ஜி.எஸ்.டி...சாதகமா? பாதகமா?



கிட்டத்தட்ட குருப்பெயர்ச்சி மாதிரி ஆகிவிட்டது ஜி.எஸ்.டி மசோதா. அது நமக்கு சாதகமா? பாதகமா? இனிமேல் அது எப்படியெல்லாம் நம்மை ஆட்டுவிக்கப் போகிறது? எனக் கவலை தோய்ந்த கேள்விகள் அனைவர் மனதிலும். சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் இந்த ஜி.எஸ்.டி., ‘ஒரே நாடு ஒரே வரி’ எனும் தாரக மந்திரத்தின் அடிப்படையில், இதுவரை இருந்துவந்த மறைமுக வரிகள் அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரப் போகிறது. ‘இதனால் பொருட்களின் விலை உயர்ந்து மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்’ எனவும், ‘இல்லை... ஜி.எஸ்.டியால் வணிகம் விறுவிறுப்படையும்’ எனவும் வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. எது நிஜம்? இதோ ஒரு விவாதம்...

நம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஒரு பொருளுக்கு கலால் வரி, மதிப்பு கூட்டு வரி, சேவை வரி, மற்றொரு மாநிலத்துக்கு எடுத்துச் செல்ல நுழைவு வரி, இறக்குமதி பொருட்களுக்கு சுங்க வரி என பல்வேறு வரிகளை இப்போது வணிகர்கள் செலுத்தி வருகின்றனர். இப்படி வரிக்கு மேல் வரி என்பதற்குப் பதிலாக ஒரே வரி என்பதுதான் ஜி.எஸ்.டி. ஆனால், அந்த வரி எத்தனை சதவீதம் என்பதுதான் இப்போது மில்லியன் டாலர் கேள்வி. அது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

ஜி.எஸ்.டி 18 முதல் 20 சதவீதமாக இருக்கலாம் என்கிறார்கள். 17-18 சதவீத ஜி.எஸ்.டி வரலாம் என்கிறது மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் தலைமையிலான குழு. ‘‘இது குறைந்தபட்ச அளவான 18 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டால் கூட தொழில்துறை பெருமளவில் பாதிக்கப்படும்!’’ என்கிறார் தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் கே.கே.ராஜன். ‘‘இப்போது எஞ்சினியரிங் சம்பந்தமான பொருட்களுக்கு வாட் உட்பட 12 சதவீதம் வரை வரி செலுத்தி வருகிறோம். அவற்றுக்கு பதில் ஜி.எஸ்.டி வரி 18 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டால் மொத்தமாக ஆறு சதவீதம் கூடும்.

அது வாடிக்கையாளர்கள் தலையில்தான் போய் விடியும். எனவேதான் ஜி.எஸ்.டி வரியை 12 சதவீதத்துக்குள் விதிக்க நாங்கள் அரசுக்குக் கோரிக்கை வைத்திருக்கிறோம்!’’ என்கிறார் அவர். கோவை கொடிசியா அமைப்பின் தலைவர் சுந்தரம் இதில் இன்னும் ஆழம் போகிறார். ‘‘ஜி.எஸ்.டி வரி வந்தால் அதில் கிட்டத்தட்ட பாதிக்குப் பாதி மாநில ஜி.எஸ்.டி என்ற பெயரில் மாநில அரசுக்குப் போகும். மறுபாதிதான் சென்ட்ரல் ஜி.எஸ்.டியாக மத்திய அரசுக்குப் போகும். இப்போது சிறு தொழில்களைப் பொறுத்தவரை வருடத்துக்கு ஒன்றரை கோடி ரூபாய் வரை வர்த்தகம் செய்தால் மத்திய கலால் வரி கிடையாது. வெறும் விற்பனை வரிதான்.

அது 14.5 சதவீதம்தான். ஜி.எஸ்.டி மசோதாவின்படி ஆண்டுக்கு பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் வர்த்தகம் செய்தாலே அவர் ஜி.எஸ்.டி கட்ட வேண்டும். 14.5 சதவீத விற்பனை வரி மட்டுமே செலுத்தி வந்த சிறு தொழில்முனைவோர், 18 சதவீதம் ஜி.எஸ்.டி வரி செலுத்த வேண்டும் என்றால் துவண்டு போவார்கள்!’’ என்கிறார் அவர்.

