பெங்களூரு மக்களின் ரஜினிக்கு மரியாதை!



ரஜினியின் ‘கபாலி’ என்ட்ரியை ‘நேற்று இன்று நாளை என்றும் சூப்பர் ஸ்டாரே... நேரில் வந்து போட்டி போட யாரும் இல்லையே!’ என பாட்டுப் பாடி கொண்டாட வேண்டாமா? அதைத்தான் செய்திருக்கிறது பெங்களூருவைச் சேர்ந்த ‘பீப்பல் ட்ரீ’ இசைக்குழு! ‘மகிழ்ச்சி - தலைவர் ரஜினிகாந்த்துக்கு காணிக்கை’ எனும் பெயரில் வந்திருக்கும் இவர்களின் வைரல் வீடியோ, ரஜினிக்கு ஒரு மாஸ் ஓப்பனிங் பாடல் போலவே கெத்து காட்டுகிறது!

‘‘கபாலி ரிலீஸ் சமயத்தில் தமிழ்நாட்டை விடவும் அதிகம் பரபரத்தது எங்க பெங்களூருதான். ஃப்ளைட் டிக்கெட் ஆஃபர் எல்லாம் எங்களுக்குத்தானே போட்டாங்க! பெங்களூரு மக்கள் எப்பவுமே நல்ல படைப்புகளை ஆதரிக்கிறவங்க. தமிழ்நாட்டுக்கும் கர்நாடகாவுக்கும் இடையில எவ்வளவோ பிரச்னைகள் போயிட்டிருந்தப்ப கூட, இங்கே தமிழ்ப் படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியிருக்கு. எங்க ஊரு இயல்பையும் சூப்பர் ஸ்டாரின் பெருமையையும் சொல்ற மாதிரி ஒரு பாட்டு பண்ணணும்னு நினைச்சோம்... பண்ணிட்டோம்!’’ - திருப்தியாகப் பேசுகிறார் ‘பீப்பல் ட்ரீ’ குழுவின் டிரம்மரான டெமோஸ்.

கண்ணாடியைச் சுழற்றி மாட்டுவது, துண்டைப் புரட்டி தோளில் போடுவது என ரஜினியின் டிரேட் மார்க் ஸ்டைல்களை சாதாரண மக்கள் செய்ய முயன்று சொதப்பும் காட்சிகள் இந்த வீடியோவெங்கும் தூவப்பட்டு சுவாரஸ்யம் சேர்க்கின்றன. இடையிடையே நால்வர் குழு ஒன்று கருவிகளை இசைத்துப் பாடல் பாடும் காட்சி!

‘‘நான் டிரம்மர். டோனியும் ப்ரவீனும் கிடாரிஸ்ட்ஸ். சுஜய் பாடகர். கடந்த 2 வருஷமா நாங்க கச்சேரிகள் பண்றோம். எங்க டீம்ல நான்தான் தமிழ்ப் பையன். டோனி கேரளா. மற்ற ரெண்டு பேரும் கர்நாடகா. ஆனாலும் ரஜினி மாதிரி ஒரு தமிழ் ஐகானுக்கு மரியாதையை தமிழ்ல செய்யணும்னு தோணிச்சு. ‘கபாலி’ படம் ரிலீஸ் ஆகறதுக்கு முன்னாடியே நாங்க வேலைகளைத் தொடங்கிட்டோம்.

படம் பார்த்தப்ப அதில் ரஜினி இதுவரைக்கும் பார்க்காத கோணத்தில் கலக்கி, வித்தியாச அனுபவத்தைத் தந்தார். இதுக்காகவே ரஜினியை இன்னும் அதிகமா பிடிச்சுது. இப்படி ஒரு பாட்டு சரிதான்னு நினைக்க வச்சது!’’ என்கிறார் டெமோஸ் உற்சாகமாக!

- டி.ரஞ்சித்