அகதிகள் அணி!



அவர்களுக்கு அடையாளம் காட்ட தேசமில்லை; எனவே தேசியக் கொடியும் இல்லை, தேசிய கீதமும் இல்லை. வீடே இல்லை என்பதால் நாடும் இல்லை. வேர்களை ஊன்ற மண்ணின்றி அந்தரத்தில் பரிதவிக்கும் துளிர்ச்செடி போன்றவர்கள் அகதிகள். ரியோ ஒலிம்பிக்ஸில் முதல்முறையாக அகதிகள் அணி ஒன்று பங்கேற்கும் புதுமை நிகழ்ந்திருக்கிறது. சிரியா, தெற்கு சூடான், எத்தியோப்பியா, காங்கோ ஆகிய நாடுகளின் 10 பேர் இந்த அணியில் உள்ளனர்.

கோடிகளைச் செலவழித்து உயர்தரப் பயிற்சி பெறும் மற்ற வீரர்களுக்கு மத்தியில் இவர்கள் உயிரோட்டமான பயிற்சியோடு ஒலிம்பிக் போகின்றனர். துரத்தும் துப்பாக்கி எதிரிகளிடமிருந்து உயிர் பிழைக்க ஓடியவர்களுக்கு ஓட்டப்பந்தயம் என்பது சாதாரணம்; ஒரு கடல் தாண்டினால்தான் ஜீவித்திருப்பது நிச்சயம் என்றானபிறகு, அதை நீந்திக் கடந்தவருக்கு நீச்சல் போட்டி அர்த்தமற்றதாகிவிடும். இந்த 10 பேரும், ‘‘வெற்றி, தோல்வி என்பதைத் தாண்டி, எம் மக்களின் வலியையும் கனவுகளையும் இந்த உலகுக்கு உணர்த்துவதே நோக்கம்’’ என்கிறார்கள்.

யிக் புர் பியல்... தெற்கு சூடானைச் சேர்ந்த இவர், 10 வயதில் ஓட்டம் பழகியவர். கொலைகார வீரர்கள் படை ஊரைச் சுற்றி வளைத்ததும் குடும்பத்தோடு பக்கத்தில் இருந்த காட்டுக்குள் ஓட நேர்ந்தது. அம்மா, இரண்டு அக்காக்கள், ஒரு தம்பி என குடும்பமே ஊரோடு சேர்ந்து அங்கே பதுங்கியது. அப்பா இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதுபோன்ற ஒரு தாக்குதல் நேரத்தில் ஊரை விட்டு ஓடியவர்தான்.

உயிரோடிருக்கிறாரா, இறந்துவிட்டாரா என யாருக்கும் தெரியாது. உணவின்றி, குடிக்கத் தண்ணீர் இன்றி, தூக்கமின்றி புதர்களுக்குள் 3 நாட்கள் பதுங்கிக் கிடக்க நேர்ந்தது. மரங்களில் கிடைத்த காய்களையும் கசக்கும் இலைகளையும் தின்று எல்லோரும் உயிரைப் பிடித்து வைத்திருந்தனர். 19 மைல் தூரம் நடந்து போனால் எத்தியோப்பியா எல்லையை அடையலாம். ஆனால் பெருங்கூட்டமாகப் போக முடியாது. எதிரிப் படைகள் பார்த்தால் கொன்றுவிடக்கூடும்.

அப்படி ரிஸ்க் எடுக்க நினைத்த ஒரு கூட்டத்தோடு செல்ல முடிவெடுத்தார் பியலின் அம்மா. ஆனால் அவரால் மூன்று பேரை மட்டுமே கூட்டிச் செல்ல முடியும். பெண்களை விட்டுச் செல்ல முடியாது. கைக்குழந்தையையும் விட முடியாது. ‘‘புரிந்துகொள் கண்ணா! நீ பெரிய பையன்’’ என்று கண்ணீரோடு சொல்லி, பக்கத்து வீட்டுக்காரரின் பொறுப்பில் பியலை விட்டு விட்டு அம்மா பிரிந்தார். அதுதான் பியல் தன் அம்மாவையும் சகோதரிகளையும் கடைசியாகப் பார்த்த நொடி.

