OMRஅறிந்த இடம் அறியாத விஷயம்

-பேராச்சி கண்ணன்

அன்று ஓல்ட் மகாபலிபுரம் ரோடு. இன்று ராஜீவ் காந்தி சாலை. சென்னைவாசிகளுக்கு எப்போதும் ஓ.எம்.ஆர். பதினைந்து வருடங்களுக்கு முன்பு வரை இவ்வளவு பரிச்சயமாக இந்தப் பெயர் இருந்திருக்குமா? தெரியாது. ஆனால், இன்று இந்தியாவே உற்று நோக்கும் ஒரு சாலை இதுதான். தமிழகத்தின் ஒட்டுமொத்த ஐ.டி. நிறுவனங்களும் ராஜீவ் காந்தி சாலையில்தான் அணிவகுத்து நிற்கின்றன.

அதனாலேயே  ‘ஐ.டி. காரிடார்’ என இதை பெருமையாக சொல்கிறார்கள். டைடல் பார்க்கில் தொடங்கி சிறுசேரி சிப்காட், ஐடி பூங்கா வரை சுமார் 22 கி.மீ தூரத்தில் வழி நெடுகிலும் சின்னதும், பெரியதுமாக கொடிகட்டி பறக்கின்றன ஐ.டி. நிறுவனங்களும், பி.பி.ஓ.கம்பெனிகளும். இவர்களைக் குறி வைத்து ரியல் எஸ்டேட், ஹோட்டல்கள், வணிக வளாகங்கள், சிறுகடைகள், கார் ஷோரூம்கள் என பரபரப்பாக வளர்ந்து கொண்டேயிருக்கிறது இன்னொரு உலகம்.

குண்டும் குழியும் இல்லாத வெட்டவெளியான நூறடி சாலை. கண்முன்னே நீராடுகிறது கானல்நீர். அதில் விர்ரென உறுமுகின்ற வாகனங்கள். இடதுபக்கம் பறக்கும் ரயில்தடம். ‘ஐ.டி. எக்ஸ்பிரஸ்வே லிமிடெட்’ என்கிற வரவேற்பு போர்டைத் தாண்டி வலப் பக்கத்தில் நம்மை வரவேற்கிறது டைடல் பார்க்! ரூ.338 கோடி செலவில் கட்டப்பட்ட பிரமாண்ட கட்டிடம். ஆசியாவில் உள்ள மிகப்பெரிய ஐ.டி. பூங்காக்களில் இதுவும் ஒன்று.

டைடல் பார்க் எதிரிலுள்ள திருவான்மியூர் ரயில் நிலையத்தின் நடை மேம்பாலத்தில் நிற்கிறோம். இளைஞர்களும் இளைஞிகளும் விறுவிறுவென அந்தப் பாலத்தைக் கடந்து வேகமாக பார்க்கிற்குள் நுழைகிறார்கள். தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு என பல மொழிகள் நம் செவியை அறைகின்றன. அந்தப் பாலத்தை ஒட்டியே இருக்கிறது டிராபிக் சிக்னல்.

கிண்டி, சிறுசேரி, கிழக்கு கடற்கரைச் சாலை, டைடல் பார்க் ஆகியவற்றை இணைக்கும் அதிமுக்கிய ஜங்ஷன்! மட்டுமல்ல. சென்னையில் ஒருவரை ஐந்து நிமிடம் வரை காக்க வைக்கும் சிக்னலும் இதுவேதான். அந்தப் பரபரப்பில் இயங்கிக் கொண்டிருந்த டிராபிக் போலீஸ் ஒருவரிடம் மெல்ல பேச்சு கொடுத்தோம். சிக்னலில் இருக்கும் சிக்கல் பற்றி அடுக்கினார் மனிதர்.

‘‘திருவான்மியூர் ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து இறங்கி சிறுசேரி, கேளம்பாக்கம் போறவங்க இந்த ேராட்டை கிராஸ் பண்ண ‘பீக் அவர்’ல அஞ்சு நிமிஷமாகும். டைடல் பார்க்கை ரயில்வே ஸ்டேஷனுடன் இணைச்சு பாலம் போட்ட மாதிரி அந்தப் பக்க ரோட்டை கிராஸ் பண்றதுக்கும் ஒரு சப்வே போட்டிருந்தா பிரச்னை இருந்திருக்காது.

