ருசி



-ஜெ.கண்ணன்

தொழிலதிபர் செல்வராகவனின் மகன் சங்கரை ஸ்கூலிலிருந்து கடத்தியவன் கரகர குரலில் பேசினான். ‘‘பணத்தை ரெடி பண்ணு. போலீஸ் உன் வீட்ல இருக்காங்கனு தெரியும். போனை டிராக் பண்ணி, நேரத்தை வீணடிக்க வேண்டாம்னு சொல்லு. கொஞ்சம் இரு... உன் பையன் பேசுறான்!’’

சில நொடிகள் கடந்த பிறகு சங்கர் பேசினான். ‘‘அப்பா! இவங்க கேக்குற பணத்தைக் கொடுத்துடுங்க. நான் நல்லாயிருக்கேன். இவங்க ரொம்ப நல்லவங்க. பசிக்குதுன்னு சொன்னதும் எனக்கு ருசியான பிரியாணி வாங்கிக் கொடுத்தாங்க. பிரியாணி ருசி பிரமாதம்!’’ - அதோடு தொடர்பு துண்டிக்கப்பட்டது.

ஹெட்போனில் இதைக் கேட்டுக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் கோகுலின் முகம் பிரகாசமானது. உடனே கிளம்பியவர், இரண்டு மணி நேரத்தில் பையன் சங்கரோடு வந்தார். நடந்ததை செல்வராகவனிடம் விளக்கினார் கோகுல். ‘‘உங்க பையன் பேசும்போது ‘ருசி - பிரியாணி’னு ரெண்டு வார்த்தைகளை அழுத்திச் சொன்னான். விசாரிச்சப்போ சிட்டியில அந்தப் பேர்ல பிரியாணி ஹோட்டல் ஒண்ணு இருந்தது.

அந்த ஹோட்டலுக்கு அக்கம் பக்கம் விசாரிச்சதுல சந்தேகப்படும்படி நாலு பேர் ஒரு வீட்ல தங்கியிருக்குறதைக் கண்டுபிடிச்சோம். அந்த வீட்டைச் சுத்தி வளைச்சு உங்க பையனை மீட்டுட்டோம். உங்க பையன் தைரியமானவன் மட்டுமில்ல, புத்திசாலியும் கூட!’’மகனை அப்படியே தழுவிக்கொண்டார் செல்வராகவன்.