காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்



புதிய தொடர்

-யுவகிருஷ்ணா

அடியென்றால் அடி. சரியான அடி. தன்னை ஏன் அந்த போலீஸ்காரன் அப்படி அறைந்தான் என்று அடிவாங்கியவனுக்குத் தெரியவில்லை. ‘என்ன சார், திடீர்னு தெரு முழுக்க போலீஸ்?’ என்று சாதாரணமாகத்தான் கேட்டிருந்தான். அதற்கு இப்படியா அடிப்பது? வாசலில் நின்று தேமேவென்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவன், கண்கள் இருள கன்னத்தை தடவிக்கொண்டு, அவசரமாக வீட்டுக்குள் போய் கதவைத் தாழிட்டான்.

மெதிலின் நகருடைய முக்கியமான சாலை அது. தனித்தனி பங்களாக்களாக பெரிய வீடுகள். கொலம்பியாவின் இரண்டாவது பெரிய நகரம். நானூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த நகரம் என்பதால் மரபும், நவீனமும் கலந்த கவர்ச்சியை தன்னகத்தே கொண்டிருந்தது மெதிலின். சுற்றிலும் ஒன்பது நகரங்கள்.

நகரம் முழுக்க மனித நடமாட்டத்தால் கசகசவென்றுதான் இருக்கும். அன்று கொலம்பியாவின் மொத்த போலீஸுமே மெதிலின் நகரில், அதுவும் இந்த குறிப்பிட்ட சாலையில் குவிக்கப்பட்டு விட்டதோ என்று எண்ணுமளவுக்கு தெருமுழுக்க மெஷின்கன் ஏந்திய கருப்புச் சட்டைகளின் கூட்டம்.

கிட்டத்தட்ட ஊரடங்கு உத்தரவு போட்டது மாதிரி நிலை. ஒலிபெருக்கி வாயிலாக காவல்துறை அதிகாரி பணிவான மொழியில், அதேநேரம் அதிகாரம் தொனிக்கும் குரலில் உரத்து சொல்லிக் கொண்டிருந்தார். ‘மெதிலின் மக்களே! இன்று கொலம்பியாவின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்பட வேண்டிய நன்னாள்.

தீரமிக்க கொலம்பிய காவல்துறையினர் தங்களது வீரத்தை பறைசாற்றப் போகும் திருநாள். அசுரவதை நடத்த இருக்கிறோம். அரை நாள் அவகாசம் கொடுங்கள். அதுவரை காவல்துறையோடு ஒத்துழையுங்கள். அவரவர் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்!’ பெரிய ஆபரேஷன் ஏதோ நடக்கப் போகிறது என்று மக்களுக்கு புரிந்தது. ஆனால் - யாரை போடப் போகிறார்கள், ஏன் போடப் போகிறார்கள் என்றுதான் தெரியவில்லை. ஏனெனில் - தடியெடுத்தவனெல்லாம் கொலம்பியாவில் மாஃபியா ஆகிக் கொண்டிருந்த காலமது.

தடுக்கி விழுந்தால் ஏதோ ஒரு கிரிமினலின் காலில்தான் விழவேண்டும் என்கிற அளவுக்கு கொலம்பியாவே, உலகின் குற்றத் தலைநகராக ஆகிப் போயிருந்த காலக்கட்டம். அமெரிக்க இளைஞர்கள் மொத்தமாக கொலம்பிய போதை படையெடுப்புக்கு பலியாகிக் கொண்டிருந்தார்கள். எனவேதான் கொலம்பியாவைப் பார்த்து அமெரிக்கா கோபமாகக் கேட்டது. ‘நீயே போட்டுத் தள்ளுகிறாயா அல்லது நான் உள்ளே புகுந்து விளையாடட்டுமா?’

கொலம்பியாவுக்கு மானப்பிரச்னை. ‘அய்யன்மீர், சிறிது காலம் பொறுங்கள். போதை ஏற்றுமதி செய்யும் ஒரு மொள்ளமாறி கூட எங்கள் நாட்டில் இல்லை என்கிற நிலையை ஏற்படுத்துகிறோம். ஒரு பயலும் கஞ்சா வளர்க்க மாட்டான். அப்படியே வளர்த்தாலும் வாஷிங்டன் பக்கம் கால் வைக்க மாட்டான். இது கொலம்பிய மாதா மீது ஆணை...’ அமெரிக்காவிடம் கெஞ்சினார்கள்.

பெரியண்ணன் பெரிய மனசு பண்ணினார். ‘பார்த்து, ஒவ்வொருத்தனா போட்டுடுங்க. ஒரு பய உசுரோட இருக்கப்படாது. குறிப்பா, அந்த காட்ஃபாதர். அவனை விட்டே, நீ செத்தே!’ சொன்னதுடன் நிற்காமல் வேட்டைக்கு செமத்தியான டாலர்களில் கூலியும், அள்ள அள்ளக் குறையாமல் ஆயுதங்களும் ஸ்பான்ஸர் செய்தது.

