தகதக வெர்ஷன்!



ஞானக்கூத்தனின் மறைவுக்கு அசோகமித்திரனின் எழுத்துகள் கம்பீரமான அஞ்சலி. வீக் எண்ட் குங்குமத்தில் எங்கள் மனமும் சங்கமம் ஆனது!
- பி.பரசுராமன், புதுச்சேரி.

தன் பிறந்தநாள் பரிசாக ஏழை மாணவிக்கு கழிப்பறை கட்டிக் கொடுத்த மாணவி அட்சயா தேவதை அம்சமேதான்!
- கே.சுதா மணியன், திருப்பூர்.

‘கவலை வேண்டாம்’ படத்தில் ஜீவா அப்கிரேடட் வெர்ஷன் என்றால், காஜல் மேலும் தரம் உயர்த்தப்பட்ட தகதக வெர்ஷனாக ஜொலிக்கிறாரே!
- மு.சீனிவாசன், சென்னை-33.

இந்திய ஒலிம்பிக் வீரர்களின் அப்டேட் தகவல்கள் நெஞ்சுக்கு பெரும் நம்பிக்கை. களத்தில் அவர்கள் வெல்ல வேண்டும் என மனம் வேண்டுதலைத் தொடங்கிவிட்டது!
- பி.ஏ.கனகரத்தினம், கோவை.

துப்புரவு தொழிலாளர்களுக்காக தன்னை அர்ப்பணித்த பெஜவாடா வில்சனின் பணி மெய்சிலிர்க்க வைத்தது. மகசேசே விருதுக்கு அசல் கௌரவம்!
- எம்.கண்மணி, நாகர்கோவில்.

வழக்குரைஞர் அருள்மொழி டவுன்லோடு மனசு மூலம் இனிய நன்னம்பிக்கை மொழிகளை எங்களுக்குள் அப்லோடு செய்துவிட்டார். வாழ்த்துகள்!
- ஜி.ஆராவமுதன், திருநெல்வேலி.

உயிர்ப்புள்ள விவசாயம் பற்றிப் பேசும்  குமார் அம்பாயிரத்தின் அக்கறையான வார்த்தைகளில் தெரிந்தது யூரியா கலக்காத மண்வாசம்!
- மு.யாழினி, திருவள்ளூர்.

ஐபோன் போட்டியில் பரிசு வென்ற ரித்விக்கின் ஏரியல் வியூ மெரினா, கண் கொள்ளாக் காட்சி. போட்டோ வல்லவனுக்கு ஐபோனும் ஆயுதம்தான்!
- ஆர்.எம்.சிவக்குமார், வேலூர்.

விசிலையே இசையாக்கி சாதித்திருக்கும் ‘விசில் ராணி’ ஸ்வேதா சுரேஷ் வருங்காலத்தில் தனி விசில் கச்சேரிகளையே அரங்கேற்ற வாழ்த்துகிறோம்!
- டி.மதிவாணன், மதுரை.

தனது மாநில மக்களுக்கு ஆதரவாக 16 ஆண்டுகள் போராடிய இரோம் ஷர்மிளாவின் முடிவு காலத்தினை உத்தேசித்து எடுத்த அவசியமான முடிவு!
- எல்.கயல்விழி, திருவண்ணாமலை.

‘குங்குமம்’ இதழின் முதல் ஆசிரியரான சாவி அவர்களின் 100வது ஆண்டில் அவர் குறித்த செய்திகள் அனைத்தும் தேன்பலாவின் சுவை!
- இரா.குமரநாதன், திண்டுக்கல்.