எவரெஸ்ட் சிகரத்தை முதன் முதலில் அளந்த இந்தியரின் பெயர் வரலாற்றில் பதிவாகவில்லை!



-ச.அன்பரசு

ஆபீசின் இரண்டாம் மாடிக்கு செல்ல லிஃப்ட் தேடும் யாத்ரீகர்களுக்கு இமயமலையின் எவரெஸ்ட்டை ஏறித் தொட உள்ளூர லட்சியமே உண்டு. அச்சுறுத்தும் அபார உயரமும், அடர்ந்த வேகத்தில் கரைந்து செல்லும் பனியும் நடுக்கத்தை டன் கணக்கில் மனதில் கிடுகிடுவென கிளப்பினாலும் எவரெஸ்ட்டின் கிளாமரே தனி.

2015ம் ஆண்டு நேபாளத்தில் நடந்த 7.8 ரிக்டர் நிலநடுக்கத்திற்குப் பிறகு எவரெஸ்ட்டின் உயரத்தை அளக்க இந்திய அரசின் சர்வே ஆஃப் இந்தியா முடிவெடுத்துள்ளது. இவ்வமைப்பு தொடங்கப்பட்டு இந்த ஆண்டோடு 250 ஆண்டுகளாகின்றன. ‘‘எவரெஸ்ட்டை கடைசியாக நாம் அளவிட்டது 1855ம் ஆண்டு. உயரம் 29,028 அடி (8,848 மீ). நேபாளத்தின் நிலநடுக்கத்திற்குப் பிறகு, எவரெட்ஸ்டின் உயரம் மாறியிருக்க வாய்ப்புகள் உண்டு என ஆராய்ச்சியாளர்கள் பலரும் கருதுகின்றனர்.

எனவே சர்வே ஆப் இந்தியா, எவரெஸ்ட்டின் உயரத்தை கணக்கிட்டு அவர்களின் சந்தேகங்களைத் தீர்க்கவிருக்கிறது. தவிர, பூமியின் தட்டுகளில் ஏற்படும் மாறுதல்களையும் இதன்மூலம் அறிய முடியும்...’’ என்கிறார் சர்வே ஆப் இந்தியாவின் இயக்குநரான சுவர்ண சுப்பாராவ்.

பல்வேறு அனுமதிகள் பெற்றுவிட்ட நிலையில் நேபாளத்தின் ஆய்வு அதிகாரியிடம் ஒப்புதல் பெற்று இரண்டு மாதங்களில் பணி தொடங்கவிருக்கிறது. இந்நிலையில் பனி சூழ்ந்த எவரெஸ்ட்டின் உச்சியில்தான் முதன்முதலில் அதன் உயரத்தை அளவிட்டுக் கூறிய 19 வயது இந்தியரின் உழைப்பும் மறைக்கப்பட்டிருக்கிறது என்ற அதிர்ச்சிகரமான உண்மை வெளியாகி இருக்கிறது.

இந்தியாவை அளக்கும் பணி!
1800ம் ஆண்டு மைசூர் போரில் ஆங்கிலேயர்கள் திப்புவிடம் தோற்ற சமயம். ஆங்கிலேய நில அளவையாளர் வில்லியம் லாம்ப்டன், இந்தியாவை அளவிடும் பணி குறித்த கோரிக்கையை கிழக்கிந்தியக் கம்பெனியிடம் முன்வைத்தார். இந்தியாவை காலனியாக மாற்றும் பட்சத்தில் நாட்டை ஆள்வதற்கு அதனை அளவிடுவது தேவையாயிற்றே! 1802ம் ஆண்டு கன்னியாகுமரியை ஒரு புள்ளியாகக் கொண்டு ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளை முக்கோணமாக உருவகப்படுத்தி அதன் அடிப்படையில் அளவிடும் பணி தொடங்கியது.

1823ம் ஆண்டு லாம்ப்டன் இறந்தபின் அவரது உதவியாளரான ஜார்ஜ் எவரெஸ்ட்(இவரது பெயரின் பிற்பகுதி எவரெஸ்ட்தான்!) சர்வே ஆஃப் இந்தியாவின் தலைவரானார். 1841ம் ஆண்டு தியோலைட் என்ற அளவிடும் கருவியில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்த நில கணக்காய்வு நிறைவு வேகமாக பூர்த்தி அடைந்தது. இதுவொரு வரலாற்று சாதனை.

சர்வே ஆஃப் இந்தியாவின் அலுவலகத்தை உத்தரகாண்டின் டேராடூனில் அமைத்திருந்தார் ஜார்ஜ் எவரெஸ்ட். இவருக்குப் பிறகு இப்பதவிக்கு வந்த ஆண்ட்ரூ ஸ்காட் வாக்கிடம், கணிதவியல் வல்லுநரான ராதாநாத் சிக்தார் என்ற வங்காள இளைஞர், எவரெஸ்ட்டின் உயரத்தை, தான் முன்னமே கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்தது இன்று வரை தீராத சர்ச்சையாக இருந்து வருகிறது.

சிக்தார் பணியிலிருப்பது கொல்கத்தாவின் சர்வே ஆஃப் இந்தியா அலுவலகத்தில் என்னும்போது இது எப்படி சாத்தியம் என ‘The Great Arc: The Dramatic Tale Of How India Was Mapped And Everest Was Named’ (2000) என்ற நூலில் ஜான் கே எழுப்பிய கேள்வி வரலாற்று ஆய்வில் அனல் கிளப்பியது. உண்மையில் நடந்தது என்ன?

