குங்குமம் ஜங்ஷன்



நிகழ்ச்சி மகிழ்ச்சி
‘‘பெண்கள் கல்வி கற்பது ஒட்டுமொத்த குடும்பத்தின் வளர்ச்சிக்கும் துணை நிற்கிறது. சமுதாயத்தில் பெண்களும் சொந்தக் காலில் நிற்பதற்கு கல்வியே அடிப்படை!’’ - எனப் பெண் கல்விக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார் விஷால். சென்னை எம்.ஓ.பி வைஷ்ணவா பெண்கள் கல்லூரி சார்பாக நடத்தப்பட்ட பெண் கல்வி விழிப்புணர்வு மராத்தான் ஓட்டத்தில் அவர் கலந்துகொண்டு பேசியதே இது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் முன்னிலையில், ‘‘பெண்கள் முன்னேற்றத்துக்கு என்னாலான முயற்சிகளை எப்போதும் செய்யத் தயார்!’’ என வாக்குறுதியும் அளித்து வந்திருக்கிறார் விஷால்.

புத்தகம் அறிமுகம்
உறைநிலைக்குக் கீழே தாமஸ் ட்ரான்ஸ்ட்ரோமர்
தமிழில்: சபரிநாதன்
(கொம்பு, 1, பப்ளிக் ஆபீஸ் ரோடு, நாகப்பட்டினம். விலை: ரூ.150. தொடர்புக்கு: 99523 26742)
ட்ரான்ஸ்ட்ரோமரின் குறிப்புகளும், கவிதைகளும் அடங்கிய புத்தகம். அவரின் கவிதை மொழி ஆரவாரம் இல்லாதது. எந்தவொரு கவிதையிலும், உரைநடையிலும் சீற்றமோ பிரசார தொனியோ தென்படவேயில்லை. மானுடம் மீதான அக்கறையும், துயரமும்தான் பட்டுத் தெறிக்கிறது. பயணங்களில் பெரும் ஆர்வம் கொண்டிருக்கிறார் ட்ரான்ஸ்ட்ரோமர். அவரை ஆங்கிலத்தில் மட்டும் படித்தவர்கள் தமிழில் அதைக் கொண்டுவர நிச்சயம் ஆசைப்பட்டிருப்பார்கள். சபரிநாதனுக்கு அது வாய்த்திருக்கிறது. மெல்ல மெல்ல அவரின் கவிதைகள் வெவ்வேறு பரிமாணங்களைத் தோற்றுவித்தபடி நம்முள் இறங்குவதை சபரி செய்திருக்கிறார். ட்ரான்ஸ்ட்ரோமர் கவிதைகள் வேரில் பழுத்த பலா. படிக்கும்போது அதை உணர முடியும்! 

சிற்றிதழ் Talk!
‘‘சிலர் பசிக்காக சாப்பிடலாம். சிலர் ருசிக்காக சாப்பிடலாம். பல சமயங்களில் பிறர் மனம் வருத்தப்படக்கூடாதே என்று சாப்பிடுகிறோம். ரொம்ப வற்புறுத்துகிறார்களே என்று சாப்பிடுகிறோம். இத்தனை காரணங்களும் எழுதுவதற்கும் இருக்கிறது. இத்தனை காரணங்களும் சினிமா எடுப்பதற்கும் இருக்கிறது. ஒருவர் பிழைக்க வேண்டும் என்பதற்காக படம் எடுக்கலாம். ஒருவர் பொழுதுபோக்கிற்காக படம் எடுக்கலாம். ஒருத்தருக்கு நல்ல பேர் கிடைக்க வேண்டும் என்பதற்காக படம் எடுக்கலாம். ஒருவர் விருது வாங்க வேண்டும் என்பதற்காக படம் எடுக்கலாம். ஒருவர் தயாரிப்பாளர் கிடைத்துவிட்டார் என்பதற்காகவும் படம் எடுக்கலாம்!’’
- ‘படச்சுருள்’ ஜூலை 2016 இதழில் இயக்குநர் வஸந்த் சாய்

யு டியூப் லைட்!
நேரடியாக கண்முன் ஒரு விபத்தைப் பார்ப்பது டெரர் அனுபவம். அதிலும் கோடிக்கணக்கான மக்கள் நேரலையில் பார்த்துக்கொண்டிருக்கும்போது ஒரு விபத்து நிகழ்வது எந்த வகையிலும் சேர்க்க முடியாத துயர்! ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் பிரான்ஸ் தடகள வீரர் சாமிர் அய்ட் செய்டின் கால் இரண்டாக உடைந்து தொங்கிய காட்சி ரியோவையே அதிர வைத்தது. அதன் நேரடி வீடியோதான் இப்போது செம வைரல். உடனடியாக அறுவை சிகிச்சை செய்துகொண்ட சாமிர், ‘‘வெகு விரைவில் நான் எழுந்து நடப்பேன். 2020ல் நடக்கவிருக்கும் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வேன்’’ எனச் சொல்லியிருக்கிறார். அந்த தன்னம்பிக்கை ஸ்டேட்மென்ட்டோடு சேர்த்து பகிரப்படுகிறது இந்த டெரர் வீடியோ!

