விஜயனின் வில்



கே.என்.சிவராமன் - 22

கிருஷ்ணனும் ஐஸ்வர்யாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். ஆதி அவர்கள் பக்கம் திரும்பவேயில்லை. மாறாக நின்ற இடத்தில் இருந்தபடியே அந்த பாழடைந்த கோயிலை வெறும் கண்ணால் அலசினான். உதடுகள் மட்டும் பிரிந்து வாக்கியங்களைக் கொட்டியது. தனக்குத் தானே சொல்லிக் கொள்வது போல் அவன் பேசியபடியே இருந்தான்.

‘‘உண்மைலயே சரித்திரப் புகழும் புராண சிறப்பும் பரதனுக்கு உண்டு. ஒரே குடைல பெரிய சாம்ராஜ்ஜியத்தை முதன்முதல்ல அமைச்சது அவன்தான். ஆமா, ‘அவன்’தான். என்னடா ஒருமைல சொல்றானேன்னு நீங்க யோசிக்கலாம். அதுக்குக் காரணம் நெருக்கம்தான். பரதன் எங்க ஆதி குரு...’’ சுண்டி விட்டது போல் கிருஷ்ணன் நிமிர்ந்தான்.

‘நோட் திஸ் பாயிண்ட்’ என கண்களால் ஐஸ்வர்யாவுக்கு ஜாடை காட்டினான். ஆமோதிக்கும் வகையில் அவள் தலையசைத்தாள். தொடர்ந்து ஆதி பேசவே இருவரும் அவன் பக்கம் கவனம் செலுத்தினார்கள். ‘‘பரதனுக்கு மொத்தம் ரெண்டு பசங்க. தஷன், புஷ்கலன். ரெண்டு பேருமே வில்லாதி வீரர்கள். சூராதி சூரர்கள்.

ரெண்டு பேர் பெயர்லயும் பரதன் மிகப்பெரிய நகரங்களை உருவாக்கினான். சொல்லப்போனா இந்தியாவுல முதன் முதல்ல உருவான மாபெரும் நகரங்கள் அதுதான். ஒண்ணு, தக்‌ஷசீலம். அடுத்தது புஷ்கலவதி. தங்க பெயர்கள்ல அமைந்த நகரத்துல வாழ்ந்தபடி பரதனோட ரெண்டு பசங்களும் ஆட்சி செய்தாங்க. இன்னிக்கி நாம இதிகாசமா போற்றிப் புகழ்ற ராமாயணத்துலயும் மகாபாரதத்துலயும் இந்த இரண்டு நகரங்களுமே குறிப்பிடப்பட்டிருக்கு.

சரித்திரமும் இதை அப்படியே ஆமோதிக்குது. பணவிருத்தி, கல்வி விருத்தி-இந்த இரண்டிலும் தக்‌ஷசீலம் சிறந்து விளங்கிச்சு. இதுக்கு மாறா புஷ்கலவதி வீரத்துக்கு பெயர் போன நிலமா காட்சி தந்தது...’’ மெய்மறந்து பேசியபடியே சென்ற ஆதி - சட்டென்று அவர்கள் பக்கம் திரும்பினான். ‘‘நான் பொய் சொல்லலை.

கிரேக்க மன்னரான மாவீரன் அலெக்சாண்டர் இந்தியா மேல போர் தொடுத்தார்னு வரலாற்றுல படிச்சிருப்பீங்க. வட இந்திய மன்னர்களை அடிபணிய வைச்சார்னும் சரித்திர ஆசிரியர்கள் பதிவு செய்திருக்காங்க. ஆனா, இந்தியாவுக்குள்ள காலடி எடுத்து வைக்க அலெக்சாண்டர் திணறினார். ஆமா. ரொம்பவே பாடுபட்டார். முதல் வெற்றி அவருக்கு சுலபமா கிடைக்கலை.

ஏன்னா, அலெக்சாண்டரை எதிர்த்த முதல் இந்திய நகரம் - நாடு - புஷ்கலவதி. இதை நான் சொல்லலை. கிரேக்க வரலாற்று ஆசிரியர்களே எழுதி வைச்சிருக்காங்க. முப்பது நாட்கள்... தர்ட்டி டேஸ்... அலெக்சாண்டர் முற்றுகையை புஷ்கலவதி மன்னரான அத்தீஸ் எதிர்த்து நின்றார். உண்மைல அவர் பேரு ஹஸ்திநயனன். இது வடமொழிச் சொல்.