புறக்கணிக்கப்பட்ட இந்தியர்!
1847ம் ஆண்டு ஆண்ட்ரூ வாக், சர்வே ஆஃப் இந்தியாவின் தலைவராக இருந்தபோது இமயமலைத்தொடரின் கஞ்சன் ஜங்கா சிகரமே உச்ச உயரம் என்று கூறப்பட்டு வந்தது. 1852ம் ஆண்டு சிக்தார், எவரெஸ்ட் சிகரத்தை (Peak XV) ஆய்வு செய்து அளவிட்டு அதன் உயரத்தைக் கூறினார். அதிகாரபூர்வமாக இது அறிவிக்கப்பட்ட ஆண்டு 1856 மார்ச் மாதம்.

சரி, யார் இந்த ராதாநாத் சிக்தார்?
1831ம் ஆண்டு, திரிகோணவியல் விதியில் தேர்ந்த இளைஞரைத் தேடிவந்தார் ஜார்ஜ் எவரெஸ்ட். அப்போது இந்துக் கல்லூரி ஆசிரியராக இருந்த டைட்லர், தம் மாணவரான ராதாநாத்தை சிபாரிசு செய்தார். உடனே திரிகோண ஆய்வில் கணக்காய்வாளராகப் பணியில் சேர்ந்த ராதாநாத்துக்கு மாதச் சம்பளம் ரூ.30 என நிர்ணயிக்கப்பட்டது.

புவி பகுப்பாய்வில் விரைவிலே பாயும் புலியான ராதாநாத், பல பகுதிகளை தானே அளக்கத் தொடங்கியபோது, டேராடூனில் சிரோன்ஞ் பகுதியில் பணியிலிருந்தார். Peak XV (எவரெஸ்ட் சிகரம்) மீது அதிக ஆர்வமாகி அதனை அளவிட கணக்காய்வுப் பணியை விட்டு துணை கலெக்ட்ராகப் பணிமாறிச் செல்ல விரும்பினார். ஆனால், அப்படிச்செல்ல மேலதிகாரியான தன்னுடைய அனுமதி தேவை என ஜார்ஜ் எவரெஸ்ட் தடைபோட்டார்.

புறக்கணிப்பும், அங்கீகாரமும்!
1851ம் ஆண்டு கல்கத்தாவிற்கு பணிமாறுதலான சிக்தார், மூத்த கணக்காய்வாளரானார். பின்னர் வானிலை ஆராய்ச்சித்துறையின் கண்காணிப்பாளராக புரொமோஷன் பெற்றார். பாரமானி அளவீடு மூலம் 32 டிகிரி ஃபாரன்ஹீட் அளவு வரை கண்டறிந்தது இவரது முக்கியமான கண்டுபிடிப்பு.

சிக்தார் ‘எவரெஸ்ட்’டின் உயரத்தை முன்னமே கண்டுபிடித்து உள்ளூர் பெயரில் குறிப்பிட்டிருந்ததை கவனத்தில் கொள்ளாமல் அச்சிகரத்தை கண்டுபிடித்ததாக ஜார்ஜ் எவரெஸ்ட்டின் பெயர் முன்மொழியப்பட்டு அவரது பெயரின் பிற்பகுதியை அந்த சிகரத்துக்கு ஆண்ட்ரூ வாக் சூட்டினார். எனவே ‘எவரெஸ்ட்’ என்ற பெயரே இன்று வரை நிலைத்திருக்கிறது. 

ஆனால், அதன் உயரத்தை உண்மையில் அளந்த ராதாநாத் சிக்தாரின் பெயர் மெல்ல தேய்ந்து வரலாற்றில் மறைந்தே போனது பெரும் சோகம். இப்போது எவரெஸ்ட்டின் உயரத்தை அறியும் ஆய்வு நடைபெறவிருக்கிறது. இந்தச் சூழலில் வரலாற்றில் இருந்து மறைக்கப்பட்ட ராதாநாத் சிக்தாரை நினைவு கூர்ந்து அவரது உழைப்புக்கான அங்கீகாரத்தை வழங்குவதே சரியாக இருக்கும்.          

சர்வே: அன்றும் இன்றும்

1767ம் ஆண்டு சர்வே ஆஃப் இந்தியா தொடங்கப்பட்டது. திரிகோணவியல் விதிப்படி நாடு முழுவதும் அளக்கப்பட்டது.  1950ம் ஆண்டு இந்தியாவில் 5 இயக்குனரக பிரிவுகளாக செயல்பட்ட சர்வே ஆஃப் இந்தியா, இன்று 22 இயக்குனரகங்களாக நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் 3 டிஜிட்டல் சென்டர்களை அமைத்து நிலப்பரப்பு குறித்த தகவல் தரவுத்தளங்களை உருவாக்கி பராமரித்து வருகிறது சர்வே ஆஃப் இந்தியா. ‘Geodetic and Research Branch’, ‘Indian Institute of Surveying & Mapping’ ஆகியவை இதன் துணை நிறுவனங்களாகும்.

எத்தனை பேர்?

அளவிடப்படும் எவரெஸ்ட் குறித்த 4,800 வரைபடங்களை தேசிய வரைபட ஏஜன்சி இணையத்தில் இலவசமாக வெளியிடவிருக்கிறது. டவுன்லோட் செய்ய ஆதார் எண் தேவை.
ஆய்வுக்குழுவினர் எண்ணிக்கை - 30
எவரெஸ்ட்டை அளவிடுவதற்கான தொகை - ரூ.5 கோடி
ஆய்வுமுறை - ஜிபிஎஸ், சாட்டிலைட்.