ரகசிய விதிகள்



சுபா

கிளப்புக்குள் நுழையலாமா, வேண்டாமா’ என்று சப் இன்ஸ்பெக்டர் சுகுமார் யோசித்துக்கொண்டிருந்தபோதே, விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள் ஒன்று படபடவென்று கிளப்புக்குள் நுழைவதைப் பார்த்தார். இந்த அதிகாலை வேளையில், கிளப்பில் சீட்டாடுவதற்காகக் கூடுபவர்கள் இருக்க மாட்டார்கள். பிரியமில்லாமலேயே சேர்த்துவிட்ட கொழுப்பு கிலோக்களை கரைப்பதற்கென்று டென்னிஸ் ஆடுவதற்கும், ஷட்டில்காக் ஆடுவதற்கும், நீச்சல் பயில்வதற்கும்தான் பணக்காரர்களும் வந்து போவார்கள்.

அப்படி வருபவர்கள் ஸ்கூட்டரிலும், மோட்டார் சைக்கிளிலும் கிளப்பில் நுழைவதை யாரும் சந்தேகத்துடன் பார்க்க மாட்டார்கள் என்றே தோன்றியது. சுகுமார் வெகு இயல்பாக ஹெல்மெட்டை எடுக்காமலேயே வாசலில் நின்ற செக்யூரிட்டிக்கு கையை உயர்த்திக் காட்டிவிட்டு, கிளப்பின் உள்ளே நுழைந்தார். அவர் அணிந்திருந்த உடை காரணமாக, அங்கே காலைப் பயிற்சிக்கு வரும் கிளப் உறுப்பினர் என்றே சுகுமாரை காவலுக்கு இருந்தவர் நினைத்தார்.  ஆறேழு இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில், சுகுமார் தன் மோட்டார் சைக்கிளைக் கொண்டு போய் நிறுத்தினார்.

அந்த மஞ்சள் நிற ஜென் கார், சில நூறடிகள் தள்ளி நிறுத்தத்துக்கு வந்திருந்ததை கவனித்தார். சுகுமார் பைக்கிலிருந்து இறங்காமல், ஹெல்மெட் கண்ணாடியை உயர்த்தி விட்டு நோட்டமிட்டார். ஜென் காரிலிருந்து ஓர் இளம்பெண் இறங்கி ஒயிலாக நடந்து போவதைக் கவனித்தார். அந்தப் பெண் தன் கையில் இருந்த கவரை யாரிடம் ஒப்படைக்கப் போகிறாள் என்று சுகுமார் ஆவலுடன் பார்த்திருக்க, அங்கு பார்க் செய்யப்பட்டிருந்த ஒரு ஆடி காரின் திறந்திருந்த ஜன்னல் வழியே, முன் இருக்கையில் அதை வீசிவிட்டு அவள் திரும்பி நடந்தாள்.

சுகுமார் தன்னுடைய போனை நோண்டுவது போல் முகத்துக்கு நேரே பிடித்திருந்தார். டக் டக்கென்று இரண்டு முறை அவளுடைய முகத்தையும், அவள் கவரை எறிந்த காரின் எண்ணையும் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அவள் தனது காரில் ஏறினாள். கார் யு டர்ன் எடுத்து கேட்டை நோக்கிப் பயணப்பட்டது. சுகுமார் தன் போனில் இன்ஸ்பெக்டர் துரை அரசனுக்குத் தகவல் கொடுத்தார். ‘சென்னையின் பெருமை’ எனக் கொண்டாடப்படும் மெரினா கடற்கரை.