இப்ப, ஐ.டி. ஆபீஸ் பெருக்கத்தால நாலு பக்கம் இருந்தும் நிறைய வண்டிகள் வருது. அதனால, கிண்டி, கத்திப்பாரா மாதிரி இங்கேயும் ஒரு பாலம் அமைச்சாதான் எதிர்காலத்துல டிராபிக்கை சமாளிக்க முடியும்...’’ என்கிறார் தீர்க்கமாக! அங்கிருந்து நகர்ந்து, டிராபிக்கில் ஊர்ந்தபடி பெருங்குடி, துரைப்பாக்கம், காரப்பாக்கம் வழியாக சோழிங்கநல்லூரை அடைந்தோம். வழியெங்கும் மேல் நோக்கி குச்சியாக நீண்டு செல்லும் இருபது, முப்பது மாடிகள் கொண்ட குடியிருப்புகள் பிரமிப்பை தருகின்றன.

குறிப்பிட்டுச் சொல்லும்படியாக மரங்களையோ, நீர்நிலைகளையோ இந்தப் பாதையில் பார்க்க முடியவில்லை. அதனால்தானோ என்னவோ வெயில் சுட்டெரிக்கிறது. கொஞ்சம் ஆசுவாசமாக ஒதுங்க நினைத்தால் கூட ஏதாவது கடைகளில்தான் தஞ்சமடைய வேண்டியிருக்கிறது. ஆனால், ‘‘பதினைந்து வருடங்களுக்கு முன்பு இந்த ஏரியாவின் ஏரியல் வியூவே வேறு’’ என்கிறார் மென்பொருள் பொறியாளரும், ‘ராஜீவ் காந்தி சாலை’ நாவலை எழுதியவருமான எழுத்தாளர் விநாயக முருகன்.

‘‘நான் 2000ம் ஆண்டின் நடுவில் பார்த்த ஓ.எம்.ஆர். வேறு. திருவான்மியூர் சிக்னல் தாண்டியதும் எண்ணற்ற தென்னை மரங்களும், பனந்தோப்புகளும், நெல்வயல்களும், பெரிய பெரிய கிணறுகளும், ஏரிகளும் இருந்தன. ஏரியா முழுக்க பச்சைப் பசேல் என்றிருக்கும். அடுத்த சில ஆண்டுகளிலேயே விரிவாக்கம் நடக்கவும், வேறொரு பரிமாணத்திற்கு மாறிவிட்டது இந்தச் சாலை...’’ என வேதனை தெரிவிப்பவர், ஐ.டி. நிறுவனங்கள் பற்றிப் பேசினார்.

‘‘2000ம் ஆண்டின் இறுதி வரை சென்னையில் அதிகபட்சமாக பத்து அல்லது பனிரெண்டு பெரிய மென்பொருள் நிறுவனங்கள்தான் இருந்தன. இதில் எட்டு டைடல் பார்க்கின் உள்ளே இருந்தன. அப்போது பெங்களூர்தான் மென்பொருள் நிறுவனங்களின் சொர்க்கபுரி. இதனால், சென்னைக்கு வரும் வெளிமாநில மென்பொருள் நிறுவனங்கள் நேர்காணல் நடத்தி பெங்களூர், குர்கான், மும்பை போன்ற ஊர்களுக்கு மாணவர்களை அழைத்துச் சென்றனர்.

2003ல் காக்னிசன்ட், சத்யம், அக்சென்சர், விப்ரோ, எச்.சி.எல், இன்ஃபோசிஸ், டிசிஎஸ், போலாரிஸ் போன்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஓ.எம்.ஆருக்குள் நுழைந்ததும், இருபதுக்கும் மேற்பட்ட நடுத்தர மற்றும் சிறு மென்பொருள் நிறுவனங்களும் வந்து சேர்ந்தன. பிறகு, அந்த சாலை ராஜீவ் காந்தி சாலை என்று புதுப்பெயர் பெற்றது. இப்போது 60%க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ராஜீவ் காந்தி சாலையில்தான் உள்ளன.

