உறவெனும் திரைக்கதை



-ஈரோடு கதிர்

அதற்கும் காதல் என்றே பெயர்! உலகில் இதுவரை வாழ்ந்த, வாழும், வாழவிருக்கும் காதல்களைவிட... காதல் குறித்த சக மனிதர்களின் எண்ணங்கள், கருத்துகள், தீர்மானங்களின் வகை கூடுதலாயிருக்குமெனத் தோன்றுகிறது. அன்றாடம் எத்தனையெத்தனை கதைகள், கதறல்கள் கேட்கிறோம், நெகிழ்கிறோம், ஆச்சரியம் கொள்கிறோம். இயற்கையின் படைப்பில் இருபாலருக்கிடையே நிகழும் இந்தக் காதல், ஒரு பேரதிசய வசீகரம் கொண்டதுதான்.

11 வருடங்கள் போராடி, உயிரைப் பணயம் வைத்து, வாய்ப்புகள் பலவற்றைத் தியாகம் செய்து, காதல்தான் முக்கியமென திருமணம் செய்து கொண்டனர் அவர்கள். உழைப்பில் முன்னேறிய சூழலில் மகிழ்வாய், நம்பிக்கையாய்ப் போன தாம்பத்யத்தில் மனைவியே உலகம் என்றிருந்தவனுக்கு, மனைவிக்கு வேறொரு காதல் முளைத்திருப்பது தெரிய வருகிறது. மனம் நொந்து தற்கொலைக்கு முயன்றதன் பின்விளைவுகளும் அவன் வாழ்க்கையின் அங்கமாகியிருக்கின்றன.

திருமணத்திற்கு யாரும் பெண் தராத சூழலில், கணிசமான வயது வித்தியாசம் இருந்தும், அக்கா தன் மகளைக் கட்டி வைக்கிறாள். அம்மாவின், பாட்டியின் வார்த்தைகளுக்காக அந்தப் பெண்ணும் தன் கனவுகளனைத்தையும் கொன்று புதைத்துவிட்டு மாமாவைக் கட்டிக்கொண்டு மாமாவே உலகம் என்றிருக்கிறாள். ஏழு ஆண்டுகள் கடந்தன... தன்னிடம் பணியாற்றியவள் மேல் காதல் கொண்டு அதிகாரபூர்வமற்ற முறையில் திருமணம் செய்து ஆறு கிலோ மீட்டர் தள்ளி குடித்தனம் வைத்த அந்த மாமா, ‘‘என்ன வேணா சொல்லிக்குங்க... அவள் இல்லாமல் என் வாழ்க்கையில்லை’’ எனச் சொல்கிறான். மாமாவுக்காக தன் கனவுகளைக் காவு கொடுத்தவள் கூடுதலாய் மௌனம் சுமக்கிறாள்.

இப்படியான காதல்களுக்கு நேர் எதிரே, இவர்களின் பார்வையில் படாதபடியும் சில காதல்கள் இருக்கத்தானே செய்யும்! கிராமமும் நகரமும் அல்லாத அந்த ஊரில் பாரதியின் அப்பாதான் கல்லூரிப் படிப்பு படித்தவர். அரசு வேலைக்குப் போனவரும் அவர் மட்டுமே. அக்காவும் அண்ணனும் சுமாராகப் படிக்க, பாரதிக்கு படிப்பு மேல் பித்து. எல்லாவற்றிலும் முதலாவதாக வந்தாள். தன் தங்கையின் ஒரே மகன் வினோத்தை பாரதிக்கு திருமணம் செய்துவிடும் ஆசை அப்பாவுக்கு இருந்தது.

காலமும் பாரதிக்கும் வினோத்திற்கும் காதலைப் பூக்கச் செய்தது. முனைவர் பட்டத்திற்கு பாரதி பதிவு செய்தபோது, வினோத் சிவில் சர்வீஸ் தேர்வுத் தயாரிப்பில் முனைப்பாக இருந்தான். படிப்பில் கவனமாக இருந்ததால் திருமணம் குறித்த கவனம் கொண்டிருக்கவில்லை. ‘எங்கள் கடமையைச் செய்து விடுகிறோம், அப்புறம் நீங்கள் என்னவோ செய்து கொள்ளுங்கள்’ என திருமணத்திற்கு ஏற்பாடு செய்தார்கள்.

தத்தம் இலக்கிலிருந்த தீவிரத்தில் அவர்களுக்குத் திருமணம் பெரிதாக ஈர்ப்பைத் தரவில்லையென்றே சொல்லலாம். திருமணத்திற்கு மூன்று நாட்கள் முன்பு நிகழ்ந்த விபத்தொன்றில் வினோத் இல்லாமல் போனான். இடிந்து போனது குடும்பம். மூன்று நாட்கள் கழித்து திருமணத்திற்கு வரவேண்டியவர்கள் துக்கத்திற்கு வந்து அழுது தீர்த்தார்கள்.

