கவிதை வனம்



வரைதல்

வரைந்துவைத்த மலையை
நகர்த்த முடியவில்லை என்னால்
இந்தப்பறவைகள் இன்னமும்
உயரப்பறப்பதைத்
தடுத்துக்கொண்டிருக்கிறது
இன்னொரு படத்தில்
மலைகளே இல்லாமல்
வெறும் பறவைகளை மட்டுமே
வரைந்துவைத்தேன்
என்னிடம் அவை முறையிட்டன
இங்கு ஒரு மலை இருந்திருந்தால்
அதனினும் உயரப் பறந்திருப்போமல்லவா என

- சின்னப்பயல்

சந்திப்பு

இன்று என் காதலனை
அவனுடைய மனைவியுடன்
‘காற்று வெளியிடை’யில் கண்டேன்.
தவிர்க்க முற்பட்டு வேறுவழியின்றி
கண்கள் சந்தித்தன.
அவளிடம் கல்லூரித் தோழியென்றான்.
என் கழுத்திலெதையோ தேடியவள்
அவர் வரலையா என்றாள்.
அவர் உன்னுடன் வந்திருக்கிறார்
அதனால் என்னுடன் வரவில்லையெனச்
சொல்லியிருக்கலாம்தான்.
அவள் வயிறு
சற்றே மேடிட்டிருந்தது.

- தேன்மொழி சதாசிவம்