தனுஷோட நம்பிக்கைதான் ப.பாண்டி ல என்னை நடிக்க வைச்சது!



-மை.பாரதிராஜா

ஹீரோக்கள் பலரும் அப்பா, தாத்தா ஆகிக்கொண்டிருக்கும் நிலையில், அப்பா, தாத்தாவாக நடித்துக் கொண்டிருந்த ராஜ்கிரண் மீண்டும் ஹீரோவாகிவிட்டார். ‘‘சென்னைல பெருமழை வந்தப்ப ஈக்காட்டுத்தாங்கல்ல இருந்த என் வீடும் பாதிப்புக்கு உள்ளாச்சுனு உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். இன்னமும் அங்க ரிப்பேர் வேலைகள் நடந்திட்டிருக்கு.

‘அதுவரை என் தேனாம்பேட்டை வீட்டுக்கு வந்திடுங்க’னு என் நண்பர் கேட்டுக்கிட்டார். அதான் இங்க வந்திருக்கோம். அங்க வீடு ரெடியானதும் போயிடுவோம். இந்த பரபரப்பு எதுவும் இல்லாத அமைதியான ஏரியா அது...’’ மீசையை முறுக்கி புன்னகைக்கிறார் ராஜ்கிரண்.

தனுஷ் நல்ல நடிகர்னு நிரூபிச்சிருக்கார். ஆனா, இயக்குநர் வேலை அவருக்கே புதுசு. அவர் மேல எப்படி நம்பிக்கை வச்சீங்க?
அவரோட நாலு வயசுல இருந்து நான் பார்த்திட்டிருக்கேன். அப்பவே அவரைப் பத்தி ரொம்ப நல்லாத் தெரியும். அப்புறம் ‘வேங்கை’ல நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து நடிச்சிருக்கோம். மருமகன் தனுஷ், இன்னிக்கு எல்லாரும் விரும்புற ஒரு பெரிய ஹீரோ. ரஜினி மருமகன். இந்தி, ஹாலிவுட்னு எல்லாத்துலேயும் அசத்துற உயரம் தொட்டிருக்கார். அவர் நினைச்சிருந்தா ரஜினி கால்ஷீட்டையே வாங்கியிருக்க முடியும்.

ஆனா, அதையெல்லாம் விட்டுட்டு ராஜ்கிரண்தான் என் ஹீரோனு வரும்போதே அவரோட கான்ஃபிடன்ட் தெரிஞ்சது. ‘முதியோர்களுக்கு அவங்களுக்கான உரிமைகள் காப்பாற்றப்படவேண்டும்’னு ‘ப.பாண்டி’யோட ஒன்லைனை தனுஷ் சொன்னப்பவே அது அருமையான நாட்னு புரிஞ்சது. அவரோட முதல் பட கதைக்கு என்னை செலக்ட் பண்றார்னா... அதுக்கான விஷயமும் வச்சிருப்பார். அந்த ஜட்ஜ்மென்ட்ல கதையைக் கூட கேட்காம ஷூட்டிங் போயிட்டேன்.

ஸ்பாட்டுல நான் ரொம்ப ஃப்ளெக்ஸிபிளா ஃபீல் பண்ணினேன். ஒவ்வொரு நாளும் எம்மேல அவ்வளவு பாசம் காட்டினார். ‘ஸ்டன்ட் மாஸ்டர் பவர் பாண்டி’னு என் கேரக்டர் ரஃப் அண்ட் டஃப்பா இருந்தாலும் தனுஷ் என்னை ஒரு குழந்தையா நினைச்சு ரசிச்சு ரசிச்சு சீன்கள் பண்ணியிருக்கார்னு ஒவ்வொரு காட்சியை எடுக்கும்போதும் புரிஞ்சது.

படத்துல என்னோட ஃப்ளாஷ்பேக் சீன் ஒண்ணு இருக்கு. கிராமத்துல நடக்கும். சின்ன வயசு ராஜ்கிரணா தனுஷ் நடிச்சிருக்கார். அதனால எங்களுக்குள்ள காம்பினேஷன் கிடையாது. அவர் நினைச்சா மாதிரியே படம் வந்ததுல அவருக்கு ஹேப்பி... அவர் சந்தோஷப்பட்டதில் எனக்கும் ரொம்ப ரொம்ப ஹேப்பி!

என்ன சொல்றாங்க ரேவதி...?
‘தலைமுறை’ படத்துக்குப் பிறகு ரேவதியோட மறுபடியும் சேர்ந்து நடிக்கறேன். She is a legend. ‘ப.பாண்டி’ல கொஞ்ச நேரம்தான் எங்க போர்ஷன் வருது. ரேவதி ஒரு ஜீனியஸ். அதனால அவங்களோட நடிக்கும் போது மட்டும் கொஞ்சம் படபடப்பும், பயமும் வந்திடும். அப்ப எப்படி பார்த்தேனோ அப்படித்தான் இன்னமும் இருக்காங்க.