இன்ஸ்பெக்டர் துரை அரசன் போனில் சுகுமாருக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தார். “ஜென்னை கிளப்புக்கு வெளிலேர்ந்து ஃபாலோ பண்றதுக்கு நான் ஏற்பாடு பண்ணிக்கறேன். நீங்க கவர் விழுந்த கார்ல யார் ஏறுறாங்கன்னு கவனிங்க... முடிஞ்சா, அந்தக் காரை ஃபாலோ பண்ணுங்க...” சொல்லிவிட்டு, கான்ஸ்டபிள் மாத்ருபூதத்திடம் கண்களால் உத்தரவு கொடுத்தார். இனி தப்பிக்க முயற்சி செய்வதில் அர்த்தமில்லை என மாத்ருபூதம் மணலில் கையூன்றி எழுந்தார். மெல்ல நடந்து அந்த இன்னோவா காருக்குள் ஏறி அமர்ந்தார். சில நிமிடங்கள் கழித்து துரை அரசனும் அதே காரில் வேறு பக்கத்திலிருந்து ஏறி அமர்ந்தார்.

அந்த வண்டி அங்கிருந்து புறப்பட்டது. பைக்கிலேயே காத்திருந்தால் அநாவசிய சந்தேகங்கள் வரும் என்பதால், வண்டியை பார்க் செய்துவிட்டு, போனில் பேசியபடியே சுகுமார் நடந்தார். கிளப் உறுப்பினர்களுக்காகத் திறந்திருந்த சிற்றுண்டி விடுதிக்குள் சென்று அமர்ந்தார். அரசாங்கப் பணத்தில் ஒரு காபி வாங்கி உறிஞ்சினார். அவர் அமர்ந்திருந்த இடத்திலிருந்து கார் நிறுத்தப்பட்ட இடம் தெரிந்தது. கும்கும் சென்ட்ரல் ரயில் நிலைய சிக்னலில் பச்சை விளக்குக்காகக் காத்திருந்தாள்.

இரவு அருந்திய ஒயின் இன்னும் தன் ரத்தத்தில் உயிர்ப்போடு இருப்பதை உணர்ந்தாள். தீபக் தர்மசேனா திடீரென்று இப்படியொரு வேலை கொடுப்பார் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. மிக மிகச் சுலபமான வேலை. ஆனால், அதற்கு அவர் கொடுத்த பணம், கேள்விகள் கேட்க விடாமல் அவளை மௌனமாக்கியிருந்தது. இதோ இன்னும் நாற்பது நிமிடங்களில் அவள் தங்கியிருக்கும் அபார்ட்மென்ட்டை அடைந்து, கவிழ்ந்து படுத்தால், குறைந்தது நான்கைந்து மணி நேரத்துக்கு யாரும் அவளை எழுப்ப மாட்டார்கள்.

பச்சை விளக்கு விழுந்ததும், காரின் கியரைப் பொருத்தினாள். குறுக்கில் ஒரு வெள்ளை உடுப்பு கான்ஸ்டபிள் வந்து நின்றார். வண்டியை ஓரம் கட்டச் சொன்னார். கும்கும் ஜன்னலை இறக்கி, வசீகரமான சிரிப்பை அவர் மீது வீசினாள். “என்ன சார்... லிஃப்ட் வேணுமா..?” என்றாள். “ஸ்டாப் கோட்டைத் தாண்டி வந்திருக்கீங்கம்மா...” “சார், பச்சை விழுந்திருச்சு...” “இல்ல, சிகப்பு இருக்கும்போதே நீங்க தாண்டினீங்க...” “சத்தியமா இல்ல சார்...” “முதல்ல உங்க ஆர்.சி. புக்கை எடுங்க...” கும்கும் ஆர்.சி தாளை எடுத்து நீட்டினாள்.

“ஆர்.சி புக்ல ஒரு நம்பர் இருக்கு... ஆனா நம்பர் பிளேட்டுல வேற நம்பர் இருக்கு..?” கான்ஸ்டபிள் கார் சாவியை இக்னிஷனிலிருந்து எடுத்து கையில் வைத்துக்கொண்டார். “வண்டிலேர்ந்து இறங்குங்கம்மா...” கும்கும் திடுக்கிட்டாள். அவளுடைய காரின் ஆர்.சி புத்தகத்தில் இருக்கும் பதிவெண்கள் வேறு. தீபக் தர்மசேனா ஏதோ விளையாட்டுக்கு என்று சொல்லி, அவளுடைய காரின் நம்பர் பிளேட்டுகளை ‘3366’ என்று மாற்ற ஏற்பாடு செய்திருந்தார்.