அன்றே அடக்கம் செய்து, அடுத்த நாள் காரியம் செய்து, குறித்த முகூர்த்தத்தில் பாரதிக்கு திருமணம் செய்துவிடலாமா என அத்தனை சோகத்திலும் இரண்டு குடும்பமும் ஒத்த சிந்தனையில் பேச முயலும்போது, பாரதி அழுத அழுகை அந்த இரண்டு குடும்பத்தின் வேர் வரை ஆட்டியது. மிரண்டு போனது குடும்பம்.

வினோத் இறந்த இரண்டாம் வாரமே தன் முனைவர் பட்டத்திற்கான தயாரிப்பைக் கை விட்டாள் பாரதி. யாரும் எதுவும் கேட்கவில்லை. வினோத்தின் புத்தகங்கள் அனைத்தையும் எடுத்து வந்து, சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தன்னைத் தயார்படுத்த ஆரம்பித்தாள். வீடு அவளைப் புரிந்து கொண்ட மாதிரியும் நடந்து கொண்டது; புரியாதது போலவும் நடந்து கொண்டது. நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகி, மாதங்கள் ஆண்டுகளாக மாற மாற, குடும்பம் விதவிதமான வகைகளில் அவளுக்குத் திருமண ஏற்பாடுகள் செய்ய முயன்றது.

பிள்ளையைத் தொலைத்த அத்தைக்கும் மாமாவுக்கும் ‘வாழ்நாள் முழுதும் மகளாக இருப்பேன்’ என அவள் அறிவித்ததை என்னென்னவோ செய்தும் மாற்ற முடியவில்லை. பாரதிக்கு அத்தனை எளிதாய் இருக்கவில்லை சிவில் சர்வீஸ் தேர்வு அனுபவங்கள். முதல் நிலை, முக்கியத் தேர்வு, நேர்முகத்தேர்வு என மோதி மோதி தோற்றுத் திரும்பினாள். அக்கா, அண்ணன், அண்ணி, அப்பா, அம்மா, அத்தை, மாமா என எல்லோரும் எல்லா வகையிலும் அறிவுரை சொல்லிப் பார்த்தார்கள்.

எப்போதும் இயல்பாக இருக்கும் பாரதி, தன் முடிவு குறித்து யார் என்ன சொன்னாலும், செய்தாலும், வினோத் மரணத்திற்கு அழுத அதே அழுகையை அழுதாள். வேறு வழியின்றி வீடு மௌனம் காத்தது. அவளுக்கே நம்பிக்கையற்றுவிடுமோ என எல்லோரும் அச்சம் கொண்டிருந்த காலத்தில், அவளுக்கு கடைசி வாய்ப்பு வந்தது. வினோத்தின் கனவு வென்றது. தேர்வு முடிவு வந்த தினத்தில் உறங்கச் சென்றவள், சுமார் பதினான்கு மணி நேரம் முதன்முறையாக தொடர்ந்து உறங்கியெழுந்தாள்.

இன்றும் இரு குடும்பமும், ‘பாரதி தனக்கென்று ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள மாட்டாளா’ எனக் காத்திருக்கிறார்கள். அவள் ஒரு மக்களின் அதிகாரியாக தன் அதிகாரத்தை மிக நேர்த்தியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறாள். எப்போதும் புன்னகைக்கிறாள். சுமார் அரை நூற்றாண்டுகளுக்கு முந்தைய கேரளத்தின் முக்கம் கிராமத்தில் இருக்கும் மாதவனின் ஆறு பிள்ளைகளில் அதிசயமானவள் காஞ்சனமாலா. வெளியூரில் சென்று விடுதியில் தங்கி மருத்துவம் படிக்கும் அந்த கிராமத்துக் கனவின் பெருமைக்குரிய ஒரே சாத்தியம்.

குடும்ப நட்பாய் இருக்கும் சுல்தான் சாயபு, மாதவனுக்காக கோயிலுக்கு வருவதை நிறைவாகக் கருதுகிறார். சம்பிரதாயமும் மதமும் ஊறிய அவர் நெற்றியில் பூசாரி இடும் குங்குமத்தை ஏற்றுக் கொள்வதில் சங்கடப்படுவதில்லை. நெகிழும் மாதவனிடம், ‘‘சாதியும் மதமும் கடவுளுக்கு ஏது’’ என்கிறார்.

சுல்தான் சாயபுவின் ஒரே வாரிசான மொய்தீனுக்கு காஞ்சனாவோடு காதல் பூக்கிறது. மொய்தீனும், காஞ்சனாவின் அண்ணன் சேதுவும், காஞ்சனாவின் முறைப்பையன் அப்புப்பேட்டனும் கால்பந்து விளையாட்டு நண்பர்கள். கடிதங்களில் காதல் காவியமாய் வளர்கிறது. மொய்தீனுக்கு திருமண ஏற்பாடு நடக்க, ‘‘எனக்கு கல்யாணம் என ஒன்று நடந்தால் அது காஞ்சனாவோடுதான்’’ என மொய்தீன் அறிவிக்க, சுல்தான் சாயபு அவனை  அடித்து மிரட்டி வீட்டை விட்டு விரட்டுகிறார்.

