மக்கள் மொழியில் இயங்கும் பழங்குடி மலைப்பள்ளி!



-ச. அன்பரசு

மத்தியப் பிரதேசத்தின் சாகத் கிராமத்திலுள்ள பசுமையான பள்ளி வளாகம் அது. அங்கு படித்த முன்னாள் மாணவர்கள் பழைய நினைவுகளோடு பங்கேற்ற நிகழ்வு சிறப்பாக முடிந்தது. பலரும் தாங்கள் படித்த வகுப்பு, விளையாடிய இடம்... என பால்ய வாழ்வின் மிச்சங்களை தேடிக் கொண்டிருந்தனர்.

மதியத்தில் பிற மாணவர்களுக்கு மதிய உணவு தரப்பட இவர்களும் உற்சாகமாக வரிசையில் நின்று வாங்கிய உணவை சாப்பிட்டபடியே பழைய நினைவுகளில் மூழ்கினார்கள். மாணவர்களுக்கு மட்டுமல்ல, பள்ளியின் நிறுவனர்களான அமித் - ஜெயஸ்ரீ தம்பதிக்கும் கூடகாதலும் கல்வியுமான நினைவுகள் தான் அவை. அமித், ஜெயஸ்ரீ தம்பதியினரின் ‘ஆதர்சிலா பள்ளி’க்கு விதை தூவப்பட்டது, 1980ம் ஆண்டு நர்மதா ஆற்றில் கட்டப்படும் அணைக்கு எதிரான போராட்டத்தில்தான்.

டெல்லியைச் சேர்ந்த கட்டிட வடிவமைப்பாளரான அமித்தும், புனேவைச் சேர்ந்த வேதியியல் பட்டதாரியான ஜெயஸ்ரீயும் குஜராத், மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலுள்ள பழங்குடிகளின் வாழ்விடங்களை காக்கும் போராட்டத்தில் ஒன்றிணைந்தனர். நட்பு காதலானது. 1989ம் ஆண்டு தம்பதிகளானார்கள். இதன் பிறகான எட்டு ஆண்டுகள் அவர்கள் வாழ்வில் முக்கியமானவை. ஏனெனில், காதல் பறவைகளாக அவர்கள் பாடித் திரியவில்லை.

மாறாக, பழங்குடிகளுக்கான உரிமைகளைப் பெற்றுத் தருவதில் முழு மூச்சாக இறங்கினார்கள். இந்த நேரத்தில்தான் பழங்குடி செயல்பாட்டாளரான கூதியா நாய்க்டாவின் வார்த்தைகள் அவர்களைத் தட்டி எழுப்பின. ‘சமூக அநீதியை வேரோடு அழிக்க, அதன் கிழடு தட்டிய அஸ்திவாரத்தைத் தகர்த்தெறிய உயிர்ப்பான கல்வியால் மட்டுமே முடியும்!’

கல்வெட்டாக தங்கள் மனதில் பதிந்த இந்த வாசகங்களை உடனே செயல்படுத்த அமித்தும் ஜெயஸ்ரீயும் முயன்றார்கள். 1997ம் ஆண்டு அமித் தம்பதியினருக்கு குழந்தைகள் பிறந்த பின்னர், பத்வாணி மாவட்டத்திலுள்ள சென்த்வா நகரத்துக்கு குடிபெயர்ந்தனர். ‘ஆதிவாசி முக்தி சங்கேதான்’ என்ற மனித உரிமை அமைப்புடன் இணைந்து ‘ஆதர்சிலா பள்ளி’யை இவர்கள் தொடங்கியது அப்போதுதான்.

‘‘இங்கு ஆதிவாசி குழந்தைகள் தம் தாய்மொழியான பரேலியில்தான் அனைத்தையும் கற்கிறார்கள். பாரம்பரிய கதை சொல்லிகளான அவர்களின் இயல்பை அந்நிய மொழி கொண்டு சிதைக்க நாங்கள் விரும்பவில்லை. அவர்களின் பாட்டி சொன்ன கதையை எழுதும்படியும், விடுமுறையில் அவர்களின் செயல்பாடு குறித்து எழுதச் சொல்லியும் பரேலி மொழியில் அவர்களின் திறனை அதிகரிக்கிறோம்.

குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் மீது நம்பிக்கை வந்தால் மட்டுமே அவர்களின் மனம் திறக்கும்...’’ மலர்ச்சியாகப் பேசுகிறார் ஜெயஸ்ரீ. பத்வாணி மாவட்டத்திலுள்ள 50 கிராமங்களைச் சேர்ந்த  125 மாணவர்களோடு 6 ஏக்கர் நிலத்தில் இயங்கி வருகிறது ஆதர்சிலா உணவு- உறைவிடப்பள்ளி. ‘‘முதன்முதலில் இந்நிலத்தில் கால்வைத்தபோது தரிசாக இருந்தது.