நீங்களும் ஒரு இயக்குநர். தனுஷ் டைரக்‌ஷனுக்கு எத்தனை மார்க் போடுவீங்க?
இதுல மார்க் போடுறதுங்கறதை விட ஷூட்டிங்ல அவரைப் பார்த்து பிரமிச்சுகிட்டே இருந்தேனே... அதுதான் முக்கியம். நான் பார்த்த இயக்குநர்கள்ல ரொம்பவும் பர்ஃபெக்‌ஷன் எதிர்பார்க்குற டைரக்டர்னா அது தனுஷ்தான். சின்னச் சின்ன விஷயங்கள்ல கூட நுணுக்கங்கள் எதிர்பார்த்தார். கம்ப்யூட்டர் மாதிரி மொத்த விஷயத்தையும் மைண்ட்ல வச்சிருந்து பண்ணினார்.

நான், பிரசன்னா, ரேவதி, சாயாசிங், என் பேரன் பேத்திகளா நடிச்ச குழந்தைகள்னு ஒவ்வொருத்தர்கிட்டேயும் அவங்களாகவே மாறி நடிப்பு சொல்லிக் கொடுத்து வேலை வாங்கினார். 27 வருஷங்களுக்குப் பிறகு நான் ஹீரோ ஆகியிருக்கேன்னு நினைக்கல. தனுஷ் எம்மேல வச்சிருக்கற பாசமும் அன்பும்தான் என்னை ஹீரோவாக்கியிருக்குனு நினைக்கறேன்.

நீங்க நடிச்ச படங்களை நீங்களே பார்க்க மாட்டீங்கனு இண்டஸ்ட்ரில ஒரு டாக் இருக்கு. இது சரியா?
நான்  சாதாரண நிலையில் இருந்து மேல வந்தவன். வெறும் நாலு ரூபாய் ஐம்பது பைசா சம்பளத்துல இருந்து என் கேரியர் சினிமாவுல தொடங்குச்சு. தியேட்டர்ல டிக்கெட் கலெக்‌ஷன் வேலை பார்க்கிறப்பதான் ரசிகர்களின் ரசனையை புரிஞ்சுக்க ஆரம்பிச்சேன். அப்புறம் விநியோகஸ்தர், தயாரிப்பாளர், நடிகர்னு படிப்படியா வந்தேன்.

கைல காசு இல்லாததால நிறைய படங்கள் பார்க்க நினைச்சும் பார்க்க முடியாம போயிருக்கு. இத்தனை வருஷத்துல எம்ஜிஆர் ஐயா, சிவாஜி ஐயா படங்களையும் சேர்த்து மொத்தமா 25 படங்களுக்குள்ளதான் பார்த்திருப்பேன். டிவிடில படங்கள் பார்க்க மாட்டேன். நான் நடிச்ச படங்களைக் கூட டப்பிங் அப்ப பார்க்கறதோட சரி.

மத்தபடி அது டிவில வர்றப்ப நான் வீட்ல இருந்தா பார்ப்பேன். படங்கள் பார்த்துதான் ஒரு நடிகன் தன்னை அப்டேட் பண்ணிக்கணும்னு இல்ல. எல்லாரையும் பார்த்து அப்டேட் பண்ணிக்கிட்டா போதும். தேவைப்படறப்ப அந்த கேரக்டருக்கு உயிர் கொடுக்கலாம். உதாரணத்துக்கு ‘கிரீடம்’ படம் பண்ணினேன்.

அப்ப அந்த டைரக்டரும், புரொட்யூசரும் அதோட ஒரிஜினல் வெர்ஷனான மலையாளப் பட சிடியைக் கொடுத்து ‘திலகன் நடிச்சிருந்த கேரக்டரைத்தான் பண்ணப்போறீங்க’னு சொன்னாங்க. ‘கேரக்டரை எங்கிட்ட சொல்லிட்டீங்கல்ல... இதுக்கு நான் என்ன பண்ணணுமோ அதை பண்ணிக்கறேன்’னு அந்தப் படத்தை பார்க்க மறுத்துட்டேன்.

அடுத்து..?
லிங்குசாமியோட ‘சண்டக்கோழி 2’ கமிட் ஆகியிருக்கேன். ராஜ்கிரண் படம்னா குழந்தை குட்டியோட வந்து சந்தோஷமா பார்க்க முடியும்னு நினைக்கிறாங்க. அதுக்கு ஏத்த மாதிரிதான் கதைகள் தேர்ந்தெடுக்கறேன். காசுக்காக படம் பண்ணணும்னு எப்பவும் நினைச்சதில்லை. சினிமாவுல எனக்கு அனுபவங்கள் ஜாஸ்தி. ஆனா, இதுவரை 23 படங்கள்தான் நடிச்சிருக்கேன். குவாலிட்டி முக்கியம்னு உழைச்சிட்டிருக்கேன்.

வெளில எங்கயும் உங்களை பார்க்க முடியறதில்லையே..?
என் வீடுதான் எனக்கு உலகம். என் பொஞ்சாதி, எம் புள்ளைங்களோட நேரம் செலவழிக்கறதுதான் பிடிக்கும். நான் ஒரு வீட்டுப்பறவை. பையனும், பெண்ணும் சின்னக் குழந்தைகளா இருக்காங்க. அவங்களை நல்லா செட்டில் பண்ணணும். இன்னும் கடனுக்கு வட்டி கட்டிக்கிட்டிருக்கேன். குடும்பத் தேவைகளையே இன்னும் பூர்த்தி செய்ய முடியாம இருக்கிறப்ப வெளில போய் மக்களுக்கு சேவை செய்யறது தேவையில்லாத விஷயம்னு நினைக்கறேன்.