அந்த வகையில் இறுதி வேட்டைக்காகத்தான் மெதிலின் நகரில் கிட்டத்தட்ட ஒரு படையெடுப்புக்கான முஸ்தீபுகளோடு கொலம்பியாவின் தேசிய போலீஸ் களமிறங்கி இருந்தது. குறி, வேறு யாரு, நம்ம காட்ஃபாதர்தான். அரண்மனை மாதிரி கம்பீரமாகத் தெரிந்த அந்த பங்களாவைச் சுற்றித்தான் புற்றீசலாக போலீஸார். ஒட்டகச்சிவிங்கியால் கூட எட்டிப் பார்க்க முடியாத அளவுக்கு உயரமான கருங்கல் மதிற்சுவர்.

காம்பவுண்டுக்குள் இருந்த பங்களாவில் என்ன நடக்கிறது, யார் வசிக்கிறார்கள் என்றுகூட சுற்றியிருந்த ஏரியாவாசிகளுக்கு சரிவர தெரியாது. சமீப நாட்களாக யார் யாரோ வருகிறார்கள். விடிய விடிய பார்ட்டி அமளிதுமளிப்படுகிறது. தெருவில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைரன் கார்களுக்கு பக்கவாட்டில் பாதுகாப்பாக போலீசார் மறைந்து நின்றனர். ஒவ்வொருவர் கையிலும் அமெரிக்கா வழங்கிய மெஷின்கன்.

சில துணிச்சலான காவலர்கள் கார்களுக்கு மேல் ஏறிநின்று பங்களாவைக் குறிபார்த்தார்கள். இரும்புத் தொப்பிகளுக்கு பக்கவாட்டில் வழிந்த வியர்வை காதருகில் கோடாக இறங்கியது. கண்ணை இமைத்தால், அந்த கால்நொடியில் பிரளயம் ஏற்பட்டு விடுமோ என்கிற அச்சத்தால் இமைக்கவும் மறந்து அந்த பங்களாவின் நெடிய இரும்பு கேட்டை பார்த்துக் கொண்டே இருந்தார்கள்.

கோட்டைக் கதவு மாதிரி இருந்த அந்த கருப்பு கேட், உயர்தரமான இரும்பால் செய்யப்பட்டது. மெஷின்கன்னில் ஒரு ரவுண்டு சுட்டும்கூட அதை திறக்க முடியவில்லை. கதாயுதம் சைஸில் கையில் வைத்திருந்த சுத்தியல் கொண்டு இரண்டு போலீசார் ‘தொம் தொம்’மென்று அதை அடித்து நொறுக்க முயன்றுகொண்டிருந்தார்கள்.

பங்களாவுக்குள் இருந்து எந்நேரமும் துப்பாக்கிக் குண்டுகள் சீறிக்கொண்டு வரலாமென்ற அச்சம் அனைவருக்கும் இருந்தது. ஐந்து பேர் அடங்கிய ஒரு சிறப்புக் குழுவோடு கேட்டுக்கு முன்பாக கம்பீரமாக நின்று கொண்டிருந்தார் கர்னல் மார்ட்டின். அன்று வேண்டுமென்றே அவர் புல்லட் ப்ரூஃப் கோட் அணிந்து வரவில்லை. செய் அல்லது செத்து மடி. இதுதான் இறுதி வாய்ப்பு. அவர் எத்தனையோ காலமாய் காத்து நின்ற கணம்.

மெஷின்கன்னை தலைக்கு மேலாக உயர்த்திப் பிடித்தார். முகத்தில் அப்பட்டமாக வெளிப்பட்ட படபடப்பையும், பரபரப்பையும் மறைக்க நினைத்தும் முடியவில்லை. கஷ்டப்பட்டு புன்னகைத்து, தன் குழுவினரைப் பார்த்தார். இவர்கள்தான் பங்களாவுக்குள் நுழையப் போகிறார்கள். உளவுத்துறை கொடுத்த தகவல் தெளிவாக இருந்தது. ‘சிட்டு உள்ளேதான் இருக்கிறது. பாதுகாப்பும் பெருசாக பலமில்லை. பத்து பேருக்குள்தான்...’ ‘‘பாய்ஸ்! வேட்டைக்கு ரெடியா?” “யெஸ் சார்!’’ இரும்பு கேட் நொறுங்குவதற்கான தருணம்.