அந்தப் பயணத்தையும் தூரத்தையும் எதிரிகளையும் கடந்து அவர்கள் பிழைத்திருக்கிறார்களா என்பது பியலுக்கு இப்போதுவரை தெரியாது. அம்மாவின் பிரிவு தாங்காமல் அழுதது மட்டும் இன்னும் மிச்சமிருக்கிறது. சில நாட்களில் ஊரிலிருந்து எதிரிப் படைகள் போய்விட்டன என தகவல் வந்தபோது, மற்றவர்கள் ஊர் திரும்பினர். பக்கத்து வீட்டுக் குடும்பத்தோடு திரும்பிய பியல், தன் வீடு இருந்த இடத்தில் பார்த்தது வெறும் சாம்பல் குவியலைத்தான். ஆடு, மாடு என எல்லாவற்றையும் கொள்ளையடித்துச் சென்றிருந்தவர்கள், வீடுகளைக் கொளுத்தி விட்டனர்; ஓட முடியாமல் வீடுகளில் தங்கிய முதியவர்களைக் கொன்றிருந்தனர்.

விஷயம் கேள்விப்பட்டு ஐ.நா அமைதிப்படை ஊருக்கு வந்தது. அந்த பக்கத்து வீட்டு அம்மாவுக்கு இரண்டு பிள்ளைகள்; கணவரை எதிரிகள் கொன்றிருந்தனர். அந்த சூழலிலும் பியலை தன் மூன்றாவது மகனாக அடையாளம் காட்டி தன்னோடு அகதி முகாமுக்கு அழைத்துச் சென்றார். கூடாரங்களில் வாழ்ந்து, கிடைப்பதைத் தின்று ஜீவிக்க வேண்டிய நிலையிலும் தன் மீது அவர் காட்டிய தாய்ப்பாசம் பியலை நெகிழ வைத்திருக்கிறது.

‘‘நான் அம்மா என அவரைத்தான் அழைக்கிறேன். தன் பிள்ளைகளிலிருந்து அவர் என்னை வித்தியாசம் பார்த்து பிரிப்பதில்லை. எனக்கு வெற்றியோ, பணமோ, எது கிடைத்தாலும் அதை அவர்களுக்குத்தான் கொடுப்பேன். இப்படித்தான் நான் நன்றிக்கடன் செலுத்த முடியும்’’ என்கிறார் பியல்.

யுஸ்‌ரா மார்தினி... சிரியா நாட்டின் 18 வயது நீச்சல் வீராங்கனை. சிறு வயதிலிருந்து நீச்சல் பழகியவர். குண்டுமழை பொழிந்து டமாஸ்கஸ் நகரையே தரைமட்டமாக்கிய தாக்குதலிலிருந்து தப்பித்து, ஒரு ஓட்டைப் படகில் 20 பேரோடு சேர்ந்து மத்திய தரைக்கடல் தாண்டி அகதியாக வந்தார். வழியில் படகு கவிழும் நிலை ஏற்பட, இவரும் இவரது சகோதரியும் கடலில் குதித்து, படகைத் தள்ளித் தள்ளி கிரீஸ் நாட்டுக்கு மற்றவர்களை பத்திரமாகக் கூட்டி வந்து சேர்த்தார்கள்.

‘‘நான் நீச்சல் கற்றதற்கு அர்த்தம் உணர்ந்த நாள் அது. நீச்சல் தெரியாத மற்றவர்களில் யாரை நான் சாக விட்டிருந்தாலும் எனக்கு அவமானம் ஆகியிருக்கும். அந்தப் பயணத்தைவிட ஒலிம்பிக் பதக்கம் பெரிதல்ல. ஆனாலும் வலிகளையும் புயல்களையும் கடந்து ஒரு வசந்தம் வரும் என்பதை என் போன்றவர்களுக்கு உணர்த்த இந்த வாய்ப்பு தேவைப்படுகிறது’’ என்கிறார் யுஸ்‌ரா.         