இதைத் தான் கிரேக்க ஆசிரியர்கள் ‘அத்தீஸ்’னு குறிப்பிட்டிருக்காங்க. 31வது நாள் போர்க்களத்துல ஹஸ்திநயனன் இறந்த பிறகுதான் அலெக்சாண்டரால இந்தியாவுக்குள்ளயே நுழைய முடிஞ்சது. நான் சொல்றதை க்ராஸ் செக் பண்ண நினைச்சீங்கன்னா Radha Kumud Mukherji எழுதின ‘Chandragupta & His Times’ நூலை படிச்சுப் பாருங்க... ஹஸ்திநயனன் பெருமையை உணர்வீங்க...’’ ‘‘என்ன ஆதி இது...’’ நெருங்கி வந்து அவன் தோளில் கைபோட்டான் கிருஷ்ணன்.

‘‘நாங்க எதுக்கு க்ராஸ் செக் பண்ணணும்? நீ சொன்னா சரியாதான் இருக்கும்...’’ ‘‘அந்த அளவுக்கு என்னை நம்பக் காரணம்..?’’ ‘‘மேக்னடிக் வேவ்ஸுக்கு பின்னாடி இருக்கிற மேப்பை சட்டுனு நீதானே அடையாளம் தெரிஞ்சுகிட்ட..?’’ ஐஸ்வர்யா இடைமறித்தாள். ‘‘அது பரதன் காலத்து இந்திய வரைபடம்னு நான் சொன்னதை அப்படியே நம்பறீங்களா..?’’ சிரித்தபடிதான் ஆதி கேட்டான்.

ஆனால், அந்த வினா இருவரையும் புரட்டிப் போட்டது. என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் ஐஸ்வர்யா திணறினாள். ‘‘ஏன், நம்பக் கூடாதா?’’ கிருஷ்ணன் புன்னகைத்தான். ‘‘உங்க இஷ்டம்..!’’ தோளைக் குலுக்கிய ஆதி, தன் வலக்கையை நீட்டினான். ‘‘கொஞ்சம் அந்த க்ளாஸை கொடுங்க...’’ வாங்கியவன் அதை அணிந்தபடி ஐந்தடி முன்னோக்கி நடந்தான்.

கிருஷ்ணனின் கரங்களை பற்றியபடி இரண்டடி பின்னோக்கி ஐஸ்வர்யா நகர்ந்தாள். ‘‘க்ருஷ்... இவனை நம்பலாமா?’’ கிசுகிசுத்தாள். ‘‘இப்போதைக்கு வேற ஆப்ஷன் இல்ல...’’ ‘‘அப்ப அந்த மேப்..?’’ ‘‘ஆதி சொன்னா மாதிரியே இருக்க சான்ஸ் இருக்கு...’’ ‘‘எப்படி சொல்ற?’’ ‘‘புஷ்கலவதி வீரத்துக்கு பெயர் போன நகரம். ஹிஸ்டரில நானும் படிச்சிருக்கேன்...’’ ‘‘அதுக்கும்..?’’ ‘‘நாம தேடறதுக்கும் தொடர்பிருக்கு.

பரதனோட வம்சத்தை சேர்ந்தவங்கதான் பாண்டவர்கள். ஸோ, அர்ஜுனனோட வில்லுக்கும் புஷ்கலவதி நகரத்துக்கும் ஏன் தொடர்பிருக்கக் கூடாது..?’’ ‘‘கெஸ்தானே?’’ ‘‘சந்தேகம்தானே எல்லா கண்டுபிடிப்புக்கும் அடிப்படை!’’ ஐஸ்வர்யாவின் கண்கள் மின்னின. ‘‘முயற்சி செய்யலாம்னு சொல்றியா?’’ ‘‘ம்... விழுந்தா மாங்கா. போனா கல்...’’ ‘‘அப்ப வா...’’ இருவரும் கைகோர்த்தபடி ஆதியை நெருங்கினார்கள்.

‘‘பேசி முடிவு பண்ணிட்டீங்களா?’’ கண்ணாடியைக் கழற்றியபடி ஆதி சிரித்தான். ‘‘எதுக்கு?’’ ஐஸ்வர்யாவின் புருவங்கள் சுருங்கின. ‘‘என்னை நம்பலாமா வேண்டாமானு!’’ சிரித்தான். சிரித்தாள். சிரித்தார்கள். ‘‘ஓகே. இப்ப நாம உள்ள போகணும்...’’ ஆதி சீரியசானான். ‘‘என்ன செய்யலாம்?’’ ‘‘வெயிட்...’’ அவனிடமிருந்து கண்ணாடியை வாங்கி கிருஷ்ணன் அணிந்தான்.