சர்வே
உலகிலேயே உயரமான ஆண் யார்? நெதர்லாந்தில் பிறந்தவர்கள்தான் இந்த உலகின் உயரமான இளைஞர்கள்; உலகிலேயே உயரமான பெண் யார்? லாட்வியா நாட்டுப் பெண்கள்தான் இந்த பூமியிலேயே உயரமானவர்கள். 1914 முதல் 2014 வரையிலான நூறாண்டுகளில் ஒவ்வொரு நாட்டிலும் 18 வயது இளைய தலைமுறையின் உயரத்தில் என்ன வித்தியாசம் நிகழ்ந்தது? இதைத் தெரிந்துகொள்ள ஒரு மிக நீண்ட ஆய்வு நடைபெற்றது. லண்டன் இம்பீரியல் கல்லூரி அறிஞர்கள் 800 பேர், உலக சுகாதார நிறுவனத்தோடு இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

பல சுவாரசியங்களைக் கண்டுபிடித்திருக்கிறது இந்த ஆய்வு. இரானிய ஆண்களும் தென் கொரிய பெண்களும் கடந்த நூறாண்டுகளில் மிகவே உயரம் அடைந்திருக்கிறார்களாம். 100 ஆண்டுகளுக்கு முந்தைய தென் கொரிய பெண்களின் உயரத்தைவிட இப்போதைய பெண்களின் உயரம் 20.2 செ.மீ அதிகரித்துள்ளது. வாழும் சூழலும், உணவு மூலம் கிடைக்கும் ஊட்டச்சத்தும் உயரத்துக்கு பிரதான காரணம் என்றாலும், வேறு சில காரணங்களும் இருக்கலாம் என்கிறார்கள் இந்த அறிஞர்கள். நெதர்லாந்து, பெல்ஜியம், எஸ்தோனியா, லாட்வியா, டென்மார்க் ஆகியவைதான் ஆண்களின் உயரத்தில் டாப் 5 நாடுகள்;

லாட்வியா, நெதர்லாந்து, எஸ்தோனியா, செக் குடியரசு, செர்பியா ஆகியவைதான் பெண்களின் உயரத்தில் டாப் 5 நாடுகள். கவுதமாலா பெண்கள்தான் உலகிலேயே உயரம் குறைந்தவர்கள். டிமோர் லெஸ்தே நாட்டு ஆண்களே உலகின் குள்ளர்கள். இந்திய ஆண்கள் உலகில் 178வது ரேங்கிலும் பெண்கள் 192வது ரேங்கிலும் இருக்கிறார்கள். நம் உயரம் குறைந்திருக்கிறது என்பதே இந்த ஆய்வின் தீர்ப்பு.

டெக் டிக்!
‘நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’ என என்ட்ரி கொடுத்திருக்கிறார் ஆர்குட் புயூகாக்டென். ஆம், நம்மை ஆட்டுவித்த முதல் சோஷியல் நெட்வொர்க்கான ஆர்குட் தளத்தின் படைப்பாளியேதான். ஆர்குட் தளம் கூகுளின் கைக்குப் போய், மெல்ல செல்வாக்கு இழந்து 2014ம் ஆண்டில் இழுத்து மூடப்பட்டது நமக்குத் தெரியும். இப்போது அதே மிஸ்டர் ஆர்குட், புத்தம் புதுசாய் ‘ஹலோ’ எனும் சோஷியல் நெட்வொர்க்கை உருவாக்கியிருக்கிறார்.

‘எனக்கு புக்ஸ் படிக்கப் பிடிக்கும், இசை கேட்கப் பிடிக்கும்’ என நாம் பகிரும் ஆர்வங்களை வைத்து நம்மைப் போலவே ஆர்வம் கொண்ட நண்பர்களை நம்மோடு இணைக்கும் ஸ்மார்ட் போன் ஆப் இது. ‘‘இந்த ஹலோ ஆப் ‘லவ்’வால் கட்டமைக்கப்பட்டது, ‘லைக்’கால் அல்ல’’ என இதன் அறிமுகத்தின்போது ஃபேஸ்புக்கை வம்புக்கு இழுத்திருக்கிறார் ஆர்குட்!