கறுப்புநிற கர்ச்சீப்பால் தன்னுடைய முகத்தை மூடினார் மார்ட்டின். வேட்டைப் புலியின் தீவிரம் வெளிப்படும் வெறிபிடித்த சிவந்த கண்கள். போதை மாஃபியாக்களை ஒழிக்கும் தொடர்பணிகளால், ஒழுங்காகத் தூங்கி மாதக்கணக்கு ஆகிறது. மார்ட்டின் சைகை காட்ட சில போலீசார் அக்கம் பக்கத்தில் இருந்த கட்டிடங்களில் ஸ்பைடர்மேன் மாதிரி ஏறத் தொடங்கினார்கள். ஒரு சான்ஸையும் விட்டுவிடக் கூடாது. ஒருவேளை காட்ஃபாதருக்கு சிறகு முளைத்து பறந்தும்கூட தப்பிக்கலாம். யார் கண்டது?

கட்டிடங்களில் ஏறிய போலீசார் வாகான இடம் பார்த்து அமர்ந்தார்கள். தங்கள் ஆயுதங்களை அந்த பங்களாவை நோக்கி நீட்டினார்கள். அத்தனை பேருமே குறிபார்த்துச் சுடுவதில் வல்லவர்கள். கொலம்பிய காவல்துறையின் தலைசிறந்த வீரர்கள். கேட் நொறுங்கியது. புலிகள் பாய்ந்தன. இவர்களின் வருகைக்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருந்ததோ, என்னவோ தெரியாது. பங்களாவின் வாசலில் ‘விர்’ரூமிக் கொண்டிருந்த மஞ்சள் நிற டாக்ஸியின் ஆக்ஸிலரேட்டர் வெறித்தனமாக அழுத்தப்பட்டது.

“பாய்ஸ், ஷூட் த டயர்!” மார்ட்டினின் ஆணை பிறந்ததுமே துப்பாக்கிக் குண்டுகள் கார் டயரைத் துளைத்தன. டப். டப். டப். டயர்கள் தெறிக்க, கார் சடன் பிரேக் அடித்தது. காருக்குள் இருந்தவர்கள் கதவைத் திறந்து கண்ணிமைக்கும் நேரத்தில் பங்களாவுக்குள் ஓடினார்கள். ஓடிக்கொண்டே தங்கள் ரிவால்வரை அழுத்தி வாணவேடிக்கை நிகழ்த்தினார்கள். நிஜத்துப்பாக்கிகளால் கொண்டாடப்பட்ட கொலம்பியன் தீபாவளி.

மார்ட்டினும், அவரது குழுவினரும் தோட்டாக்களை இலக்கின்றி துப்பியவாறே முன்னேறினார்கள். கண்ணில் பட்ட அத்தனையுமே துவம்சம். கதவை எட்டி உதைத்தவாறே வீட்டுக்குள் நுழைந்தார் மார்ட்டின். அவரை எதிர்கொண்ட எதிரிகள், அச்சத்தில் தடதடத்தவாறே மாடிப்படிகளில் ஏறித் தப்ப முயற்சி செய்து பலியாகினர். அந்த நீண்ட ஹாலின் சுவர்கள் முழுக்க தோட்டாக்கள் துளைத்திருந்தன. அலமாரிகள் சின்னாபின்னமாகிச் சிதறியிருந்தன.

இதற்கிடையே அக்கம் பக்க பங்களாக்களில் நிலைகொண்டிருந்த காவலர்களும் இந்த பங்களாவின் ஜன்னல்களை நோக்கி சுடத் தொடங்கினார்கள். ஹாலின் மத்தியில் பிரும்மாண்டமாக கூரையை அலங்கரித்துக் கொண்டிருந்த ஷாண்டிலியரை நோக்கி ஒருவன் கண்ணை மூடிக்கொண்டு சுட்டான். எங்கும் கண்ணாடிச் சிதறல். “சார், இங்கே ஒருத்தனும் இல்லை! எல்லாரும் மாடிக்கு போயிட்டானுங்க...” சொன்னவாறே மாடிப்படியில் கால்வைத்த காவலனை, மார்ட்டின் தடுத்து நிறுத்தினார்.

“நம்ம தரப்புல ஒருத்தனும் சாகக்கூடாது. அப்படியே போறதா இருந்தா என் உயிர் போகட்டும்!” சொன்னவாறே தபதபவென்று படிகளில் ஏறினார். அவரை வரவேற்ற தோட்டாக்களிடம் கதகளி ஆடியவாறே முன்னேறினார். பின்தொடர்ந்து வந்தவர்கள் மார்ட்டினுக்கு பாதுகாப்பு அளிக்கும்விதமாக மேல் அறையிலிருந்த கதவுகளை சுட்டுக் கொண்டே இருந்தனர். மாடியில் பெரும் ஓலம் கேட்டது.

