குரங்கு வளர்த்த சிறுமி!



-த.சக்திவேல்

ஓநாய்களால் வளர்க்கப்பட்டு விலங்குகளோடு விலங்காக காட்டில் வாழும் சிறுவன் மோஹ்லி குறித்து ‘த ஜங்கிள் புக்’ கதையில் படித்திருப்போம். அதையே ஹாலிவுட் படமாகவும் பார்த்து ரசித்திருப்போம். மோஹ்லி போல் நாமும் வாழ வேண்டும் என ஆசைப்படாத சிறுவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம்.

அந்தக் கனவு நினைவாகி இருக்கிறது. சுரேஷ் யாதவ் ஒரு சப் இன்ஸ்பெக்டர். நேபாளின் எல்லைப் பகுதியில் இருக்கும் கட்டார்னியாகட் வனவிலங்கு சரணாலயம் அருகே வழக்கம்போல் ஒருநாள் ரோந்து போயிருக்கிறார். அப்போது ஒரு சிறுமி குரங்குகளோடு குரங்காக  நான்கு கால்களில் நடந்து செல்வதைப் பார்த்திருக்கிறார்.

அதிர்ந்தவர், அச்சிறுமியை மீட்க முயன்றிருக்கிறார். குரங்குகள் தாக்கியிருக்கின்றன. அதையும் மீறி அச்சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார். மனிதர்களைப் போல் அந்த சிறுமியால் பேசவும் நடக்கவும் முடியவில்லை. நான்கு கால்களில் நடக்கிறார். தாவுகிறார். குரங்குகள் போலவே சாப்பிடுகிறார். மனிதர்களைக் கண்டு பயப்படுகிறார். ‘விரைவில் அந்த சிறுமியை மனித இயல்புக்கு கொண்டு வந்துவிடுவோம்’ என மருத்துவர்கள் நம்பிக்கை அளிக்கின்றனர்.