இந்த ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையையே ஒட்டுமொத்தமாக எதிர்க்கிறார் வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன். ‘‘இதுவரை 325 பொருட்கள் வரி விலக்கின் கீழ் வருகின்றன. ஜி.எஸ்.டி மசோதாவின்படி இனி அவற்றுக்கும் வரி செலுத்த வேண்டி வரும். இது மொத்த வணிகர்களையும் பாதிக்கும். மேலும் நம் நாட்டு சிறு வணிகர்கள் கணினி பயன்பாடு தெரியாதவர்கள். முன்பு கொள்முதல் கணக்கு, விற்பனைக் கணக்கு, சரக்கு இருப்பு ஆகியவற்றை வருடம் ஒருமுறை தாக்கல் செய்து வந்தனர்.

ஜி.எஸ்.டி வந்தால் அவற்றை மாதம் ஒரு முறையோ அல்லது இரு முறையோ தாக்கல் செய்ய வேண்டும்! ஆக, உள்நாட்டு வணிகத்தை சீரழிக்க வேண்டுமென்றே இந்த வரி விதிப்பைக் கொண்டு வருகிறார்கள். வெளிநாட்டு நிறுவனங்கள் வளர்ச்சியடைவதற்காக மோடி செய்யும் மோசடி இது!’’ என்கிறார் அவர் கோபமாக!

வழக்கறிஞரும், வரி ஆலோசகருமான வைத்தீஸ்வரன் லேசான ஆதரவுக் குரலை ஜி.எஸ்.டிக்குத் தருகிறார். ‘‘ஆஸ்திரேலியா, கனடா போன்ற பல நாடுகளில் ஜி.எஸ்.டி முறை இருக்கிறது. முதலில் அங்கெல்லாம் சிக்கல்கள் எழுந்தாலும் இப்போது சீராகிவிட்டன. அதே நிலை இங்கும் ஏற்படலாம். ஒரு பெரிய மாற்றம் நிகழும்போது இப்படியான எதிர் விளைவுகள் வருவது சகஜம். ஆனால், இந்த ஜி.எஸ்.டி அத்தியாவசியமானது.

இது மிகப்பெரும் சீர்திருத்தம்!’’ என்கிற அவர், இந்த வரிவிதிப்பு முறையில் பல சிக்கல்கள் இருப்பதாகவும் சொல்கிறார். ‘‘முதலில், இதை எப்படிக் கொண்டு செல்லப் போகிறார்கள், எல்லோரும் இதற்கு உடன்படுவார்களா? எனப் பல கேள்விகள் எழுகின்றன. காரணம், சிறு வணிகர்களால் ரிட்டன் தாக்கல் செய்ய முடியாது. அதற்குப் பணியாளர்கள், உபகரணங்கள் என செலவு அதிகரிக்கும். இப்போது சேவை வரி 15 சதவீதம்தான்.

அது போய் 18 சதவீத ஜி.எஸ்.டி வந்தால் இன்சூரன்ஸ், டெலிகாம் உள்ளிட்ட சர்வீஸ் செக்டார்களின் கட்டணம் அதிகரித்து வாடிக்கையாளர்களை பாதிக்கும். இதனால், முதியோர் உள்ளிட்ட சொற்ப வருமானமுள்ளவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். இந்தப் பிரச்னைகள் எல்லாம் தீர்க்கப்பட்டால் ஜி.எஸ்.டி நம் நாட்டுக்கு வளர்ச்சிதான்’’ என்கிறார் அவர் முடிவாக!

