இசைத்தீயை பற்றவைத்த பஞ்சு!



‘பஞ்சு அருணாசலம் மறைந்தார்’ என்ற ஒற்றை வரி, சினிமா அறிந்த அனைவரையும் துணுக்குறச் செய்தது. தமிழ் சினிமாவின் பெரிய மனிதர்களில் ஒருவர் பஞ்சு அருணாசலம். திரைக்கதை எழுத்தாளர்களில் தவிர்க்க முடியாதவர். காலநதியால் அடித்துச் செல்லப்படாத பல படங்களையும், பாடல்களையும், அனுபவத்தையும் கொண்டு சினிமாவை நிறைத்தவர். அவரிடம் மிகவும் நெருங்கிப் பழகிய இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் நம்மிடம் பகிர்ந்துகொண்ட இது, ஒரு சோற்றுப் பதம்தான்.

இன்னும் இன்னும் பேச, எழுத நிறைய உண்டு... ‘‘பஞ்சு அண்ணானுதான் சொல்வோம். ரொம்பப் பெருந்தன்மையானவர். அது நடை, உடை, பாவனைகளிலேயே தெரியும். திரைக்கதை அமைப்பதில் அண்ணன் ரொம்பக் ெகட்டிக்காரர். ஒரு சினிமா எப்படி ஆரம்பிச்சு, எப்படி முடியும்னு மனசில் ஓட்டிப் பார்ப்பார். கதைப்போக்கில் எங்காவது படுமுடிச்சு விழுந்து விட்டால், அதை உட்கார்ந்து கொஞ்ச நேரம் யோசித்தால் நீக்கிவிடுவார். அவரது பாணியே இன்று வரைக்கும் மறக்க முடியாத ஸ்பெஷல்.

எல்லா வகை சோதனைகளையும் செய்து பார்த்து, அதை ஜனரஞ்சகமாக்கி விடுவார். ஆனால், ‘எனக்கு இதெல்லாம் தெரியும்’னு வெளியே காட்டிக்கவும் மாட்டார். இப்போதைய தமிழ் சினிமாவின் மூன்று ஆளுமைகளான இளையராஜா, ரஜினி, கமல்... இவர்களின் உருவாக்கத்தில் பஞ்சு அண்ணாவிற்கு பெரிய இடம் இருக்கிறது. ரஜினிக்கும், கமலுக்கும் அவர் நிறைய படங்கள் எழுதியிருக்கார். இரண்டு பேரும் அவர் தயாரிச்ச படங்களில் அன்போடு நடிச்சுக் கொடுத்திருந்தாங்க. என்ன ஆச்சரியம்னா, பஞ்சு அண்ணா சென்டிமென்ட்டிலும் வெளுத்துக் கட்டுவார், குலுங்கக் குலுங்க சிரிக்க வைக்கிற மாதிரியும் எழுதுவார்.

ரஜினியின் இமேஜ் ஒரு சமயம் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் ஹீரோ மாதிரியே இருந்தது. ரொம்ப சாமர்த்தியமா அவரை அதிலிருந்து மீட்டு வந்து ‘ஆறிலிருந்து அறுபது வரை’னு அவருக்கு ஒரு ஜனரஞ்சக உயிர் கொடுத்ததுகூட அவர்தான். ரஜினி, கமல் ரெண்டு பேருக்குமே பஞ்சு அண்ணன்னா ரொம்ப மரியாதை. எப்பவும் அவரைச் சந்திக்கத் தயங்க மாட்டாங்க.

நானும் பஞ்சு அண்ணனும் சேர்ந்து நிறைய படங்கள் செய்திருக்கோம். ஒரு இயக்குநரா நமக்கு நல்ல சுதந்திரம் கொடுப்பார். அவர் ஸ்கிரிப்ட் எந்தக் குழப்பமும் இல்லாமல் இருக்கும். சுமார் 25 வருஷத்திற்கு அவர் சரமாரியா தமிழ் சினிமாவில் இயங்கினார்னு சொல்ல முடியும். என்னோட எஸ்.பி.எம் யூனிட்டில் அவர்தான் பெரிய விழுது. எங்களுக்குள் எந்த மனஸ்தாபமும், வருத்தமும் வந்ததே இல்லை. அதெல்லாம் இப்ப அபூர்வம். ஊரிலிருந்து வந்ததும் அவர் கவியரசு கண்ணதாசனிடம் உதவியாளரா இருந்தார். அவரை செம்மைப்படுத்த அந்த அனுபவம் பெருசா உதவி யிருக்கு.