கும்கும் காரிலிருந்து இறங்கினாள். “சார்! ஒரு சின்ன தப்பு நடந்து போச்சு... நான் காரை இப்பதான் சர்வீஸுக்கு விட்டிருந்தேன். அங்க நம்பர் பிளேட்டை மாத்திட்டாங்கன்னு நினைக்கறேன்... நானே கவனிக்கலை!” “எதுவா இருந்தாலும், பெரிய அய்யா வந்து பார்த்தப்புறம்தான் போக முடியும். காருக்குள்ள உக்காருங்க...” கும்கும் உடனே தீபக் தர்மசேனாவுக்கு போன் செய்யலாமா என்று யோசித்தாள். நூறோ, இருநூறோ வீசினால் சரி செய்யக்கூடிய பிரச்னைகளுக்கு ஆயிரங்களை அள்ளி வீசுபவரைத் தொந்தரவு செய்வது சரியில்லை என்று தோன்றியது.

சற்று நேரத்தில் அங்கு இன்ஸ்பெக்டர் துரை அரசன் வந்து சேர்ந்தார். ஆர்.சி புத்தகத்தை சரி பார்த்தார். “என்னம்மா இது...  திருட்டுக் காரா..?” என்று சீண்டும் விதமாகக் கேட்டார். கும்கும் பொறுமையிழந்தாள். “ஹலோ, வார்த்தைகளை அளந்து பேசுங்க. இது என் சொந்தக் கார்...” “அப்புறம் ஏன் நம்பர் பிளேட்டை மாத்தியிருக்கீங்க... ஏதாவது கடத்தல் செய்யறீங்களா..?” “ஹலோ, நான் யார்னு உங்களுக்குத் தெரியாது!”

“நீங்க யாரு, உங்க பின்னணி என்ன, எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணும்னு எனக்கும் ஆசையா இருக்கு. ஸ்டேஷனுக்குப் போலாம், வாங்க...” என்று அவள் கையிலிருந்து போனைப் பறித்தார், துரை அரசன். விஜய் மொட்டை மாடியில் சூரிய நமஸ்காரப் பயிற்சி செய்துகொண்டிருந்தபோது, அவனுடைய அம்மா மரகதம் மூச்சிரைக்கப் படியேறி வந்தாள். “டேய், உனக்கு போனு...” “கூப்பிட்டா நானே கீழ வர்றேன்... அதை எதுக்கு தூக்கிட்டு ஓடி வர்றே..?”

“யார்கிட்டேர்ந்துன்னு தெரியுமா? உங்க எம்.டி போன் பண்றாரு விஜய்...” விஜய் அவளிடமிருந்து போனைப் பறித்தான். “குட் மார்னிங் சார்...” என்றான். “குட் மார்னிங் விஜய். உன் லேப்டாப்ல எதுவும் பிரச்னை வரலையே..?” என்று எதிர்முனையில் கிரிதரின் குரல். “இல்லையே சார்... ஏன்?” “உன் லேப்டாப்பை எடுத்துட்டு இன்னிக்கு ஆபீசுக்கு காலைல ஒரு எட்டரை மணிக்கு வாயேன்...” “சரி சார்...” போனை வைத்ததும், “ஏதாவது அர்ஜென்ட் மேட்டரா..?” என்று கேட்டாள், மரகதம்.