ஏகப்பட்ட பேரை தாங்கள் போட்டுத் தள்ளிவிட்டோம் என்பது போலீசாருக்கு புரிந்தது. வெளியிலிருந்து வந்த காவலர்களின் தோட்டாக்களும் கச்சிதமாக கயவர்களின் கதையை முடித்தது. பத்து நிமிடத்தில் கதம், கதம். காவலர்களுக்கு உயிர்ச்சேதமில்லை. மார்ட்டின் கவலையாக பிணமாகக் கிடந்தவர்களின் உடலைப் புரட்டி முகங்களைப் பார்த்துக் கொண்டே வந்தார். “அவன் தப்பிச்சிட்டான்னு நெனைக்கிறேன்!” இரண்டு கைகளையும் தலையில் வைத்தபடி அப்படியே சோபாவில் சாய்ந்தார்.

முதல் தளத்திலிருந்து உற்சாகக்குரல் கேட்டது. “சார், இது பாப்லோ!” வெளிர் நீல ப்ளூ ஜீன்ஸ், கருநீல டீஷர்ட் அணிந்திருந்த அந்தப் பிணத்தைத் திருப்பிப் போட்டார். கனமான தொப்பை. தாடி மறைத்திருந்த முகத்தை உற்று நோக்கினார். யெஸ். அவரேதான். தி கிரேட் காட்ஃபாதர். கோகைன் மன்னன். குற்றவியல் சக்கரவர்த்தி. அமெரிக்காவுக்கு தண்ணி காட்டிய அசால்ட் தாதா. போதை உலகின் பேரரசன். தி ஒன்அண்ட்  ஒன்லி, பாப்லோ எமிலோ எஸ்கோபார் கேவிரியா.

அந்த நாள், டிசம்பர் 2, 1993. முந்தைய நாள்தான் தன்னுடைய 44வது பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடியிருந்தார் எஸ்கோபார். “ஜெய் கொலம்பியா! எஸ்கோபாரை நாம போட்டுட்டோம்!” மார்ட்டின் உற்சாகமாகப் பெருங்குரல் எடுத்து கத்தினார். காட்ஃபாதரின் இறுதிநாள் குறித்து போலீஸ் சொல்லும் கதை இதுதான். ஆனால், இதுதான் கதையா?

(மிரட்டுவோம்)  

ஓவியம்: அரஸ்

திருட்டுக்கு நன்றி!

நன்றி மறப்பது நல்லதல்ல. ஆனால் இப்படியா? அமெரிக்காவின் ஓரிகான் மாநிலத்தில் மைர் பிளேட் என்ற பெண்மணியின் வீட்டிற்குள் சிசிடிவி கேமராவுக்கு பெப்பே காட்டிவிட்டு உள்ளே நுழைந்த திருடி ஒருத்தி, ஒரு அட்டைப்பெட்டி நிறைய பொருட்களை லபக்கியிருக்கிறாள். போகும்போது ‘தேங்க்யூ’ என நோட் எழுதி வைத்திருக்கிறாளே... அதுதான் அதிரிபுதிரி காமெடி!

ஷாக் கொடுத்த ஃபிஷ்!

தைவான் பாட்டி ஒருவர், பேரன் தனக்கு ஆசையாய் வாங்கிக்கொடுத்த பையில் கடைக்குப் போய் மீன் வாங்கி வந்தார். பாட்டியை விசிட் செய்த பேரனுக்கு, தான் பரிசளித்த பையிலிருந்த மீனைப் பார்த்து படு ஷாக். பின்னே... அவர் கிஃப்ட் கொடுத்த லூயிஸ் விட்டன் பேக்கின் விலை ரூ.80 ஆயிரமாயிற்றே!

50 ஆண்டு புத்தகம்!

நியூஜெர்சியின் பில்லிஸ்பர்க் நூலகத்திற்கு வந்த அப்பழைய நூலைப் பார்த்ததும் லைப்ரரியனுக்கே பயங்கர ஷாக். ஐசியூவில் சேரும் நிலையிலிருந்த அந்நூலை முதன்முதலில் இரவல் கொடுத்தது 1967ம் ஆண்டு. 50 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று, ரீஎன்ட்ரியான புத்தகத்திற்கு ஃபைன் விதித்தால், உறுப்பினர் கட்டவேண்டியது 1,800 டாலர்கள்!

ஷாக் கொடுத்த மனைவி

மேரேஜுக்கு பொண்ணு கிடைக்கல. என்ன செய்யலாம்? சீன எஞ்சினியரான ஸெங் ஜியாஜியாவுக்கு இதுதான் யோசனை. விரக்தியானவர் சூப்பர் ஃபாஸ்ட்டாக ஒரு ரோபோவை உருவாக்கி அதற்கு யிங்யிங் என பெயர் சூட்டி திருமணம் செய்து கொண்டார்!