காஞ்சனா வீட்டில் கடிதமொன்று பிடிபட, அவளின் மருத்துவக் கனவு, உடற்கூறாய்வின்றி  சவக்கிடங்கில் கிடத்தப்பட்டு விடுகிறது. வீட்டுச் சிறைக்குள் சிறகுகள் முடக்கப்படும் காஞ்சனாவிற்கு திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. “நான் மொய்தீனின் மனைவி, இனி நடந்தால் அது இரண்டாம் கல்யாணம்” என விதவை ஆடையுடுத்தி மாப்பிள்ளை வீட்டார் முன் நின்று தன் உறுதியைக் காட்டுகிறாள்.

காலம் கரைந்தோடுகின்றது. காஞ்சனாவைப் பூட்டிய கதவு திறப்பதாயில்லை. வெகு அரிதான சந்திப்புகள் நிகழ்கின்றன. ‘‘இந்த ஊர் வழியே செல்லும் இருவழிஞ்சி ஆறு, எத்தனை தடைகள் இருந்தாலும் அரபிக்கடலில் சென்று சேர்வது போலவே நம் காதலும் சேரும்’’ என்கிறான் மொய்தீன். காதல் நெகிழ்ந்து இறுகுகிறது. தங்களுக்கு மட்டுமே புரியும் சங்கேத மொழியை உருவாக்குகிறார்கள். விதவிதமான முயற்சிகளில் கடிதம் பரிமாறிக்கொள்கிறார்கள். கார் ஒலிப்பான் ஓசை கூட சங்கேத மொழியாகிறது.

‘கடவுளுக்கு சாதியுமில்லை மதமுமில்லை’ எனச் சொன்ன சுல்தான், ‘‘காஞ்சனாவோடு வெளிநாடு செல்வேன்’’ எனச் சொல்லும் மொய்தீனை கத்தியால் குத்திச் சரித்து காவல் நிலையத்தில் சரண் அடைகிறார். தன்னை யாரும் குத்தவில்லை என மொய்தீன் அவரை விடுவிக்கிறான். மொய்தீனின் அம்மா வீட்டை விட்டு வெளியேறுகிறாள். இருபதாண்டுகள் கடந்தோட இளமை தீர்ந்து கரைகின்றது. சகோதரிகள் திருமணம், சகோதரன் மரணம் என எல்லாம் கடந்து, இணைந்து விடலாம் என காஞ்சனா சம்மதிக்கும்போது இருவழிஞ்சி ஆறு மொய்தீன் உயிரைப் பருகுகிறது. தற்கொலைக்கு முயலும் காஞ்சனாவை மொய்தீனின் அம்மா தடுக்கிறார்.

மொய்தீனோடு ஒருபோதும் வாழ்ந்திடாத காஞ்சனாவை விதவை மருமகளாக தன் வீட்டிற்கு அழைத்துப் போகிறார். 2015ல் மலையாளத்தில் ‘என்னு நிண்டே மொய்தீன்’ என்ற திரைப்படமாக வந்தாலும், இது 1960களில் முக்கத்தில் நடந்த உண்மைக் கதை. இன்றும் மொய்தீன் குடும்பச் சொத்துகளைக் கொண்டு மொய்தீன் பெயரில் அறக்கட்டளை நடத்தி உதவி செய்து வருகிறார் காஞ்சனமாலா.

‘காதல் என்பது ஹார்மோன்களின் விருப்பமா? இயற்கையின் நியதியா? காலத்தின் கோலமா?’ என்பதையெல்லாம் கடந்து, காதல் என்பது இதுதான் என வரையறுக்க முடியாமல் இருப்பதே அதன் பலமும் பலவீனமும். இப்படி பலமும் பலவீனமும் ஒருங்கே இருப்பதால்தான் காதல் இத்தனையாண்டு காலமும் உயிரோட்டமாய் இருக்கின்றது. காதல் குறித்து மேலோட்டமான பார்வையில் எத்தனை கோடிக் கதைகள். காவியத்தனமேற்றி எத்தனை கோடிக் கதைகள். இந்தக் கதைகளின் வேலிகளைத் தாண்டி காதல் புதிது புதிதாகப் பூத்துக்கொண்டேதான் இருக்கின்றது. எல்லாக் காதல்களுக்கும் ‘காதல்’ என்றுதான் பெயர். என்ன செய்ய!

‘‘இந்த ஊர் வழியே செல்லும் இருவழிஞ்சி ஆறு, எத்தனை தடைகள் இருந்தாலும் அரபிக்கடலில் சென்று சேர்வது போலவே நம் காதலும் சேரும்!’’

‘காதல் என்பது ஹார்மோன்களின் விருப்பமா? இயற்கையின் நியதியா? காலத்தின் கோலமா?’ என்பதையெல்லாம் கடந்து, காதல் என்பது இதுதான் என வரையறுக்க முடியாமல் இருப்பதே அதன் பலமும் பலவீனமும்.

(இடைவேளை...)
-ஓவியங்கள்:
ஞானப்பிரகாசம் ஸ்தபதி