குட்டிச்சுவர் சிந்தனைகள்



ஆல்தோட்ட பூபதி

அஞ்சு வருஷத்துக்கு ஒரு தடவை வர்ற இம்சை தேர்தல்னா, நாலு வருஷத்துக்கு ஒரு தடவையே வந்திடுற ஒலிம்பிக் போட்டிகள் இன்னொரு வகை இம்சை. எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்னு தெரியாதவனெல்லாம், ‘‘இந்தியா ஹாக்கில எத்தனை கோல்’’னு கிளம்பி வருவானுங்க. டிசம்பர் வெள்ளத்தப்ப, ‘ஐயோ! படிக்கட்டு வரை தண்ணி வந்திடுச்சு’ன்னு பால்கனில நின்னுக்கிட்டு புலம்புனவனெல்லாம், ‘‘ஸ்விம்மிங்ல நம்மாளுங்க ரெண்டு செகண்ட் ஸ்லோங்க’’ன்னு தத்துவார்த்தம் பேசுவாங்க.

வீட்டுக்குள்ள பெட்ரூம்ல இருந்து பாத்ரூமுக்கு போறதுக்கு கூட பைக் எடுத்துக்கிட்டு போறவனுங்கலாம், உசேன் போல்ட் ஓடுறதைப் பத்தி சிலாகிப்பானுங்க. அப்புறம் கடைசியா வழக்கம் போல, ‘நூறு கோடி மக்கள் தொகை இருக்கிற இந்திய நாட்டுல இருந்து ஒலிம்பிக்ல தங்கப்பதக்கம் வாங்க ஒரு ஆளு இல்லையா’னு தேசபக்திக்காக தூக்குன ஷோல்டர லைட்டா இறக்கி வச்சுட்டு, ‘‘மச்சான், ‘திருநாள்’ படத்துல நயன்தாரா சுமாருடா’’னு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிடுவானுங்க.

இன்னொரு குரூப்பு இருக்கு... ஒட்டுமொத்த வாழ்க்கையின் சாராம்சத்தையும் சினிமாவாகவும் சீரியலாகவுமே பார்க்கிற குரூப்பு. ‘‘ஏண்டி! ‘புஷ்பா புருஷன்’ சீரியல்ல வர்ற மீனாவோட மாமியார் மாதிரி எப்ப பார்த்தாலும் மூஞ்சியத் தூக்கி வச்சுக்கிட்டே இருக்க?’’னு ஆரம்பிச்சு, ‘‘கடைக்காரரே! ‘நாகினி’லே ஹீரோயின் கட்டியிருக்கிற டிசைன்ல புடவை கொடுங்க’’னு கேட்கிற அளவுக்கு சீரியலையும் சினிமாவையும் சுவாசக் குழாயிலயே செட் பண்ணி வச்சிருப்பாங்க. இவங்க பாக்சிங் போட்டிய பார்க்கிறப்ப, ‘‘பாக்சிங்னா நம்ம ‘பூலோகம்’ ஜெயம் ரவி மாதிரி ஒரு ஆளை அனுப்பணும்’’னு அறிக்கை விடுவானுங்க.

‘‘கபடி விளையாடுற டீம்னா, அது ‘கில்லி’ படத்துல வர்ற இளைய தளபதி டீம் மாதிரி இருக்கணும். சும்மா ராயபுரம் வேலு, ஓட்டேரி நரினு தொட்டு தூக்குவானுங்கப்பா’’னு கொட்டாவி விடுவானுங்க. நீச்சல் போட்டிய பார்க்கிறப்ப, ‘‘இதென்ன நீச்சலு? ‘அக்னி நட்சத்திர’த்துல நிரோஷா அடிச்சதுதான் நீச்சலு’’னு கூச்சமே இல்லாம கூச்சல் போடுவாங்க.

இவங்களுக்கு என்னதான் பிரச்சனை? ஒலிம்பிக்ல பதக்கம் வாங்குனாத்தான் இது திறமைசாலிகள் நிறைந்த நாடுனு ஒத்துக்குவாங்களா? ஏன், இந்த அமேசான்ல ஆன்லைன் ஆர்டர் போட்டு வாங்குனால்லாம் ஒத்துக்க மாட்டாங்களா? எல்.கே.ஜி படிக்கற குழந்தையைக் கூட என்னமோ எல்.எல்.பி படிக்கிற மாதிரி, பொழுதுக்கும் ‘படி... படி...’னு சொல்றாங்களே தவிர, எங்கேயாவது பத்து நிமிஷம் விளையாட விடுறாங்களா? நாட்டுல தங்கள் குழந்தைகளை அபாகஸ் பயிற்சிக்கு அனுப்புற எத்தனை பெற்றோர் அத்லெடிக்ஸ் பயிற்சிக்கு அனுப்புறாங்க? அவங்கவங்க குழந்தைங்க படிச்சு யுனிவர்சிட்டில கோல்டு மெடல் வாங்கணும்... ஆனா மத்தவங்க குழந்தைங்க மட்டும் ஒலிம்பிக்ல விளையாடி இந்தியாவுக்கு கோல்டு மெடல் வாங்கணும்.