நாம் இன்றுவரைக்கும் ரசித்து ரசித்துக் கேட்கும் கண்ணதாசன் பாடல்களை அப்படியே கவிஞர் சொல்லச் சொல்ல எழுத்தாக்கியது பஞ்சு அண்ணாதான். கவிஞர் சொல்லுகிற வேகத்திற்கு எழுத முடிவதெல்லாம் சாதாரண வேலையில்லை. அதை அனுபவித்துச் செய்திருக்கிறார். யாருக்கும் கிடைக்காத அந்த வாய்ப்பை காலம் பஞ்சு அண்ணாவிற்கு வழங்கியது. அதையெல்லாம் அண்ணா சொல்லச் சொல்லக் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

புதிய திறமைகளை அடையாளம் கண்டுகொள்வதில் அண்ணாவிற்கு இணை இல்லை. வாலி, ‘இசைத்தீயைப் பற்றவைத்த பஞ்சு’ எனச் சொல்வார். அப்படி ராஜாவை அடையாளம் கண்டு, கொண்டு வந்தார். இன்னிக்கு அவர்தான் இசைத்துறையின் மகாகுரு. அவருக்கு இளையராஜா தன் அறிமுகம் என்பதில் தீராத பெருமை. ரஜினியோடு மட்டும் கிட்டத்தட்ட 30 படங்கள் செய்திருக்கார். அவருடைய ஆரம்ப கால நெகட்டிவ் கேரக்டர்களை மாற்றி அமைத்துச் செய்த ‘புவனா ஒரு கேள்விக்குறி’ எல்லாம் வரலாறு காணாத வெற்றி!

இன்னிக்கும் பட்டிதொட்டிகளில் கூட, ‘மணமகளே மணமகளே’ பாடல் தவிர்க்க முடியாதது. அந்தப் பாடலை எழுதியது கூட இவர்தான். சினிமாவில் அவரின் அணுகுமுறை, நல்ல வெற்றிப் பாதையில் அமைந்திருந்தது. அவரோட கைவண்ணத்தில், ‘எங்கேயோ கேட்ட குரல்’, ‘சகலகலா வல்லவன்’னு இரண்டும் ஒரே நாளில் வெளிவந்தது. ெசன்டிமென்ட்டில் ‘எங்கேயோ கேட்ட குரல்’, கமர்ஷியல் அம்சத்தில் ‘சகலகலா வல்லவன்’... இரண்டும் பெரிய வெற்றி!

‘ஒரு நல்ல சினிமாவுக்கு திரைக்கதைதான் அச்சாணி’னு அவர் புரிய வச்சார். அந்த அச்சாணி இல்லாமல் குடை சாய்ந்த வண்டிகள் ஏராளம். அந்தக் கலையை நன்றாக அறிந்து வைத்திருந்தார். நாவல்களை சினிமாவாக்கிப் பார்த்திருக்கிறார். தயாரிச்சும் இருக்கார். அவர் அளவுக்கு இன்னிக்கு தமிழ் சினிமாவில் யாராவது முத்திரை பதித்தார்கள்னா அது குறைவாகவே இருக்கும். அவர் மாதிரி வித்தகர்களை இன்னிக்கு தேடிப் பிடிக்கிறதே அபூர்வம். அப்படியொரு அபூர்வமான மனிதரை இழந்து நிற்கிறதுதான் தனிப்பட்ட வகையில் எனக்கும் தமிழ் சினிமாவிற்கும் நஷ்டம்!’’

இப்போதைய தமிழ் சினிமாவின் மூன்று ஆளுமைகளான இளையராஜா, ரஜினி, கமல்...இவர்களின் உருவாக்கத்தில் பஞ்சு அருணாசலத்துக்கு பெரிய இடம் இருக்கிறது.

- நா.கதிர்வேலன்
படங்கள் உதவி:ஞானம்