சென்னையில் அதிவேகமாக வளர்ந்த பகுதி என்றால் அது இந்த ராஜீவ் காந்தி சாலைதான்...’’ என அழுத்தமாகப் பதிவு செய்கிறார் விநாயகமுருகன். சோழிங்கநல்லூர் தாண்டியதும் செம்மஞ்சேரி வருகிறது. ஒரு சதுரஅடி ரூ.4,299 மட்டுமே என்ற வாசகம் தாங்கிய போர்டுகள் ஆங்காங்கே தென்படுகின்றன. ஐ.டி ஊழியர்கள் தவிர, புறநகரில் வீடு வாங்க நினைப்பவர்கள் இந்தப் பகுதியைத் தேர்ந்தெடுப்பதால் ரியல் எஸ்டேட் அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறது.

இதற்கு முக்கிய காரணம், நன்கு பெயர் எடுத்த கல்லூரிகளும், பள்ளிகளும் இங்கே இருப்பதுதான். இங்கிருந்து கொஞ்ச தூரத்தில் சிறுசேரி சிப்காட் ஐ.டி. பார்க் அன்புடன் வரவேற்கிறது. அரை கிமீ தொலைவிலே டிசிஎஸ் நிறுவனத்தின் பிரமாண்ட கட்டிடம். சுமார் அறுநூறு ஏக்கர் பரப்பில் அமைந்திருக்கும் இந்த ஐ.டி. பார்க்கில் டிசிஎஸ் மட்டும் 70 ஏக்கரில் விரிந்திருக்கிறது. இதை ஆசியாவின் மிகப் பெரிய ஐ.டி அலுவலகம் என்கிறார்கள்.

ஆயிரத்து 600 கோடி ரூபாயில் கட்டப்பட்ட இந்தக் கட்டிடத்தில் சுமார் 30 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இதுதவிர, இந்த வளாகத்தில் சிடிஎஸ், ஹெக்ஸாவேர் என 29 நிறுவனங்களும், நான்கு கல்வி இன்ஸ்டிடியூட்களும் உள்ளன. அப்போது அலறியது நம் செல்போன். ‘‘பிரமாண்டத்தை மட்டும் பார்க்காதீங்க. இங்கிருக்கிற பிரச்னையையும் எழுதுங்க!’’ என்றது அந்த எதிர்முனை குரல்!

என்ன பிரச்னை? முதலில் தண்ணீர். இந்த ஏரியா முழுவதும் உப்புத் தண்ணீராக மாறிவிட்டதால் லாரித்தண்ணீரை நம்பித்தான் ஐ.டி.நிறுவனங்களும், குடியிருப்புகளும் இருக்கின்றன. கடந்த மாதம் அருகிலுள்ள கிராமங்களிலிருந்து தண்ணீர் எடுத்துவந்த லாரிகளை அங்குள்ள மக்கள் சிறைப்பிடிக்க மொத்த டேங்கர் லாரிகளும் போராட்டத்தில் இறங்கின.

அப்போது, பெரும்பாலான ஐ.டி. நிறுவனங்கள் விழிபிதுங்கி விடுமுறை விடுவதற்குக் கூட தயாராகின. அதிகாரிகள் தலையிட்டு பிரச்னையை சரிசெய்த பிறகே நிலைமை சீரானது. ‘‘பார்க்கத்தான் ஓ.எம்.ஆர். பிரமாண்டமா தெரியும். ஆனா, இங்க அடிப்படை வசதிகள் எதுவுமே இல்ல. இந்தப் பகுதில மட்டும் சுமார் 200 அடுக்குமாடி குடியிருப்புகள் இருக்கு. இதுல 20 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கிறாங்க.

நாங்க மாநகராட்சிக்கு சொத்துவரி முறையா கட்டுறோம். குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியமும் வரி செலுத்த சொல்றாங்க. ஆனா, ப்ராப்பர் வாட்டர் கனெக்‌ஷனோ, கழிவுநீர் அகற்றுதலோ எதுவும் செய்யப்படுறதில்ல. பக்கத்துல இருக்கிற அடையாறு, திருவான்மியூர் ஏரியாவை ஒப்பிடறப்ப நாங்க ஐம்பது மடங்குக்கு மேல தண்ணீருக்கும், துப்புரவுக்கும் பணம் கொடுத்திட்டு இருக்கோம்.

இது எங்களுக்கு சுமையா இருக்கு. பல தடவை கோரிக்கை வச்சும் பலனில்லை. இதுதவிர, ஒழுங்கற்ற சாலை, பாதுகாப்பின்மை, சட்டம் ஒழுங்கின்மை, தெருவிளக்கு பற்றாக்குறைனு ஏகப்பட்ட பிரச்னைகள். என்னத்த சொல்ல?’’ என மொத்த ஆதங்கத்தையும் கொட்டித் தீர்த்தது ‘ஃபோமரா’ எனப்படும் ஓ.எம்.ஆர் குடியிருப்பு சங்கங்களின் கூட்டமைப்பு. OMG!               