“அர்ஜென்ட்டா இருக்கறதுனாலதான எனக்கு எம்.டி.யே போன் பண்றாரு...” “டேய்! இனிமே அநாவசிய வம்பு தும்புக்குப் போக மாட்டேன்னு அவர் கால்ல விழுந்து திரும்ப வேலைக்குப் போக ஆரம்பி. இப்படியே வீட்ல உட்கார்ந்திருந்தா, ‘இட்லிக்கு அரைச்சுக் குடு’, ‘துணியை உலர்த்திட்டு வா’, ‘கோயில்ல கொண்டு போய் விடறியா’னு நான் கேக்க ஆரம்பிச்சிடுவேன்...” என்றாள் மரகதம். கிளப் அந்த நேரத்திலும் பரபரப்பாக இருப்பதை கவனித்தபடி, கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் காத்திருந்தார் சுகுமார்.

ஆடி காரை நோக்கி ஒருவர் நடந்து வருவதை கவனித்தார். வெள்ளை ஷார்ட்ஸ், வெள்ளை பனியன், டென்னிஸ் மட்டை சகிதமாக, ஒரு பூத்துவாலையால் தன் உடலில் வியர்த்திருந்த இடங்களை ஒற்றிக்கொண்டே அவர் வந்தார். சுகுமார் அந்தக் காரில் ஏறுபவரை போனில் க்ளிக், க்ளிக் என்று சிலமுறை புகைப்படங்களாகச் சிறைப்பிடித்தார். இயல்பாக எழுந்தார். பைக்கை நிறுத்தியிருந்த இடத்தை அடைந்து, ஹெல்மெட்டை அணிந்தார். வண்டியைக் கிளப்பி, கிளப்புக்கு வெளியே வந்தார். சாலையோரத்தில் ஒதுங்கிக் காத்திருந்தார். சற்று நேரத்தில் அந்த கறுப்பு ஆடி கார் வெளியில் வந்தது.

சுகுமார் அந்தக் காரை பின்தொடர ஆரம்பித்தார். கே.ஜி. தொலைக்காட்சி அலுவலகம். எம்.டி கிரிதரின் அறை. “உன் லேப்டாப்பைத் திற...” என்றார் கிரிதர். விஜய் லேப்டாப்பைத் திறந்து காட்டினான். “மெயில் ஓப்பன் பண்ணு...” “ஏன் சார்..?” எம்.டி தன்னுடைய லேப்டாப்பை தொட்டுக் காட்டினார்.

“என்னோட லேப்டாப் ரொம்ப காஸ்ட்லி. ஏகப்பட்ட செலவு செஞ்சு, வைரஸ் தாக்காம இருக்க ஏதேதோ புரோகிராம் போட்டிருக்கேன். ஆனாலும், ஒருநாள் திடீர்னு க்ராஷ் ஆயிடுச்சு. என் அக்கவுன்ட்லேர்ந்து உனக்கு ஒரு மெயில் வந்திருந்தது இல்ல, அதான் இதுக்குக் காரணம்னு எனக்குத் தோணுச்சு. அதனாலதான் உன்னையும் கூப்பிட்டு வார்ன் பண்ணலாம்னு...”

“அந்த மெயிலை அன்னிக்கே நான் டெலிட் பண்ணிட்டேன், சார்...” “நான்கூடதான் டெலிட் பண்ணேன். ஆனா அந்த வைரஸ் எங்கியோ போய் ரகசியமா உட்கார்ந்துக்கிச்சு. அத்தனை ஃபைலையும் தின்னு காலி பண்ணிடுச்சு. நீ ஒண்ணு செய்... அந்த லேப்டாப்பை முஸ்தஃபா கிட்ட கொடுத்துட்டுப் போ! அவன் அதை க்ளீன் பண்ணிட்டு ஈவ்னிங் உனக்குத் தருவான்...”

“எனக்குத்தான் பிரச்னை வரலியே சார்..?” “சொன்னா கேளு விஜய்.” “அதுக்கில்ல சார்... அதுல என்னோட பர்சனல் மேட்டர்லாம் இருக்கு சார்!” “அவ்வளவுதான..? நீயும் கூடவே இருந்து பார்த்துக்கோ... ஓகே?” என்று கிரிதர் இன்டர்காமில் முஸ்தஃபாவை அழைத்தார். முஸ்தஃபா, அந்தத் தொலைக்காட்சி தொடர்பான அத்தனை மென்பொருள்களும் அறிந்தவன். மென்மொழிகளும் புரிந்தவன். தலைமை சாஃப்ட்வேர் நிபுணன்.

