களா?’’
‘‘இல்லை. அவரை எனக்குப் பிடிக்கும். தங்கமான மனசுக்காரர். அதனாலதான் ‘லிங்கா’வை ரவிகுமார் சாரே இயக்கப் போறார்னதும் இன்னும் சந்தோஷமானேன். ரஜினி சார் கூப்பிட்டால், உடனே படம் இயக்கித் தர டாப் மோஸ்ட் இயக்குநர்கள் நிறைய பேர் ரெடி. ஆனாலும், சார் அப்படிப் பண்ணல. புதியவர்களை அழைச்சு கதை கேட்டார். இரண்டு படங்கள் மட்டுமே பண்ண இரஞ்சித் இயக்கத்தில் நடிச்சார். ஸ்டார் அந்தஸ்தில் உள்ள ஹீரோக்கள் யாரும் பண்ணத் துணியாத ஒரு முயற்சி இது. உண்மையிலேயே அவருக்கு செம தில். நானா இருந்தால் கூட லேசில் இப்படி ஒரு ரிஸ்க்கை எடுத்திருக்க மாட்டேன். ரஜினி சார் கரெக்டான நேரத்தில் கரெக்டான முடிவை எடுத்து நடிச்சிருக்கார். லக்கை நம்பாமல் உழைப்பை நம்பினார். அதனால்தான் ‘கபாலி’ படத்துக்கு அத்தனை ரீச்!’’

‘‘நித்யா மேனனுக்கும் உங்களுக்கும் காதல்னு சொல்றாங்களே..?’’
‘‘சில இணையதளங்களில் அப்படி கிசுகிசுக்கள் வந்திருக்கு. அவங்க அது மட்டுமா பண்ணியிருந்தாங்க? நிறைய நடிகைகளோடு என்னை சேர்த்து கல்யாணமே பண்ணி வச்சிட்டாங்க. கல்யாணம்ங்கறது வாழ்க்கை சார். லைஃப் வேற, நியூஸ் வேற. நான் எப்பவும் அந்த மாதிரி நியூஸைப் பத்திப் பேச விரும்பல. நாம ‘முடிஞ்சா இவன புடி’ பத்தி பேசுவோமே... இமானோட இசையில் பாடல்கள் நல்லா வந்திருக்கு.

இதுக்கு முன்னாடி நான் பண்ணின படங்கள் சிலதுல நான் பாடியிருக்கேன். அந்த வகையில் என்னைப் பாட வைக்கலாம்னு நினைச்சாங்க. ஆனா, நான் ரிஸ்க் எடுத்துக்கல. பொதுவா, எல்லா மொழியிலும் செம துரத்தலோட வர்ற கேட் அண்ட் மவுஸ் படங்களுக்கு வரவேற்பு அதிரிபுதிரியா இருக்கும். அந்த விதத்தில் இந்தப் படமும் கன்ஃபார்ம் ஹிட்னு நம்பலாம்!’’

- மை.பாரதிராஜா
அட்டையில் : நித்யா மேனன்
ஸ்பெஷல் படம்: முத்துக்குமார்
படம் நன்றி : போத்தீஸ்