மேக்னடிக் வேவ்ஸையும் அதன் பின்னால் தெரிந்த வரைபடத்தையும் மீண்டும் மீண்டும் உள்வாங்கினான். இதைத்தான் பிரேக் செய்ய வேண்டும். எப்படி? யோசிக்க யோசிக்க கண் முன்னால் பூச்சிகள் பறந்ததே தவிர வேறொன்றும் தோன்றவில்லை. ‘‘ஆதி...’’ ‘‘என்ன கிருஷ்?’’ ‘‘பரதன் தக்‌ஷசீலம், புஷ்கலவதி... இதுகூட தொடர்புள்ள ஏதாவது செய்யுள் இல்லைனா ஸ்லோகம் இருக்கா?’’ ‘‘எதுக்கு கேட்கறீங்க?’’ ‘‘Codeஐ உடைக்க ஒருவேளை அது பயன்படலாம்...’’ ‘‘நோ ஐடியா. ஆனா...’’ ‘‘தயங்காம சொல்லு ஆதி.

அது எவ்வளவு மொக்கையா இருந்தாலும் பரவால்ல...’’ ‘‘எனக்குத் தெரிஞ்ச ஒரு பெரியவர் அடிக்கடி செய்யுள் மாதிரி ஒண்ணை சொல்வார். காரணமே இல்லாம இப்ப அது நினைவுக்கு வருது. நான் உள்ளுணர்வை நம்பறவன். ஸோ, ஏதோ ஒரு வகைல அந்த செய்யுளுக்கும் நாம நுழையறதுக்கும் தொடர்பிருக்கலாம்னு தோணுது...’’ ‘‘கமான்... ஷூட் இட்...’’ ஐஸ்வர்யா பரபரத்தாள்.

ஆதி சொன்னான். கேட்ட இருவருக்கும் பூமியே பிளப்பது போல் இருந்தது. கிருஷ்ணன் எச்சிலை விழுங்கினான். ‘‘திரும்பவும் சொல்லு...’’  நிதானமாக அதை ஆதி  உச்சரித்தான்... ‘நவகிரகமும் எட்டு திசையில் நான்கு மூலையில் ஒன்றுமில்லை நவரத்தினமும் ஒன்றுமில்லை அதிசயமே உலகம் திரிசூலமே நான்காவது லூகாஸ் பஞ்சபூதம்...’

(தொடரும்)

ஓவியம்: ஸ்யாம்

டின்னர் வித் சிங்கம்!

கலிஃபோர்னியாவின் போலாக் மலைப்பகுதியில் மார்க் டால்ப் என்பவர் தன் வீட்டில்  டின்னர் செய்து கொண்டிருந்தார். அப்போது பூனைகள் அலறின. எட்டிப்பார்த்தவருக்கு, தொடை நடுங்கிவிட்டது. காரணம், டின்னர் கெஸ்டாக வந்தவர் சிங்கம்! கப்பென்று அவரும் பூனைகளும் மறைந்து கொள்ள... வந்த சிங்கம் அவர்களை ஒன்றும் செய்யவில்லை. மாறாக, டின்னர் டிஷ்ஷை கமுக்கமாகத் தின்றுவிட்டு சென்றுவிட்டது! சமைத்ததை சிங்கம் சாப்பிடுமா?! ‘சாப்பிட்டதை என் கண்ணால் பார்த்தேன்...’ என சத்தியம் செய்கிறார் மார்க் டால்ப்!

பிக்பாக்கெட் ஒட்டகம்!

டெக்ஸாஸிலுள்ள வனவிலங்கு பூங்காவுக்கு தன் குடும்பத்தினருடன் சென்றார் கேரிரா பவெல். காரில் ஜாலி ரவுண்ட் அடித்தபோது திடீரென ஒட்டகமும், நெருப்புக்கோழியும் வண்டியை வழிமறித்தன. மீல்ஸ் மணத்தில் மயங்கிய ஒட்டகம் லைட்டாக காரினுள் தலைவிட்டு கேரிரா வைத்திருந்த உணவு பாக்கெட்டை மட்டும் அபேஸ் செய்துவிட்டது!

செல்போன் டவரைக் காணோம்!

செல்போனை காணவில்லை என்றால் சரி. 68 அடி டவரைக் காணவில்லை என்றால்..? கனடாவின் மனிடோபா பகுதியில் வினிபெக்கில் நிறுவுவதற்காக வண்டியில் வைத்திருந்த டவர் அது. அதை ஆட்டை போட்ட கும்பலை மனிடோபா போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.