மாற்றம்



-வி.சிவாஜி

செப்டம்பர் ‘‘அந்தப் பாத்திரத்தில் இருக்கறது நேற்று வைத்த குழம்பு.  கொட்டிட்டு கழுவி வச்சுடு. அம்மா பழசெல்லாம் சாப்பிட மாட்டாங்க...’’ வேலை செய்ய வந்த வசந்தாவிடம் கூறினார் நாராயணன். ‘‘இன்னைக்கு வெள்ளிக்கிழமை. வீட்டை பெருக்கித் துடைக்கணும்’’ வசந்தாவிடம் கண்டிப்புடன் சொன்னாள் லக்ஷ்மி.

‘‘புடவையை நல்லா அழுக்குப் போக தோய்க்கறாளா பாருங்கோ...’’ மனைவி லக்ஷ்மியின் குரல் சொன்னபடி செய்தார் நாராயணன். ‘‘மணி ஏழு ஆச்சு, இன்னும் குளிக்காம இருக்கீங்க? உங்களுக்கே தெரிய வேண்டாம்?’’ மறுபடியும் லக்ஷ்மியின் கத்தலுக்கு மரியாதை தந்தார் நாராயணன்.

டிசம்பர்‘ ‘ஃபிரிட்ஜில் இருக்கும் ரசம் போன வாரம்தான் பண்ணியது. சுட வச்சு சாப்பிடலாம்’’ மருமகள் உமா சொன்னவுடன் பாத்திரத்தை அவனில் வைத்தாள் லக்ஷ்மி. ‘‘புடவையை தினம் தோய்க்கணும்னு இல்லை. நைட்டி போட்டுக்கறேன்’’ சொன்ன லக்ஷ்மியை வியப்புடன் பார்த்தார் நாராயணன். ‘‘மணி பத்துதானே ஆச்சு. அதுக்குள்ளே போறீங்க? சாவகாசமா குளிச்சா போதாதா?’’ லக்ஷ்மி மெல்லிய குரலில்  சொன்னது நாராயணனுக்கு தெளிவாகக் கேட்டது.

‘‘வாரம் ஒருமுறை சண்டே வீட்டைப் பெருக்கினா போதும்’’உமா சொன்னதும் லக்ஷ்மி மேலே எதுவும் பேசவில்லை. ‘‘எப்படிம்மா ஒரு வார அமெரிக்க வாழ்க்கை?’’ லேப்டாப்பை பையில் வைத்தபடி கேட்டான் மகன் ஆனந்த்.