உண்மையில் இது மக்களின் வரிப்பணத்தை மத்திய, மாநில அரசுகள் பிரித்துக் கொள்வதற்கான போட்டா போட்டிதான். ‘ஐந்து வருடங்களுக்கு மாநில அரசுகளுக்காக வரி இழப்பீட்டை மத்திய அரசு வழங்கும்’ என தாஜா செய்து மசோதாவை நிறைவேற்றியிருக்கிறார்கள். அது முறையாக வழங்கப்படுமா? ஐந்து வருடங்களுக்குப் பிறகு என்னாகும்? என்பன போன்ற கேள்விகளும் விவாதத்தில் உள்ளன. அனைத்துக்கும் விடை அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் தெரிந்துவிடும்!

குடிசைத் தொழில்கள் அழியும்?

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொருளாதாரப் பேராசிரியர் அருண்குமார், ‘‘ஜி.எஸ்.டி என்பது சிறுதொழில்களை அழித்துவிடும்’’ என எச்சரிக்கிறார். ‘‘இந்தியாவில் சிறு மற்றும் குறு தொழில்கள்தான் 93 சதவீதம் பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருகின்றன. பெரிய பிராண்ட் பெயர் இல்லாமல், உள்ளூர் மார்க்கெட்டுக்காக பொருட்களைத் தயாரித்து விற்கும் இதுபோன்ற சிறு நிறுவனங்கள், இந்தியா முழுக்க ஒரே மார்க்கெட்டாக மாறும்போது காணாமல் போய்விடும் அபாயம் இருக்கிறது.

இதனால் பெருமளவு வேலை இழப்பு ஏற்படும். சர்வதேச பிசினஸ் நிறுவனங்கள் நன்கு சம்பாதிக்க முடியும். ஆனால் அவர்கள் பெரிய வேலைவாய்ப்பைத் தர மாட்டார்கள்’’ என்கிற அவர், ஜி.எஸ்.டி.யால் விலைவாசி குறையும் என்ற வாதத்தையும் மறுக்கிறார். ‘‘ஏற்கனவே மதுபானங்கள், புகையிலை மற்றும் பெட்ரோலிய பொருட்கள் ஜி.எஸ்.டி வரம்பிலிருந்து நீக்கப்பட்டுவிட்டன. பல மாநில அரசுகளின் வற்புறுத்தலால் மேலும் பல பொருட்களும் இப்படி ஆகக்கூடும். அதிகம் மக்கள் பயன்படுத்தும் தொலைபேசி, போக்குவரத்து, ஹோட்டல், இன்சூரன்ஸ் என அத்தியாவசியமானவற்றின் வரி உயர்வது பெரும் நெருக்கடி தரும்’’ என்கிறார் அவர்.

ஜி.எஸ்.டி. கடக்க வேண்டிய பாதை!

ஜி.எஸ்.டி உடனடியாக அமலுக்கு வராது. அது கடக்க வேண்டிய பாதை அதிகம் என்கிறார் வைத்தீஸ்வரன்.
* லோக்சபாவிலும், ராஜ்ய சபாவிலும் மீண்டும் செய்யப்பட்ட திருத்தங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு ஒருமித்த முடிவு எட்டப்பட வேண்டும்.
* லோக்சபாவில் ஒப்புதல் அளித்த பிறகு, ஒவ்வொரு மாநில சட்டசபை யிலும் இந்த மசோதா குறித்து விவாதம் நடத்தப்படும். குறைந்தபட்சம் 15 மாநிலங்களிலாவது இந்தத் தீர்மானம் நிறைவேறினால்தான் அமலுக்கு வரும்.
* அடுத்து, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டு சட்டமாக மாற்றப்படும்.
* இதேபோல் ஒவ்வொரு மாநிலமும் சொந்த ஜி.எஸ்.டி சட்டத்தை இயற்ற வேண்டும்.
* அதன்பிறகு மத்திய, மாநில அரசுகளின் அமைச்சர்கள், அதிகாரிகள் கொண்ட ஜி.எஸ்.டி. கவுன்சில் 60 நாட்களுக்குள் அமைக்கப்படும். இந்தக் குழுவே ஜி.எஸ்.டி எத்தனை சதவீதம் என்பதையும், அதில் மத்திய, மாநில அரசுகளுக்கு எவ்வளவு பங்குகள் என்பதையும் முடிவு செய்யும்.

- பேராச்சி கண்ணன்