அடேங்கப்பா அய்யப்பா!



-ரீடர்ஸ் வாய்ஸ்

84 ஏக்கர் தரிசு பூமியை விவசாய பூமியாக்கிய நீர் டாக்டர் அய்யப்பாவின் முயற்சி ஒளிவிளக்கு. மழைநீரை வீணாக கடலுக்கு பாய்ச்சுவதற்கு பதில் நிலத்திற்கு கொடுக்கலாமே! நூற்றுக்கும் மேலான நீர்சேகரிப்பு திட்டங்களை டிசைன் செய்த அய்யப்பாவின் பணி அடேங்கப்பா!
- அ.ராஜப்பன், சென்னை - 91. ஆர்.சண்முகராஜ், திருவொற்றியூர்.

எத்தனை நாளைக்குத்தான் ஹீரோயின்களையே சுற்றிவருவது என அலுத்து அவர்களின் தோழிகளைப் பற்றி வெளியிட்டது கூட சமூக நீதிதான். அரசு அலட்சியப்படுத்தினாலும் விவசாயிகளுக்கு பயனளிக்கும் கட்டுரைகளை வெளியிட்ட குங்குமத்திற்கு நன்றி!
- தங்கவேலு, பண்ருட்டி.

கோள்மண்டல கட்டுரையில் குலசாமி என்ற சொற்கள் விஞ்ஞானம் மெய்ஞானத்துடன் கூட்டணியோ என்ற சந்தேகத்தை என்போன்ற அஞ்ஞானிகளுக்கு ஏற்படுத்துகிறதே!
- பிரேமா குமார், சென்னை - 78.

மேலான தரத்தில் 60 ஆண்டுகாலம் எழுதி மறைந்த அசோகமித்திரனுக்கு தங்களின் அஞ்சலிக்கட்டுரை அவரை அறியாதவர்களுக்கும் அவரைப் பற்றி அறிய உதவியது. இலக்கியத்தரமான அஞ்சலி!
- பூதலிங்கம், நாகர்கோவில். சிவகுமார், சென்னை - 33. இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி. த.சத்தியநாராயணன், சென்னை - 72.

சினிமா குறித்து அக்குவேறு ஆணிவேறாக அலசிய ஸ்பெஷல் ஸ்டோரி வரவேற்புக்குரியது.
- கே.சங்கரநாராயணன், திருநெல்வேலி.

காபி டேபிளில் ரகுல் ப்ரீத் சிங்குக்கு 10 லட்சம் பேர் ஃபாலோயர்ஸ் என்ற செய்தி, ஃபில்டர் காபி சுவை.
- மயிலை கோபி, சென்னை - 83.

ஆள்பாதி ஆடை மீதி பழமொழி மாறி அழகு பாதி மினி ஸ்கர்ட் மீதி என்ற புதுமொழிக்கிணங்க உன்னத உடை பற்றிய அறிமுகம் புதியதெளிவு.
- லட்சுமி நாராயணன், வடலூர்.

குடும்ப டாக்டர் போல எளிமையாக பொறுமையாக நோய்களைக் குறித்து பேசிய டாக்டர் கு.கணேசனின் தொடர், இனிதே வாழ முடியும் என்ற வார்த்தைகளுடன் முடிவுற்றது இனிய பொருத்தமே! சிறுநீரக தானம் பற்றிய செய்திகளைத் தந்த செகண்ட் ஒப்பீனியன் தொடர் தந்த குங்குமத்திற்கு பாராட்டுகள்.
- சிவமைந்தன், சென்னை - 78.

கொடுங்கையூர் கொடுமையூராக இருப்பதை படம் பிடித்த கட்டுரை அசத்தல். கொடுங்கையூரில் அரசு அதிகாரிகளைக் குடியமர்த்தினால் வளம்கொழிக்கும் ஊராக விரைவில் மாறிவிடும்.
- த.சத்தியநாராயணன், சென்னை. கே.எஸ்.குமார், விழுப்புரம். சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

தி.பரமேஸ்வரி எழுதிய மகள் பொறி கவிதை அருமை. பாசப்பொறியில் சிக்குண்ட நான் மீள வெகுநேரமானது.
- விஜயநிர்மலன், சென்னை - 125.

மின்விசிறியில்லாத வாழ்க்கை தொடங்கிய அப்பா வைரமுத்துவிற்கு இன்று உலகம் முழுக்க விசிறிகள் என்ற கபிலன் வைரமுத்துவின் பேச்சு சோகமும், நகைச்சுவையுமாக நெகிழவைத்தது.
- என்.அத்விக், அசோக்நகர். ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

வழக்கறிஞர் பி.எஸ்.சிவசாமிஐயர் உருவாக்கிய திருக்காட்டுப்பள்ளியில் படித்தவன் நான். சிவசாமி ஐயர் குறித்து செய்திகளை அறிந்து வியந்து போனேன். கோமல் அன்பரசனின் ‘தமிழ்நாட்டு நீதிமான்கள்’ சிறந்த தமிழ்நாட்டு பதிவு. தமிழின் ‘ரீடர்ஸ் டைஜஸ்’டான ‘குங்கும’த்திற்கு என் நன்றிகள் கோடி.
- என்.ஜே.கந்தமாறன், சென்னை - 89.