8 தோட்டாக்கள்



-குங்குமம் விமர்சனக்குழு

பணமும் பணம் சார்ந்த சமூகத்தால் பாதிக்கப்பட்டு, மாற்றுப்பாதையில் பணம் சேர்க்க முற்படும் சாதாரண மனிதரிடம் சிக்கிய ேபாலீஸ் துப்பாக்கி வைக்கிற குறிகளும்தான் ‘8 தோட்டாக்கள்’. மேற்கு மாம்பலம் காவல் நிலையத்தில் புதிதாகப் பொறுப்பேற்கும் சப் - இன்ஸ்பெக்டர் வெற்றி, செய்யாத தவறுக்காக சிறார் சீர்திருத்தப் பள்ளியில் வளர்ந்தவர். வழக்கம்போல் நேர்மையாக இருப்பவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை இவரும் எதிர்கொள்கிறார்.

அந்தச் சூழலில் வெற்றியிடமிருந்து திருடப்படும் துப்பாக்கியால் பிரச்னை வெடிக்கிறது. அந்தத் துப்பாக்கியைத் தேடிச் செல்லும் விசாரணைப் பயணம்தான் திரைக்கதை. இன்னொரு பக்கம், அந்த துப்பாக்கியை தன் வசம் வைத்துள்ள காவலர் எம்.எஸ்.பாஸ்கர் குழுவின் பணத்துக்கான குற்றப்பாதையும் நகர்கிறது.

சிறார் சீர்திருத்தப்பள்ளி முதல் காவல்நிலையம் வரை எடுத்துக் கொண்ட கதைக்களத்துக்கு இயன்றவரை நம்பகத்தன்மையைக் கூட்டிய அறிமுக இயக்குநர் கணேஷுக்கு அள்ளித் தரலாம் பாராட்டுகளை. இயல்பு மீறாத இளம் அதிகாரியாக அறிமுகமாகிறார் புதுமுகம் வெற்றி. சரியான இடத்தில் கச்சித பாவனைகளைக் காட்டத் தவறினாலும், நெருடலின்றி வெளிப்பட்டதே வெற்றியின் முதல் வெற்றி.

வெற்றியே நாயகன் என அறிமுகப்படுத்தப்பட்டாலும் கதை நகர நகர கதையின் நாயகனாக நம் கண்முன்னே கவனம் விரிப்பது எம்.எஸ்.பாஸ்கர்தான். வெகு இயல்பாகப் பயணிக்கும் திரைக்கதை எம்.எஸ்.பாஸ்கர் குழுவின் வருகைக்குப்பிறகு பரபரக்கிறது. ஒரு கட்டத்தில் ஒட்டுமொத்த  படத்தையும் தன் யதார்த்த நடிப்பால் தூக்கி நிறுத்திவிடுகிறார் பாஸ்கர்.

செய்தி சேனல் நிருபராக வரும் அபர்ணா தமிழுக்கு அருமையான வரவு. பாஸ்கருக்கு அடுத்து மிக முக்கியமான கேரக்டரை கச்சிதமாகச் செய்து தன் இருப்பை மீண்டும் நிரூபிக்கிறார் நாசர். மணிகண்டன், லல்லு, மைம் கோபி, சார்லஸ் வினோத் ஆகியோரும் படத்திற்கு உறுதுணையாக ஒத்துழைப்பு.

மக்களுக்கு ேசவையாற்றவே ஏற்படுத்தப்பட்ட அரசு அதிகாரிகளின் அலட்சியப் போக்கையும், அதிகாரம் தவறாக பயன்படுத்தப்படும் போக்கையும், அதற்கு சாமான்யன் எதிர்வினை ஆற்றுவதையும் வெளிச்சமிட்டுக் காட்டியிருப்பது அழகு. காதல் காட்சிகளும், பாடல்களும் கதையோட்டத்தில் ஒட்டாததுபோல் இருப்பது மைனஸ். லாஜிக் குறித்து சந்தேகம் எழுப்பாத வகையில் குற்றப் பின்னணி, விசாரணையைக் காட்டியது ‘ப்ளஸ்’.

மணிகண்டனின் காதல் விவகாரம் சிரிப்பை ஏற்படுத்தினாலும் காட்டிய விதத்தில் கண்ணியம். சாமான்யன் கோபமுற்று, எதிர்வினை ஆற்ற முற்பட்டால் எப்படியிருக்கும் என்பதை காட்டியிருப்பது அட்டகாசம். ஜெகதீஷ் ரவிச்சந்திரனின் ஒளிப்பதிவு படத்தின் அத்தனை இயல்பையும், நுணுக்கத்தையும் இயல்பாய் நகர்த்துகிறது. நாகூரானின் எடிட்டிங் கன கச்சிதம்.

பாடல்களில் தளர்ந்துவிட்டாலும், பின்னணியில் அபாரமாக மின்னுகிறார் இசையமைப்பாளர் கே.எஸ்.சுந்தரமூர்த்தி. நம் சமூகத்தின் குடும்ப அமைப்பு, அரசியல், அதிகாரம், ரவுடியிசம் ஆகியவற்றின் இருள் சூழ்ந்த பக்கங்களை உணர்வுபூர்வமாகப் பதிவு செய்த வகையில் ஸ்ரீகணேஷின் அடுத்த படத்திற்கு இப்போதே காத்திருக்கத் தொடங்கலாம்.