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

ஓ.எம்.ஆர். டேட்டா...

* தமிழகத்தை ஐ.டி. துறையில் முன்னேற்ற சுமார் 17 வருடங்களுக்கு முன்பு திட்டமிட்டு இந்தப் பகுதியை அரசு உருவாக்கியது. இதில், 2000ம் ஆண்டு டைடல் பார்க்கை கொண்டு வந்தது.

* இந்த ஐ.டி. திட்டத்தின் முதல்கட்டமாக மத்திய கைலாஷ் கோயில் ஜங்ஷனில் இருந்து சிறுசேரி வரை சுமார் ரூ.400 கோடி செலவில் ஆறு வழிச்சாலையை அமைத்தது. இது 2008ம் வருடம் புழக்கத்திற்கு வந்தது. தினமும் 26 ஆயிரம் வாகனங்கள் இந்தச் சாலையை பயன்படுத்துவதன் மூலம் ரூ.2 கோடி வரை வசூலாகிறதாம்.

* மூன்று லட்சம் நேரடியான ஐ.டி. ஊழியர்கள் இருக்கிறார்கள். இதுதவிர, மறைமுகப் பணியில் சுமார் ஒரு லட்சம் பேர் பணிபுரிகின்றனர்.

* ஐ.டி. துறையில் மட்டும் நாளொன்றுக்கு நூறு கோடி ரூபாய் பிசினஸ் நடக்கிறது.

* ஆடி கார் ஷோரூமில் தொடங்கி ஹைதராபாத் பிரியாணி வரை அத்தனைக்கும் கடைகள் இருக்கின்றன.

ஐ.டி. ஊழியர்களின் பிரச்னைகள்

* ஆட்குறைப்பு என்ற பெயரில் பணிநீக்கம் செய்வது அதிகரித்திருக்கிறது. நிறுவனங்கள் தங்கள் வளர்ச்சிக்காக automated ஆக மாறிக் கொண்டிருக்கின்றன. இதனால், ஒரு மேனேஜர் செய்கிற பணியினை தொழில்நுட்பம் மூலமே செய்து ஆட்குறைப்பு செய்கிறார்கள்.

* Annual Performance Appraisal என்ற திறன் மதிப்பிடும் முறையினை நிறுவனங்கள் கையாள்கின்றன. இதனால், பெட்டர் பெர்ஃபாமன்ஸ் இருந்தாலும் சரியில்லை எனக் காரணம் சொல்லி ஊழியர்களை வெளியேற்றுகின்றன.

* இதையெல்லாம் எதிர்த்துக் கேட்க சங்கம் தேவை. அதை அமைக்கும் உரிமையை நிறுவனங்கள் மறுக்கின்றன. ஊழியர்களும் வேலையைவிட்டு தூக்கினால் ஏதாவது பிசினஸ் செய்யலாம் என்ற மனநிலையிலே உள்ளனர். உள்ளிருந்து போராடலாம் என யாரும் முன்வருவதில்லை.

* பெண்களுக்கு திருமணம், குழந்தைப் பிறப்பு போன்றவற்றால் முன்னேறிச் செல்ல முடியவில்லை. நிறுவனங்களும் அவர்களை வேலையைவிட்டு விலகும் சூழலுக்கு தள்ளிவிடுகின்றன.

* ஒரு நாளைக்கு எத்தனை மணிநேரம் என்றாலும் வேலை செய்ய வேண்டும். வார இறுதி நாட்களில் வந்து வேலையை முடிக்க வேண்டும் என்றாலும் கேள்வி கேட்கக் கூடாது. இருவர் செய்யும் வேலையை ஒருவரை செய்யச் சொன்னாலும் எதிர்க்க முடியாது. இதைத் தாண்டி ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தால், அவரது பணிப்பாதுகாப்பு கேள்விக்குறிதான். இப்படி பணிகள் அதிகரிப்பதால் மனஅழுத்தப் பிரச்னை ஏற்படுகிறது...

- என்கிறார் தொழில்நுட்ப பணியாளர்களுக்கான மன்றத்தின் தலைவர் பரிமளா.