வில்லன்



-விஜயநிலா

மிகுந்த யோசனைக்குப் பிறகு ஒப்புக்கொண்டான் கேசவ் அந்த வேடத்தை. இப்போது முன்னணியில் இருக்கும் இளம் கதாநாயகனுக்கு தான் வில்லனாக நடிக்க வேண்டுமாம். இருபது வருடங்களுக்கு முன்பு கேசவ் ஒரு சாக்லெட் பாய். பெண்களின் கனவு நாயகன். எங்கு சென்றாலும் இளம்பெண்கள் சூழ்ந்து கொள்வார்கள். ‘கேசவ் மாதிரி மாப்பிள்ளை இருந்தா கண்ணை மூடிக்கிட்டு கல்யாணம் பண்ணிக்குவோம்’ என சொல்லிச் சொல்லி, ஆண்களின் மனதில் பொறாமையை ஏற்படுத்தினார்கள். அதெல்லாம் ஒரு காலம். கேசவ் பெருமுச்சு விட்டான்! படம் முடிந்தது.

ப்ரீமியர் ஷோக்களில் அனைவரும் கேசவ்வை பாராட்டினாலும், அந்த ஹீரோவின் இளக்காரமான பார்வை மனதை உறுத்திக்கொண்டே இருந்தது. நான் சில்வர் ஜூப்ளி ஹீரோவாக இருந்தபோது இவன் நாலு வயசுப் பையன். இவனிடம் நான் அடிவாங்கி தோற்றுப் போய்...படம் ஜெயித்து விட்டது.
 
வீட்டிற்கு வந்ததும் பையன் கேட்டான். ‘‘அப்பா! நான் பெரியவன் ஆனதும் சினிமால நடிக்கணும். ஹீரோ ஆகணும்!’’ தவமிருந்து வெகுநாட்கள் கழித்துப் பிறந்த பையன். இவன் வளர்ந்ததும்... பெரியவனானதும்... ஹீரோவானால்? அந்த இளம் கதாநாயகன் அப்போது? கேசவ் திருப்தியாகப் புன்னகைத்தான். ‘‘நடிக்கலாம்டா கண்ணா! உனக்கு ஒரு வில்லனை இப்போதே பார்த்து வச்சிருக்கேன்!’’