அமலாபாலின் நிஜ கெமிஸ்ட்ரி!



யூத்ஃபுல் யுவலட்சுமி

கேரளத்து வரவு இல்லை... முன்னாள் நடிகையின் மகளும் இல்லை... ஆனால் இந்தப் பொண்ணுக்கு கண்கள் கவிதை படிக்கின்றன. ஹீரோயின் களை அங்கங்கே தென்படுகிறது. ‘அம்மா கணக்கு’, ‘அப்பா’ படங்களில் ‘யார்ரா இந்தப் பொண்ணு’ என விசாரிக்கப்பட்ட யுவலட்சுமி. இன்றைய தேதிக்கு தெளிவான தமிழ் உச்சரிப்புடன் ஒரு டீன் ஏஜ் பெண் என்றால் யுவாதான் அனைவரின் அவா!

‘‘பக்கா தமிழ்ப் பொண்ணு நான். காரைக்கால்தான் சொந்த ஊர். லெவன்த் ஸ்டாண்டர்ட் படிக்கிறேன். வீட்ல ஒரே பொண்ணு. அப்பா சேகர் பாண்டிச்சேரி அரசுல வொர்க் பண்றார். அவர்தான் எனக்கு அஸ்திவாரம். ஆறு வயசுல இருந்தே பரத நாட்டியம் கத்துக்கறேன். நிறைய போட்டிகள்ல கலந்துக்குவேன். அப்பா லீவ் போட்டுட்டு கூடவே வருவார். எனக்காக ஆபீஸ்ல புரமோஷனைக் கூட வேண்டாம்னு சொல்லிட்டார். போன வருஷம் பரத நாட்டியத்துல மாநில அளவில் விருது வாங்கினேன். பல டி.வி டான்ஸ் ஷோக்கள்ல வின் பண்ணியிருக்கேன்.

ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி ‘பார்வை’ங்கிற குறும் படத்துல நடிச்சேன். அதைப் பார்த்துட்டுதான் சமுத்திரக்கனி அங்கிள் ஆடிஷனுக்குக் கூப்பிட்டார். ஆனா, ஆடிஷன் நடத்தல. ‘உன்னோட கண்ணு இந்தப் படத்துக்குப் பெரிய அளவுல சப்போர்ட் பண்ணும். என் குருநாதர் பாலசந்தர் உன்னைப் பார்த்தா அப்படியே தூக்கிட்டுப் போயிடுவார்’னு சொல்லி நேரடியாவே செலக்ட் பண்ணிட்டார். என் அப்பா பாசத்துக்கு ஏத்த மாதிரி ‘அப்பா’ படத்தில்தான் முதல்ல நடிச்சேன்.

அடுத்து, சமுத்திரக்கனி அங்கிள்தான் ‘அம்மா கணக்கு’ பட வாய்ப்பும் வாங்கித் தந்தார். அது முதல்ல ரிலீஸ் ஆகிடுச்சு. அந்தப் படத்துல நிறைய அழுகைக் காட்சி. எதுக்குமே நான் கிளிசரின் பயன்படுத்துனது இல்லை. டப்பிங்ல கூட ரியலா அழுது பேசுனதைப் பார்த்து படத்தோட புரொடியூஸர் தனுஷ் சாரே ரொம்ப ஆச்சரியப்பட்டார். ‘என்னோட ‘ஒண்டர் பார்’ நிறுவனத்துல சிறுவர்கள் அதிகம் நடிக்கிறது பெருமையா இருக்கு. ஒண்டர் பார்க்கு கிடைச்ச வரம்மா நீ’னு சொன்னார்!’’ என்கிற யுவாவின் கண்கள் அமலா பால் பற்றிப் பேசும்போது எக்ஸ்ட்ராவாக விரிகின்றன.

‘‘ரொம்ப அன்பானவங்க அமலா. ‘அம்மா கணக்கு’ ஷூட்டிங் அப்போ நான் டென்த் படிச்சேன். ஒவ்வொரு சீன் முடிஞ்சதும் சப்ஜெக்ட் புக் எடுத்துட்டு ஓரமா உக்காந்து படிக்க ஆரம்பிச்சிடுவேன். அமலா பால் கெமிஸ்ட்ரி சப்ஜெக்ட்ல பெரிய புலி. ஒரு முறை நான் படிச்சிட்டிருந்தப்ப வந்து கெமிஸ்ட்ரியில கேள்வி கேட்டாங்க. சரியா சொல்லிட்டேன். அப்போ ஆரம்பிச்சு ஷூட்டிங் இடைவேளையில எல்லாம் எனக்குப் பாடம் சொல்லித் தருவாங்க. படத்தில் நான் கணக்கு படிக்கணும்னு அவங்க கஷ்டப்படுவாங்க.

நிஜத்தில் கெமிஸ்ட்ரி. ‘படங்கள்ல நடிச்சாலும் படிப்பை விடக்கூடாது’னு அட்வைஸ் பண்ணுவாங்க. அவங்களாலதான் நான் டென்த் எக்ஸாம்ல 98 பர்சன்டேஜ் எடுத்தேன். கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகுறதுன்னா இதுதான். தேங்க்ஸ் அமலா பால் ஆன்ட்டி!’’ என்கிற யுவா, எதிர்காலம் பற்றி தெளிவான கனவுகள் வைத்திருக்கிறார். ‘‘இப்போதைக்கு ரெகுலரா ஸ்கூல் போறேன். சில படங்கள்ல நடிக்கச் சொல்லி பேசிக்கிட்டு இருக்காங்க.

கடைசி வரை கூட வரப் போறது கல்விதான். அந்த வகையில படிப்புக்குத்தான் நான் முக்கியத்துவம் தருவேன். ரெண்டாவதுதான் சினிமா! அறிவியல் கண்டுபிடிப்புகள் இந்தியாவில் குறைவா இருக்கு. அது சார்ந்து படிக்கப் போறேன். சினிமாவைப் பொறுத்தவரை பழைய எம்.ஜி.ஆர் பாடல்கள்ல வர்ற மாதிரி நல்ல கருத்துக்களைச் சொல்லணும்னு ஆசை. பத்மினி அம்மா மாதிரி நாட்டியத்துலயும் சினிமாவிலும் சாதிக்கணும்!’’

- புகழ் திலீபன்
படங்கள்: புதூர் சரவணன்