அவன் வந்து பணிவுடன் நின்றதும், “முஸ்தஃபா, இந்த லேப்டாப்பை கொஞ்சம் க்ளீன் பண்ணிக் குடுத்துரு..” என்றார் கிரிதர். இருவரும் வெளியேறவிருந்த நேரம், “விஜய்” என்று அழைத்தார். “சார்..?” “அப்புறம் உன்கிட்ட இன்னொரு முக்கியமான விஷயம் நான் பேசணும். லேப்டாப் ரெடியானதும், ரூமுக்கு வா...” சுகுமார் நிறைய இடைவெளி விட்டு, பின்தொடர்ந்த ஆடி கார் மீண்டும் கடற்கரைச் சாலையைப் பிடித்து விரைந்தது. ரிசர்வ் பேங்க் பாதாளப் பாதையில் இறங்கி ஏறியதும், கார் பாரிமுனையில் திரும்பாமல் நேரே பயணப்பட்டது.

அலுவலக நேரம் துவங்காததால், சாலையில் போக்குவரத்து மெலிந்திருந்தது. காரைப் பார்வையிலிருந்து நழுவ விடாமல் தொடர எளிதாயிருந்தது. கார் எரபாலுச் செட்டித் தெருவில் திரும்பியது. அங்கு ஒரு வங்கியின் பிரதான கிளையின் வாசலில் சாலையோரமாகச் சென்று நின்றது. காரிலிருந்து அந்த மனிதர் இறங்கினார். அங்கு ஏற்கனவே இன்னொரு கார் காத்திருந்தது. வெள்ளை நிற பி.எம்.டபிள்யூ கார். அந்தக் காரிலிருந்து இருவர் இறங்கினர். இருவரும் வெள்ளை உடுப்பு அணிந்திருந்தனர். டிரைவர்கள்!

அவர்களில் ஒருவன் அவர் ஓட்டிவந்த ஆடி காரில் ஏறி அமர்ந்தான். அடுத்தவன், பி.எம்.டபிள்யூவின் கதவைத் திறந்து பிடிக்க, அந்த மனிதர் ஏறி அமர்ந்தார். இரண்டு கார்களும் இடது வலது என்று எதிரெதிர் திசைகளில் புறப்பட்டன. சுகுமார் சற்றே குழம்பினார். இப்போது, எந்தக் காரைப் பின்தொடர வேண்டும்? காரை விடவும் நபர்தான் முக்கியம்..!

வெள்ளைக் காரைப் பின்தொடர்ந்தார். பி.எம்.டபிள்யூ ஒரு திருப்பத்தில் சற்று தயங்கியது. அந்தக் காரை ஒட்டி ஒரு மோட்டார் சைக்கிள் வந்து நின்றது. அதன் பதிவெண் 3366. சுகுமார் திடுக்கிட்டார். கடற்கரைக்கு வந்திருக்க வேண்டிய மோட்டார் சைக்கிள் இதுதானா? காரிலிருந்தவர், தான் கொண்டு வந்திருந்த கவரை வெளியில் நீட்ட, மோட்டார் சைக்கிளில் இருந்தவன் அதைப் பறித்துக்கொண்டான். மோட்டார் சைக்கிள் வேறு திசையில் பயணப்பட்டது. சுகுமார் மீண்டும் குழம்பினார். இப்போது எந்த வண்டியைப் பின் தொடரவேண்டும்..?

“நீங்க யாரு, உங்க பின்னணி என்ன, எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணும்னு எனக்கும் ஆசையா இருக்கு. ஸ்டேஷனுக்குப் போலாம், வாங்க...”

 (தொடரும்...)

-ஓவியம்:  அரஸ்