பாறைகள் நிரம்பியிருந்தன. கண்ணில் தென்பட்ட நிலப்பரப்பே மிக குறைவு. வகுப்பறைகளுக்காக நாங்கள் உழைத்தபோது, தங்கள் தினசரி பணிக்குப்பிறகு கிராமத்தினரும் எங்களுடன் கைகோர்த்தார்கள்...’’ நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் அமித். காய்கறிகள், தானியங்கள் விளையும் நிலத்திற்கு உரமாக பசுஞ்சாணி இடப்பட்டு வளமூட்டப்பட்டது.

இப்போது அதில் ஜெயஸ்ரீ தலைமையிலான குழுவினர், ஆண்டிற்கு 8 மாதங்கள் காய்கறிகள் கிடைக்குமாறு பயிரிட்டு பள்ளியின் உணவுத் தேவையைஈடு செய்கின்றனர். இப்பணிகளில் மாணவர்களும் ஈடுபாட்டுடன் பங்கேற்பது புதிய தலைமுறையின் மண்வாசனையை உணர்த்துகிறது.

சிறிய வகுப்பு மாணவர்களுக்கு மூத்த மாணவர்கள் ஆசிரியர்களாகி சந்தேகங்களைத் தீர்க்கிறார்கள். ஆதர்சிலா பள்ளியின் தினசரி செயல்கள் இப்படித்தான் நிகழ்கின்றன. மொத்தத்தில் சுதந்திரமும் தன்னிச்சையுமான ஆதிவாசி வாழ்க்கையை உணர்த்துவதாகவே பள்ளி வளாகம் அமைந்துள்ளது.

ஆதர்சிலாவின் ‘நாடக் இந்தியா’ நாடகக் குழு, பல்வேறு கல்வி மாநாடுகளில் பங்கேற்று தனியார்மய கல்வி, ஊடகங்களின் செயல்பாடு ஆகியவற்றை பேசும் பொருளாக்கி நடிக்கிறார்கள். மட்டுமல்ல, இப்பள்ளி மாணவர்கள் தமக்கென தனிச்சுற்று நாளிதழையும் நடத்தி வருவதோடு, அடிக்கடி தாங்கள் செய்யும் ஆய்வு மற்றும் அறிக்கையை இணையத்திலும் பதிவேற்றுகிறார்கள்.

பள்ளிக்கான செலவுகளை கட்டணம் மூலமும், மீதியை நண்பர்கள், அமைப்புகள் மூலமும் திரட்டுகிறார்கள். ‘‘பை நிறைய பணம் சேமிப்பது கடந்து அன்பு, சுதந்திரம், மகிழ்ச்சி ஆகியவற்றை ஸ்பரிசிக்க குழந்தைகளுக்கு வாய்ப்பு கொடுங்கள். குழந்தைகள் தம் புதுமை சிந்தனைகளால் உலகையே மலர வைப்பார்கள்!’’ அழுத்தமாகச் சொல்கிறார் ஜெயஸ்ரீ. குழந்தைகளின் வானம் திறக்கட்டும்!
 
ஆதர்சிலா

1998ம் ஆண்டு மத்தியப்பிரதேசத்தில் ஆதிவாசி மாணவர்களுக்காக அமித்தும் ஜெயஸ்ரீயும் உழைப்பும் கனவும் கலந்து ஆதர்சிலா பள்ளியை உருவாக்கினர். பிற பள்ளிகள் போல இருக்கக் கூடாது என்பதை உணர்த்த ‘ஆதர்சிலா லேர்னிங் சென்டர்’ என பெயரிட்டனர். நெகிழ்வுத்தன்மை பாடத்திட்டத்தோடு, உலக விஷயங்கள், நடைமுறைத் திறன்கள், கலாசாரம் என சகலத்தையும் உள்ளடக்கிய மாற்றுப்பள்ளி இது. பாலோ ஃப்ரையரின் கல்வி மொழியே ஆதர்சிலா உருவானதற்கு காரணம்.

‘வீர் காஜியா நாயக் மானவ் விகாஷ் பிரதிஷ்தான்’ அமைப்பு பள்ளியை நடத்த, அமித்தும், ஜெயஸ்ரீயும் கல்வித்திட்டங்களை வடிவமைக்கின்றனர். இப்பள்ளி மாணவர்கள், பரேலி மொழி நூல்களை இந்தியில் மொழிபெயர்த்து வெளியிடுகின்றனர். யமுனா, காவேரி உட்பட 8 நதிகளின் பெயரில் மாணவர்கள் குழுக்கள் உள்ளன. 5 ஆசிரியர்கள், 20 மாணவ ஆசிரியர்கள் முழுநேரப்பணியிலும், இவர்களுக்கு துணை ஆசிரியர்களாக 3 ஆசிரியர்களும் உள்ளனர்.