வெங்காய பஜ்ஜியும் ஃபில்டர் காபியும்தான் ஸ்லிம் சீக்ரெட்!



-இஷா தல்வார்

‘‘சுதந்திர தினத்தை என்னால மறக்கவே முடியாது. எப்பவும் ரொம்ப கண்டிப்பா ‘படி... படி...’னு சொல்ற எங்க அப்பாவே, அன்னைக்கு டி.வியில் வர்ற சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சிகளைப் பார்க்கச் சொல்வார். அதிலிருந்து கேள்வியெல்லாம் கேட்டு பரிசு தருவார்!’’ - செம ஹேப்பி மூடில் பேசுகிறார் இஷா தல்வார். மலையாளத்தில் மம்மூட்டி, நிவின்பாலி, பஹத் ஃபாசில் என டாப் ஹீரோக்களின் ஃபேவரிட் ஹீரோயின். தமிழில் ‘தில்லுமுல்லு’வுக்குப் பிறகு, ‘மீண்டும் ஒரு காதல் கதை’க்காக சென்னை வந்திருந்தார் இஷா.

‘‘ ‘மீண்டும் ஒரு காதல் கதை’யில் நீங்க எப்படி..?’’
‘‘மலையாளத்தில் நான் அறிமுகமான ‘தட்டத்தின் மரையத்து’ படம்தான், தமிழ்ல ‘மீண்டும் ஒரு காதல் கதை’யா ரீமேக் ஆகியிருக்கு. அங்கே அந்தப் படம் நல்ல ஹிட். இந்த இஷாவுக்கு அவிட தேசத்து ரசிகர்களின் அபரிதமான அன்பு கிடைக்க அந்தப் படம்தான் காரணம். தமிழிலும் அப்படி ஒரு இடத்தை இந்தப் படம் வாங்கித் தரும்னு நம்பறேன். ‘மீண்டும் ஒரு காதல் கதை’னாலே பொள்ளாச்சியில் நடந்த ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வரும்.

அங்கே ஒரு ஹோட்டல்ல தங்கியிருந்தேன். காலையில ஷூட்டிங் போயிட்டு, சாயங்காலம் என்னோட ரூமுக்கு வந்து பார்த்தால், பிஸ்கட் பாக்கெட், ட்ரை ஃப்ரூட்ஸ் பேக் எல்லாம் திறந்து இருந்துச்சு. மறுநாளும் அதே மாதிரி இருந்ததை பார்த்ததும் ஷாக் ஆகி விசாரிச்சேன். ‘எலி’னு சொன்னாங்க. எனக்கு தமிழ் தெரியாததால ‘யார் அந்த எலி... நீங்களா? நீங்களா?’னு ஒவ்வொருத்தர்கிட்டேயும் கேட்டுக்கிட்டே இருந்தேன்.

கடைசியில அது ‘ரேட்ஸ்’னு தெரிஞ்சதும்தான் நிம்மதி ஆச்சு. ‘தட்டத்தின் மரையத்து’வில் நான் பண்ணின அதே கேரக்டரைத்தான் இப்போ தமிழிலும் பண்ணியிருக்கேன். ஆனா, அந்தப் படம் நடிச்சு நாலு வருஷ இடைவெளிக்குப் பிறகுதான், இந்தப் படத்தில் நடிச்சேன். இந்த கேப்ல நான் மலையாளத்தில் பத்து படங்கள் பண்ணியாச்சு. அனுபவங்கள் எனக்குக் கை கொடுத்திருக்கு!’’

‘‘ ‘மீண்டும் ஒரு காதல் கதை’யை விடுங்க... உங்க ரியல் காதலைச் சொல்லுங்க!’’
‘‘லவ் பிடிக்கும். காலேஜ் படிக்கறப்போ எனக்கு நிறைய லவ் ப்ரபோசல்ஸ் வந்திருக்கு. ஒரு ரோஸ் டே அன்னிக்கு ஒரு பையன் ஒரு சிங்கிள் ரோஸ் நீட்டி காதல் கவிதைகள் சொல்ல ஆரம்பிச்சிட்டான். ‘லவ்னாலே எனக்கு பிடிக்காது பாஸ்’னு அவன்கிட்ட பொய் சொல்லிட்டேன்!’’

‘‘மலையாளத்தில் மம்மூட்டியோட ரெண்டு படங்கள் நடிச்சிட்டீங்க...’’
‘‘யெஸ். ‘பால்யகால சகி’, ‘பாஸ்கர் தி ராஸ்கல்’னு ரெண்டு படங்கள் பண்ணியிருக்கேன். மம்மூட்டி சார் ரொம்ப அமைதியானவர். ஆனா, நான் அப்படியில்ல. நிறைய பேசுவேன். அவர்கிட்ட தொண தொணனு ஏதாவது கேட்டுக்கிட்டே இருப்பேன். எல்லாத்துக்கும் அவர் ரொம்ப பொறுமையா பதில் சொல்வார். அதே மாதிரி நிவின்பாலி கூடவும்  ரெண்டு படங்கள் பண்ணிட்டேன். ‘பிரேமம்’ படத்துக்கு அப்புறம் அவர் ரொம்பப் பெரிய அளவில் ரசிகர்களை சேர்த்து வச்சிருக்கார்!’’

‘‘உங்களைப் பத்தின இன்ட்ரோ...’’
‘‘நான் மும்பை பொண்ணு. அங்கே எகனாமிக்ஸ் படிச்சேன். காலேஜ்ல படிக்கறப்பவே மாடலிங் வந்துட்டேன். நிறைய விளம்பரப் படங்கள்ல நடிச்சிருக்கேன். அனில் கபூர், ஐஸ்வர்யா ராய் நடிச்ச ‘ஹமாரா தில் ஆப்கே பாஸ் ஹை’யில் அறிமுகமானேன். நான் நடிச்ச விளம்பரப் படங்கள் பார்த்து மலையாளத்தில் சான்ஸ் கிடைச்சது. தமிழ்ல ‘மிர்ச்சி’ சிவாவோட ‘தில்லுமுல்லு’ பண்ணினேன். அது சரியா போகாததால என்னோட தமிழ் கரியர்ல ஒரு சின்ன ஸ்லோ டவுன். அதுக்குள்ள மலையாள இண்டஸ்ட்ரி எனக்குனு ஒரு இடத்தைக் கொடுத்துடுச்சு!’’

‘‘உங்க ஸ்லிம் சீக்ரெட்...’’
‘‘வெங்காய பஜ்ஜியும், ஃபில்டர் காபியும்தான். ஜோக் இல்லீங்க. கேரளாவில் ஷூட்டிங் பிரேக்ல அடிக்கடி சாப்பிட்டு அதோட ஃபேன் ஆகிட்டேன். டைம் கிடைக்கறப்போ யோகா பண்றேன். ஸ்லிம் தோற்றத்தை மெயின்டெயின் பண்ண அது ஒண்ணு போதுமே!’’

- மை.பாரதிராஜா