பள்ளிக்கூடத்துல பி.ஈ.டி பீரியட்ல கூட பிசிக்ஸ் பாடம்தான்யா நடத்திக்கிட்டு இருக்காங்க.  நாட்டுல பூரா பசங்களும் பேங்க் எக்ஸாம் கோச்சிங் படிக்க போறாங்களே தவிர, பாக்சிங் கோச்சிங் போறாங்களா? பல வீடுகளில் சொத்து சண்டை போடத்தான் குழந்தைகளை வளர்க்கிறாங்களே தவிர, யாராவது ஒலிம்பிக்ல போய் குத்துச்சண்டை போட வளர்க்குறாங்களா? நமக்கு நம்ம குழந்தைங்க ஒலிம்பிக் போறதை விட அமெரிக்கா போறதுதானே ஆனந்தம். ‘சொர்க்கத்துக்குப் போகணும்... ஆனா சாகக் கூடாது’ங்கிற கதையா, ‘இந்தியா ஒலிம்பிக்ல ஜெயிக்கணும்... பதக்கம் வாங்கணும்... ஆனா நம்ம வீட்டு பசங்க படிச்சு பெரியாளாகணும்!’ 

இப்படி நாம இருக்கிறதுனாலதான் இந்தியா ஒலிம்பிக் பதக்கப் பட்டியல்ல பத்து இடத்துக்குள்ள வரது, சிம்பு பட ரிலீஸ் மாதிரி தள்ளிப் போயிக்கிட்டே இருக்கு.  அடுப்பையே பத்த வைக்காம, மாவு மட்டும் தேய்ச்சு விட்டா தோசை எப்படிய்யா வரும்? இதுல, அரசியலை விளையாட்டாவும் விளையாட்டுக்குள்ள அரசியலையும் செய்யுற நாடு நம்ம நாடு. மத்த நாட்டுக்காரனுங்க ஒலிம்பிக்குக்கு யாரை அனுப்பலாம்னு யோசிச்சா, நம்மூர்ல யாரை அனுப்பக் கூடாதுனு யோசிச்சுக்கிட்டு இருக்கானுங்க. ஒலிம்பிக் போறதுல பாதி கும்பல் ஒலிம்பிக் விளையாடப் போகல, வெளிநாட்டை வேடிக்கை பார்க்கப் போகுது.

விஜேந்தர் சிங் மாதிரி நாட்டுக்காக குத்துச்சண்டை விளையாடி பதக்கம் வாங்குன ஆளுங்களையும் சரியா கண்டுக்காம, இப்ப நோட்டுக்காக விளையாட வச்சுக்கிட்டு இருக்கோம். சரி, ‘‘முதல்ல டிபன் சாப்பிட்டுட்டு வந்தாங்க, இப்ப ஃபைனல்ஸ் போறாங்க, அடுத்து பதக்கம் குவிப்பாங்க, பூரா ஹார்லிக்ஸ், பூஸ்ட்னு குடிச்சு பொதபொதன்னு உடம்பு வச்சிருந்த பயலுகப்பா, கொஞ்சம் மெதுவாத்தான் வருவாய்ங்க’’னு ‘தேவர் மகன்’ சிவாஜி மாதிரி சமாளி ஃபிகேஷன் செஞ்சாலும், இன்னொரு பிரச்னை... ஒலிம்பிக்ல நமக்கேத்த விளையாட்டு போட்டிகள் இல்லாதது.

நமக்கேத்த விளையாட்டுப் போட்டின்னு சொன்னவுடனே, கால்ல விழுற போட்டி, குனிஞ்சு கும்பிடுற போட்டி, கை கட்டுற போட்டி, மேஜை தட்டுற போட்டி, மண் சோறு தின்கிற போட்டி, தீச்சட்டி எடுக்கிற போட்டினு தமிழ்நாடு ரேஞ்சுக்கு யோசிக்காதீங்க. ஒரு கபடி, ஒரு கிரிக்கெட்னு நமக்குத் தெரிஞ்ச விளையாட்டை சேர்க்கிறானுங்களான்னா அதுவுமில்லை. இந்த அமெரிக்க ஏகாதிபத்தியம், IBMல 30%, Microsoftல 50%, NASAல 40% இந்தியர்கள எடுக்குறானுங்களே, அவனுங்க ஒலிம்பிக் டீம்ல ஒரு 20% பேரை எடுக்கக் கூடாதா?

அப்படியாவது இப்போதைக்கு சப்புக்கொட்டிக்குவோம்னு பார்த்தா, அவனுங்க கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ்னு விண்வெளிக்கு அனுப்பத்தான் நம்மாளுங்கள எடுக்கிறானுங்களே தவிர, விளையாட ஒரு பயலையும் எடுக்கக் காணோம். சரி, ஆனது ஆச்சுன்னு இப்ப ஃபைனல்ஸ் வரை புகுந்து வர்ற நம்மாளுங்க, அடுத்த ஒலிம்பிக்ஸ்ல மொத்த உலகத்தையும் பஞ்சர் பண்ணிட்டு வருவாங்க. அதுவரை ‘என்னடா ஒலிம்பிக்கு? பதக்கப் பட்டியல்ல ஃபர்ஸ்ட் வர்ற டீம், இந்தியாவோட ஒரு ஒன்டே கிரிக்கெட் மேட்ச் ஆடி ஜெயிங்கடா பார்ப்போம்’னு உதார் விட்டுக்கிட்டே ஐ.பி.எல் பார்ப்போம்.

-ஓவியங்கள்: அரஸ்