யோலாண்டே மபிகா. காங்கோ நாட்டைச் சேர்ந்த 28 வயது வீராங்கனை. ஒரு குழந்தையாக உள்நாட்டுக் கலவரத்தில் உயிர் பிழைக்க ஓடியபோது, குடும்பத்திலிருந்து பிரிந்து அகதிகள் முகாமுக்கு வந்தவர். குடும்பத்தைப் பிரிந்த வலியும் அழுகையுமாக ஆதரவற்ற குழந்தைகளோடு சேர்ந்து வளர்ந்தவர், தன் துக்கத்தை மறந்து உள்ளத்தை உறுதியாக்க ஜூடோ கற்றார். பிரேசில் நாட்டில் தஞ்சம் அடைந்திருக்கும் மபிகா, ‘‘ஜூடோ எனக்கு பணம் சம்பாதித்துக் கொடுக்கவில்லை.

ஆனால் மனவலிமை கொடுத்திருக்கிறது. ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. இல்லாவிட்டாலும், என்னை அடையாளம் கண்டுகொண்டு என் குடும்பத்தினர் எங்கிருந்தாவது என்னைத் தொடர்பு கொண்டால், அதுவேகூட போதும்’’ என்கிறார் நெகிழ்ச்சியோடு!

அகதிகள் முகாம்களிலிருந்து 43 பேரை இறுதி செய்து, அவர்களுக்கு சுமார் 9 மாத கால பயிற்சி கொடுத்து, சர்வதேச ஒலிம்பிக் கழகம் இந்த 10 பேரை போட்டியில் பங்கு பெறச் செய்திருக்கிறது. மற்ற வீரர்களுக்கு ஒரு பதக்கம் என்பது வாழ்நாள் கனவாக இருக்கலாம்; இவர்களுக்கு வாழ்வதே கனவுதான். தவறான இடத்தில், தவறான நேரத்தில் பிறக்க நேர்ந்த விதியின் விபத்து தவிர, இவர்கள் அகதியானதில் இவர்களின் தவறொன்றுமில்லை! முதல்முறையாக உயிருக்குப் பயந்து ஓடாமல், உயிர் காக்க நீந்தாமல், ஒரு போட்டியில் அதைச் செய்கிறார்கள் இவர்கள்!

அகதிகளின் யுகம்!

* உலகெங்கும் 6 கோடியே 53 லட்சம் பேர் அகதிகளாக பரிதவிக்கிறார்கள். மனிதகுல வரலாற்றில் அதிகம் பேர் அகதிகளாக இருப்பது இப்போதுதான். பேரழிவை ஏற்படுத்திய இரண்டாம் உலகப் போர்கூட இவ்வளவு அகதிகளை உருவாக்கியதில்லை.
* இந்த உலகில் வாழும் 113 பேரில் ஒருவர் அகதியாக சொந்த மண்ணிலிருந்து துரத்தப்பட்டிருக்கிறார்.
* உள்நாட்டுப் போர், இனக்குழு மோதல், கலவரம், வன்முறை, கடத்தல் என அகதிகள் ஓடி வருவதற்கு பல காரணங்கள்.
* சிரியாவில் நிகழும் உள்நாட்டுப் போர்தான் அதிகபட்ச அகதிகளை உருவாக்கியுள்ளது. இராக், தெற்கு சூடான், புருண்டி, ஏமன் ஆகிய நாடுகளும் கணிசமான மக்களை அகதியாக்கியுள்ளன.
* கடந்த ஓராண்டில் மட்டும் 58 லட்சம் பேர் புதிதாக அகதிகளாக மாறியுள்ளனர்.
* சுமார் 4 கோடி பேர் சொந்த நாட்டிலேயே அகதிகளாக முகாம்களில் தங்கியுள்ளனர்.
* பசி அறிந்தவன்தான் தன் உணவை இன்னொரு ஏழையுடன் பகிர்கிறான். உலகின் வறிய நாடுகள்தான் அதிக அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளன. ஜோர்டான், துருக்கி, பாலஸ்தீனம், பாகிஸ்தான், லெபனான் ஆகிய 5 நாடுகள் சுமார் 1 கோடியே 17 லட்சம் அகதிகளுக்கு தஞ்சம் கொடுத்துள்ளன.
* ஜெர்மனி, அமெரிக்கா, பிரான்ஸ், சீனா, பிரிட்டன் ஆகிய 5 பணக்கார நாடுகள் வெறும் 21 லட்சம் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளன.

- அகஸ்டஸ்